Search This Blog

7.1.11

பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் திறனாய்வு -II


பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள்

24, 25-1938 திறனாய்வு 4




பனகால் அரசர் பெயர் வாசக சாலைக்கு அப்பெயர் வைத்தமைக்குப் பெரியார் தெரிவித்த இப்பாராட்டு பெரியார் திராவிட இயக்க முன்னோடிகள் - நீதிக்கட்சியின் தூண்கள் மீது பெரியார் எவ்வளவு மதிப்பும் பெருமையும் கொண்டிருந்ததைக் காட்டும்.

பனகால் என்று பெயர் வைப்பது பனகால் ராஜா ராமராய நிங்கரின் தனிப்பட்ட பெயருக்கு ஆக அல்ல. அது ஒரு புரட்சியின் அறிகுறியைக் காட்டுவதற்கு ஆகும். பனகால் ஒரு புரட்சி வீரர். தியாக ராயரையும் மாதவ நாயரையும் லெனினுக்கு ஒப்பிட்டால் பனகால் ஸ்டாலினுக்கு ஒப்பிட லாம். இவர்களுடைய புரட்சி வீரம்தான் தேவர்களாய் இருந்த இந்நாட்டுப் பார்ப்பனர்களை மனிதர்களாக ஆக்கிற்று. அவர்களது புரட்சித் தன்மைதான் இந்நாட்டு சூத்திரர்களை, இழிமக்களை, கீழ்ஜாதியார்களை மனிதர் களாக ஆக்கிற்று. இக்காரியம் மதங்களையும், கடவுள்களையும் ஒழிப்பதைவிட சொத்து களைச் சமமாக பிரித்துக் கொடுப்பதை விட முக்கியமானதும், பிரயாசையானதும் என்பதை உணருங்கள்.

பார்ப்பனத் திமிர்

அன்றைய நாள் பார்ப்பனத் திமிர் எப்படி என்பதற்குப் பெரியார் அளித்த ஓர் உதாரணம் - ஒரு சுவையான சிறந்த எடுத்துக்காட்டு - அதுவும் அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து கிடைக்கிறது.

இன்றைய சூத்திரர்களுக்கும், பார்ப்பனரல்லாத மக்களுக்கும், சண்டாளர்களுக்கும், தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கும் இதன் அருமையும் பெருமையும் தெரியாது. ஏனெனில் இப்படிப்பட்டவர்கள் மனிதத் தன்மை சமத்துவ உணர்ச்சி ஏற்பட்டதற்குப் பிறகு அறிவு பெற்றவர்களும் கருப்பந்தரித்தவர் களுமாவார்கள். ஆதலால் அவர்கள் பிறக்கும் முன்பு, அறிவு பெறுமுன்பு அவர்கள் சமூகத்துக்கும் அவர்களது பெற்றோர் களுக்கும் என்ன யோக்யதை இருந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன்.

சுமார் 30, 35 வருஷங்களுக்கு முன்பு எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர். பிரபல வியாபாரி. சுமார் 100, 150 போய் இன்கம்டாக்ஸ் கட்டி வந்தவர். அவரை அக்காலத்தில் 121/2 ரூ., 15 ரூ. சம்பளம் உள்ள ஒரு முனிசிபல் பில் கலெக்டர் பார்ப்பனர் வரி விதிப்பு விஷயமான ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக் கடைக்கு வந்து கூப்பிடுவான். அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து, ராவால ராவால தேவடா வரவேணும், வரவேணும் ஸ்வாமீ என்று இரு கை கூப்பி (தூக்கி) கும்பிட்டு உட்காரச் சொல்லிவிட்டு நின்றுகொண்டே இருப்பார். அப்பார்ப்பன பில் கலெக்டர் தலை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு, ஏமிரா வெங்கிட்ட நாயுடு போத்தாமா ஆ இண்டினி சூசேதானிக்கு ஏண்டா வெங்கிட்ட நாயுடு அந்த வீட்டைப் பார்க்கப் போகலாமா என்று கூப்பிடுவான். என் தகப்பனார் ஆ! ஹா என்று சொல்லி வஸ்திரத்தைத் தலையில் கட்டிக்கொண்டு அவன் பின்னால் புறப்பட்டு விடுவார். சுற்றிவிட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி, வெல்லம் எல்லாம் ஒரு சாக்கில் கட்டி பையனிடம் கொடுத்து சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டு வா என்று சொல்லி வழியனுப்புவார். இதை நான் நேரில் பார்த்ததைச் சொல்கிறேன். இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசுதாரையும் ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பான் நாயினும் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான். இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும். இந்த நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள் ஆகவே, எனக்கும் என்போன்றவர்களுக்கும் அல்லவா தெரியும் தியாகராயருக்கும், நாயருக்கும், பனகாலுக்கும் எவ்வளவு மரியாதை செலுத்த வேண்டும், எவ்வளவு பெருமை அளிக்க வேண்டும் என்பது.

எது சுதந்திரம்?

இன்று நாம் அறிவில்லாத குறையில் அடிமையாய் சுயமரியாதை அற்றுக்கிடக் கிறோமே ஒழிய சுதந்திரமில்லாமல் அல்ல. மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள அறிவில்லை. எப்படி பயன்படுத்துவது, எது சுதந்திரம் என்பதுகூட நமக்கு இன்றும் சரியாய்த் தெரியவில்லை என்று கூறும் பெரியார் சுதந்திரம் எது எனப் பொருத்தமான சிறந்த விளக்கம் அளிக்கக் காண்கிறோம்.

சிலர் வெள்ளைக்காரர்களை விரட்டுவது சுதந்திரம் என்கிறார்கள் சிலர் பொருள்கள் சமமாய் இருப்பதைச் சுதந்திரம் என்கிறார்கள். சிலர் கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாமல் இருப்பது சுதந்திரம் என்கிறார்கள். சிலர் தனது முட்டாள்தனம், நாகை, நன்றி கெட்டதனம் ஆகியவைகளுக்கு ஏற்பத் தன்னிச்சையாய்த் திரிய சுதந்திரம் என்கின்றனர் சிலர் பாடுபடாமல் ஊரார் உழைப்பால் வாழ்ந்து திரிவது சுதந்திரம் என்கிறார்கள். எது சுதந்திரம் என்பது பெரிய பிரச்சினையாய் இருக்கிறது.

ஆகவே மக்கள் யாவரும் கல்வி பெற்று உலக விவகாரமுணர்ந்து, தன்னைப் போல அந்நியர் என்பதை உணர்ந்து, அன்புடனும் பரோபகார உணர்ச்சியுடனும் இருந்து வாழ ஆசைப்பட வேண்டியது மனிதனுக்கு அவசியமாகும். அதற்கு வாசகசாலைஅற்ற வளர்ச்சிப்புத்தகம், சமத்துவ உணர்ச்சி சம்பாஷணைக் கூடம் ஆகியவை அவசியம் என்று சொல்லுகிறேன் என்கிறார்.

ராம ராஜ்யம் என்பது இந்து மதராஜ்யம் என்று ராம ராஜ்யத்திற்கு விளக்கம் அளித்தவர் பெரியார்.

1938ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் இந்தியைத் தமிழ்மக்களுக்குக் கட்டாயமாகப் புகுத்தியே திருவேன் என்ற மூர்க்கத்தனத்தில் இறங்கி அதற்காகத் தன் கடைசி அடக்கு முறை ஆயுதத்தை ராஜாஜி பிரயோகிக்கப் பயன்படுத்த, அதனை எதிர்த்துப் பெரியார் தொடுத்த போர் தொடர்ந்தது. தமிழன் போர் மூண்டுவிட்டது. முதல் தொகுப்பில் 1938 ஜனவரி முதல் ஜூன் வரையிலான தொகுப்பில் 66 தலைப்புகளில் பெரியார் பேச்சு, கட்டுரை, தலையங்கங்கள் இடம் பெற்றுள்ளன. இதைத் தவிர 27 பெட்டிச் செய்திகள் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.

25ஆம் தொகுதி 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரான தமிழர் தொடுத்த முதற்போரின் ஆவணம் இந்தியை ஏன் எதிர்த்தார் - எதிர்த்தோம் என்பதற்கான விளக்கங்கள் வேண்டுவோர் வேறு எந்த ஆவணத்தையும் தேடிச் செல்ல வேண்டிய தில்லை. அத்தனையும் இதில் கிடைக்கிறது. இருப்பினும் சென்னை மாநகராட்சித் தேர்தல், சுபாஷ் போஷ் வருகை பற்றிய தகவல், மகாத்மா புரட்டு, திருவிதாங்கூர் அலங்கோலம், தீபாவளி பண்டிகை ஆகிய வற்றோடு துருக்கிய மாவீரர் கெமால் பாஷா கட்டுரையும் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன.

ஆயிரக்கணக்காகச் சிறை செல்ல வேண்டும் என்ற பெரியாரின் வேண்டுகோள் பலித்து எதிர்ப்பை அடக்க ஆச்சாரியார் அரசு மேற்கொண்ட சூழ்ச்சி புஸ்வாணமாகப் போயிற்று. இந்தி எதிர்ப்பு இயக்க வேகத்தை இந்தி எதிர்ப்பு இயக்கம் பஞ்சாப் மெயில் வேகத்தில் முன்னேறி வருகிறது என்று அன்றைய நாள் விரைவு வண்டியோடு ஒப்பிட்டுக் காட்டும் பாங்கு காண்கிறோம்.

இன்றையக் குடிஅரசு தொகுப்புகளைக் காண்போர் ஒவ்வொருவரும் பெரியாருக்கு நன்றிக் கடன் பட்டவர்கள் ஆகிறோம். இதற்குக் காரணம் குடிஅரசு அபிமானிகளுக்கு வேண்டுகோள் எனும் ஒரு பெட்டிச் செய்தி சிறை புகுந்த பெரியாருக்கு தம்மைப் பற்றியோ தமது குடும்பத்தைப் பற்றியோ ஒரு சிறிதும் கவலையில்லை. அவர் தோற்றுவித்து வளர்க்கும் பத்திரிகைகளான விடுதலை குடிஅரசு பகுத்தறிவு முதலியவைகளைப் பற்றியே கவலை. ஆகவே அப்பத்திரிகைகளை வியாசங்கள் மூலமும், பணவசூல் மூலமும் ஆதரிக்க வேண்டியது பெரியார் மீது உண்மைப்பற்றுடையோரின் நீங்காக்கடன்.

டிசம்பர் 6 பாப்ரி மஸ்ஜித் சிதைக்கப்பட்ட நாள் மட்டுமல்ல. எத்தனையோ முறை சிறை சென்ற பெரியார் தமிழர்களைத் தட்டி எழுப்பிச் சுயமரியாதையுடன் வாழக் கற்பித்த தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர் பெரியார் தமிழர் விடுதலைக்காகச் சிறை புகுந்த நாள் குடிஅரசு தலையங்கத்தில் எழுதுகையில் குறிப்பிட்டது டிசம்பர் 6 ஆம் தேதி நன்நாள் எனக் கூறுவது குற்றமா? ஆகவே ஆகாது. பெரியார் சிறைபுகுந்த அந்நாள் தமிழர்களுக்கு நன்னாளே - பொன்னாளே ஆகும் பிறப்பால் கன்னடரான பெரியார் தாம் குடி புகுந்த நாட்டுப் பெருங்குடி மக்களின் விடுதலைக்காக தம்மையும் தம் குடும்பத்தையும் தம் செல்வத்தையும் தயக்கமின்றி சந்தோஷமாக அர்ப்பணம் செய்துவிட்டார். சிறைவாழ்வே சுகவாழ் வெனத் துணிந்துவிட்டார். ராஜபோகம் அனுபவிக்கும் வசதிகள் இருந்தும் அவற்றையெல்லாம் சுயமாகவே வெறுத்து, சிறை புகுந்து கூழும் கஞ்சியும் உண்டு, கல் அடித்தும் மண் சுமந்தும் உடலை வருத்தி தமிழர்களை ஈடேற்றத் தவம் செய்யச் சென்று விட்டார். அவர் சிறை வாழ்வைப் பெருவாழ்வாகக் கொள்ளும் நோக்கம் என்ன? தமிழ்நாடு தமிழருக்கே சொந்தமாக வேண்டும், முழு உரிமையுடையதாக வேண்டும், வட ஆரியருக்கு உரிமையாகக் கூடாது தமிழன் எந்நாளும் தமிழனாக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் சிறை புகுந்தார். அவர் எத்தகைய கிரிமினல் குற்றமும் செய்யவில்லை. சட்டமறுப்புச் செய்ய கிரிமினல் குற்றமும் செய்யவில்லை. சட்டமறுப்புச் செய்யவோ பலாத்காரச் செயலில் ஈடுபடவோ அவர் எவரையும் தூண்டவில்லை.

1938 இந்தி எதிர்ப்புப் போரின் போது, நீதிமன்றத்தில் பெரியார் அளித்த வாக்கு மூலம் வரலாற்றுப் புகழ்மிக்கது.

தம் அறிக்கையில், எவ்வளவு நியாய மான லட்சியத்தை அடைய வேண்டுமானா லும் அதற்காகக் கஷ்டநஷ்டங்களடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமாதலால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன் என்று முடித்திருந்தார்.

பெரியார்

இந்தக்கால கட்டத்தில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு 13.11.1938 அன்று சென்னை ஒற்றைவாடை நாடகக் கொட்ட கையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள் பலவற்றில் இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய வியலாமல் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும் சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம் மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது அன்று முதல் அய்யா பெரியார் என்றே அறியப்படலானார் என்பது வரலாறு.

பெரியாரின் பழ மொழிகள்

இவ்விரு தொகுப்புகளிலும் இடம் பெற்ற ஒன்றிரண்டு பெரியாரின் பழமொழிகளைச் சொல்லவில்லையெனில் நம் திறனாய்வு நிறைவு பெறாது.

உப்புக்கண்டம் பறி கொடுத்த பாப்பாத்தி போல எழவு வீட்டிலே சித்தியைப் பெண்டாளக் கூப்பிட்டது போல, நூலாலே நாடு கெடும் தம்பி தலையெடுத்துத் தறி முதல் பாழாயிற்று ,அப்பன் வீட்டுப் பெருமையை அண்ணனுக்குத் தங்கை எடுத்துரைத்தது போல இவை தந்தை பெரியார் பயன்படுத்திய சொற்கள்.

இந்தக் கிழவர் எங்கேயிருந்துதான் இச்சொல்லையெல்லாம் பிடித்தாரோ என்று பேராசிரியர் சிவராசன் அவர்கள் வியந்து பாராட்டிக் குறிப்பிடுவார். அச்சொற்களில் சிலவும் அவற்றின் பொருளும் காண்போம் கிப்பாத்து = ஊதியம், குலாம் = அடிமை, சர்வ குண்டி = மூத்திரம், குமரி இருட்டு = விடிய லுக்கு முன் உள்ள இருட்டு, பொக்கிப்பய = தறு தலைப்பபயல், மாரிசம் = ஒய்யாரம், வஞ்சகம், விரக்கடைத் தவணை = ஒரு மாதத்தவணை. கடாவினான் - (கேட்டல்) கைம்முதல் = மூலதனம் ஆகியன.

பெரியார் களஞ்சியம் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்கவேண்டிய பொன்நூல். தமிழர் தலைவர் நன்றிப்பெருக்கில் குறிப்பிட்டது போல் - திராவிடரின் தமிழரின் குருட்டுத்தனம் தொடர்ந்து கோலோச்ச விடாது விரட்டுவதற்குப் பயன்பட்ட விவேக முரசாகக் கிளம்பிய குடிஅரசு செய்த அறிவுப்புரட்சி இன்றும் தொடர்கிறது. 25 தொகுப்புகள் என்பது 38 தொகுப்புகளாகத் தொடர்ந்து வந்து திராவிடர் இல்லங்களில் இடம் பெறும்.

----------------முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் ---------24.12.2010 அன்று சென்னை - பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் - எழுத்துரை


--------------(நிறைவு)"விடுதலை” 6-1-2011

0 comments: