Search This Blog

26.1.11

பெரியார் பணி என்பது எளிதானது அல்ல

மேலவன்னிப்பட்டுக்குப் போவோம் - வாருங்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் வெறும் நெற்களஞ்சியம் மட்டுமல்ல - தந்தை பெரியார் தம் கொள்கைக் களஞ்சியமும் கூட!

இன்று நேற்றல்ல - தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோதும் சரி, சுயமரியாதை இயக்கம் கண்டபோதும் சரி, நீதிக் கட்சியின் நிகரற்ற தலைவராக இருந்தபோதும் சரி, திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் வந்தபோதும் சரி, இம்மாவட்டம் தந்தை பெரியார் அவர்களின் பாசறையாகவே இருந்தது - இருந்து வருகிறது - நாளையும் இருக்கப் போகிறது.

தஞ்சை மாவட்டத்தைத் தாலாட்டினார் பெரியார் என்றால், தஞ்சை மாவட்டம் அவரைச் சீராட்டியது - எத்தனை எத்தனையோ பரிசுகளைக் குவித்துப் பெருமை பெற்றது.

எங்கும் இயக்கத் தோழர்கள் இருந்தாலும், என்னுடைய முயற்சிக்கும், போக்குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர் கழகமாக ஆனபிறகு மாத்திரமல்ல, நான் காங்கிரசில் இருந்த காலத்திலும், தஞ்சை பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்திலும், நடத்திய காலத்திலும் தஞ்சைதான் ஆதரவு அளித்துள்ளது. எதைச் சொல்கிறேனோ, எதை எதிர்பார்க்கிறேனோ, அதைத் தமிழ்நாடு முழுதும் பகுதி செய்கிறது என்றால், தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும் என்கிறார் பகுத்தறிவுப் பகலவன்.

தஞ்சாவூரில் தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கப்பட்ட விழாவில் (3.11.1957) தந்தை பெரியார் குறிப்பிட்டதுதான் மேலே காணப்படும் பகுதி.

எந்த ஒரு தலைவருக்கும் தங்களின் அன்பை, ஆதரவைக் காட்டும் வகையில் வகை வகையான பொருள்களை - தங்கள் மகிழ்ச்சியின் பெருக்கத்தைக் காட்டும் வகையில் தந்தை பெரியார் அவர்களுக்குக் கொடுத்ததுபோல உலகில் வேறு யாருக்கும் கொடுத்ததாகத் தகவல் இல்லை.

இவ்வளவுக்கும் இந்தத் தலைவர் ஆற்று நீரோட்டத்தோடு பயணம் செய்தவரல்லர் - எதிர் நீச்சல் போட்டு எதிரிகளின் குகைக்கே சென்று இடி முழக்கம் செய்த ஏந்தல்! மூல பலத்தோடு போர் புரியும் - எளிதில் புரிந்து கொள்ளப்பட முடியாத 20 ஆம் நூற்றாண்டின் புத்தர். அத்தகு தலைவர் ஒருவருக்கு இவ்வளவு சிறப்புகள் என்றால், அது என்ன சாதாரணமா?

தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் மறைவுக்குப் பிறகு - கழகத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் தந்தை பெரியார் அவர்களின் மாணவருக்கு- தொண்டருக்கு - தமிழர் தலைவராக வளர்ந்தோங்கி நிற்கும் தலைவருக்கு அதே பாணியில், அதே அன்பில் பரிசுகளைக் குவித்துத் தருகிறார்கள் மக்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?

ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும் - நெஞ்சில் நன்றி மலர் பூத்த எவரும்!

பெரியார் பணி என்பது எளிதானது அல்ல. அது ஓர் எரிமலைப் பணி. மானமற்ற எதிரிகளோடு அன்றாடம் போராடும் பணி. முதுகில் குத்தும் துரோகச் சக்திகளுக்கும் முகம் கொடுத்து முன்னேற வேண்டிய பணி.

நேற்று கெழுதகை நண்பர், இன்று கேடு விளைவிக்கத் துடிக்கும் வீடணர்!

ஊடகங்கள் உறுமும் - இருட்டடிக்கும் - திரிபு வாதங்களைச் செய்யும். இவற்றையெல்லாம் எட்டி உதைத்து விட்டு, நாளும் மக்களைச் சந்தித்து அவர்களின் சிந்தனையில் புரட்சிகர சமுதாயச் சிந்தனைகளால் சிற்பங்களைச் செதுக்கும் பணி!

அவற்றைச் செய்ய ஒருவர் வந்தார், வருகிறார் என்றால் அந்த மான மறவரின் - தலைவரின் கைத்தலம் பற்றி ஜெ போடுவதை விட வேறு என்ன வேலை?

அந்தத் தலைவரின் ஆணையை ஏற்று களத்தில் குதிப்பதை விட வேறு கடமை என்ன?

பெரியார் பரவாயில்லை - அந்தச் சிங்கம் எட்டடி பாய்ந்தது என்றால், அதன் குட்டி பதினாறு அடி பாய்கிறதே என்று அக்கிரகாரம் சர்டிஃபிகேட் கொடுக்கும் அளவுக்கு நமக்கு ஒரு தலைமை கிடைத்திருக்கிறது - தூய்மையின் இலக்கணமாகத் தொண்டர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

எத்தனை, எத்தனையோ செயல்பாடுகள் மூலம், சாதனைகள் மூலம் நமது தலைமையும், நமது கழகமும் எவரெஸ்டுக்கு மேலே உயர்ந்துதான் நிற்கிறது - தலைநகர் டில்லியிலும் மய்யம் கொண்டிருக்கிறது.

நிலுவையில் இருக்கும் பணிகளை நிகழ்த்தி முடிப்பதற்காக நாம் நெடும் பயணம் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதற்கான பலம் உண்டு - பணி முடிக்கும் ஆற்றல் நமக்கு உண்டு- வழி நடத்தும் விவேகமான தலைமையும் உண்டு - வினை முடிக்கும் கழகம் என்ற கம்பீரமான அமைப்பும் உண்டு.

இத்தகு இயக்கத்துக்கு மக்கள் ஆதரவு எப்படி? அதனை மெய்ப்பிக்க பிரச்சார நோக்கத்தோடு பல விழாக்களைக் கழகத் தோழர்கள் நடத்துவது உண்டு.

தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் அளிக்கப்பட்ட அதே தஞ்சையில், அவரின் சீடருக்கு எடைக்கு எடை தங்கம் அளித்து தங்கள் எடையையும் காட்டிக் கொண்டனர் கழகத் தோழர்கள் (1.2.1998)

எடைக்கு எடை வெள்ளியையும் அளித்து தங்கள் செயல்திறனைக் காட்டிக் கொண்டனர் இளைஞர் அணியினர் (புதுக்கோட்டை10.8.1996).

இன்னும் இன்னும் எத்தனையோ! இதில் ஒரு சல்லிக் காசும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் சட்டைப் பைக்குள் போகாது.

எல்லாம் இயக்கத்துக்கே, பெரியார் நிறுவனத்துக்கே என்பது வெள்ளிடை மலை.

19.8.1973 அன்று இதே தஞ்சையிலே தந்தை பெரியார் அவர்களுக்கு நகரும்குடில் (Van) வழங்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளராக இருந்து பம்பரமாகச் சுற்றிச் சுழன்று அதனை அளித்தார். அய்யா அவர்கள் ஆசிரியர் அவர்களுக்கு கணையாழி அணிவித்துத் தட்டிக் கொடுத்தார். எடைக்கு எடை வைரம் கொடுத்தாலும் அந்த வைக்கம் வீரர் நமது தலைவருக்கு அணிவித்த அந்தத் தங்க மோதிரத்துக்கு ஈடாகாது. அந்தத் தட்டிக் கொடுத்தவனுக்குத் தனிப் பாயிரமே கூட எழுதலாம்.

அன்பளிப்புகளை ஏன் தொடர்கிறோம்? இயக்கப் பணிகள் நடந்தேற, கொள்கைப் பிரச்சாரம் குன்றென நிமிர்ந்து நடைபோட, இயக்கத்துக்கு நிதி தேவையன்றோ!

அதற்கான அணுகுமுறைகள்தான் எடைக்கு எடை நாணயங்களும், வெள்ளியும், தங்கமும் நமது தலைவருக்கு வழங்குவது.

வருகிற 30 ஆம் தேதி வரலாறு படைக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில், கழக அமைப்பில் பட்டுக்கோட்டை மாவட்டத்தில், உரத்தநாட்டையடுத்த மேல வன்னிப்பட்டுக் கிராமத்தில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் அளிக்கும் பெருவிழா! துணைப் பொதுச் செயலாளர் தோழர் இரா. குணசேகரன் தலைமையில் ரஞ்சித்குமார் (மாநில மாணவரணி செயலாளர்) வன்னிப்பட்டு தமிழ்ச்செல்வன் முதலிய நமது கழக செயல் வீரர்கள் பம்பரமாய்ச் சுழன்று நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிலும் புதுமை இருக்கவேண்டும் அல்லவா? அதனால்தான் நமது தலைவருக்கு எடைக்கு எடை ரூபாய் நோட்டுகள்!

தந்தை பெரியார் சிலை திறக்கப்பட உள்ளது. பெரியார் படிப்பகம் - டாக்டர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழாக்களும் உண்டு. எந்த அமைப்பிலும் காணமுடியாத அளவுக்கு அலை அலையான பணிகள் - பிரச்சாரங்கள் - மாநாடுகள் - போராட்டக் களங்கள்!

இடையில் இளைப்பாற மேல வன்னிப்பட்டுக்கு வாருங்கள். நம் தோழர்களின் செயல் திறன்களைக் காணுங்கள். 78 ஆண்டில் 68 ஆண்டுப் பொதுப் பணிக்குச் சொந்தக்காரரான நமது அன்புத் தலைவரின் மகிழ்ச்சியைக் கண்டு நாமும் மகிழ்ச்சியில் திளைப்போம், கூடுங்கள்!

அன்று அய்யாவிற்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் அளித்த கண்கொள்ளாத காட்சியைப்பற்றி நமது பாட்டனார்கள், தந்தையார்கள் நம்மிடம் கூறுவதுண்டு.

அந்தத் தலைவரின் பிரதான சீடருக்கு எடைக்கு எடை தங்கம் அளித்ததைக் கண்டு களித்தோம் - வெள்ளி அளித்ததையும் கண்டு ஆனந்தித்தோம் - இப்பொழுது எடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் அளிக்கப்படுவதையும் காணும் பேற்றினைப் பெற வேண்டாமா?
பார்ப்பதோடு கைகட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் பங்களிப்பையும் கொடுத்து மகிழ்ச்சியின் அளவைப் பெருக்கிக் கொள்ளுங்கள். சந்திப்போம், மேல வன்னிப்பட்டில்!

-------------- மின்சாரம் அவர்கள் -20-1-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை0 comments: