Search This Blog

30.1.11

பஜ்ரங்தள் கும்பலின் தலைவன் தாராசிங் தண்டணையும் -தேவையான சிந்தனையும்


தாராசிங் தண்டனையும்
தேவையான சிந்தனையும்

ஒரிசா மாநிலம் மனோகர்பூரில் உலகமே வெட்கித் தலைகுனியும் ஒரு கோரச் செயல் நடைபெற்றது. அதற்குக் காரணமான அமைப்பு - சங்பரிவார்க் கும்பலின் கூர்மையான படையான பஜ்ரங்தள் (குரங்கு என்று பொருள்) ஆகும்.

தொழு நோயாளிகளுக்காக தொண்டூழியம் செய்து வந்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் (வயது 58) அவர்தம் மகன்கள் பிலிப்ஸ் (வயது 9), திமோத்தி (வயது 6) ஆகியோர் ஒரு கிராமத்தில் தொண்டூழியம் செய்து இரவில் ஜீப்பில் தூங்கிக்கொண்டு இருந்தபோது பஜ்ரங்தள் கும்பலின் தலைவன் தாராசிங் தலைமையில் ஒரு காட்டு விலங்காண்டிக் கூட்டம் ஜீப்போடு கொளுத்தி தமது இந்துமத வெறித்தனத்தைக் குடித்துத் தீர்த்தது. (23.1.1999)


தொழுநோயாளிகளுக்கு உதவி செய்யலாமா? இந்து மதத் தத்துவப்படி அது கர்ம பலன் ஆயிற்றே!

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்கூட இது கர்மபலன் ஆண்டவனே, பிச்சை போடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு இந்துத்துவாவின் கீழ்மை பாதிக்கப்பட்ட மக்களின் மூளையில்கூட நம்பும்படித் திணிக்கப்பட்ட கொடுமை!


இந்தக் கொடுஞ் செயலுக்குக் காரணமான தாராசிங் என்பவனுக்கு மாவட்ட நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. மேல் முறையீட்டால் உயர்நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதற்கு மேலும் கொலையாளி உச்சநீதிமன்றம் சென்றபோது ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், கொலை செய்யப்பட்ட அந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த புண்ணியவான் லால்கிஷண் அத்வானி.


தான் பொறுப்பு வாய்ந்த ஓர் உள்துறை அமைச்சர் என்பதைக் கூடப் புறந்தள்ளிவிட்டு, தான் ஒரு இந்துமத ஆர்.எஸ்.எஸ். வெறியர் என்ற உணர்வோடு என்ன சொன்னார் தெரியுமா?

பஜ்ரங்தள்காரர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இதுபோன்ற காரியங்களைக் செய்திருக்க மாட் டார்கள் - என்றாரே - என்னே கொடுமை!


இவர் நற்சான்று கொடுத்த கும்பலின் தலைவனுக்கு நீதிமன்றங்கள் ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறதே - அத்வானி இதற்காக நாணிக் குறுக வேண்டாமா? மக்கள் மத்தியில் தான் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்புக் கோர வேண்டாமா?

ஸ்டெயின்ஸ் பாதிரியார் பரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டபோது பஜ்ரங்தள் என்ற அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சுரேந்திர ஜெயின் என்பவர் என்ன கூறினார் தெரியுமா?

இந்துக்களை அழிக்க நினைப்பவர்கள் எங்களை நினைத்துக் கதி கலங்க வேண்டும். அவர்கள் எங்களை நினைத்துப் பீதி அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசாங்கமே எங்களைப் பார்த்துப் பயப்படுகிறது என்றாரே! தாராசிங்குக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள் ளதே - இதனைப் பார்த்தாவது அவர்களுக்கு நல்ல புத்தி ஏற்படுமா?

இப்பொழுது ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட இதே தாராசிங் கும்பல்தான் அதே ஒரிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், தாகூர் முண்டா பகுதியில் 1999ஆகஸ்ட் 29ஆம் தேதி (ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொல்லப்பட்டதற்கு ஏழு மாதங்களுக்குப் பிறகு) ஷேக் ரகுமான் என்ற 32 வயதுடைய ஆயத்த ஆடை (ரெடிமேடு) வியாபாரம் செய்து கொண்டிருந்த முசுலிம் இளைஞனை பட்டப் பகலில் பயங்கரமான முறையில் சித்திரவதை செய்து கொன்றனர்.

முதலில் கைகளை வெட்டினார்கள். அவ்விளைஞன் துடிக்கத் துடிக்கக் கதறியபோது தீ வைத்துக் கொளுத்தினார்கள் என்றால், அதனை - 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது படித்தாலும், நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறதே!

ஷேக் ரகுமான் என்ற இந்த முசுலிம் இளைஞன் இப்படிக் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டபோதுகூட, அதே உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?

கொலையாளிகளை ஒரிசா மாநில காங்கிரஸ் அரசு இதுவரை கைது செய்யவில்லை. அது அம்மாநிலத்தில் சட்ட -ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. ஒரிசா மாநில முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார்.

எவ்வளவு தகிடுதத்தம் - பித்தலாட்டம்! படுகொலைக் குக் காரணம் தமது அமைப்பைச் சார்ந்தவர்கள் என்கிறபோது அந்தப் பிரச்சினைக்குள் போகாமல் அதிலும் அரசியல் செய்வது எத்தகைய அநாகரிகம்?

1999இல் படுகொலைகள் செய்யப்பட்டும் இறுதித் தீர்ப்பு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது என்றால் - நிருவாகம், நீதிமன்றத்தின் இத்தகைய கால தாமதத்தால் ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து இதே திசையில் ஏராளமான மதவெறியாட்டங்கள் திட்டமிட்டு நடத்தப் பட்டன. அம்மாநிலத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தில் 1,25,000 தொண்டர்களும், 1,50,000 ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், 50 ஆயிரம் பஜ்ரங்தள்காரர்களும் இருக்கிறார்கள் என்றால், இந்தக் கேடு கெட்ட வளர்ச்சிக்குக் காரணம் - குற்றவாளிகளுக்கு உரிய காலத்தில் தண்டனை அளிக்கப்படாததே!

2007இல் அம்மாநிலத்தில் எந்த அளவுக்குக் கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறை திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டது.

இதேபோல 1992இல் டிசம்பர் 6இல் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான கும்பல்மீது இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதன் விளைவுதான் நாட்டில் அன்றாடம் நடக்கும் வன்முறைத் தாண்டவங்களும், குற்றுயிர் குலை உயிருமான படுகொலைகளும்.


பாபர் மசூதி இடிப்புக்கு முன் இந்தியா - அதற்குப்பின் இந்தியா என்று கோடு போட்டுப் பார்க்க வேண்டிய அவலம் அல்லவா நாட்டில் தலை தூக்கி நிற்கிறது?

ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களாக!

--------------- "விடுதலை” தலையங்கம் 29-1-2011

0 comments: