Search This Blog

10.1.11

உலக நாத்திகர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நாத்திகக் கோட்பாடே புதிய சமுதாயத்தை உருவாக்க அடிப்படையான வழி உலக நாத்திகர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நாத்திகக் கோட்பாடே உலகில் புதிய சமுதாயத்தை உருவாக்க அடிப்படையான வழி என்ற தீர்மானம் இன்று காலை திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டின் நிறைவு விழாவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்று (9-1-2011) காலை திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உலக நாத்திகர் மாநாட்டின் மூன்றாம் நாள் நிறைவு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எழுந்து நின்று வரவேற்பு

தீர்மானங்களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு முன்மொழிந்தார்.


தீர்மானங்களை மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று ஒரு மனதாக வரவேற்று கைதட்டி ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் ஜனவரி 7, 8, 9 ஆகிய நாள்களில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டிற்காக உலகெங்கிலுமிருந்தும் வந்து ஒன்று திரண்டிருக்கும் நாத்திகர்கள், மனிதநேயர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் சுயசிந்தனையாளர்களாகிய நாங்கள் நாத்திகமே ஆக்கபூர்வமான நன்னெறி வாழ்க்கை வழியாகும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம்.

* அறியாமை, படிப்பறிவின்மை, மூடநம்பிக்கை ஆகியவற்றிலிருந்து மக்களை விடுவிக்கவும், சமூக மாற்றத்தை உறுதிப்படுத்தவும், திறமைமிக்க ஆற்றலாக விளங்கும் இளைஞர்களுக்கு அறிவியல் கல்வி முக்கியமான முன் தேவையாக உள்ளது என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

* வளர்ந்து வரும் மதத் தீவிரவாதம், பிரிவினை வாதம், வன்முறை; மற்றும்
விரைவாகச் சீரழிந்து வரும் சுற்றுச் சூழல், தட்பவெப்ப மாற்றம் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ள நாங்கள், சுற்றுச் சூழலுக்கு இணக்கமான, முன்னேற்றத்திற்கான செயல்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டுமென மனித குலத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

* கடவுள் நிந்தனை, மதநிந்தனை பற்றி நிலவி வரும் சட்டங்களைப் பற்றி கவலைப்படும் நாங்கள் அவற்றை நீக்குவதை ஆதரிக்கிறோம்.


கீழ்க்கண்டவற்றை நாங்கள் உறுதிப் படுத்துகிறோம்:

* அனைவரும் சமமானவர்களாகப் பிறந்து இருப்பதால் அவர்கள் சமமாகவே வாழ வேண்டும்.

* ஆழ்ந்து நுணுக்கமாகச் சிந்தித்தல், அறிவியல் மனப்பான்மை, சுதந்திரமான ஆய்வு ஆகியவை சமூகத்தின் சிந்தனைக்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதவை.

* கடவுள் நம்பிக்கையற்றிருப்பதற்கான உரிமையும், அதனடிப்படையில்
செயல்படும் உரிமையும் வேண்டும்

* பாலியல் சமத்துவம், பொருளாதார முன்னேற்றம், சமூகநீதி, மற்றும் சம வாய்ப்பு ஆகியவை அளிக்கப் படுவதன் மூலம் பெண்களுக்கு உள்ளேயே மறைந்துள்ள திறமைகள் வெளிப்பட்டு, சமூக வளர்ச்சிக்கு முழுமையாகப் பங்களிக்கச் செய்யப்பட வேண்டும்.

* மனித மதிப்பீடுகளை நிலைநாட்டுவதன் மூலம் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் சமத்துவத்தின் இன்றியமை யாமை வலியுறுத்தப்படவேண்டும்.

* அரசியல், கல்வி, சட்டம் ஆகியவற்றிலிருந்து மதத்தைப் பிரிப்பதன் மூலம், நாம் பாதுகாத்து வரும் மதச் சார்பின்மை என்ற கோட்பாடு பலப்படுத்தப்பட வேண்டும்.

* அறிவியலுக்கும், ஜோதிடம், வாஸ்து போன்ற போலி அறிவியலுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெளிவாக வரையறுக்கப்படவேண்டும்.

* குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் ஆகியோரின் மனித உரிமைகள் மதித்து, அங்கீகரித்து பாதுகாக்கப்பட வேண்டும்.

* மனித உரிமைகளுக்கும், சமூக நலத்திற்கும் மேம்பட்ட மத சுதந்திரம் எதுவும் இருக்க முடியாது; இருக்கக்கூடாது.

எங்களின் வேண்டுகோள்

வாழ்க்கையின் ஒவ்வொரு களத்திலும் மதச்சார்பின்மை மற்றும் மக்களாட்சி மதிப்பீடுகள் நிலை நாட்டப்பட வேண்டும்; நாட்டின் ஒவ்வொரு நடப்பிலும் உள்ள குடிமக்களின் ஆக்கபூர்வமான பங்கேற்பு வளர்க்கப்பட வேண்டும்.
போரைக் கைவிட்டு அமைதி காண்பது, அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெறுவது, மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு உண்மை நிலையை உணர்வது, சண்டை சச்சரவுகளைக் கைவிட்டு ஒத்துழைப்பது ஆகியவற்றின் மூலம் மனிதநேய மதிப்பீடுகள் நிறைந்த ஒரு புதிய சமூகத்தை நோக்கி நடைபயில்வதற்கான நம்பிக்கை அளிக்கும் நாத்திகக் கண்ணோட்டம் பரவச் செய்யப்பட வேண்டும்.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

------------------"விடுதலை” 9-1-2010

0 comments: