Search This Blog

28.1.11

ஆன்மிகமும், அறிவியலும்




பக்தி பரவினால்தான் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும். ஆகவே எந்த வகையிலும் ஆன்மிகம், பக்தி என்பது கீழே விழுந்துவிடாமல் முட்டுக் கொடுப்பதில் மிக விழிப்பாக இருந்து அவரவர்கள் தளத்தில் நின்று செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
பக்தி மறுமலர்ச்சி என்ற பெயரால்தானே பவுத்த, சமண இயக்கங்களை இங்கு அழித்தார்கள்; பவுத்த, சமணர்கள் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழித்து, அருள் தருமாறு கடவுளிடம் மனு போட்டான் திருஞானசம்பந்தன் என்றால், இந்தப் பக்தியின் உள் நோக்கத்தைப் பளிச் சென்று தெரிந்து கொண்டிருக்கலாமே!

ஆன்மிகமும், அறிவியலும் எப்படி இரண்டும் கைகோத்துச் செல்லமுடியும் எதையும் சந்தேகப்படு - நம்பாதே, அறிவைக் கொண்டு ஆய்வு செய், எதற்கும் நிரூபணம் தேவை என்பது அறிவியல்.

நம்பு - நம்பினால் மோட்சம், நம்பாவிட்டால் நரகம்; கடவுள், மதப் பிரச்சினைகளில் அறிவைக் கொண்டு ஆராய்வதெல்லாம் கூடாத ஒன்று - கண்மூடித்தனமாகப் பின்பற்று என்பதுதான் ஆன்மிகம் - இந்நிலையில் பகுத்தறிவும் பக்தியும் ஆகிய இரண்டும் எப்படி ஒன்று சேர்ந்து பயணிக்க முடியும்?

எடுத்துக்காட்டாக சபரிமலை அய்யப்பன் கோயில் மகரஜோதியை எடுத்துக் கொள்வோம். அந்தக் கோயிலின் பரம்பரைத் தலைமை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு (வயது 84) என்ன கூறுகிறார்?

இது மக்களின் நம்பிக்கை பிரச்சினை. அய்யப்பன் சன்னதிக்குள் யாரையும் அனுமதிக்கப்படுவதில்லை, அதுபோன்றதுதான் பொன்னம்பலமேடு பகுதியும் என்று கூறியுள்ளார். மகரஜோதி வேறு, மகர விளக்கு வேறு என்றும் குழப்புகிறார். பக்தர்கள் பார்ப்பது மகர விளக்கா? மகர ஜோதியா? என்பதை ஆய்வுசெய்ய வேண்டியது தானே? அதற்குத் தயார்தானா?

மகரஜோதி மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது என்பதை - பகுத்தறிவாளர்கள் - அறிவியல்வாதிகள் நேரடியாகச் சென்று நிரூபணம் செய்துவிட்டார்கள். ஆனால் ஆன்மிகவாதிகளோ இதுபோன்ற விடயங்களில் நம்பிக்கைதான் முக்கியம் அதில் ஆய்வுகள் கூடாது என்கின்றனர். பாபர் மசூதியை இடித்த இந்துத்துவாவாதிகள் என்ன சொல்லுகிறார்கள்? ராமன் பிறந்த இடம் அதுதான். அது இந்துக்களின் நம்பிக்கையைச் சார்ந்த ஒன்று; இதில் நீதிமன்றம் குறுக்கிடக் கூடாது என்றுதானே சொல்கிறார்கள்? இந்த நிலையில், ஆன்மிகமும், அறிவியலும் எப்படி இணைந்து செயல்பட முடியும்? இந்துமத மடாதிபதியாக இருக்கக் கூடிய சங்கராச்சாரியாரே கொலைக் குற்றவாளியாக நடமாடுகிறார். கோயில் அர்ச்சகப் பார்ப்பானே கோயில் கருவறையில் பக்தைகளிடம் பாலுறவு கொண்டு நிழற்படம் எடுத்துக் கொள்கிறான். அதனைக் காட்டி திருப்பித் திருப்பி சம்பந்தப்பட்ட பெண் பக்தைகளிடம் உடல் உறவு கொள்கிறான் கோயில் கருவறைக்குள் (இதில் ஒன்று மட்டும் உண்மை அவனின் ஆன்மிகத்துக்கு செல்போன் என்ற அறிவியல் பயன்பாடு இருக்கிறது.)

ஆன்மிகத்தை, ஆன்மிகத்தைக் கொண்டு காப்பாற்ற முடியாத ஒரு நிலை இன்று ஏற்பட்டு விட்டது. ஆன்மிகம் தொடர்பான தகவல்களையோ கருத்துகளையோ அப்படியே சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. யானையின் தலையை வெட்டி ஒரு அழுக் குருண்டையின் தலையில் சிவபெருமான் பொருத்தினான். அந்த அழுக்குருண்டைதான் விநாயகன் என்று சொன்னால் அது எப்படி சாத்தியம் என்று கேட்கும் காலம் இது. இராவணனுக்குப் பத்து தலைகள் எனில் அது குறுக்கு வாட்டிலா? உயர வாட்டிலா? அப்படி என்றால் அவன் எப்படிப் படுப்பான்? எந்த வாயால் சாப்பிடுவான்? ஒரு மூக்கு இருந்து சளி பிடித்தாலே தாக்குப்பிடிக்க முடியவில்லை; பத்து மூக்கு இருந்தால் அவன் கதி என்னாவது என்று சிறுவர்களே கேட்கும் விழிப்புணர்வுக் கால கட்டமிது. எப்படி ஆன்மிகமும், அறிவியலும் ஒரே இடத்தில் இருக்க முடியும்? இருளும் ஒளியும் கூட்டாளியாக முடியுமா?

ஒளி இருக்கும் இடத்தில் இருள் ஒண்டிக் குடித்தனம் கூட நடத்த முடியாதே!

திருநீறு பூசுவது - துருநீரை நீக்குவதாக அறிவியலைச் சொல்லி ஆன்மிகத்தைத் தூக்கி நிறுத்தப் பார்த்ததுண்டு அப்படி என்றால் கல்லாப் பெட்டிக்கு ஏன் ஆயுத பூஜையன்று திருநீறு பூசுகிறீர்கள்? அதில் என்ன துருநீர் இருக்கிறது என்று கேட்க ஆரம்பித்தனர்.

உடலில் எத்தனை எத்தனையோ இடங்களில் எல்லாம் துருநீர் இருக்கிறது. அங்கெல்லாம் திருநீறு பூசுவதுண்டா என்ற பகுத்தறிவு வினா, சுனையாக எழுந்தது இதுவரை யார் தான் பதில் சொல்லியுள்ளனர்?

அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி ஆன்மிகத்தைப் - பரப்பும் மோசடி நடக்கிறது என்பது மட்டும் உண்மை - அது ஓர் அறிவு நாணயமற்ற தன்மை என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி ஆன்மிகமும். அறிவியலும் இணைந்து நடைபோட முடியாது என்பதை உறுதியாகக் கூறுவோம்.

------------- "விடுதலை” தலையங்கம் 27-1-2011

0 comments: