Search This Blog

30.1.11

வரலாற்றில் போர் நடைபெற்றதற்குக் காரணமே மதங்கள்தான்!

வரலாற்றில் போர் நடைபெற்றதற்குக் காரணமே மதங்கள்தான்!
திருச்சியில் தமிழர் தலைவர் பேச்சு

வரலாற்றில் பெரும்பாலும் கலவரத்துக் காரணமே மதம்தான் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.


திருச்சியில் 8.1.2011 அன்று நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டையொட்டி இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

உலக நாத்திகர் மாநாட்டு இரண்டாம் நாள் நிகழ்ச்சி

மிகச் சிறப்போடு நடைபெற்றிருக்கக்கூடிய உலக நாத்திகர் மாநாடு என்ற இந்த மாநாட்டில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக வேறு எந்த மாநாடுகளிலும் நடக்காத ஒரு புதுமை இந்த மாநாட்டிலே நடைபெற்றிருக்கிறது.

இந்த உலக நாத்திகர் மாநாட்டிற்கு வெளிநாட்டில் பல நாடுகளிலிருந்து பேராளர்கள், அறிஞர் பெருமக்கள் வந்திருக்கிறார்கள். அதே போல இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பேராளர்கள் வந்திருக்கிறார்கள். எப்படி பெரியாரு டைய தொண்டர்கள் அவருடைய கொள்கையை அப்படியே பின்பற்றி வாழ்கிறார்கள் என்பதைப்பார்த்திருப்பீர்கள்.

கடவுளை மற, மனிதனை நினை என்று சொன்ன பெரியாருடைய கொள்கை எப்படி இன்றைக்கு நடைமுறையில் பயன்பட்டிருக்கின்றன என்பதை இங்கே விளக்கினார்கள்.


பெரியாரின் மனிதநேயம் உலகை ஆளும்

தந்தை பெரியாருடைய மனிதநேயம் உலகை ஆளும் என்பதை வெளிப்படுத்தினார்கள். கடவுள் பல வகையாகப் பிரிக்கப்பட்டன. மதங்கள் பல வகையாகப் பிரிக்கப்பட்டன. ஜாதி பல வாரியாகப் பிரிக்கப்பட்டன.

ஆனால், பெரியார் மனித குலம் எல்லோரையும் ஒன்றிணைக்கிறார். நாத்திக நன்னெறி நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது (கைதட்டல்). மனிதநேயம் ஒன்றிணைக்கிறது.

நாத்திகம் என்பதன் மறுபெயர்

நாத்திகம் என்பதன் மறுபெயர்தான் மனித நேயம் என்பது. பெரியார் உலகமயமாகிறார் என்று சொல்லக்கூடிய அளவிலே மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ள நிகழ்வுகளையும் நான் பின்னாலே சொல்லுகின்றேன். இந்த இரண்டாம் நிகழ்ச்சியிலே மாலையில் சிறப்பான ஒரு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எண்ணற்ற கருஞ்சட்டைத் தோழர்களும், தோழியர்களும் பங்கேற்று மூடநம்பிக்கைகளைப் பற்றி பேரணியில் எடுத்து விளக்கினார்கள்.

மூடநம்பிக்கைப் பைத்தியங்களைத் திருத்த

இதிலே ஒரு ஒரு சங்கடம் என்னவென்று சொன்னால் இந்த மூடநம்பிக்கைப் பைத்தியக்காரர்களைத் திருத்துவதற்கு-பழகிய யானையை அனுப்பி, பழகாத யானையை பிடிப்பது போல, நாம் அவர்களுக்காக சங்கடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதே!


நான் சங்கடத்தோடு இருந்தேன்

நாங்கள் மேடையிலே அமர்ந்து அதை வேடிக்கை பார்த்தபொழுது மனச்சங்கடத்தோடு நான் அமர்ந்திருந்தேன். தோழர் ஒருவர் கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு தேங்காயை வேகமாக தலையில் உடைத்துக்காட்டினார்.


பொதுவாக மூளைப்பகுதி இருக்கிற இடத்தில்-தலையில் தேங்காயை வேகமாக உடைப்பது என்பதிருக்கிறதே, அது அறிவியல் சார்ந்ததல்ல. உடலுக்கும் நல்லதல்ல.

பக்தியாளர்களால்தான்....!

பக்தியாளர்களால்தான் இதைச் செய்ய முடியும், சகித்துக் கொள்ள முடியும் என்பதல்ல. அதைப் பொய் என்று காட்டுவதற்காக நாங்களும்கூட அதற்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவிலே செய்கிறோம் என்று எங்கள் தோழர்கள் தலையில் தேங்காயை உடைத்ததைப் பார்த்தபொழுது எனக்குச் சங்கடமாக இருந்தது.

நாமும் பைத்தியமும் ஆக வேண்டுமே!

ஏனென்று சொன்னால், இந்தப் பைத்தியக்காரர்களுக்காக நாமும் பைத்தியக்காரர்களாக ஆக வேண்டும் என்பதற்கு நாத்திகம் அதற்காக ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறதே என்பதைப் பார்த்தோம்.

இங்கே தீச்சட்டி எடுத்ததைப் பற்றிச் சொன்னார்கள். ஆகவே அது சுடாது. அதைப் பற்றிக் கவலை இல்லை. அதே நேரத்திலே நெருப்பிலே இறங்கும்பொழுதும் அப்படித்தான்.


வெளிநாட்டுக்காரர் தீமிதித்தார்

பஞ்சாபிலே இருந்து வந்த நண்பர் ஒருவர்-நம்முடைய பேராளர் தீமிதித்தார். அவர் நெருப்பிலே இறங்கித்தானே நடந்து வந்தார். நம்மோடு. அந்தப்படம் கூட இன்றைய விடுதலையில் வந்திருக்கிறது. பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் தீக்குண்டம் மிதிக்கின்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அது போலவே நார்வேயிலிருந்து வந்த நண்பர் அவரும் திடீரென்று நான் இறங்கப்போகிறேன் என்று சொல்லி அவரும் தீக்குண்டத்திலே இறங்கி நடந்து வந்தார்.


தி.க. கொடியைப் பிடித்துக்கொண்டு வந்தார்

ஒருவர் பஞ்சாபிலே இருந்து இந்த மூடநம்பிக்கைப் பணியைச் செய்ய வந்தார். அதே போல நார்வேயிலிருந்து ஒருவர் மூடநம்பிக்கைப் பணியை செய்வதற்கு வந்தார்.

நேற்று அதைப் பார்த்தோம். இன்றைக்கு இந்த ஊர் வலத்திலே என்ன தனி சிறப்பு என்று சொன்னால்... பஞ்சாபிலே இருந்து வந்த பேராளர் தலைப்பாகையோடு திராவிடர் கழக கொடியை கையிலே ஏந்திக்கொண்டு வீறுநடை போட்டு வந்தார். அதே போல நார்வேயிலிருந்து வந்த வெளிநாட்டு நண்பர் அவரும் திராவிடர் கழக கொடியைப் பிடித்துக்கொண்டு வந்தார். வெளிநாட்டவர், வெளி மாநிலத்தவர், இன்றைக்கு திராவிடர் கழகத்தினுடைய கொடியை ஏந்துகிறார் என்று சொன்னால் பெரியார் உலக மயமாகிவிட்டார் என்பதற்கு இதைவிட ஆதாரப் பூர்வமான சான்றாக வேறு எதையும் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை (பலத்த கைதட்டல்).

உலகம் முழுக்க பெரியார் தேவைப்படுகிறார்

இன்றைக்கு உலகம் முழுவதும் பெரியார் தேவைப்படுகிறார். ஏனென்றால் கடவுள்களால், மதங்களால் மக்களுக்கு அமைதியைக் கொடுக்க முடியவில்லை.
பயங்கரவாதம் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு என்ன காரணம்? பயங்கர வாதத்தினுடைய தாய், தந்தையர்கள் யார்? இன்றைக்கும் நம்மாலே எங்கும் நிம்மதியாகப் பயணம் செய்ய முடியவில்லை. காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கு இன்னும் சிக்கல்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலை என்ன?

ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னாலே காவல் துறைக்கு இருந்த பொறுப்பை விட, இருந்த பணிச்சுமையை விட ரொம்ப அதிகமானது. காவல்துறையிலே இருக்கக்கூடிய நண்பர்கள் இப்பொழுது அதிக அளவுக்கு மன அழுத்தத்துக்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று சொன்னால் எல்லோரையும் சோதித்துதான் அனுப்பவேண்டியிருக்கிறது.

யாரையாவது திடீரென்று ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால் கூட எஸ்.எம்.எஸ் கொடுக்கிறான். இந்த மேடையில் குண்டு வைத்திருக்கிறார்கள் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினால் காவல்துறையினர் அலட்சியமாக இருக்க மாட்டார்கள். உடனே மோப்பநாய் வரை கொண்டு வந்து பரிசோதித்து மற்றவர்களை அனுப்ப வேண்டும். எல்லா இடங்களிலும் மோப்ப நாயை வைத்து சோதனை போட வேண்டும்.

ரயிலில் குண்டு என்று சொன்னால்...

ரயிலில் குண்டு இருக்கிறது என்று சொன்னால் உடனே காவல்துறையினர் ரயிலை நோக்கி விரைந்து செல்லவேண்டும். எல்லோரும் ரயிலை விட்டு இறங்குங்கள் என்று இறக்கிவிட்டு ரயிலை சோதனை போட வேண்டும். இது எவ்வளவு காலத்திற்குள் ஏற்பட்டது.

இது எதனால் வந்தது?

தயவு செய்து நினைத்துப்பார்க்க வேண்டும். காலையிலே காஷ்மீரிலிருந்து வந்த ஒரு சிவில் எஞ்சினீயர் மிகத் தெளிவாகப் பேசினார். எங்கே? எங்களுடைய பல்கலைக் கழகத்திலே. அவர் பேசும்பொழுது மிகச் சிறப்பாகச் சொன்னார்.

தமிழ்நாடு எங்களுக்கு இவ்வளவு அன்பு காட்டுகிறது. பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் இவ்வளவு அன்பாக இருக்கின்றீர்கள். காஷ்மீருக்கும் பெரியார் தேவைப்படுகிறார். இப் பொழுது அதிகமாகத் தேவைப்படுகிறார். மிக அதிகமாகப் படித்து அங்கே ஒரு பெரிய அதிகாரியாக இருக்கக்கூடியவர் சிவில் எஞ்சினீயர் காஷ்மீர் கலவரத்திற்குக் காரணம் என்ன?

அவர் பேசும்பொழுது சொன்னார். குறைந்தது இந்த 20 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் நீங்கள் அன்போடு காஷ்மீரைப் பார்க்க வந்ததெல்லாம் போய் இன்றைக்கு காஷ்மீருக்கு வருவதற்குப் பயப்படுவதற்கு என்ன காரணம் என்று சொன்னால் மதவெறி. மதவெறி உள்ளே நுழைந்ததால் ஜம்மு-காஷ்மீரிலே இவ்வளவு சிக்கல்கள். அந்த மக்களுக்கு சரியான விடிவு கிடைக்க வேண்டுமானால் பெரியார் அங்கும் வரவேண்டும். காஷ்மீருக்கு வரவேண்டும். கன்னியாகுமரியில் இருந்தால் மட்டும் போதாது என்று வெளிப்படையாக எடுத்துச் சொன்னார்.

ஏனென்றால் மதங்களால்தான் பயங்கரவாதம். பயங்கரவாதம் எதனாலே உருவாகியிருக்கிறது. பாபர் மசூதியை ஒருவன் இடிக்கிறான். அதுபற்றி வழக்கு வருகிறது. இன்னொருவர் அதற்குப் போட்டியாக இன்னொன்றை நடத்துகிறார் என்றால் அடிக்கடி நான் சொல்லுகிற கருத்தைச் சொல்லுகிறேன். இதுவரையிலே கடவுள் உண்டு என்பவர்களிடத்திலேதான் போர் நடந்திருக்கிறது. போர் நடந்ததற்கு அடிப்படை காரணம் என்ன?

வரலாற்றில் போர் நடந்ததற்கு அடிப்படைக் காரணம் என்ன? எல்லாமே மதப்போர்கள். சிலுவைப் போர்கள். இவை எல்லாம் யாரிடையே நடந்திருக்கிறது. மதவாதிகளிடையே நடந் திருக்கிறது. கடவுள் உண்டு என்பவன்தான் சம்மட்டியைத் தூக்கிக்கொண்டு அலைகிறான்.

ஒரு கடவுளுக்கும், இன்னொரு கடவுளுக்கும் சண்டை. இந்த மதத்தவனுக்கும் அந்த மதத்தவ னுக்கும் சண்டை. அவ்வளவு தூரம் போக வேண்டாமய்யா. பக்கத்திலே இருக்கிற சிறீரங்கம் இங்கேயிருக்கிற கடவுள் பெக்கூலியர் கடவுள் பக்கத்திலே இருக்கிற சிறீரங்கம் கடவுள். மற்ற கடவுள்கள் எல்லாம் விழித்துக்கொண்டிருக்கின்ற கடவுள். இந்தக் கடவுள் எப்பொழுதுமே தூங்கிக்கொண்டிருக்கின்ற கடவுள்.

கடவுள்களிடையே சண்டை

ஏன் பள்ளிகொண்டீரய்யா சிறீரங்கநாதரே என்று கேட்கிறார்கள். உங்களுடைய இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள். கோடிக் கணக்கான கடவுள்கள். தூங்கும் கடவுள், நடக்கும் கடவுள் என்று இப்படி ஏராளமான கடவுள்கள்.

திருச்சி சிறீரங்கநாதர் கடவுள்தான் தூங்கிக் கொண்டேயிருக்கின்ற கடவுள். இதிலே நாமம் போடுவதிலே தகராறு. வடகலைக்காரனுக்கும், தென்கலைக்காரனுக்கும் நெற்றியில் டிராயிங் போட்டுக்கொள்கிறவன் உலகத்திலேயே நம் முடைய நாட்டைத் தவிர வேறு எங்கும் கிடையாது.

------------------------தொடரும்..................."விடுதலை” 29-1-2011

0 comments: