Search This Blog

18.1.11

வள்ளுவரும் - பூணூலும்

வள்ளுவர் -பூணூல்

தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட திருவள்ளுவர் விழா - தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் (16.1.2011) உரையாற்றிய முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் கீழ்க்கண்ட கருத் தினை வெளியிட்டார்.

சில பேருக்கு ஒரு குறை வள்ளுவர் படங்களில் குறுக்கே ஒரு பூணூல் இருக்க வேண்டுமே, அவர் பிராமணர் அல்லவா, 1330 குறட்பாக்களை அவ்வளவு அருமையாக எழுதுவ தென்றால் அவர் சாதாரண மனிதராக இருக்க முடியுமா? அவர் பிராமணர் அல்லவா என்று சில பேர் பேசிக் கொண்டது எனக்குத் தெரியும். பிராமணராக இருந்த காரணத்தால்தான் அவரால் திருக்குறளே எழுத முடிந்தது என்று குறிப்பிட்டதும் எனக்குத் தெரியும்.

அதற்காக அதை வலியுறுத்துவதற்காக அந்த உருவத்தின் குறுக்கே ஒரு நூலினைப் போட்டு முன்பெல்லாம் வரைந்திருந்தார்கள். வேணுகோபால் சர்மா நமக்கேன் அந்த வம்பு, அந்த நூலை நாம் போட்டால், அவர் பிராமணர் என்று சொன்னதை நாம் ஏற்றதாக ஆகிவிடும், போடா விட்டால் அவர் பிராமணர் அல்ல என்று சொன்னதாக ஆகி விடும். ஆகவே நூல் போடப்பட்டிருந்த இடத்தில் ஒரு சால்வையைப் போர்த்தி நூல் உண்டா - இல்லையா என்பதே தெரியாத அளவுக்கு திருவள்ளுவர் படம் வரைந்து கொடுத்தார். (முரசொலி 17.1.2011) என்று முதல் அமைச்சர் பேசினார்.

ஏதோ கற்பனையில் இவ்வாறு பேசி விட்டார் முதல் அமைச்சர் என்று யாரும் அவசரப்பட்டு விமர்சனம் செய்து விடக் கூடாது. இவருக்கு இதுதான் வேலை, பார்ப்பனர்களைச் சீண்டாவிட்டால் இவாளுக்குத் தூக்கம் வராது என்று ஏனோ தானோ என்று எவரும் பேசிடவும் முடியாது.


முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் பேசியதற்கு ஆதாரம் உண்டு.

1892இல் சென்னையில் மகாஜன சபை கூட்டம் திரு சிவநாமசாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சாஸ்திரி பேசும்போது, வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால் சிறந்த திருக்குறளைப் பாடினார். சுக்கில - சுரோனிதம் கலப் பறியாது என்று குறிப்பிடும் போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு சிவ நாம சாஸ்திரி சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பறையர்கள் என்ப வர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ., பி.ஏ., படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே, அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்? என்றார். அதற்கு சிவ நாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல், நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு. க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச் சாலைகளில் அடைபட்டுக் கிடக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.

திரு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு. க. அயோத்திதாச பண்டிதர், ஏன்? பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும் என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு.அரங்கைய நாயுடும், திரு. எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் க. அயோத்திதாச பண்டிதரை அமைதிப் படுத்தினார்கள்.

திரு. சிவ நாம சாஸ் திரியைக் கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவ நாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவி விட்டார். (ஆதாரம்: நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை - க. அயேத்திதாச பண்டிதர்)

மானமிகு முதல் அமைச்சர் கலைஞர் கூறியதற்கான ஆதாரத்தை இப்பொழுது தெரிந்து கொண்டு இருக்கலாமே!

---------------- மயிலாடன் அவர்கள் 18-1-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: