Search This Blog

1.6.11

தமிழர் தம் போர்வாளாகிய விடுதலையின் பிறந்த நாள் இந்நாள்

இன்று விடுதலைக்கு 77

1926ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. வருடப் பிறப்புக்காக குடிஅரசு பத்திரிகைக்கு என்ன சன்மானம் செய்யப் போகிறீர்கள்?

குடிஅரசிற்கு நண்பர்கள் ஒவ்வொருவரும் சந்தாதாரரைச் சேர்த்துக் கொடுங்கள். அல்லது நமது சமூகத்திற்குக் கேடு ஆகும்படியான பார்ப்பனப் பத்திரிகையின் ஒரு சந்தாதாரரையாவது குறையுங்கள். இதை நீங்கள் செய்தால் குடிஅரசிற்கு மாத்திரம் அல்லாமல் நாட்டுக்கும், பார்ப்பனர் அல்லாதார் சமூகத்திற்கும் விடுதலையை அளிக்க உங்கள் கடமையைச் செய்தவர்கள் ஆவீர்கள்.(குடிஅரசு, 27.12.1925)

என்று தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு 86 ஆண்டுகளுக்கு முன் எழுதினார். அது இன்றைக்கும் பொருந்தவே செய்கிறது. தமிழர் தம் போர்வாளாகிய விடுதலையின் பிறந்த நாள் இந்நாள் (1935).

76 முடிந்து விடுதலை தன் விவேகமும் - வீரமும் பொருந்திய பொன்னடியை 77ஆம் ஆண்டில் பதிக்கிறது. அன்று 1926 புத்தாண்டுக்கான செய்தியைத் தந்தை பெரியார் வைத்தார். இன்று விடுதலையின் பிறந்தநாள் செய்தியாக அதனையே அட்சரம் பிறழாமல் வைப்பது பொருத்தம்தானே!

இந்த 77 ஆண்டில்தான் அது சந்தித்த சர்ப்பங்கள் எத்தனை - விலாக் குத்துகள் எத்தனை! முதுகு பக்கம் குத்தியவர்கள் எத்தனை எத்தனைப் பேர்!

ஆனால் விடுதலையோ நேர்மையான போரை நடத்தி வந்திருக்கிறது. எதிர்வரும் அம்புகளை தன் மார்புப் புறத்தில் தாங்கி நடந்து வந்திருக்கிறது.

படிக்கக்கூடாது என்று ஆக்கப்பட்ட பஞ்சமர்களை தன் தோளில் தூக்கிச் சென்று கல்விச் சாலைக்குள் நுழைய விட்டு வெளியில் காவல் காத்து நின்றது.

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைத்திருந்த அந்தப் பழைய ஏற்பாட்டை, மனு தர்மத்தை - சமூக நீதி என்னும் எரிமலையில் போட்டுப் பொசுக்கி, சூத்திரர்களைக் கல்விச் சாலைக்குள் தலை நிமிர்வுடன் நுழைய வைத்த வெற்றி இந்த விடுதலைக்கே சொந்தம்.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கூறிய பத்தாம் பசலித் தனத்தை அந்த அடுப்பில் போட்டுப் பொசுக்கி, ஆண்களுக்கு நிகராகப் பெண் களுக்கும் கல்வி என்னும் கர்ச்சனை ஊர்வலங்களை நடத்தி காரியத்தில் வெற்றிபெற்ற வீரனும் இந்த விடுதலையே!


கல்வி நீரோடையில் ஆரிய முதலைகள் என்னும் விடுதலையின் தலைப்புச் செய்திகள் வாலைச் சுருட்டிக் கொண்டு முதலைகளை ஓடச் செய்த வீர வரலாறும் இந்த விடுதலைக்கே!

குலக்கல்வி கொண்டு வந்த குல்லூகப்பட்டரை ஆத்துக்கு விரட்டியடித்ததும் இந்த வீர வேங்கையே!

பச்சைத் தமிழர் காமராசரை, பராக்குக் கூறிப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு போய் கோட்டையில் அமரவைத்த கொள்கைக்குச் சொந்தக்காரனும் இந்த விடுதலையே!

ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் ஆரிய அடிமைத்தனத்திலிருந்தும், ஆதிக்கத் தனத்திலிருந்தும் தமிழர்கள் விடுதலை பெற்றனர் என்பது இந்த விடுதலையால்தான்!

இது ஒரு கொள்கை நெருப்பு - இலட்சிய ஆசான்! சினிமாவுக்கு இடம் இல்லை. இராசி பலன் கிடையாது. மக்கள் பின்னால் இது போகாது - மக்கள் இதன் பின்னால் தான் வர வேண்டும். மக்களை வழி நடத்துபவன்தான் தலைவனே தவிர, மக்கள் பின் போகிறவன் தலைவனாகான் என்று சொன்ன தலைவரின் போர் ஆயுதமாயிற்றே விடுதலை.

விடுதலையால் பலன் பெற்ற ஒவ்வொருவரும் ஒரு விடுதலை சந்தா என்றால்கூட தமிழ்நாட்டில் முதல் இடத்தில் விடுதலைதான் மின்னிக் கொண்டிருக்கும்.

நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்று தமிழர்களை அடையாளப்படுத்திக் காட்டியுள்ளார் தந்தை பெரியார்.

ஆனாலும் இந்தத் தமிழர்களுக்காகவே உழைத்துத் தீருவது என்ற உதிர ஓட்டத்தில் உறுதியாக இருப்பது விடுதலையே!

அண்ணா ஆசிரியராக இருந்த - திராவிட இயக்கத் தாயான விடுதலை ஒரு அண்ணா தி.மு.க. ஆட்சியில் நூலகங்களுக்குள் நுழையக் கூடாதாம் - அப்படியொரு 144 தடை!

இந்துவும், எக்ஸ்பிரசும், தினமணியும், கல்கியும், துக்ளக்குகளும்தான் நூலகங்களுக்குள் உள்ளே நுழைய அனுமதியாம். இதற்குப் பெயர் திராவிட இயக்க ஆட்சியாம்!

தீண்டாமையை ஒழித்த விடுதலையிடம் அரசு இப்படி ஒரு தீண்டாமையை அனுசரிக்கிறது போலும்!

இருக்கட்டும், அதனால் என்ன? இந்த ஆட்சியின் அடையாளத்தை வரலாறு காணவேண்டாமா? அது எப்படியோ போகட்டும்!

தடைகளைப் படிகட்டுகளாக்கிப் பயணம் செய்யும் வித்தையைக் கற்றவர்கள்தான் கருஞ்சட்டைப் பட்டாளம்.

எதிர்ப்பு என்று வரும் பொழுதுதான் எரிமலையாக எழும் இந்த இலட்சியப்படை என்பதை இதற்கு முன்பும் வரலாற்றில் நிரூபித்துக் காட்டியுள்ளோம்.

தமிழர்களிடம் செல்லுவோம். வீட்டுக்கு வீடு செல்லுவோம் - கடைக்குக் கடை செல்லுவோம் - நம் வீட்டுப்பிள்ளையை நாம் தானே ஊட்டி வளர்க்க வேண்டும்.

படித்துப் பட்டம் பெற்று கை நிறைய சம்பாதிக்கும் தமிழர்களைப் பார்த்து நாம் கேட்டால் என்ன தப்பு? இந்தப் படிப்பும், உத்தியோகமும், சம்பாத்தியமும் இந்த விடுதலையால் வந்தது என்ற வரலாற்றை எடுத்துச் சொல்ல நமக்கு என்ன கூச்சம்?

இரகசிய குறிப்பேடு என்ற ஒரு முறை இருந்தது தெரியுமா? மேல்மட்ட அதிகாரிகள் கீழ்மட்ட அதிகாரிகளைப் பற்றி எழுதும் அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் பதவி உயர்வுகள்.

அன்றைக்கு மேல்மட்ட அதிகாரிகள் யார்? அனைவரும் பார்ப்பனர்கள்தானே. அவர்களிடத்தில் நமது பஞ்சம, சூத்திர அலுவலர்கள் பணியாளர்கள் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா? உரிமையைக் கேட்டால் இரகசிய குறிப்பேட்டில் கை வைத்து விடுவார்களே!

அந்த இரகசியக் குறிப்பேட்டு முறையை ஒழித்துக் கட்ட ஓயாது ஒலி முழக்கம் எழுப்பியது இந்த விடுதலை தானே! மறுக்க முடியுமா? இரகசியக் குறிப்பேட்டு முறை ஒழிக்கப்பட்ட பிறகுதானே நம் மக்கள் தலையெடுக்க முடிந்தது? முதல்வர் கலைஞர்தான் அதனையும் ஒழித்துக் கட்டினார். அதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களை அழைத்து அல்லவா சால்வை போர்த்தி நன்றிக்கடன் ஆற்றினர் அரசு அலுவலர்கள்.

இந்த வரலாறு இன்றைய தலைமுறையினரிடம் எட்டாமல் இருக்கலாம். எடுத்துச் சொல்ல என்ன தயக்கம்? எளிய வழி ஒன்றை நம் தமிழர் தலைவர் கூறியுள்ளார். கழகத் தோழர்களே, ஆளுக்கு ஒரே ஒரு விடுதலை சந்தாவைச் சேர்ப்பீர் - என்பதுதான் இந்த எளிய வழி. ஒரே மாதத்தில் ஒரே பாய்ச்சலில் ஒரு இலட்சத்தை எட்டியது என்ற நிலையை உருவாக்கிவிட முடியுமே!

நம்மால் முடியாதது வேறு யாரால் முடியும் என்ற முழக்கத்தைக் கொடுத்த தமிழர் தலைவரின் யோசனை நம் சிந்தனையில் கிளர்ந்து எழட்டும். 2012ஆம் ஆண்டு நமது தலைவர் விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆகும் ஒரு கால கட்டம்.


தமிழர்களின் மூச்சுக் காற்றான விடுதலை நிறுத்தப்படாததற்குக் காரணம் நமது மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களே! இதனை நாம் சொல்லவில்லை - அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களே அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார் (விடுதலை, 10.8.1962).

விடுதலையின் ஆசிரியராக 50ஆம் ஆண்டில் அவர் அடி எடுத்து வைக்கும்போது வீட்டுக்கு வீடு விடுதலை வருகை என்ற நிலையை உருவாக்குவோம்!

அதன்மூலம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் விடுதலை பணிமனை திறப்பு விழாவிலே (1965) கூறினார்களே - அதன்படி தமிழன் வீடு என்பதற்கான அடையாளத்தை ஏற்படுத்துவோம். தோல்வியும் நன்மைக்கே என்பார் ஈரோடு ஏந்தல் நம் பெரியார். அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - விடுதலைக்கு ஏற்படுத்திய தடையும் ஒரு வகையில் நல்லதே! - ஓர் எரிமலை கொந்தளிக்கவும், ஒரு உணர்ச்சி வெள்ளம், உத்வேகத்தோடு பொங்கி எழவும், ஒரு எழுச்சிப் புயல் வெடித்துக் கிளம்பவும், கருஞ்சட்டைப் பட்டாளத்துக்கு விடப்பட்ட சவாலைச் சந்தித்து சாதனைச் சிகரத்தில் வெற்றிக் கொடியைப் பொறிக்கவும் கிடைத்திட்ட அரும்பெரும் சந்தர்ப்பமாகக் கருதுவோம் - எழுக; கருஞ்சிறுத்தைப் பட்டாளமே!


களத்தில் இறங்கியது கருஞ்சட்டைச் சேனை

கழகத் தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று சால்வைக்குப் பதில் கழகத் தோழர்கள் சந்தாக்களை அளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக 28 ஆண்டு சந்தா, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் 20 ஆண்டு சந்தா, இராசபாளையம் முருகன் 1 அரையாண்டு சந்தா, இராசபாளையம் எழில்மதி 1 அரையாண்டு சந்தா, சிவகளை பால். இராசேந்திரம் 1 ஆண்டு சந்தா, சென்னை சண்முக சுந்தரம் 1 ஆண்டு சந்தா, கேரளா வீரமணி (மெட்டல்) 1 அரையாண்டு சந்தா, தூத்துக்குடி பி.பழனிச்சாமி 1 ஆண்டு சந்தா, நாகர்கோயில் பி.சங்கரநாராயணன் 2 அரையாண்டு சந்தா, தூத்துக்குடி ஆர். கனகராஜ் 1 அரையாண்டு சந்தா, ஆத்தூர் விஜய் ஆனந்த் 1 ஆயுள் சந்தா, இராமநாதபுரம் எம்.முருகேசன் 5 அரையாண்டு சந்தா, மதுரை எஸ்.மனோகரன் 3 ஆண்டு சந்தா, ஆரல்வாய்மொழி எம்.மணி 1 அரையாண்டு சந்தா, தென்காசி டேவிட் செல்லதுரை 4 ஆண்டு சந்தா, தென்காசி தங்கதுரை 4 அரையாண்டு சந்தா, மதுரை பவுன் ராசா 4 அரையாண்டு சந்தா, திருநெல்வேலி சி. வேலாயுதம் 1 அரையாண்டு சந்தா ஆகியோர் விடுதலை ஆசிரியர் கழகத் தலைவரிடம் விடுதலை சந்தாக்களாக நன்கொடை அளித்தனர்.

தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் திருவள்ளூர் திராவிடமணி 1 அரையாண்டு சந்தா, அரக்கோணம் சுரேஷ் 1 அரையாண்டு சந்தா அளித்தனர்.

இவர்களைப் பின்பற்றுவார்களா - தோழர்கள்?

-------------- மின்சாரம் அவர்கள் 1-6-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: