Search This Blog

5.6.11

ஏன் தந்தை பெரியார் மொழியை போர்க் கருவியோடு ஒப்பிட்டார்?

தமிழ்மொழியின் பெருமை பேசுவதைவிட அதில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புங்கள்!

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி பேச்சு

சென்னை, ஜூன் 4-தமிழ்மொழியின் பெருமை பேசுவதைவிட அதில் மாற்றம் வரவேண்டும் என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் 8.3.2011 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் 2.6.2011 அன்றைய தொடர்ச்சி வருமாறு:

மின்சாரத்தில் போய் நாம் கை வைக்க முடியுமா?


சிவாய நமோ என சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் அணுகாது என்று சொல்லுகிறார்கள். எங்களுடைய ஆட்கள் கூட்டத்தில் கேட்டார்கள். மின்சாரத்தில் சிவ,சிவ என்று சொல்லிவிட்டு கையை வையுங்கள் என்ன ஆகும்? சாம்பலாவோம். அவ்வளவு தானே தவிர வேறு இல்லை.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை


ஆகவே அச்சம் என்பது பொதுவானது. அதே நேரத்தில் திரைப்படத்தில் கூட ஒரு பாடல் உண்டு. அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா என்று சொல்லுவ திருக்கிறதே. அச்சமே இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் பெண்களுக்கு அச்சம் இருக்க வேண்டும். நாணம் இருக்க வேண்டும். மடம் இருக்க வேண்டும் என்று சொன்னால் பெண்களை மனித சமுதாயத்தில் எவ்வளவு கீழ்மைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பாதி பேர் பெண்கள்


தமிழர்கள் 115 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால் நமது நாட்டில் 55 கோடி பேர், உலகத்தில் 600 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் 300 கோடி பேருக்கு மேல் இருப்பவர்கள் தமிழர்கள்.

பெண்களை இப்படி அடிமைப்படுத்துவதற்கு மொழி ஒரு கருவியாக இருக்கலாமா? நம்முடைய மொழி என்று சொல்லி இதை ஏற்க முடியுமா? இன்னும் ஒரு படி மேலே போய் தந்தை பெரியார் சொன்னார். மொழி வளர்ச்சி அடைய வேண்டும் என்றாலே பழையதை சொல்லக்கூடாது. ரொம்ப பழையது, பழையது என்று சொல்லிக் கொண்டி ருந்தால் என்ன நிலை? நீங்கள் பொறியியல் நிபுணர்கள்.

அய்யா ரொம்ப அழகாகச் சொல்லுகிறார். ரொம்ப பழைய கட்டடம் என்றால் பயந்து கொண்டே உள்ளே போக வேண்டும் என்றார். எப்பொழுது இது இடிந்து விழும் என்றே சொல்ல முடியாது.

அதை ரிப்பேர் பண்ணலாம். அதேநேரத்தில் பழைமையையே நாம் வெறுக்க வேண்டுமா என்றால் வெறுக்க வேண்டிய அவசியமில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழைமைக்கு பெருமை உண்டு.

பழங்கால கட்டடங்கள்


Heritage Buildings என்று நீங்கள் வைக்கிறீர்கள். ஆனால் என்ன செய்ய வேண்டும்? பழையதில் கையே வைக்கக் கூடாது என்று கை வைப்ப தில்லை. துவக்கத்தில் அது எப்படி கட்டப் பட்டதோ எப்படி அமைந்ததோ அதனுடைய அடிக்கட்டுமானத்தை மாற்றாமல் அதில் எதை எதை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டுமோ அதை அப்படியே வைத்துக்கொண்டு அந்த கட்டடம் பல நூறாண்டுகளுக்குப் பின்னாலே சந்ததியினருக்கு எப்படி பயன்படுமோ அதற்கு ஏதுவாக நாம் செய்கிறோம்.

இன்றைக்கு பெரிய, பெரிய கட்டடவியல் நிபுணராக இருக்கின்ற நீங்கள் அப்படியே செய்கின்றீர்கள். பழைய கட்டடத்தை எல்லாம் பாதுகாக்கக் கூடிய அளவுக்கு பல நூற்றாண்டு களுக்கு முன்னால் இருந்த கட்டடங்களை எல்லாம் இன்றைக்கு ஒன்று சேர்க்கிறார்கள். தமிழுக்குப் பழைமை இருக்கிறது என்று சொல்லுவதில் பெருமை.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது!


பெருமை என்று சொல்லுவதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். ஆனால் அதைவிட இன்னும் சிறப்பானது என்னவென்று சொன்னால் அதிலே மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதிலே தயங்காதீர்கள். மாற்றம் வரவேண்டும்.

மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாததது. காரல் மார்க்ஸ் ரொம்ப அழகாக சொல்லுகிறார். மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாததது என்று செல்போன் காலத்தில் போய் சுத்துகிற கிராமஃபோன் இருக்கிறதா என்று யாரும் கேட்பதில்லை. அது விரும்புவதும் இல்லை.

பிளாக் பெர்ரி வரும்பொழுது....


பிளாக்பெர்ரி வரும்பொழுது இன்னும் அதிக விசயங்கள் உள்ளே அடங்கியிருக்கிறது. ஒன்றி லிருந்து இன்னொன்று மாறுதல் அடைந்து கொண்டேயிருக்கிறது.

இப்பொழுது Mouse என்பதை கம்ப்யூட்டரில் தேடி தடவிக்கொண்டிருந்தீர்கள். இப்பொழுது தட்டிக்கொண்டிருந்தவர்கள் சென்சார்வரை சாதாரணமாக வந்தாகிவிட்டது. கை கழுவுவதற்குக் கூட தானே தண்ணீர் வருகிறது. பிறகு கையை இழுத்துக்கொண்டவுடன் தானே தண்ணீர் நின்றுவிடுகிறது. இது என்ன ஆண்டவன் அருளா? ஏதோ ஒரு சக்தி உள்ளே புகுந்து விளையாடுகிறது என்று சொல்லுவதற்கு.

ஓம்-கிரீம் என்றால்....


ஒன்றும் புரியாத காலத்தில் இதைப் பற்றி என்ன சொல்லிருப்பார்கள்? இதைப் பார்த்து ஓம் என்று சொன்னால் தண்ணீர் வருகிறதுங்க. கீரீம் என்றால் தண்ணீர் வராதுங்க என்று சொல்லிவிடுவான். விட்டால் இதைவைத்தே நம்மாள்கள் நிறைய பிழைத்துவிடுவான்.

பெரியார் பிறந்ததால் இதை வைத்துப் பிழைக்க முடியவில்லையே தவிர, பெரியார் சிந்தனைகள் வளர்ந்ததினாலே இப்படிப்பட்ட ஒரு சூழல் வளர்ந்திருக்கிறதே தவிர, இந்த மூடநம்பிக்கைகள் இல்லாத அளவிற்கு தன்னம்பிக்கை வளரக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

பழையன கழிதல், புதியன புகுதல்


பழையன கழிதலும், புதியன புகுதலும் என்று நீண்ட காலத்திற்கு முன்னாலேயே எல்லாம் இலக்கணமாக எடுத்துச்சொல்லி இருக்கின்றார்கள். அப்புறம் ஏன் புதிய கருத்துகள் உள்ளே புகுந்தால் எதிர்க்கிறார்கள்.

இங்கே வந்திருக்கின்றார்கள் பல பிள்ளைகள். உண்மையமைச் சொல்லி உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. தமிழில் நான் பேசும் பொழுது நீங்கள் கேட்பீர்கள். தமிழில் துணைவேந்தரோ மற்ற வர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது ரசித்திருப்பீர்கள்.

நீங்கள் பேசியதை ஒரு கட்டுரையாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டால் வேண்டாம்ங்க ஆங்கிலத்தில் எழுதிக்கொடுக்கிறோம் என்று சொல்லுவார்கள்.

தமிழே படிக்காமல் வரக்கூடிய வாய்ப்பு


ஏனென்று கேட்டால் தமிழே படிக்காமல் வரக்கூடிய ஒரு கெட்ட வாய்ப்பு நம்முடைய நாட்டிலே வந்துவிட்டது. காம, கயல் புராள என்று ஆசிரியர் சொல்லுகின்றார். மாணவர் கேட்கின்றார். கயல் என்றால் என்ன என்று. கயல் என்றால் பிஃஷ் என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். கயல் என்றால் மீன் என்று சொல்லுவதற்குத் தயாராக இல்லை.

பிஃஷ் என்று சொன்னால்தான் இவருக்குத் தெரிகிறது. ஆட்டுக்கறி என்று சொன்னால் தெரிவதில்லை. மட்டன் என்று சொன்னால்தான் தெரிகிறது. கோழிக்கறி என்று சொன்னால் தெரிவதில்லை. சிக்கன் என்று சொன்னால்தான் தெரிகிறது.

பண்பாட்டுப் படை எடுப்பு


கோழிக்கறி என்று வாயில் சுலபமாக வருவ தில்லை. சாப்பிடுவதில் விருப்பம் இருக்கும் அது வேறு. ஆனால் முழுக்க முழுக்க நம்முடைய நடைமுறை சிந்தனை என்பதிருக்கிறதே அது எப்படி? ஒன்று நம்மீது ஏற்பட்ட பண்பாட்டுப் படை எடுப்பு. அந்த பண்பாட்டுப் படை எடுப்பில் சமஸ்கிருத மயம் நுழைந்திருக்கிறது.

தமிழன் இல்லத்து மணவிழா தமிழில் நடைபெறுவதில்லை. தமிழர்கள் கோவிலுக்குப் போனால் அங்கு அர்ச்சனை மொழி தமிழில் நடைபெறுவதில்லை. கடவுளால் உண்டாக்கப்பட்ட மொழி

பக்தர்களாக இருந்தாலும், தேவாரம், திரு வாசகம், நாயன்மார் என்று சொல்லுவார்கள் எங்கள் தமிழுக்கு இணைகிடையாது. கண்ணுதற் பெருங்கடவுளும், கடவுளால் உண்டாக்கப்பட்ட மொழி என்ற பெருமையை ஒரு பக்கத்தில் சொல்லி, அந்த கடவுளுக்காவது இதைப் பயன்படக்கூடிய அளவுக்கு செய்தார்களா? என்றால் இல்லை.

நான் ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். ரொம்ப நேரத்தை நான் எடுத்துக்கொள்ள விருப்பமில்லை. நீங்கள் வேறு அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறீர்கள். அது எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக பல செய்திகளை சொல்ல வேண்டும் என்பதற்கு அடையாளமாகச் சொல்லுகின்றேன். இசைத்துறையில்கூட சமஸ்கிருதம்

இசைத்துறையில் கூட, நமது நாட்டில் சமஸ்கிருதத்தைப் புகுத்தி அதுதான் இசை என்று சொல்லிவிட்டான். அதுதான் கருநாடக இசை. தமிழிசையே கிடையாது. தமிழில் எல்லாம் பாட்டுப்பாட முடியாதுங்க என்று சொல்லுவார்கள். இந்தப் பக்கம் ரெட்டிப்பாளைய சங்கீதம் எல்லாம் சாதாரணமானதுதானுங்க. கருநாடக சங்கீதம் என்றால் திருவையாறில் உட்கார்ந்து, தியாகய்யருடைய பெருமையை சொல்லி அவர் என்ன பாடுகிறார் என்று யாருக்கும் தெரியாது.

தலையாட்ட வேண்டும்


சங்கீதம் என்றால் யாருக்கும் புரியக்கூடாது. தலையாட்ட வேண்டும். அவ்வளவுதானே தவிர வேறொன்றும் இல்லை. அப்படி இருந்த இடத்தில் தமிழ்நாட்டில் தமிழில் பேச வேண்டும். தமிழில் சிந்திக்கலாம். தமிழில் பாட வேண்டும். தமிழன் இல்லத்து நிகழ்ச்சி தமிழில் நடக்கவேண்டும்.

இவை எல்லாம் பண்பாட்டுப்படை எடுப்பை முறியடிப்பதற்கு மொழி முக்கியம். தந்தை பெரியார் சொல்லுகிறார். இந்த மொழியைக் காட்டி இதுதான் கடைசி என்று நான் நினைக்கவில்லை.

பெரியார் சொல்லுகிறார் என்னுடைய மொழி என்பதில் நான் இதை விரும்பமாட்டேன். இந்த மொழியினாலே பயன்உண்டு என்று கருதினால் தான். நான் அதை விரும்புவேன் என்று அழகாக சொல்லிவிட்டு மேலும் சொல்லுகிறார்.

சரி,கம,பத,நிச


சரி,கம,பத,நிச என்று சொல்லுவதிருக்கிறது பாருங்கள்.இதிலே கொண்டு போய் ஒவ்வொரு பதத்திற்கும் வருணஸ்ரம தர்ம முறையில் ஜாதியைப் புகுத்திவிட்டான். சமஸ்கிருத மயமானதி னாலே என்ன? தமிழை கீழே இறக்கி நீச்ச பாஷையாக எப்படி ஆக்கினார்கள்? எப்படி கீழே உண்டாக்கினார்கள். பெரியார் ஏன் போர் தொடுத்தார்? மொழிப்போர் தொடுத்தார்?

ஏன் இந்தியை எதிர்த்தார்?


ஏன் இந்தியை பெரியார் எதிர்த்தார் என்றால் வெறும் மொழி என்று பாராமல் பண்பாட்டுப் படை எடுப்பை நினைத்து ஒரு இனத்தை அழிக்கக் கூடிய ஒரு இனத்தை அடிமையாக்கக்கூடிய ஒரு இனத்தினுடைய சுதந்திர அறிவையும், சிந்தனையையும், அதனுடையமான உணர்வையும் மிகப்பெரிய அளவுக்குக் கேவலமாக்கப்பட்ட நிலையிலே ஏற்பட்ட விளைவுதான்.

இசையில்கூட எப்படி புகுந்தார்கள்? மகா பாரத சூடாமணி என்ற தலைப்பில் ஒருவர் நூல் எழுதியிருக்கின்றார். ஆதாரத்தோடு நான் சொல்லுகின்றேன். பேராசிரியருக்கு, மற்றவர் களுக்கு பல பேருக்குத் தெரியவேண்டும்.

மகாபாரத சூடாமணி


மகாபாரத சூடாமணி என்னும் நூல் அதற்கு ஆசிரியர் சங்கீத கலாநிதி முடிகொண்டான். வெங்கட் ராமய்யர் மற்றும் ஆர்.விசுவநாத அய்யர். இவர்கள் எல்லாம் பெரிய வித்வான்கள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்கள். அவர் எழுதியிருக்கின்ற நூல் இது. சங்கீதாவி ராக மேல லஷ்ஷணம் என்று ஒரு தலைப்பு. நான்காவது அத்தியாயம். எப்படி எழுதியிருக்கிறார்கள் என்றால், சட்ஜம்,ரிஷபம், காந்தாரம், மத்தியம், பஞ்சமம், நிவேதம், விஷாதம் என்று எழுதியிருக்கின்றார்கள்.

சரி, சம, பத,நிச சப்தஸ்வரங்களைப் பாருங்கள். சரிகம பத நிச என்று எல்லோரும் பாடுகிறார்களே தவிர தமிழுக்கு வாய்ப்பு உண்டா, இல்லையா? தமிழிசைப் பற்றி சிந்திக்க புலவர்கள் கூட இதைப் பற்றி சிந்தித்ததில்லை.

தமிழன் சிந்திப்பதே இல்லை


ஆனால் இதை பெரியார் அவர்கள் மிக ஆழமாக சிந்தித்து தமிழ் இசை என்று வரும்பொழுது தமிழர்களை ஒரு பண்பாட்டுப் படை எடுப்புக்கு ஆளாக்கிருக்கிறார்கள் என்று சொன்னார்.

சட்ஜம், மத்திமம், பஞ்சமம் என்று சொல்லி சரி,க,ம,ப என்று வைத்து சட்ஜம் என்றால் குரல் ரிஷபம் என்றால் சுத்தம் காந்தாரம் கைக்கிளை மத்தியம் உழை, பஞ்சமம்-இழி இவை அத்த னைக்கும் தமிழ் இருக்கிறது. ஆனால் யாருக்கும் இதைப்பற்றி சிந்தனையே கிடையாது.

தமிழனுக்கு கலைஞர் ஆட்சி வருகிற வரையிலே நாங்கள் வலியுறுத்துகிற வரையிலே இந்த நிலை சிந்தனை கிடையாது. தமிழ்ப்புத்தாண்டில் ஒரு வார்த்தைகூட தமிழ் வார்த்தை கிடையாது. பிரபவ, சுக்கில, விபவ, விரோதி, குரோதி என்று 60 ஆண்டுகளுக்குரிய சொல் இருக்கிறது. இதில் ஒரு சொல்கூட தமிழ்ச்சொல் அல்ல.

ஒன்றாவது தமிழ்ச்சொல் உண்டா?


தமிழ் ஆண்டு என்று சொல்லும் பொழுது அது தமிழுனுக்கு உரியதாக இருந்தால், தமிழ் மக்களுக்கு உரியதாக இருந்தால் அது தமிழ்ச்சொல்லாக இருக்க வேண்டாமா?

தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் சுட்டிக்காட்டினார் உகாதி என்பது தமிழ்ச்சொல் அல்ல. காஃபி என்று சொல்லும்பொழுது நமக்கு என்ன தெரிகிறது?

அது வெளியில் இருந்து வந்த சொல் என்று தெரிகிறது. அதை காஃபி என்றே சொல்லுகிறோம். அது நடைமுறைக்கு வந்தாகிவிட்டது.

அதே மாதிரி ஜாதி என்பது நமக்கு சம்பந்தப் பட்டதல்ல. இறக்குமதி செய்யப்பட்டது. புகுத்தப்பட்டது.

விடுதலையில் ஜாதி என்றுதான் போடுவோம்


அதனால்தான் எங்களுடைய விடுதலையில் பார்தீர்களேயானால் தெரியும். சாதி என்று தமிழ்ப்புலவர்கள் எழுதுகிற மாதிரி சாதி என்று நாங்கள் போடமாட்டோம். ஜாதி என்றுதான் போடுவோம்.

ஜாதி என்றுதான் போடுவார்கள். அந்த வடமொழி சொல்லை அப்படியே போடவேண்டும் என்றுதான் சொல்லுவேன்.

ஏன் என்று கேட்டால் அதை சாதி என்று போட்டால் ஓகோ இது நமக்கு சொந்தமானது போலிருக்கிறது. நமக்கு சம்பந்தப்பட்டது போலிருக்கிறது என்கிற எண்ணம் அவனை அறியாமல் உருவாகிவிடக்கூடாது. அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஜாதியை ஜாதி என்றே போட வேண்டும் என்று சொன்னேன் (கைதட்டல்).

அப்பொழுதுதான் இது நமக்கு சம்பந்தமில்லாத விசயம் என்று தெரியும். வெளியில் இருந்து. இறக்குமதி செய்யப்பட்டது என்று தெரியும்.

பிராமண ஜாதி அந்த உணர்வுகள் வரவேண்டும். அந்த அடிப்படையிலே பார்த்தீர்களேயானால் சட்ஜமம், மத்திமம், பஞ்சமம் என்று சரி கம ராகத்திலிருந்து வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள் பாருங்கள். இதிலே சட்ஜமம், மத்திமம்,பஞ்சமம் இந்த மூன்றும் பிராமண ஜாதி. அவர்கள் எழுதியிருக்கின்ற புத்தகத்தில் இருக்கிறது.

இந்த மூன்றும் பிராமண ஜாதி. பேராசிரியர் களுக்குச் சொல்கிறேன். மாணவர்களுக்குச் சொல்கிறேன். இதை அவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகக்கூட இருக்கலாம். ஆனால் சிந்தனை யாளர்கள் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதுவரையில் எந்த புத்தகத்தில் இருக்கிறது என்று சொல்லியிருக்கின்றோம். எந்த அத்தியாயத் தில் இருக்கிறது என்று சொல்லியிருக்கின்றோம்.

மாற்று யாரும் சொல்லவில்லை


இன்னமும் இதற்கு மாற்று யாரும் சொல்ல வில்லை. தந்தை பெரியார் அவர்கள் தமிழிசை இயக்கம் என்று ஏன் ஆரம்பித்தார்? வாதாபி, கணபதி, பஜன், பஜன் என்று பாடுகிறார்கள் என்றால் வாதாபிலிருந்து வந்த கணபதியே என்று தமிழில் பாடுவதற்காகவா தமிழிசையை தந்தை பெரியார் ஆரம்பித்தார்? அது நமக்கு சம்பந்தமே இல்லை.

கணபதி என்பவர் வாதாபியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடவுளே, தவிர, நமது ஊருக்கு சம்பந்தமில்லை. தமிழ்ப் படித்தவர்களுக்கு யோசனை இருந்தால் தெளிவாகத் தெரியும். இங்கே பாருங்கள். சட்ஜம், மத்திமம், பஞ்சமம் ஆகிய மூன்றும் பிராமண ஜாதி. சத்திரிய ஜாதி

ராகத்தில் சைவ்வதம், ரிஷபம் இரண்டும் சத்திரிய ஜாதி, பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர, என்பதற்கு இவை அடையாளங்கள். காந்தாரம், நிஷதம், இவ்விரண்டும் வைசிய ஜாதி. அந்தரங்கடாசுவர சுரங்கள்.

பாட்டில்கூட ஜாதிகள்


பாட்டுபாடுவதில் கூடஇந்த சரிகம பதநிசியில் கூட ஜாதியைக் கொண்டு போய் வைத்து விட்டார்கள்.

கிரகங்களில் ஜாதியை வைத்திருக்கிறான். பஞ்சாங்கம் பார்ப்பதிலே ஜாதியை வைத்திருக் கிறான். இங்கே உலக நாத்திகர் மாநாட்டிற்கு வந்தவர் சொன்னார். லண்டனிலிருந்து வந்தவர் சொன்னார்.

பஞ்சாங்கத்தில் பார்த்தீர்களேயானல் இந்த கிரகம், அந்த கிரகம் என்று சொல்லுவார்கள்.

கிரகத்தில் கூட சூத்திரன்


சனி கிரகம் ஏன் சனி பிடிக்கிறது, சனி பிடிக்கிறது என்று சொல்லுகிறான்? அது சூத்திரன். நீச்ச பாஷை என்று சொல்லுகின்ற மாதிரி. ஆக, நம் மக்களை அறியாமையில் தள்ள, அதைவிட பிறவி இழிவில் தள்ள மொழியை அவர்கள் ஆயுதமாகக் கையாண்டார்கள்.

மொழியில் சுயமரியாதை


மொழி என்று சொல்லும்பொழுது அம்மா, அப்பா என்று சொல்லுகின்றோம். ஆகவே அந்த மொழியில் சுயமரியாதை வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் மொழிக்கு சுயமரியாதை கொடுத்தார். இதுதான் பெரியார் செய்த மகத்தான புரட்சி. அந்த மொழிக்கு சுயமரியாதை இருந்தால் தான் மொழிப் பேசுகின்றவர்களுக்கு சுயமரியாதை இருக்கும்.

இன்றைக்கு உலகத் தமிழர்கள் சங்கடத்தில் இருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். அதை எதிர்த்துக்கேட்பதற்கு இங்குள்ள பல தமிழர்கள் தயாராக இல்லை என்று கேட்டால் அதற்குக் காரணம் மொழிக்கு சுயமரியாதை இல்லை.

அதைப்பற்றி பேசுகிறவர்களுக்கும் சுயமரியாதை இல்லை. தன்மான உணர்வே இல்லை. மொழி அதற்குரிய கருவியாகப் பயன்பட வேண்டும்.

காப்பாற்றுகிற போர்க்கருவியாக இருக்க வேண்டும்


ஏன் தந்தை பெரியார் மொழியை போர்க் கருவியோடு ஒப்பிட்டார்? அதற்குக்காரணம் உங்களைப் பாதுகாப்பதற்கு மொழி முக்கியம். உங்களை பாதுகாப்பதற்கு போர்க்கருவி முக்கியம்.

அந்த போர்க்கருவி பழைய போர்க்கருவியாக இருந்தால் பயன்படாது. அது புதிய போர்க்கருவியாக இருந்தால்தான் பயன்படும். எனவேதான் மொழியில் மாற்றம் வரவேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார் என்று கூறி காலம் அதிகமாகிவிட்டதால் என்னுடைய உரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

-இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் வீரமணி உரையாற்றினார்.

0 comments: