Search This Blog

4.6.11

ஆராய்ச்சி விளக்கம் - பெரியார்


ஆராய்ச்சி விளக்கம்

ஏழை என்பவன் யார்?

தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன். இக் கூட்டத்தார்களுக்குதான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.

முதலாளிகள் என்பவர்கள் யார்?

சரீரத்தினால் வேலை செய்யும் ஆள்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.

கீழ் ஜாதியார்கள் யார்?

ஏவலாள்கள் அதாவது எவ்வித கூலியோ சம்பளமோ பேசாமல் இட்டவேலையை செய்துவிட்டு கொடுத்த கூலியைப் பெற்றுக்கொண்டு கிடைத்ததற்குள்ளாகவே வாழ்ந்து திருப்தியடைய வேண்டியவர்கள்.

மேல் ஜாதியார் என்பவர்கள் யார்?

தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் என்பவைகளை மாத்திரம் செய்து கொண்டு கூடுமானவரை சரீரத்தால் செய்யும் கடினமான வேலைகளை செய்யாது தப்பித்துக் கொள்பவர்கள்.

குடியானவர்கள் என்பவர்கள் யார்

பூமியை தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.

மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?

தாங்களே நேரில் விவசாய தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும் மற்றவர்களுக்கு குத்தகைக்கோ வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான (பூமியை உடைய)வர்கள்.

பிராமணர்கள் என்பவர்கள் யார்?

எக்காரணம் கொண்டும் சரீரம் பிரயாசைப்படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்துகொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியான உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்.

பிச்சைக்காரன் என்பவன் யார்?

பாடுபட சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு ஏமாற்றுவதாலும் சண்டித் தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள்.

செல்வவான்கள் என்பவர்கள் யார்?

தன் வாழ்க்கைத் திட்டத்திற்கு மேல் பணம் வைத்துக் கொண்டிருப் பவர்கள்.

தரித்திரர்கள் என்பவர்கள் யார்?

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக்கொண்டு துன்பப்படுபவர்கள் - நாணையமாய் வாழ முடியாமல் நாட்டுக்கு தொல்லை விளைவிப்பவர்கள். தங்கள் வரவுக்கும் தகுதிக்கும் மேல் வாழ்க்கை திட்டம் வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்.

-------------------- ஈ.வெ.ரா. "குடி அரசு" - 19.09.1937

0 comments: