Search This Blog

15.6.11

சபாஷ் அம்பத்கார் I - தந்தை பெரியார்




தோழர் டாக்டர் அம்பத்கார் நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தலைமை வகித்துச் செய்த தலைமைப் பிரசங்கத்தில்,

"மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம் மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய் விட்டன.

இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது குறைகளும், இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத் தான் அளிக்கும்.

இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம் முடிவு என்னவென்றால்,

நாம் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.

நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்மந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் நம்மை இந்துக்கள் என்று இனி கூறிக் கொள்வது கூடாது.

அதனால்தான் மேல்ஜாதிக்காரர்கள் நம்மை இழிவாகவும் கொடுமை யாகவும் நடத்துகிறார்கள். நாம் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இம்மாதிரி கொடுமைப்படுத்த அவர்களுக்கு துணிவு இருந்திருக்காது.

எந்த மதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்து கிறார்களோ அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.

பிறக்கும்போதே நான் தீண்டப்படாதவனாய்ப் பிறந்தேன் என்றாலும், அது நான் செய்த குற்றமல்ல. ஆனால் இறக்கும்போது நான் தீண்டப்படாதவனாய் இறக்க மாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது.

அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை" என்று பேசி இருக்கிறார்.

இப்பேச்சுக்குப் பிறகு சுமார் 15000 பேர்கள் கூடி உள்ள அம்மகாநாட்டில் ஏகமனதாய் ஒரு தீர்மானம் நிறைவேறி இருக்கிறது.

அதாவது,

"ஆதி இந்துக்கள் இந்துமதத்தை விட்டு அடியோடு விலகிவிட வேண்டும். சமத்துவ பாவிப்பு உள்ள வேறு எந்த மதத்திலாவது சேர்ந்து கொள்ள வேண்டும்" என்பதாகும்.

இதற்கு இந்துக்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள், "வருணாச்சிரமமும் கீதை உபதேசமும் எனது இரு சுவாசங்கள்" என்றும்,

"இந்து மதமே நானாய் இருக்கிறேன்" என்றும் சொல்லும் காந்தியாரும்,

மதத்தில் நாங்கள் பிரவேசிப்பதில்லை என்றும், பழய கலைகளையும் பழய பழக்க வழக்கம் தொழில் முறை ஆகியவைகளையும் வெகு பத்திரமாய் காப்பாற்றிக் கொடுப்போம் என்றும்,

இந்துக்களுக்கும் வருணாச்சிரம தர்மிகளுக்கும் வாக்குறுதியும் பாதுகாப்பும் அளித்திருக்கும் "சமதர்ம" காங்கிரஸ்காரர்களும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

தோழர் அம்பத்கார் அவர்கள் பேசியிருக்கும் பேச்சும், பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானமும் புதிதல்ல. அல்லது அவர்களே முதல் முதல் கண்டுபிடித்த சொந்தக் கருத்தல்ல.

ஏனெனில்,

இந்து மதத்தை பார்ப்பனரல்லாத மக்கள் விட்டுவிட வேண்டுமென்றும், யாரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், சுயமரியாதை இயக்கமானது 1925 முதலே சங்குநாதம் செய்து வருகிறது.

சென்ற ஜன கணிதத்தில் அனேக ஜாதி இந்துக்கள் என்பவர்களே தங்களை இந்துக்கள் அல்ல என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள்.

தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சேர்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுபவரானாலும், தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப் போவதில்லை என்று சுமார் 10 வருஷத்துக்கு முன்பே சொல்லி இருக்கிறார்.

அதுமாத்திரமல்லாமல் இந்துமதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும், அது ஜாதி பாகுபாட்டின் பயனாய் பயன் அனுபவிக்கும் சோம்பேறிக் கூட்டத்தின் கற்பனை என்றும் சொல்லி, அந்தப்படி பல மகாநாடுகளில் பல தீர்மானங்களும் செய்யச்செய்திருக்கிறார்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் மனு நூலையும் இராமாயணத்தையும் சுட்டெரிக்க வேண்டும் என்று, 1922ல் திருப்பூரில் கூடிய சென்னை மாகாண தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் மாகாண காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாய் இருக்கும்போதே கூறி இருக்கிறார்.

அந்தப்படியே சுயமரியாதை மகாநாட்டில் ராமாயணமும், மனுதர்ம சாஸ்திரங்களும் சுட்டெரிக்கப்பட்டுமிருக்கின்றன.

மற்றும் கேரள தேசத்து அதாவது மலையாளம், கொச்சி, திருவாங்கூர் தேசத்து தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய தீயர், ஈழவர், நாடார், பில்லவா ஆகிய சுமார் 20 அல்லது 30 லட்சம் ஜனத் தொகை கொண்ட சமூகம் தங்களது மகாநாட்டிலும் தாங்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டும் என்றும், தங்களை இனி யாரும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், தங்களுக்கு மதத்தில் நம்பிக்கையே இல்லை என்றும் பல தீர்மானங்கள் இந்த 6, 7 வருஷ காலமாகவே 10000க்கணக்கான மக்கள் கூட்டத்தில் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன.

கடைசியாக 1933ல் கூட்டப்பட்ட கு.N.ஈ.க. யோகம் என்னும் அவர்களது சமூக மகாநாட்டில் மிதவாதி பத்திராதிபரும் பெரிய செல்வவானும் சென்னை சட்டசபை அங்கத்தினருமான தோழர் சி.கிருஷ்ணன், ஆ.அ., ஆ.ஃ., அவர்களது தலைமையில் "ஈழவ சமூக மக்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. ஆதலால் ஈழவ சமூக மக்கள் தங்களை இனிமேல் இந்துக்கள் என்று யாரும் சொல்லிக் கொள்ளக் கூடாது" என்று தீர்மானித்து இருக்கிறார்கள்.

ஆகவே பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டுத் தீர்மானமும் தலைவர் அம்பேத்கார் அவர்களது வீர கர்ஜனையும் எதுவும் புதிதல்ல.

இவற்றிற்கு இதுவரை காந்தியாரும், காங்கிரசுக்காரரும், வருணாச் சிரமிகளும், பார்ப்பனர்களும், இந்துமத பாதுகாப்பாளர்களும் என்ன பதில் சொல்லி வந்தார்களோ, எப்படி கருதினார்களோ அப்படியேதான் இதையும் கருதுவார்கள் இதற்கும் பதில் சொல்லுவார்கள் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

தீண்டப்படாதவர்கள் விஷயமாகவோ, ஜாதி வித்தியாசம் விஷயமாகவோ, இந்து மத சீர்திருத்த விஷயமாகவோ இந்து மதம் என்றும் சாதி வித்தியாசம் என்றும் ஏற்பட்ட காலம் முதலே முயற்சிகள் செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றன.

கபிலர், திருவள்ளுவர், ராமானுஜர் முதலாகியவர்கள் "தெய்வத் தன்மையில்" இருந்து பாடுபட்டிருப்பதாய் சரித்திரம் கூறுகின்றன. புத்தர் முதலிய அரசர்கள் பாடுபட்டிருப்பதாய் ஆதாரங்கள் கூறுகின்றன.

ராம் மோகன்ராய் மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமலிங்க சுவாமிகள், விவேகானந்தர் முதலிய ஞானவான்கள் முயற்சித்திருப்பதாய்ப் பிரத்தியட்ச அனுபவங்கள் கூறுகின்றன.

இவர்கள் எல்லாம் இன்று பூஜிக்கப்படுகிறார்கள் என்றாலும் காரியத்தில் ஒரு பயனும் ஏற்பட்டதாகக் கூற முடியாது.

மேற்கண்ட பெரியார்களுக்கு சிஷ்யர்களாக 100 பேர்களோ பதினாயிரம் பேர்களோ ஒரு லட்சம் பேர்களோ இருக்கலாம்.

அவரவர்கள் ஸ்தாபனங்களில் ஒரு சில லக்ஷம் அங்கத்தினர்கள் இருக்கலாம். மற்றப்படி காரியத்தில் நடந்ததென்ன என்று பார்த்தால் பழய நிலைமையேதான். சட்டதிட்டங்கள் மூலம், வருணாச்சிரம கூட்டங்கள் மூலம் பத்திரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஆகவே இவ்விஷயத்தில் ஏதாவது ஒரு காரியம் தகுந்த அளவுக்கு நடைபெற வேண்டுமானால் மேல்கண்டபடி சுவாமிகள் என்றும், அவதாரங்கள் என்றும், மகாத்மா என்றும், பூஜிக்கப்படத்தக்கவர்கள் என்றும் சொல்லி சொல்லிக் கொள்ளுபவர்களால் ஒரு காரியமும் நடைபெறாது. இவர்களை பண்டார சன்னதிகள், சங்கராச்சாரியார்கள் என்று சொல்லப் படுபவர்களுக்கு ஒரு படி மேலாகச் சொல்லலாம். ஆனால் பொது ஜனங்களால் வெறுக்கப்படுகிறவர்களாலும் தூற்றப்படுகின்றவர்களாலும் தான் அவசியமான ஏதாவது மாறுதல்கள் காரியத்தில் நடைபெறக்கூடும்.

எனவே தோழர் அம்பத்கார் அவர்களின் கர்ஜ்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப்பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவி ஆகப் போகிறது.

இதைப் பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம் அம்பேத்கார் அவர்கள் பார்ப்பன சூட்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத் தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதோடு வைதீகமும், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்து விடக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்கிறோம்.

அனேகமாய் மதங்கள் என்பவைகள் எதுவும் ஏதோ ஒருவிதமான குருட்டு நம்பிக்கை மீதும் முரட்டுப் பிடிவாதத்தின் மீதே தான் கட்டப் பட்டிருக்கின்றன. எல்லா மதங்களுக்கும் ஒரே அஸ்திவாரம் தான்.

ஆதலால் "ஒரு தப்பிதத்தின் பாவ நிவர்த்திக்கு ஆக மற்றொரு தப்பிதம் செய்யக் கூடாது" என்கின்ற பழமொழியை இந்தச் சமயத்தில் நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நமது ஆசையாகும்.

நிற்க தோழர் அம்பேத்காரின் வாக்குமூலத்துக்கும் பம்பாய் ஆதி திராவிட மகாநாட்டு தீர்மானத்துக்கும் காந்தியாரும், பார்ப்பனர்களும் என்ன பதில் சொன்னார்கள் என்று பார்ப்போம். தோழர் காந்தியார் தனது வழக்கமான சூட்சித் திறத்தைக் காட்டும் முறையில் "தோழர் அம்பேத்கார் இந்தப்படி பேசியதை நான் நம்பவில்லை" என்பதாக பாசாங்கு காட்டிவிட்டு பிறகு அந்த தீர்மானமும் அவரது பேச்சும் துர்அதிர்ஷ்டவசமானது என்றும், கோபத்தில் பேசியது என்றும், தீண்டாமை விஷயத்தில் ஏதோ அங்கொன்று இங்கொன்றுமாகத்தான் தவறுதல் நடக்கின்றனவென்றும், அதற்கு ஆக இப்படி செய்யக் கூடாதென்றும், அம்பேத்காருக்கு கடவுளிடம் நம்பிக்கை இருக்குமானால்தான் தன் அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டு,

மதம் என்பது ஒருவருக்கு மாற்றிக் கொள்ளக்கூடியது அல்ல வென்றும், அது முடியாதது என்றும், மதம் மாறிவிட்டதினாலேயே தீண்டாமை ஒழிந்துவிடாது என்றும் சொல்லி அம்பேத்காரை நாஸ்திகர் என்று ஜனங்கள் பழிக்கும்படி விஷமம் செய்து இருக்கிறாரே ஒழிய, அக் கொடுமைகளுக்கு திருப்தியும் சாந்தியுமளிக்கத்தக்க வேறு எவ்வித சமாதானமும் சொல்லவில்லை. ஆகவே காந்தியாரின் கருத்துக்களை ஒரு வாக்கியத்தில் சொல்வதாய் இருந்தால் அம்பேத்காருடன் பந்தயம் கட்டுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது உன்னால் முடியாது, உன் இஷ்டப்படி நடக்காது, உன்னால் ஆனதைப் பார், உன்னை துலைத்து விடுகிறேன் என்பதுதான் கருத்தாகும்.

மற்றபடி காங்கிரஸ்காரர்களுடையவும், பார்ப்பனர்களுடையவும் பதில் என்ன என்று பார்ப்போமானால்,

சுதேசமித்திரன் பத்திரிகையானது அம்பேத்காரை பரிகாசம் செய்கிறது.

அதாவது "ஏரியோடு கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போகிறார் அம்பேத்கார். அதற்கேற்ற தீர்மானம் செய்திருக்கிறது ஆதி இந்து மகாநாடு" என்று ஏளனம் செய்திருக்கிறது.

அதாவது ஜாதி இந்துக்கள் சமூகம் ஏரியைப் போல் இருக்கிறதென்றும், அம்பேத்காரும் 6 கோடி தீண்டப்படாத மக்களும் (வெளிக்குப் போய்) கால் கழுவாத மக்கள் என்றும், வெளிக்குப் போய் கால் கழுவாமல் அசுத்தமாய் இருக்கிறவன் ஏரியுடன் கோபித்துக் கொண்டால் ஏரிக்கு ஒரு குறைவும் ஏற்படாதென்றும், ஏரி சுத்தமாக இருக்கும் என்றும் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போகிறவன் தான் அசிங்கத்துடன் இருக்க வேண்டும் என்றும், ஆதலால் அம்பேத்காரும் தீண்டப்படாதவர்களும் வேறு மதத்துக்கு போய்விட்டால் ஜாதி இந்துக்களுக்கு லாபமே ஒழிய நஷ்டமில்லை என்றும் பொருள்பட அதற்கு ஏற்ற பழமொழியைச் சொல்லுகிறது.

அதோடு "நீண்டகாலப் பழக்கவழக்கங்களை திடீரென்று மாற்றி விடமுடியாது"

"தீண்டாமை ஒழிய வேண்டுமானால் தாழ்ந்த வகுப்பினரின் மனோபாவத்திலும் விசேஷ மாறுதல் ஏற்பட வேண்டும்"

அம்பேத்காரின் பேச்சும் ஆதி இந்துக்களின் தீர்மானமும் "காரியத்தில் நடக்கக்கூடிய காரியம் அல்ல" வெறும் வாய் பேச்சு மிரட்டல் என்கிறது.

டாக்டர் அம்பேத்காரே தான் வேறு மதத்துக்கு போகக் கூடுமே ஒழிய மற்ற தாழ்ந்த வகுப்பார் இவர் பேச்சை கேட்க மாட்டார்கள் என்றும் தைரியம் கொள்ளுகிறது.

அதோடு கூடவே அம்பேத்காரை நம்பாதீர்கள் நம்பி எந்த மதக்காரரும் அவரை சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்று மற்ற மதக்காரர்களுக்கும் எச்சரிக்கை செய்கிறது. கடசியாக இதனால் எல்லாம் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்றும் வீரம் பேசுகிறது.

மற்றபடி அக்கிரகாரத் தெரு திண்ணைகளில் இருக்கும் மடிசஞ்சிகளும், அவர்களது வார்சுகளும், காபிக் கடைகளிலும், வக்கீல்கள் தாழ்வாரங்களிலும் சுதேசமித்திரனின் பழமொழி போலவே அதைவிட சற்று மேன்மையாக,

"மூக்கு மயிர் பிடுங்கப்படுவதால் ஆள் பாரம் குறைந்து விடப் போகிறதா?" என்று அலட்சியமாய் பேசப்படுகின்றன.

ஆகவே அம்பேத்கார் சொன்ன பேச்சும், தீர்மானமும் பல காலமாய் இருந்து வந்திருப்பதால் பழய பாட்டானதால் பார்ப்பனர்களுக்கும் இந்து மதப் பித்தர்களுக்கும் சிறிதும் உருத்தப் போவதில்லை என்பது உறுதி.

ஆனாலும், தோழர் அம்பேத்காருடைய பேச்சுக்கும், ஆதி இந்துக்கள் தீர்மானத்துக்கும் ஏதாவது மதிப்பு இருக்க வேண்டுமானால், அவர் உடனே இந்தக் காரியத்தை அதாவது ஆதி இந்துக்கள் ஆதி திராவிடர்கள் முதலிய தீண்டப்படாத வகுப்பு என்பவர்களிடையில் உடனே பிரசாரம் செய்து அவர்களை இந்து மதத்திலிருந்து வெளிக் கிளப்பிவிட வேண்டும். தோழர் அம்பேத்காரை பொறுத்தவரையில் சிறிது நாள் பொறுத்துத்தான் மதத்தை போக்கிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நமது பார்ப்பனர்களுக்கு இப்படிப்பட்ட ஆட்கள் இந்துமதத்தை விட்டுப் போய்விட்டால் இவர்களுடைய தொல்லை ஒழிந்தது என்று சந்தோஷமடைந்து விடுவார்கள். ஆகையால் மதம் மாறாமல் இருந்து கொண்டு எவ்வளவு பெயர்களை மதத்தில் இருந்து வெளியாக்கலாமோ அந்தக் காரியத்தை செய்ய வேண்டியது அம்பேத்காரின் முதல் கடமையாகும். பூனா ஒப்பந்தத்தால் ஏமாற்றப்பட்ட அம்பேத்காருக்கு இப்பொழுதாவது உண்மை கண்டு கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டதற்கு ஆக நாம் அவரை மனமாரக் கையாரப் பாராட்டுகிறோம்.

மற்றவை மற்றொரு சமயம் எழுதுவோம்.

------------------ தந்தைபெரியார் --”குடி அரசு” தலையங்கம் 20.10.1935

0 comments: