Search This Blog

2.6.11

பெரியார் சிந்தனையின் தனித்தன்மை

சமுதாயத்திலே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பியவர் பெரியார் பெரியார் மணியம்மை பல்கலையில் வேந்தர் டாக்டர் கி.வீரமணி விளக்கம்

சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்பியவர் பெரியார் என்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் 8.3.2011 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள்

ஆற்றிய உரை வருமாறு:

உங்களில் ஒருவனாக... இந்த நிகழ்ச்சி ஒரு சிறப்பான நிகழ்ச்சி. ஏதோ நான் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் என்ற முறையிலே இங்கு நான் பேச வந்து நிற்கின்றேன் என்ற ஒரு அறிமுகத்தை சம்பிரதாயப் படி, சடங்கு போல அவர்கள் சொன்னாலும் கூட, முதற்கண் மாணவச் செல்வங்களுக்கு நான் சொல்லுகின்றேன்.

உங்களில் ஒருவனாக இருந்துதான் நான் இங்கு பேசவந்திருக்கிறேனே தவிர, வேறு எந்தத் தகுதியையும் வைத்துக்கொண்டு உங்களை நான் சந்திக்க விரும்பவில்லை.

அதன் காரணமாகத்தான் நீங்கள் இறுக்கமாக இருக்கிறீர்களோ என்ற அய்யம் எனக்கு இருக்கிறது. ரொம்ப அளவுக்கு மீறிய கட்டுப் பாட்டோடு இருந்தீர்கள். கைகூட தட்டாமல் இருந்தீர்கள்.

ஓகோ அளவுக்கு மீறி கட்டுப்பாடு செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது. பேராசிரியர்கள் துணைவேந்தர், போன்றவர்கள். நீங்கள் எல்லாம் எழுதிக்கொண்டிருந்தீர்கள். ஆகவே கைதட்ட வாய்ப்பில்லை என்று எனக்கு விளக்கம் சொன்னார்கள் (கைதட்டல்).

கைதட்டாவிட்டாலும்....

பரவாயில்லை. கைதட்டாவிட்டாலும், கருத்தைத் தட்டிப் பார்க்கக் கூடிய அளவுக்கு எங்கள் செல்வங்கள் ஆளாக வேண்டும் என்பது தான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.

எல்லோரும் உங்களை வரவேற்றார்கள். அதைவிட மிக முக்கியம் நானும் உங்களை வரவேற்கிறேன். ஏனென்றால் முதலாமாண்டு மாணவர்களை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.

ஆகவே உங்கள் எல்லோரையும் ஒட்டு மொத்தமாக நம்முடைய விருந்தினர்களோடு சேர்த்து பார்ப்பதிலே மகிழ்ச்சி அடைகிறேன். ஆசான் பெயரில் அறக்கட்டளை. அறக் கட்டளை சொற்பொழிவு என்றால் பெரிய அளவுக்கு ஆராய்ச்சி சொற்பொழிவாக இருக்கும். ஆனால் மாணவச் செல்வங்களாக இருக்கக் கூடிய உங்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும்.

பெரியாரின் மொழி பற்றிய சிந்தனை

குறிப்பாகத் தமிழ்த்துறையிலே பண்பாட்டுப் பாதுகாப்பைப் பற்றி சொல்ல வேண்டும் என்பதற் காகத்தான் பெரியார் தன்னுடைய மொழி பற்றிய சிந்தனைகளையே வைத்தார். இதுதான் அடிப் படையானது.

நம்முடைய பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலே போராட்டங் கள் இவை எல்லாம் நிகழ்ந்தன.

பெரியார் அவர்களுடைய சிந்தனை என்பது மற்றவர்களுடைய சிந்தனையிலிருந்து மாறு பட்டது. தனித்தன்மையானது. அதற்கு ஒரு அடிப்படை உண்டு.

பள்ளி-கல்லூரிக்குப் போகாத பெரியார்

பெரியார் அவர்கள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ போகாதது தான் முதல் அடிப்படை. அதனால்தான் நாமெல்லாம் படிக்க வேண்டும் என்கிற அவசிய மில்லை.

ஒரு தாஜ்மகால் கட்டடம் இருப்பதால்...

ஒரு தாஜ்மகால் கட்டடம் இருப்பதால் தான் அதற்குத் தனிச்சிறப்பு. ஒரு தஞ்சை கோபுரம் இருக்கின்ற காரணத்தால்தான் அதற்குத் தனிச் சிறப்பு. எல்லா கோபுரங்களும் தஞ்சை கோபுரங்கள் அல்ல. எல்லா கட்டடங்களும் தஞ்சைகோபுரம் தாஜ்மகால் கட்டடங்கள் அல்ல. எல்லா கோட்டைகளும் செஞ்சிக்கோட்டைகள் அல்ல. அது போல தனித்தனிமையோடு பெரியார் அவர்கள் ஒப்பற்ற சுயசிந்தனையாளராக இருந்தார். பெரியார் அவர்கள் மக்களைப் படித்தார். அனுபவங்களையே ஆராய்ச்சிக் கூடமாக ஆக்கிக்கொண்டார். அவருடைய ஆராய்ச்சிக் கூடம் (Laboratary) அனுப வங்கள். அவர் மக்களைப் படித்தார்கள்.

மக்களைப் படித்தார்

மக்களுடைய நிகழ்வுகளைப் பாடங்களாக ஆக்கினார்கள். மக்களுடைய சுபாவங்கள், இயல்புகள், அணுகுமுறைகளைப் பார்த்தே, அவர் ஒரு சமூக விஞ்ஞானியாகவே திகழ்ந்தார்கள்.

மாறுபடுவதற்கு அடிப்படை

இதுதான் மற்றவர்களுடைய சிந்தனைக்கும், பெரியாருடைய சிந்தனைக்கும் வித்தியாசமாகும். அது மொழிப்பிரச்சினையாகட்டும், அரசியல் பிரச்சினையாக இருக்கட்டும், இனப் பிரச்சினையாக இருக்கட்டும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும்,

மாறுபடுவதற்கு அதுதான் அடிப்படை.

மாணவச் செல்வங்களுக்கு நான் விளங்கும் படியாக, புரியும்படியாக சொல்லுகின்றேன். நீங்கள் தாத்தாவை பார்த்திருப்பீர்கள். தாத்தாவுக்கு தாத்தாவைப் பார்த்திருக்கிறீர்களா? தாத்தாவுக்கு தாத்தாவினுடைய பெயர் நமக்குத் தெரியாது. நமது குடும்பங்களிலேயே வரலாறு உணர்வு மிகக்குறைவு. ஆங்கிலேயர்கள் எல்லாம் பாரம்பரியமாக வரலாற்று உணர்வை வைத்திருப்பார்கள்.

மன்னர்களைப் பற்றிப் படிக்கிறோம்

நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம். ஜார்ஜ் மன்னர் என்றால் எத்தனாவது ஜார்ஜ் மன்னர் என்று வரிசையாக கோடு போட்டு சொல்லிக் கொடுக் கின்றார்கள். அதே மாதிரி சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றி எல்லாம் சொல்லுவார்கள். பாடங்களில் பட்டியல் எல்லாம் போட்டு சொல்லிக்கொடுக்கின்றார்கள்.

அதெல்லாம் அப்புறம் இருக்கட்டுமுங்க. உங்களுடைய தாத்தா பெயர் என்ன என்று கேளுங்கள். மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் கேட்டால் டக்கென்று சொல்லுவார்கள். எங்க ளுடைய அப்பா பெயர் இது. எங்களுடைய தாத்தா பெயர் இது என்று சொல்லுவார்கள்.

என் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியாது

தாத்தாவுக்கு தாத்தா கொள்ளுத் தாத்தா. குதிரை தாத்தா இருக்கிறாரா என்று கேட்காதீர்கள். தாத்தாவுக்கு தாத்தா பெயர் என்ன என்றால் பல பேருக்குத் தெரியாது. எனக்கு என்னுடைய தாத்தா பெயர் தெரியும். என் தாத்தாவின் தாத்தா பெயர் எனக்கே தெரியாது. ஏனென்றால் அது என்னுடைய குறைபாடு அல்ல. குடும்பத்திலேயே அப்படி ஒரு வரலாற்று உணர்வை உருவாக்கிக்கொள்கிறவர்கள் அல்ல. பல செய்திகளை நாம் பதிவு செய்வது இல்லை. வெளிநாட்டிலே உள்ளவர்கள் வரிசையாக அவர்களுடைய குடும்பங்களை பதிவு செய்கி றார்கள். அது மாதிரி தாம் தெரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் ஒரு ஒப்பற்ற சுய சிந்தனையாளர். அவருடைய சிந்தனையின் தனித்தன்மை எங்கேயிருக்கிறதென்றால் அவர் ஒரு ஒப்பற்ற சுய சிந்தனையாளர்.

முழுப்பகுத்தறிவுவாதி

இரண்டாவது அவர் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி. அவரே சொல்லியிருக்கிறார். அவர் ஒரு பூரண பகுத்தறிவாளர் என்று. எதையுமே பகுத்தறிவு கண்கொண்டு பார்ப்பாரே தவிர, வேறு ஆசாபாசங்களுக்கு அவருடைய உணர்வுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு அடிப்படையில் செல்வதில்லை.

பகுத்தறிவாளர் என்றால் என்ன? இரட்டை வாழ்க்கை வாழாதவர். எதை நினைக்கிறார்களோ அதைப் பேச வேண்டும். எதைப் பேசுகிறார்களோ அதை செய்ய வேண்டும். அவர்கள்தான் பகுத்தறிவாளர்கள். வேறு ஒன்றும் அல்ல.

இரட்டை வாழ்க்கை வாழாதவர்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அண்ணா அவர்களுடைய பேச்சைப் பற்றி இங்கு சொன்னார்கள். பகுத்தறிவு என்பது வேறு ஒன்றும் இல்லை. அதாவது இரட்டை வாழ்க்கை வாழாதது என்று சொன்னார். பகுத்தறிவு என்பது அடிப்படை உரிமைகளை மறுப்பவர்கள் அல்ல. பகுத்தறி வாளர்கள். கடவுளை இல்லை என்று சொல்லு கின்ற பெரியார், காற்றை இல்லை என்று சொல்லுவதில்லை. சொல்ல முடியாது. காற்றை உணருகிறோம்


ஏனென்று கேட்டால் காற்றை உணகிறோம். காற்றுக்கு வேலி போட முடியாதே தவிர, காற்றை நாம் அடைத்து வைத்துக்காட்ட முடியும். அதே நேரத்தில் கடவுளைக் காட்ட முடியாது.

கண்டவன் என்று சொல்லுகிற ஒவ்வொருத்த னுக்கும், ஒவ்வொரு மாதிரி தெரிந்திருக்கிறான். ஒவ்வொரு காலகட்டத்திலே ஒவ்வொரு மாதிரியாகச் சொல்லியிருக்கின்றார்கள். காரணம் என்ன? உண்மைகள் ஒரே மாதிரி இருக்கும். பொய்கள், கற்பனைகள் ஆளுக்கு ஆள் வேறுபடும். இதுதான் அதற்கு பொருள். அதற்கு மேல் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

அப்பா படம் இருக்கிறது. தாத்தா படம் வேண்டும் என்று நினைத்து ஒருவரிடம் சொல்லி ஓவியம் வரையச் சொல்கிறார்கள். பெரியாருடைய சிந்தனையை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை சொல்லுகிறேன்.

என் தாத்தா என்னைப் போல் இருப்பார்

அய்யா எங்களுடைய தாத்தா படம் வேண்டும் என்று கேட்கிறார். ஓவியர் கேட்கிறார். உங்க ளுடைய தாத்தா எப்படி இருப்பார்? குரூப் போட்டோ வேறு ஏதாவது இருந்தால்கூட காட்டுங்கள் அதைப் பார்த்து பெரிதாக வரைந்து கொடுக்கிறேன். ரொம்ப சிறப்பாக இருக்கும் என்று.

எதுவுமே இல்லிங்க என்று இவர் சொல்லுகிறார். ஓவியர் பின் எப்படிங்க எழுதுவது என்று கேட்கின்றார். எங்க அம்மா சொல்லுவார்கள். எங்கள் அப்பா சொல்லுவார்கள். உன்னை மாதிரியேதான் உங்கள் தாத்தா இருப்பார் என்று என்னைப் பார்த்து சொல்லுவார். ஓ அப்படியா என்று கேட்டார். எங்கள் தாத்தா மாதிரி என்னை நினைத்துக்கொள்ளுங்கள் நீங்கள். தலைசிறந்த ஓவியர்.

அதனால் நீங்கள் அது மாதிரி வரையலாம் என்றவுடன் அவர் அந்த ஓவியத்தை எழுதிக் கொடுப்பார். பேரனை மனதில் வைத்துகொண்டு இவருடைய தாத்தா இப்படித்தான் இருந்திருப்பார் என்று மனதில் நினைத்து ஓவியர் வரைவார். பழைய ராஜாக்களுடைய படத்தையே அப்படித்தான் வரைந்தார்கள். திருவள்ளுவரை யார் பார்த்தார்கள்? திருவள்ளுவருடைய ஓவியம் உண்டா? ஆனால் இப்படி இருந்திப்பீர்கள் என்று வரைந்து வெளி யிட்டிருக்கின்றோம்.

திருவள்ளுவர் குறளிலே சொல்லுகிறார்.

மழித்தலும்-நீட்டலும் வேண்டாவாம் உலகம் பழித்தது ஒழித்துவிடின்
என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். மழித்தல் என்றால் மொட்டை அடிப்பது. நீட்டல் என்றால் தாடி வளர்ப்பது. அவருக்கு தாடி இருக்கிறது. ஒரு வேளை இவர் சொன்னதற்கு நேர் மாறாக நடக்கக்கூடியவரா என்கிற சிக்கலான கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் வள்ளுவர் படம் கூட நிற்காது.

குற்றவாளியைக் கண்டுபிடிக்க...

இன்றைக்குக்கூட குற்றவாளிகளைக் கண்டு பிடித்து இன்னார் இப்படி இருப்பார் என்று கம்ப்யூட்டர்கிராபிக்சில் போட்டுப் போட்டு குற்றவாளியை அடையாளம் காணக்கூடிய அளவுக்கு வந்தார்கள். ஆகவே ஓரளவுக்கு உருவத்தை வைத்துச் சொன்னாலே கண்டுபிடிக்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. வாய்ப்பு இருக்கிறது.
அடுத்த கட்டம் ஒரு ஒளிப்படத்தைக் கொடுக் கிறீர்கள். அது சிறிய ஒளிப்படம். அதை பெரிதாக எடுத்துக்காட்டுங்கள் என்று சொன்னால் என்ன நிலை? ஏனென்றால் இப்பொழுது ஒளிப்படம் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும்.

ஒளிப்பட நிபுணர் சொல்லுவார்

அந்த ஒளிப்படத்திற்காக கேமராவைத் தேடிக் கொண்டிருந்தோம். இப்பொழுது எல்லோர் கையிலும் கை தொலைப்பேசி இருக்கிறது. செல்ஃபோன் இருக்கிறது. செல்ஃபோனிலேயே எல்லா படங்களையும் எடுக்கக் கூடிய நிலைக்கு வந்தாகி விட்டது.

ஒருவர் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு போய் ஒளிப்பட நிபுணரிடம் கொடுக்கின்றார். என்னங்க, படம் எடுத்துக்கொடுத்திருக்கிறீர்கள் என்ன செய்ய என்று கேட்டால், என்னை மாதிரி இந்த படம் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார். படம் உங்களை மாதிரிதானே இருக்கிறது என்று ஒளிப்பட நிபுணர் சொல்ல, இல்லிங்க என்னை மாதிரி கொஞ்சம் டச் பண்ணிக்கொடுங்கள் என்று சொல்லுகின்றார்.

சரி டச் பண்ணி இன்னும் கொஞ்சம் அழகாகக் கொடுக்கிறேன் என்று ஒளிப்பட நிபுணர் சொல்லுவார். ஒளிப்படத்தில் கொஞ்சம் அழகு குறைந்தவரைக்கூட இன்னும் கொஞ்சம் அழகாக்கலாம். ஒளிப்பட நிபுணருடைய கை வண்ணத்தினாலே அழகாக்கலாம். இது ஒளிப்பட நிபுணருடைய வேலை.

அது ஓவியக்காரருடைய வேலை

ஆளே பார்க்காமல் எழுதிக்கொடுத்தது. ஓவியக்காரருடைய வேலை. இது முதல் கட்டம். அடுத்தது எக்ஸ்ரே எடுப்பதற்காகப் போகிறோம். அதுவும் கேமராதான். ஒருவர் கீழே விழுந்தவுடன் எலும்பு முறிந்து போகிறது. எலும்பு முறிந்தவர், மருத்துவமனைக்குப் போகிறார். உடனே எக்ஸ்ரே எடுத்து வாருங்கள் என்று சொல்லுகிறார்கள். எக்ஸ்ரே எடுக்கிறார்கள். அந்தப் படத்தைக் கொண்டு வந்து டாக்டரிடம் காட்டுகிறார்கள். எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என்று டாக்டர் கூறுகிறார்.

டச் பண்ணிக்கொடுங்கள்

ஒளிப்பட நிபுணரிடம் கேட்டமாதிரி, எக்ஸ்ரே வையும் கொஞ்சம் டச் பண்ணிக்கொடுக்கலாம் என்று கேட்டால் ஒளிப்பட நிபுணர் டச் பண்ணிக்கொடுப்பார். ஆனால் எக்ஸ்ரே எடுத்தவ ரிடம் போய் என்னங்க உடைந்த எலும்பை உடைந்த எலும்பாக காட்டுகிறீர்களே மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆகவே அதைக் கொஞ்சம் டச் பண்ணிக்கொடுத்து நன்றாக இருக்கிறமாதிரி கேட்டால், அவர் சொல்லுவார் இல்லிங்க. இது உடைந்த எலும்பை, உடைந்த எலும்பாகக் காட்டுவதற்காகத்தான் எக்ஸ்ரே இருக்கிறதே தவிர, இது மற்ற ஒளிப்படக் கருவி மாதிரி கிடையாது.

ஆகவே இந்த நாட்டிலே பல வகையான சிந்தனையாளர்கள் உண்டு. ஓவியக்கார சிந்தனை யாளர்கள் உண்டு. ஒளிப்பட நிபுணர்களைப் போன்ற சிந்தனையாளர்கள் உண்டு.

பெரியார் எக்ஸ்ரே நிபுணர்

ஆனால் பெரியார் என்ற சிந்தனையாளர் இருப்பதையே அப்படியே எடுத்துக்காட்டி சமுதாயத்திலே மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை தரவேண்டும் என்று விரும்பியவர் பெரியார். அவர் ஒரு எக்ஸ்ரே நிபுணர் போன்றவர்.

--------------தொடரும் -- “விடுதலை” 2-6-2011

பெண்களுடைய உரிமையைப் பற்றி தந்தைபெரியார் போல் எவரும் சிந்தித்ததுண்டா?

பெரியார் மணியம்மை பல்கலை.யில் வேந்தர் டாக்டர் கி.வீரமணி உரை

பெண்களுடைய உரிமையைப் பற்றி தந்தை பெரியார் போல் எவரும் சிந்தித்த துண்டா? என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் 8.3.2011 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியார் சிந்தனையின் தனித்தன்மை


அதனால்தான் மொழிப்பிரச்சினை என்றுவரும் பொழுதுகூட ரொம்ப அழகாக சொன்னார், இங்கே கூட அய்யாகேட்டார்.

தொண்டர் நாதனை தூதினை விடுத்ததும்
தொண்டர் நாதனை தூதினை விடுத்ததும்
என்று சொன்னதைப் பற்றி பெரியார் கேட்டார்

தமிழுக்கு என்ன சிறப்பு? தமிழில் எல்லாவற்றை யும் எழுத முடியும். தமிழில் பொருளியல் கருத்தைச் சொல்ல முடியும். மருத்துவ கருத்தைச் சொல்ல முடியும்.

எதை வேண்டுமானாலும் தமிழில் சொல்லலாம். தமிழில் சிறப்பான இசை. தமிழ் இசை மற்றவர் களுக்கெல்லாம் முன்னோடியான இசை. அது பண்பாட்டுப்படை எடுப்பினாலே பின்னாலே தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழுக்கு என்ன பெருமை?


கண்ணுதற் பெருங்கடவுளும் கழக மோட மர்ந்து கடவுள்தான் முதல் என்று அப்பொழுது ஒரு பாடலைப் பாடினார்கள்.

தொண்டர் நாதனை தூதினை விடுத்ததும் முதலை உண்ட பாலனை அழைத்ததும்
என்று சொன்னால் என்ன அர்த்தம்? தமிழ்ப் புலவர்களுக்கு அந்த பாட்டினுடைய பொருள் தெரியும்.

தமிழுக்கு என்ன சிறப்பாம்?


தமிழுக்கு என்ன சிறப்பு என்றால் ஒரு குழந்தையை முக்கால்வாசி முதலை முழுங்கி விட்டதாம். உடனே தமிழ்ப்பாட்டுப் பாடிய வுடனே அதைவிட்டது. கதவு பூட்டியிருந்தது. மறைக்கதவும், திறந்ததுவோ, தமிழுக்கு என்ன பெருமை என்றால் தமிழ்பாட்டுக்கு ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. தமிழ்பாட்டைப் பாடினால் பூட்டிய கதவு திறந்துவிடும் என்று ஒரு பெருமையைச் சொன்னார்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை இருக்கிறது பாருங்கள். அது முற்றிலும் மறான சிந்தனை. அய்யா கேட்டார். மொழி என்பது கருத்துகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வது. அது மட்டுமல்ல. பண்பாட்டினுடைய அடித்தளம் அது. அதில் கையை வைத்தால் பண்பாடு குலையும். இதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டுமே தவிர, இந்த மாதிரி போலித்தனமான, புரட்டுத்தனமான ஒரு தெய்வீக அம்சங்களை எல்லாம் கொண்டு வந்து உள்ளே விட்டு, கற்பனைகளை எல்லாம் கொண்டு வந்து உள்ளே விட்டு இதுதான் தமிழ்மொழியின் சிறப்பு என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா? தமிழ்மொழி முதலை உண்ட பாலகனையும் அழைக்கும் என்று சொல்லுகிறார்கள். அதற்கு பெரியார் சொல்லுகிறார்.

முதலையிடம் குழந்தையை விட்டுவிட்டு


அய்யா கேட்கிறார் சரி. யாராவது ஒரு குழந்தையை முதலையிடம் கொடுத்துவிட்டு ஒரு 50 புலவர்கள் சுற்றி நின்று கொண்டு பாட்டு பாடுங்கள். அந்த முதலைவிட்டு விட்டுப்போய்விடுமா? என்று கேட்டார்.

இந்தத் துணிச்சல் தந்தைபெரியாருக்குத்தான் உண்டே தவிர வேறு யாருக்கும் கிடையாது. காரணம் அவர்கள் மற்றவர்கள் வாழ்த்து கிறார்களா? வைகிறார்களா? அல்லது வசவு பாடுகிறார்களா? என்பதைப்பற்றித் தந்தை பெரியார் அவர்கள் கவலைப்பட்டதே கிடையாது.

தமிழ்பாட்டுப் பாடினால் கதவு திறக்குமா?


அதே மாதிரிதான் மறைக்கதவு திறந்தது என்று தமிழ் புலவர்கள் பாடினார்கள். அதாவது தமிழ் பாட்டுப்பாடினால் பூட்டுபோட்ட கதவு திறந்தது அந்த அளவுக்கு சக்தி கொண்டது தமிழ்மொழி என்று சொன்னார்கள்.

நான் இதை தமிழ்ப்பல்கலைக் கழகத்திலேயே கேட்டேன். அப்படியானால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குப் பூட்டே தேவையில்லையே. பொழுது விடிந்து ஒரு புலவர் பாட்டுப்பாடினால் திறந்து கொண்டு போய்விடுகிறது. இன்னொரு பாட்டு பாடினால் மூடிடப்போகிறது. அவ்வளவு தானே தவிர.

மொழிக்கு என்ன போலிப்பெருமை?


அப்படியானால் பூட்டுக்கும் வேலையில்லை. சாவியை மறந்து வைத்துவிட்டோம் என்கிற வேலையே இல்லையே என்று கேட்டால் இதெல்லாம் இப்பொழுது எங்கங்க நடக்கிறது என்று கேட்பார்கள். இப்படி கேட்கிறது இருக்கிறது பாருங்கள் அதுதான் பகுத்தறிவு

மொழிக்குப் போலிப் பெருமைகள்


ஆனால் மொழிக்கு அப்படிப்பட்ட போலிப் பெருமைகளை உண்டாக்கக் கூடாது. மொழி என்பது ஒரு போர்க்கருவி போல என்றுதான் பெரியார் அவர்கள் சொன்னார்கள். போர்க்கருவி என்றால் இந்த காலத்தில் போய் அம்பையும், வில்லையும் விட முடியுமா? போராட்டத்தில் போய் நிற்க முடியுமா?

நிற்கவே முடியாது. இன்றைக்கு ஏ.கே. 47 கருவிகள் வந்திருக்கின்றன. இன்றைக்கு ஏவுகணைகள் வந்திருக்கின்றன. அதுவும் ஆளே இல்லாத இடத்தி லிருந்து ஏவிக்கொண்டிருக்கக் கூடியவைகள். இப்படி வளர்ச்சி அடையக் கூடிய காலகட்டத்தில் மொழி என்பது சிறந்த கருவியாக இருக்க வேண்டும்.

பள்ளிக்கூடம் போகாத தலைவர்


இன்றைக்கு மகளிர்க்கு ஒரு சிறப்பான நாள். உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். அதனுடைய சிறப்பு எல்லோருக் கும் தெரியும்.

இன்று உலக மகளிர் நாள் பெண்களுடைய சுய மரியாதையைப் பற்றி பெண்களுடைய உரிமையைப் பற்றிய தந்தை பெரியாரைத் தவிர வேறு எவரும் அந்த அளவுக்கு பேசியிருக்க முடியாது.

பல்கலைக் கழகத்திற்குள்ளே போகாத தலைவர். பள்ளிகளுக்குள்ளே நுழையாத பெரியார். பட்டங்கள் பெறாத பெரியார்

பெண்களுக்கு எந்தக் காலத்திலும் சுதந்திரம் கிடையாது


இன்றைக்கு அவர் பெயராலே பல்கலைக் கழகம் இன்றைக்கு அவர் பெயராலே ஆய்வுகள் எல்லாம் நடக்கின்றன. மனுதர்மத்தைப் பற்றி சொன்னார்கள். மனுதர்மத்தில் பெண் என்பவர் எந்த காலட்டத் திலும் சுந்ததிரமாக இருக்கத் தகுதி அற்றவர். பெண் குழந்தை சிறிய வயதில் தகப்பனுடைய கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும். மனுதர்மத்தினுடைய சுலோகம் அது.

பெண் வளர்ந்தால்-திருமணம் ஆன பிற்பாடு அப்பொழுதும் கணவனுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். சுதந்திரம் கிடையாது. பிறகு மகன் வந்த பிற்பாடு என்ன சொல்லுகிறார்களோ அதைக் கேட்டுக்கொண்டு அந்தக் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். ஆகவே பெண் என்பவர் தன் வாழ்நாள் முழுக்க சுந்திரமாக இருக்க முடியாது. கட்டுப்பாடுகளைத் தாண்டி இதுதான் மனுதர்மத்தினுடைய கருத்து.

பண்பாட்டுப்படை எடுப்பு


ஆனால் நம்முடைய பண்பாட்டு அடிப் படையில் அப்படி கிடையாது. இன்னொரு பண்பாட்டுப் படை எடுப்பு நம் மீது நிகழ்ந்த வுடனே அந்த பண்பாட்டுப் படை எடுப்பை எப்படி ஆக்கி வைத்துவிட்டார்கள் என்று சொன்னால் அருமை நண்பர்களே, குறிப்பாக கல்வியியல் துறையிலே இருக்கக் கூடிய மாணவச் செல்வங்கள், மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அய்யா அவர்கள் தான் முதல் முறையாக தனித்த சிந்தனையோடு ஆராய்ச்சி செய்தார். மற்றவர்கள் சொன்னதைவிடு.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?


நம்முடைய நாட்டில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? என்று பெண்களுக்கு ஓர் இலக்கணம். அந்த பெண்களுக்கு ஓர் இலக்கணம் சொல்லும் பொழுது என்ன சொல்லுவார்கள் பெண்களுக்கு?

நல்ல பெண்மணி என்றால் அந்த பெண்ணுக்கு என்ன இலக்கணம்? என்ன குணாம்சங்கள் இருக்க வேண்டும் என்றால் அச்சம்-மடம்-நாணம் அப்புறம் என்ன? (பயிர்ப்பு-மாணவிகளின் குரல்) பார்த்தீர்களா மனப்பாடமாக இருக்கிறது உங்களுக்கு.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு சரி. அச்சம் என்றால் பயம் இல்லையா? நாணம் என்றால் வெட்கம், மடம் என்று சொன்னால் புத்தி சாலித்தனமாக இருக்கக் கூடாது. கேள்வி கேட்கக் கூடாது என்று இருக்கலாம். பெண்கள் எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது. மடமாக இல்லை என்றால் அடிமையாக இருக்கக்கூடாது.

பெண்கள் என்றால் அடிமை


பெண்கள் என்றால் அடிமையாக இருக்க வேண்டும் என்றுதானே சமுதாயத்தில் அடக்கி வைத்திருக்கிறார்கள். அச்சம், மடம், நாணம் வரை சொல்லியாகிவிட்டது. பயிர்ப்பு என்றால் என்ன? பயிர்ப்பு என்பதற்கு என்ன பொருள்? யாராவது சொல்லுங்கள் பார்ப்போம். பயிர்ப்பு பற்றி நீங்கள் யாராவது சொல்லுங்கள்.

நம்முடைய பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள் துணிச்சலுக்குப் பெயர் போனவர்கள். அதனாலே இதை வகுப்பறையாகக் கருத வேண்டும். இங்கு மார்க் கூட்டியும் போட மாட்டார்கள். குறைத்தும் போட மாட்டார்கள். துணிச்சலாக நீங்கள் சொல்ல வேண்டும் என்பது தான் மிக முக்கியம். யாராவது ஒருத்தர் சொல்லுங்கள். பயிர்ப்பு என்றால் என்னவென்று சொல்லுங்கள்.

யார் சொன்னது?


அந்தக் காலத்தில் இப்படித்தான் ஒலி பெருக்கி இல்லாத காலம். கடைசியாக ஒருவர் பேசுவார். பத்து பேர் தள்ளி இருப்பவர். மேடையில் இருக்கிறவரிடம் இந்த செய்திக் கேட்டுக்கொண்டு போய் சொல்வார். அதற்கடுத்து அவர் இன் னொருவரிடம் போய் சொல்லுவார். ஒலிபெருக்கி கண்டுபிடிப்பதற்கு முன்னால் இருந்த காலம்.

பயிர்ப்பு என்றால் கல்வி என்று பொருள். (மாணவி பதில்) எதில் இருக்கிறது? அகராதியில் இருக்கிறதா? (தமிழர் தலைவர் கேள்வி).

ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததா? அல்லது எதிலிருந்து சொல்லிக்கொடுத்தார்கள்? (தமிழர் தலைவர்)

கேள்விப்பட்டது (மாணவி) அப்படியானால் சரி. அதாவது எவ்வளவு பெரிய பொய்யை சொல்லியிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட உதாரணம் வேறு ஒன்றும் கிடையாது. கேள்விப் பட்டதுதான். இன்னொரு மாணவி சொல்கிறார். சந்ததியை பெருக்குவது என்று. எதிலேம்மா இருக்கிறது தப்பாகப் போனால் அதைப் பற்றிக் கவலையே படாதீர்கள்.

நமது பிள்ளைகள்-எல்லாம் வாதம் பண்ணக் கூடிய அளவிற்கு துணிச்சலோடு இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. எங்கள் ஆசிரியர் சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்று ஒரு மாணவி கூறுகிறார்.

என்ன சொல்லிக்கொடுத்திருக்கிறார் சந்ததியை உருவாக்குவது. (மாணவியின் பதில்) சரி, குழந்தை பிறக்காமல் இருக்கிறார்களே அவர்களுக்கு என்ன நிலை? எந்த கதி? அதாவது சந்ததியை உருவாக்குவது தான் ஒரு பெண் என்றால் ஆணுக்கு அந்த சக்தி உண்டா? இல்லையா? அப்படியானல் ஆணுக்கும் பயிர்ப்பு இருக்க வேண்டுமா இல்லையா?

ஏன் அதை வைக்கவில்லை? சந்ததியை பெண் மட்டுமே உருவாக்க முடியாது. ஆணும், பெண்ணும் சேர்ந்தால்தான் சந்தியை உருவாக்க முடியும் (சிரிப்பு). நாளை முதற்கொண்டு அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு பெண்களுக்கும் பொதுவானது. ஆண்களுக்குப் பொதுவானது என்று சொல்ல முடியுமா?

தோழியர்களே! தோழியர்களே! உங்களுக்கு நான் சொல்லுகிறேன். தந்தை பெரியார், பல்கலைக் கழகத்திலும் படிக்காதவர். எந்த பல்கலைக் கழகத்திலும் படிக்காதவர், ஆராய்ச்சி செய்யாதவர். அப்படிப்பட்ட தந்தைபெரியார்தான் பத்து அகராதியைப் புரட்டிவிட்டு பத்து அகராதியில் இருக்கின்ற சொற்களைப் பயன்படுத்தியிருக் கின்றார்.

அகராதியைப் பாருங்கள்


மதுரை செந்தமிழ் அகராதி. சைவ சித்தாந்த நூல் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தமிழ்அகராதி இன்னும் வேறு எந்த அகராதியாக இருந்தாலும் நீங்கள் இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நூலகத்தின் அகராதியை எடுத்துப்பாருங்கள்.

பேராசிரியர் இருக்கிறார்கள். ஒரு பேராசிரியர் அல்ல. இரண்டு பேராசிரியரை சாட்சிக்கு வைத்து சொல்லுகிறோம். நீங்கள் தமிழ், ஆங்கிலம் எல்லாம் படித்தவர்கள்.

இன்று உலக மகளிர் நாள். மொழியோடு இணைத்து இந்த சிந்தனையைப் பார்க்க வேண்டும். பெரியாருடைய சிந்தனை. தனித்த சிந்தனை என்பதற்கு அடையாளம் என்ன? அய்யா சொல்லுகிறார். பயிர்ப்பு என்றால் அருவருப்பு, குர்சிதம், அசிங்கம் என்று அகராதியில் உள்ளதை எடுத்துச்சொல்லுகின்றார். இந்த மூன்று விளக்கச் சொல்தான் அகராதியில் போட்டிருக்கிறது.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்றால் அசிங்கமாக இருக்க வேண்டும். பெண்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால் அந்த பெண்ணைப் பார்த்தவுடனே ஆசை வரக்கூடாது. அருவருப்பு வரவேண்டும்.

இப்படி ஒருத்தர் சொல்லியிருந்தால்-இப்படி ஒரு சூழல் இருந்தால் அந்த சொல்லை நாம் அகராதியில் வைத்திருக்கலாமா? தயவு செய்து நினைத்துப் பாருங்கள். முதல்வேளை பெண்கள் மாநாட்டில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் முற்போக்கு சிந்தனையாளர்கள் எல்லாம் இந்த பயிர்ப்பு என்பதை முதலில் காலி பண்ண வேண்டும்.

எங்களை அவமானப்படுத்துவதற்கு, அசிங்கப் படுத்துவதற்கு இதைவிட வேறு ஒன்றும் கிடையாது. குர்சிதம் என்றால் அதற்கு என்ன பொருள் என்று அய்யா பார்த்தார். இங்கேயும் தமிழறிஞர்கள் இருக்கிறார்கள். குர்சிதம் என்கிற வார்த்தைக்கும் அருவருப்பு அசிங்கம் என்றுதான் போட்டி ருக்கிறான். அப்படியானால் இது என்ன அர்த்தம் என்று பெரியார் கேட்டார்.

பெண்களையே அவ்வளவு கொச்சைப்படுத்தி, அவ்வளவு கேவலப்படுத்தி வைக்கக் கூடியதற்கு இந்த மொழியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொன்னால் காரணம் அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு ஒரு வழிப்பாதையாக இருக்கக்கூடாது

-----------------தொடரும் -- “விடுதலை” 2-6-2011

0 comments: