Search This Blog

13.6.11

ஹசாரே ஒரு ஊழல் பேர் வழி; பாபாராம்தேவ் ஒரு வியாபாரி!

அன்னா ஹசாரே - ராம்தேவ்களை மத்திய அமைச்சர்கள் வரவேற்பதா? காங்கிரசின் குளறுபடிகளுக்கு அளவேயில்லையா?

அன்னா ஹசாரே - ராம்தேவுக்கு - மத்திய அமைச்சர்கள் சிகப்பு கம்பள வரவேற்பா? முதலில் இவர்களது கறுப்பு பணத்தை மத்திய அரசு தோண்டட்டும். காவி முகமூடி அணிந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு பின்புலமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி.யே! இவ்வளவு குளறுபடி களுக்கும் காரணமே காங்கிரஸ் அரசுதான் என்று கடுமையாக குற்றம் சாட்டினார் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

ஊழலை ஒழிக்கும் உத்தமர்களா - ஹசாரே, பாபாராம்தேவ்கள்? இதன் பின்னணி என்ன? என்ற தலைப்பில் சிறப்புப் பொதுக் கூட்டம் 12.6.2011 ஞாயிறு அன்று இரவு 7.10 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வழக்குரைஞர் அருள்மொழி


ஹசாரே பற்றியும், பாபாராம்தேவ்கள் பற்றியும் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றுவதன் நோக்கத்தை தனது வரவேற்புரையிலே விளக்கினார் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி.

தமிழர் தலைவர் உரை


அடுத்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது சிறப்புரையில் குறப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:

நம்மைப் பொறுத்தவரை லஞ்சம், ஊழல் ஒழிக் கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது.

சில பேர் சொல்லுவார்கள். இது என்ன ரொம்ப ஆபாசமாக இருக்கிறது; இதை எப்படி அனுமதிக் கிறார்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் மனதுக்குள் அந்த ஆபாசத்தை ரசிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் அவர்கள்.

இவர்களே ஊழல்வாதிகள்!


அதுபோல இந்த அன்னாஹசாரே, பாபாராம் தேவ்கள் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். கறுப்புப் பணத்தை கொண்டு வரவேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் இவர்களுடைய நிலை என்ன? அன்னாஹசாராவே அறக்கட்டளையில் ஊழல் செய்து அவருடைய வழக்குகளே நீதிமன்றத்தில் இருக்கின்றன. ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகின்ற இவர்களுடைய கறுப்புப் பணத்தை முதலில் மத்திய அரசாங்கம் கண்காணிக்க வேண்டும்.

ஒரு இமேஜ் வர வேண்டும்


இவர்கள் தங்களுக்கு ஒரு இமேஜ் வர வேண் டும் என்பதற்காக இப்படி ஒரு ஊழல் ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் எல்லைக்குள் அன்னா ஹசாரேவையும், பாபா ராம்தேவ்களையும் அனுமதித்தது அரசியலில் காவியை உள்ளே நுழைய அனுமதித்தது எல்லாமே காங்கிரஸ் கட்சி செய்த மிகப் பெரிய தவறு. திலகர் இந்துமத உணர்வை - ஆரிய மத உணர்வை கீதா ரகசியம் என்று சொல்லி வன்முறையை நியாயப்படுத்திட இந்துத்துவாவை உள்ளே விட்டார்.

மதத்தையும், அரசியலையும் போட்டு அவர் குழப்பினார். இந்தியாவில் சுயராஜ்யத்தைக் கொண்டு வர வேண்டும், பிரிட்டிஷாரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டே அரசியலில், மக்களிடையே மத உணர்வைத் திணித்தார் திலகர்.

திலகர் காலத்தில் மத விஷவித்து நுழைப்பு


இந்தியாவில் பிளேக் நோய் வந்தது. வெள்ளைக்காரர்கள் பிளேக் நோயை ஒழிக்க எலியை கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். உடனே திலகர் போன்றவர்கள், வெள்ளைக்காரர்கள் கணபதியின் வாகனமான எலியைக் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார்கள். நம்முடைய கடவுள் விசயத்தில் தலையிட்டு விட் டார்கள். மத விசயத்தில் தலையிட்டு விட்டார்கள்.

அவர்களுடைய கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும் என்று சொல்லி மக்களை தங்கள் வயப்படுத்த திலகர் அந்தக் காலத்தில் மத உணர்வை மக்களிடையே பரப்பினார்.

இத்தாலியில் இருந்த பாசிச முறையைப் பார்த்த வீரசவர்க்கர்தான் இந்துத்துவாவையே இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார். 1976ஆம் ஆண்டு நெருக்கடி காலத்தில் இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் பொழுதுதான் செக்குலர், சோசலிஸ்ட் என்ற வார்த்தையையே அரசியல் சட்டத்தின் முன்னுரையில் திருத்தம் செய்து சேர்த்தார்கள்.

ஹசாரே - ராம்தேவ் அரசியல் சட்டத்தை நிர்ணயம் செய்பவர்களா?


நம்முடைய நாட்டு இந்திய அரசியல் சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? முழு இறையாண்மையைக் கொண்ட, சமதர்மத்தை உள்ளடக்கிய, மதச்சார்பின்மையை, ஜனநாயகத்தை உள்ளடக்கிய அரசாக இருக்க வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. இந்த நாட்டிலே மதவாதிகளை சுதந்திரமாக விட்டது யார்?

அன்னா ஹசாரேவும், பாபா ராம்தேவ்களும்தான் அரசியல் சட்டத்தை நிர்ணயம் செய்கிறவர்களா? இதைவிட மத்திய அரசுக்கு தலை குனிவு, வேறு என்ன இருக்க முடியும்?

யார் கறுப்புப் பண முதலைகளோ, யார் கறுப்புப் பணத் திமிங்கிலங்களோ அவர்கள்தான் அதை நியாயப்படுத்துகிறார்கள். முதலில் அவர்களிடம் உள்ள கறுப்புப் பணத்தைத் தேடுங்கள்.

தேர்தலில் சீர்திருத்தம்


இன்றைக்கு இருக்கின்ற தேர்தல் முறையை அடியோடு சீர்திருத்தம் செய்தால் ஒழிய ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிக்கவே முடியாது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 25 லட்சம்தான் செலவு செய்ய வேண்டும். ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வளவு தான் தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
யாராவது இதுவரையில் உண்மையான கணக்கை கொடுத்திருக்கிறார்களா?

25 லட்சம் செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தால் 24 லட்சத்து 999 ரூபாய் செலவு செய்தேன் என்றுதான் கணக்கு கொடுப்பார்.

கணக்கு கொடுக்கிறவருக்கும் இது பொய்க் கணக்கு என்று தெரியும். அதை வாங்கி வைப்பவர்களுக்கும் இது பொய்க் கணக்கு என்று தெரியும். இது ஒவ்வொரு முறையும் நடைபெற்று வருகின்ற நடைமுறை.

கடுமையான சட்டம் தேவை

இவைகளை ஒழிக்க கடுமையான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரட்டும். நாங்கள் கை தூக்குகிறோம். மக்கள் மன்றத்தில் ஆதாரிக்கத் தயாராக இருக்கிறோம்.

அன்னா ஹசாரேவை பாபா ராம்தேவ்களை விளம்பரப்படுத்தியது யார்? ஒன்று ஊடகங்கள். இரண் டாவது மத்திய அரசு.

இப்பொழுது வெளிவந்திருக்கின்ற இண்டியா டூடே என்ற இதழில் பல அருமையான செய்திகள் பாபாராம் தேவ்களைப்பற்றி வெளி வந்திருக்கிறது.

அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்கும் கமிட்டியில் தன்னை போடும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்லுகிறார்.

காங்கிரஸ் செய்த மன்னிக்க முடியாத தவறு


ஹசாரே சொன்னதை ஏற்றுக் கொண்ட யு.பி.ஏ. அரசாங்கம் - காங்கிரஸ் அரசாங்கம் மன்னிக்க முடியாத தவறுகளை இதன்மூலம் செய்திருக் கிறது. வெட்கப்படக் கூடிய கண்டனத்திற்குரிய செயலாகும். மத்திய அரசாங் கத்தினுடைய செயல். ஊழலை ஒழிப்பதற்கு எத்தனையோ பொருளாதார நிபுணர்கள் இருக் கிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டியதுதானே. ராஜா செல்லையா கமிட்டி பரிந்துரைகள் எல்லாம் இருக்கின்றன.

ஹசாரே மத்திய அரசைப் பார்த்து சொல்லுகிறார். ஊழல் ஒழிப்புக்கு மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். அதற்கு ஆளுங்கட்சியின் சார்பில் ஒரு அய்ந்து பேரை போட்டுக் கொள்ளுங்கள். அதேபோல நான் ஒரு அய்ந்து பேரை சொல்லுகிறேன். அவர் களுடைய பெயரையும் அந்த குழுவில் போட்டுக் கொள்ளுங்கள் என்று இவர் மத்திய அரசுக்கு சொல்வதா?

வம்பை விலைக்கு வாங்கியது யார்?


மத்திய அரசு அதை அப்படியே பின் பற்றுவது. இந்த வம்பை தானே வலிய போய் விலைக்கு வாங்கியது மத்திய அரசாங்கம் அல்லவா?

இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டுமானால் அது நாடாளுமன்றத் திற்குத்தான் அந்த அதிகாரம் உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அந்த சட்டத்தை இயற்றவேண்டும்.

அரசியல் சட்டத்தில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?

மத்திய அரசாங்கமே தனியே ஊழல் ஒழிப்பிற்கு ஒரு சட்டம் இயற்ற அரசியல் சட்டத்தில் எங்கே, எந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது? நாங்கள் இந்தக் கருத்தை சென்ற கூட்டத்திலேயே சொன்னோம்.

ஒரு பக்கம் அன்னாஹசாரே, பாபா ராம்தேவ்களை காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்குகின்றார்கள். திக் விஜய் சிங்கே தாக்குகின்றார். ஹசாரே ஒரு ஊழல் பேர் வழி; பாபாராம்தேவ் ஒரு வியாபாரி என்று சொல்லுகின்றார்.

இன்னொரு பக்கத்தில் பார்த்தால் மத்திய அரசாங்கத்தின் சார்பில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில்சிபல் ஆகியோர் பாபா ராம்தேவுக்கு சிவப்பு கம்பளம் வர வேற்பு கொடுத்து விமான நிலையத் திற்குச் சென்று வரவேற்பு கொடுப் பதா? என்ன இரட்டை வேடம் இது? காங்கிரஸ் கட்சி தவறுகளுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறது.

காவி முகமூடி


காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கனுப்ப ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., போர்த்தி அனுப்பிய முகமூடி நபர்கள் தான் அன்னா ஹசாரே, பாபாராம் தேவ்கள். இந்துத்துவா முகமூடியை காவி முகமூடியைப் பயன்படுத்தி எப்படியாவது இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பலாம் என்று பார்க்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்ற சாமியார் பாபாராம்தேவ் போலீசாருக்குப் பயந்துபோய் பெண்கள் உடுத்துகின்ற ஆடையைப் பயன்படுத்தி தப்பி ஓடலாமா? ஏனய்யா இதுவா வீரம்?

அய்யா ஒரு கதை சொல்லுவார்: ஒருவன் சாமியாராகப் போகிறேன் - துறவியாகப் போகிறேன் என்று வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விட்டு புறப்பட்டாராம். போகும் பொழுது வெளியே ஒரு சொம்பு கிடக்கிறது அதை வீட்டில் எடுத்து போடு என்று தன் மனைவியிடம் சொன்னானாம்.

இவனே துறவி சொம்புமீது என்ன கவலை? அது மாதிரி அல்லவா பாபா செயல் இருக்கிறது? சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து விட்டு ஏன் பயந்து ஓட வேண்டும்?

பின்னால் ஆர்.எஸ்.எஸ். சக்திகள்


ஹசாரே, ராம்தேவ்களுக்கு பின் னால் இருக்கின்ற சக்திகள் ஆர்.எஸ்.எஸ். மதவாத சக்திகள்.

பாபாராம்தேவ், ஹரியானாவை சேர்ந்த ஒரு சாதாரண ஆள். நடந்து போனவர். பிறகு சைக்கிளில் போனார். பிறகு காரில் வந்தார்.

ராம்தேவ் யார்?


டில்லியில் அவர் வந்து தனி விமானத்தில் இறங்க ஒரு மணி நேரத்திற்கு ஆன செலவு 2 கோடியே 40 லட்சம் ரூபாய். அவருடைய ஹரித்துவாரில் மட்டும் இருக்கின்ற சொத்து மதிப்பு ரூ.1115 கோடி.

இவர் 200 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். ஆயுர்வேத மருந்து முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரை எல்லாம் இவருக்கு சர்வ சாதாரணம்.

இரண்டு மில்லியன் டாலரில் ஒரு தீவையே வாங்கி வைத்திருக்கின்றார். இவர் வைத்திருக்கின்ற உணவு பூங்கா மதிப்பு ரூ.500 கோடி.

1990ஆம் ஆண்டில் பாபா ராம்தேவ் ஒரு சாதாரண ஆள். ஓட்டை சைக்கிளில் ஆயுர் வேத மருந்து விற்று வந்தவர். வீடு வீடாகச் சென்று விற்று வந்தவர். அதன் பிறகு யோகா ஆரம்பித்தார். ஆசிரமம் கட்டினார். எல்லாம் கோடிக்கணக்கில் எப்படி வந்தது?

அடடா எப்படிப்பட்ட மருந்து...?


பிருந்தா காரத்தே ஒரு முறை பாபாராம்தேவ் ஆயுர் வேதமருந்தை சோதனையிட வேண்டும் என்று அறிவித்தார்.

இந்திய மருத்துவக் கழகமும் அதை சோதனையிட்டு மாட்டுக் கொழுப்பு போன்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று அறிவித்தது மட்டுமல்ல - அவருடைய ஆயுர்வேத மருந்துக்கு கண்டனம் தெரிவித்தது.

கேன்சர், எச்.அய்.வி. எய்ட்ஸ் போன்ற நோய்களை நீக்குகின்ற மருந்தாம். அது மட்டுமல்ல - ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால் பாபாராம் தேவ் தயாரிக்கின்ற ஆயுர் வேத மருந்து - அந்த மருந்துக்குப் பெயர் புத்திரிவதி.

ஆண் குழந்தை பெற வேண்டும் என்று விரும்பினால் போதும் பெண்கள் இந்த ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டால் ஆண் குழந்தையாகவே பிறந்து விடுமாம். உலகத்திலே இந்தமாதிரி மருந்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவே இல்லை. அதுமட்டுமல்ல, ஓரினப் புணர்ச்சியை குணப்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்த மருந்தாம் இந்த மருந்து.

எல்லாம் பணம்தான்!


ராம்தேவ் சீடர் சொல்கிறார்: ராம்தேவ் ஆசிரமத்தில் சேர சாதாரண கட்டணம் ரூ.11,000, மதிப்புமிகு கட்டணம் ரூ.21,000, ஸ்பெஷல் கட்டணம் ரூ.51,000. வாழ்நாள் கட்டணம் 1 லட்சம். ஃபவுண்டர் மெம்பர் ஆக கட்டணம் ரூ.5 லட்சம். இவர் வீட்டிற்கு வர ஒரு கோடி கேட்பாராம். பணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டாராம்.

இவருக்கு எல்லாமே பணம்தான். ஏழைகளுக்காக இவர் எதையும் செய்ததில்லை. லட்சக்கணக் கில் பணம் கொடுப்பவரிடம் மட்டும் பேசுவாராம். இவரிடம் ஆசி பெற ரூ.10,000. பிரசாதம் பெற ரூ.50,000. இவரை அழைத்து வீட்டில் பூஜை செய்ய ஒரு கோடி ரூபாயாம்.

இப்படிப்பட்ட ஆசாமிக்கு காங்கிரஸ் கட்சி சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கலாமா?

வருமான வரித்துறை என்ன செய்கிறது?


இவருடைய சொத்துகளை வருமான வரித்துறையினர் தோண்டியிருக்க வேண்டாமா? இதுவரை வருமான வரித்துறை எந்தக் கேள்வி யும் கேட்டதில்லை.

யாராவது ஒருவர் தொழில் நடத்தினால் வருமான வரி கட்டியே ஆக வேண்டும். வருமான வரி இவரது அறக்கட்டளை செலுத்தியிருக்கிறதா?

ஒழுக்கக் கேடாக நடப்பவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதா? காவி ஆட்சி இந்த நாட்டிலே உருவாக்கிட வேண்டுமென்று துடிக்கிறார்கள் இவர்கள்.

பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சுக்காக ஊழலை ஒழிப்போம் என்ற பெயரில் அன்னா ஹசாரேவும், பாபா ராம் தேவ்களும் இந்துத்துவ முகமூடிகளை, காவி முகமூடிகளை அணிந்து கொண்டு வருகிறார்கள். இவர்களை ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கின்றன.

மத்திய அரசே எச்சரிக்கை!


மத்திய அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது மக்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் கூறினார். எம்.ஆர். ராதா மன்றம், ஞாயிற்றுக்கிழமை அன்றும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

-----------------------”விடுதலை” 11-6-2011


0 comments: