Search This Blog

6.6.11

சித்தர்களின் சிந்தனைப் புரட்சி!


சித்தர்களின் சிந்தனைகள் தமிழினத்தின் இலக்கியச் சொத்துக்கள்.

பெரிதும் அவை பகுத்தறிவுக் கருவூலங்கள் மட்டுமல்ல மூடநம்பிக் கைகள் (கடவுள் முதல் மோட்சம் - நரகம் வரை) எல்லாவற்றையும் எதிர்த்து ஓசை எழுப்பிய முரசங்கள்!

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் - குறள் (620)

ஊழ் என்பதற்கு தலைவிதி என்றும் தலை யெழுத்து, முன்கூட்டியே எழுதப்பட்ட விதி என்றும் பலரும் பொருள் கொண்டனர். ஆனால் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களோ, மிகப் பொருத்தமாக, சுபாவம் என்ற எளிதில் மாறாத மாற்றப்பட முடியாத மனப்போக்கு என்றே விளக்கினார்கள்!

ஒரே அளவுள்ள வெண்கலத்தை ஒரே தரத்தில் ஒரே நேரத்தில் காய்ச்சி ஊற்றி உருவாக்கிய மணிகளிலிருந்து வரும் ஒசை ஒன்றொன்றும் மாறுபடுவது எப்படியோ அப்படித்தான் மனித சுபாவங்கள் அவரவர்கள் பெற்றோர் மற்றும் கலவைகளால் மாறுபடுகின்றன - அதற்குப் பெயர் சுபாவம் என்று கூறினார் தந்தை பெரியார்.

மிக அருமையான விளக்கம்!

உழைப்பே முக்கியமானது என்பது, தமிழர்களின் வாழ்வியல், முன் ஜென்ம கர்ம வினைப் பயன் என்பது பிறகு அவர்களுக்குள் புகுந்தவைகளே! சித்தர்கள் இதற்கு எதிர்க் குரல் கொடுத்துப் பாடிய சிந்தனைச் செல்வர்கள் ஆவார்கள்!

தெரியாது என்றலைந்தால் தெரியுமோதான் தேடியல்லோ ஆராய்ந்து பார்க்கவேணும் அறியாத மூடருக்கு அறியப்போமோ அன்னத்தை திரட்டி மெள்ள வாய்க்கீந்தாலும் குறியாக முழங்குதற்கு மாட்டார் மூடர் குறிப்பாக இதுவெல்லாலென்னா செய்வேன் மறைவான அறிவொன்றுமில்லை; இல்லை மட்டாத மூடருக்கு அறிவுதானே (39)

என்ற சித்தர்பாடல் அறிவுத் தேடலாலும், விடாமுயற்சியாலும் வளரும் எனவும் மனிதனுக்கு அறியவொண்ணாத மறைவான அறிவொன்றும் தேவையில்லை என உரைக்கின்றது.

வேதங்களையும், உபநிஷதங்களையும் மறைவான அறிவுபெற்று உயர் ஜாதியினர் போற்றியதை இப்படி மறுத்து, அறிவு உழைப்பினால் வருவது என்பதை உறுதிப்படுத்துகிறது.

அறிவு எவருக்கும் ஏகபோகம் அல்ல எவர் உழைத்தாலும் அதனை அடைய முடியும் என்று மிக எளிமையாக விளக்கி மறுப்புரைத்த மகத்தான சிந்தனையாளர்கள் அவர்கள்.

தந்தை பெரியார் சொல்லுவார். சிந்திப்பவன் சித்தன் - புத்தியைப் பயன்படுத்துபவனே புத்தன்! என்று இப்போது புரிகிறதா அது எவ்வளவு உண்மை என்பது!

நரகமென்பார் சொர்க்கமென்பார் நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்

நல்வினைகள் - தீவினைகள் - இவற்றிற்கு உடனடியாக பலன் கிடைக்கும் என்பதும், வினைக் கான பலன் கடவுள் என்ற ஒருவன் அளிக்க முடியாது என்பதும் மேற்காட்டிய சித்தர்களின் சீரிய சிந்தனைகள் ஆகும்!

உலகமொன்று நின்றிலங்கும் வானமொன்று, புவியுமென்று - ஞானவெட்டியான் தேடுகின்ற புராணம் எல்லாம் பொய்யேயென்றேன் சிவன், பிரமன், விஷ்ணு பெயர்களென்றேன் ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்தமென்றேன்


- அகத்தியர் சூத்திரம் - 20


எவ்வளவு காலத்திற்கு முன்பே இப்படிப்படி சிந்னைச் சிறகடித்து பறந்துள்ளன பார்த்தீர்களா?

-------------------- மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் தொடரிலிருந்து ...”விடுதலை” 6-6-2011

0 comments: