ஒரு மாநிலத்திற்குள்ளேயே பல்வேறு கல்வித் திட்டங்கள் ஏன்? இதில் ஏற்றத் தாழ்வு என்ற நிலை ஏற்றதுதானா? கல்வியிலே நிலவும் இந்த உயர்வு - தாழ்வு நல்லதுதானா? அதுவும் வருணாசிரமம் என்ற நிலைப்பாடு உள்ள ஒரு சமூக அமைப்பில் - இத்தகைய கல்வி முறைகள் மேலும் கேடு பயக்குமே!
மெட்ரிக்குலேசன் கல்வித் திட்டம் என்றால் ஒரு உயர் நிலை - மாநிலக் கல்வித் திட்டம் என்றால் சற்றுக் கீழான நிலை என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. மேலும் பல்வேறு கல்வித் திட்டங்கள் என்ற நிலையில் மதிப்பெண்களை வைத்து தேர்வு செய்வது எப்படி என்கிற வினாக்கள் எல்லாம் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளன.
இதற்கொரு தீர்வு காணும் வகையில்தான் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கருத்தறிந்து, சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியது. கடந்த ஆண்டு முதல் மற்றும் ஆறாம் வகுப்பிலும் இந்த ஆண்டு முதல் மற்ற வகுப்புகளிலும் இது அறிமுகப்படுத்தப்பட இருந்த நிலையில், தி.மு.க. ஆட்சி எதைச் செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கும் தற்போதை அரசு, சமச்சீர் திட்ட செயலாக்கத்தை நிறுத்தியுள்ளது.
இதன்மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் இந்தப் புதிய முடிவை ஏற்க மறுத்து விட்டது. ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி இவ்வாண்டு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்திய தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
அதிமுக அரசோ பிடிவாதமாக மேல் முறையீடு என்கிற முறையில் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது குறித்து அரசுக்குக் கவலையிருப்பதாகத் தெரியவில்லை.
சமச்சீர் கல்வி கூடாது என்று சொல்லப்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கிய காரணம் இதில் வருணாசிரமப் பார்வை இருக்கிறது என்பதுதான்.
இவ்வார துக்ளக் (15.6.2011) இதழைப் புரட்டிப் பார்த்தால் இந்தச் சூட்சமம் விளங்காமற் போகாது.
சமச்சீர் கல்வியைப் பற்றிய மறுபரிசீலனையை நாம் ஏற்கெனவே வரவேற்றிருக்கிறோம். எல்லா வகைக் கல்வியையும் கீழே இறக்கிச் சமன்படுத்துவது, கல்விச் சீர்திருத்தமும் அல்ல; மாணவர்களின் எதிர்காலத்திற்கு உகந்ததும் அல்ல; ஆகையால் அந்த முயற்சியை செய்த சமத் தாழ்வு கல்வி முறை கைவிடப்படுவது நல்லதே என்பது நமது கருத்து.
-------------- இது துக்ளக் தலையங்கத்தில் காணப்படுவ தாகும்.
சமச்சீர் என்ற பெயரில் நல்ல தரமான கல்வியைக் கொடுக்கும் வழிமுறைகளைக்கூட கீழே கொண்டு வந்து எல்லா தரத்தையும் கீழ் மட்டத்திற்கு இறக்கி, சமநிலை உண்டாக்குவது என்ற முயற்சி நடந்தது.
தமிழகத்தில் கல்வியின் தரத்தைத் தாழ்த்தி விடுகிற இந்த முயற்சி, அப்போதே விமர்சனத்திற்குள்ளாகியது. ஆகையால்தான். இப்போது வந்துள்ள அ.தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு எடுத்திருக்கிறது! என்று ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் திருவாளர் சோ ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதில் குறிப்பிடப்படும் சொற்களைக் கொஞ்சம் கவனமாகப் பார்க்க வேண்டும்.
சமச்சீர் கல்வி என்பது தரத்தைத் தாழ்த்தும் கல்வி; நல்ல தரமான கல்வியைக் கெடுக்கும் வழிமுறைகளை கீழ் மட்டத்திற்கு இறக்கி விடும் கல்வி. எல்லா வகைக் கல்வியையும் கீழே இறக்கிச் சமன்படுத்தும் சமத்தாழ்வு கல்வி முறை! இவைதான் பார்ப்பனர்களின் பார்வைகள் சமச்சீர் கல்வி என்பது.
இந்தச் சொற்களுக்கெல்லாம் அகராதியைப் புரட்டிப் பொருள் தெரிந்த கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
சமச்சீர் என்றாலே மட்டமானது - கீழிறக்கமானது என்ற மனப்பான்மை பார்ப்பனர்களிடத்தில் தலை தூக்கி நிற்பதை எளிதில் அறிய முடியும்.
பொதுவாக பார்ப்பனர்கள் தரம், தகுதி என்று சொன்னாலே அதன் பொருள் என்ன என்று நமக்கு நன்றாகவே தெரியும். தலைமுறை தலைமுறையாக மனப்பாடம் பண்ணிப் பண்ணி தங்கள் தகுதியை உயர்த்திக் கொண்டவர்கள் அல்லவா! அந்தக் கல்விதான் அவர்களுக்குத் தேவை.
எல்லோரும் ஒரே முறையில் படித்து, எல்லோரும் சம நிலையில் வளர்ச்சி பெறுவதை அவர்கள் ஏற்க மாட்டார்கள். பிறப்பிலேயே உயர்வு - தாழ்வு என்று பேதம் பேசும் பரம்பரை சமச்சீரையெல்லாம் ஏற்றுக் கொள்ளுமா?
பார்ப்பனர்கள் இந்த 2011ஆம் ஆண்டிலும் எந்த மனப்பான்மையில் இருக்கின்றனர் என்பதற்கு இது ஒன்றேகூட போதுமானதாகும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு பகுதி இருக்கிறது.
தமிழகத்தில் கல்வியின் தரத்தைத் தாழ்த்தி விடுகிற இந்த முயற்சி; அப்போதே விமர்சனத்துக்குள்ளானது. ஆகையால்தான் இப்போது வந்துள்ள அ.தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு எடுத் திருக்கிறது என்று அதிமுக ஆட்சிக்கு ஆலோசகராக இருக்கும் திருவாளர் சோ சொல்வதன் மூலம் சமச்சீர் கல்வி என்றால் தரத்தைத் தாழ்த்தி விடுகிற கல்வி என்ற பார்ப்பன மனப்பான்மை இந்த அரசுக்கும் இருக்கிறது என்று தானே கொள்ள வேண்டும்? தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடம் இது.
----------------------"விடுதலை” தலையங்கம் 24-6-2011
0 comments:
Post a Comment