Search This Blog

18.6.11

சமச்சீர் கல்வித் திட்ட எதிர்ப்பும் - குலக் கல்வித் திட்ட சிந்தனையும்!


சமச்சீர் கல்வித் திட்ட எதிர்ப்பும் - குலக் கல்வித் திட்ட சிந்தனையும்!

சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்ப் போர் யார்? அந்த வரிசையில் முதலில் துருத்திக் கொண்டு நிற்பவர் திருவாளர் சோ ராமசாமி. அவர்தானே இப்பொழுது பார்ப்பன இனத்துக்கு, அறிவிக்கப்படாத ஏகத் தலைவர் - அ.தி.மு.க. ஆட்சியின் ராஜகுரு!

சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி அவர் என்ன திருவாய் மலர்கிறார்? எல்லா வகைக் கல்வியையும் கீழே இறக்கிச் சமன் படுத்துவது சமத் தாழ்வு கல்வி முறை என்று இதற்குப் பட்டம் சூட்டியுள்ளார்.

ஸ்டேட் போர்டு, ஓரியண்டல் ஸ்கூல் ஆஃப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்திய முறை, மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.ஈ. என்ற பல கல்வி முறைப் பாடத் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. இதில் சி.பி.எஸ்.ஈ. என்பது அகில இந்திய அளவில் சமச்சீர் கொண்டதாகும்.

தமிழ்நாட்டளவில் இப்படிப் பல் வேறு கல்வி திட்டங்கள் இருப்பதாக ஒரு குழப்ப நிலை நீடிக்கிறதே!

மெட்ரிக்குலேஷன் படித்தால் ஒரு மாதிரி,- ஸ்டேட் போர்டு ஸ்கூலில் படித்தால் தரம் தாழ்ந்த மாதிரியான சமூக மதிப்பீடுகள் இருக்கவே செய்கின்றன. பாடத் திட்டங்கள் மாறி மாறி இருக்கும் நிலையில் மதிப்பெண்களை எப்படி அடிப்படையாகக் கொள்ள முடியும்? தொழிற் கல்லூரிகளிலோ, கலைக் கல்லூரிகளிலோ சேருவதற்குப் பல்வேறு மாறுபட்ட கல்விக் கூடங் களில் படிப்போரின் மதிப்பெண்களை எப்படி அடிப்படையாகக் கொள்ள முடியும் என்பது போன்ற பிரச் சினைகள் இதில் உள்ளடக்கம்.

ஏழை- பணக்காரப் பேதம், சிறுவர்கள், மாணவர்கள் மத்தியிலே தெரியக் கூடாது, - உணரக் கூடாது என்பதற்காகத்தானே சீருடைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அப்படி இருக்கும் போது கல்வித் திட்டத்தில் மட்டும் நெட்டைக் குதிரை, மட்டக் குதிரை என்ற வேறுபாடு ஏன் என்ற வினா நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

அதற்கொரு முடிவுதான் கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டதுதான் சமச்சீர் கல்வித் திட்டம்! கடந்த ஆண்டே முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் அமல்படுத்தப்பட்டும் விட்டது.

தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு அ.இ. அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் ஏட்டிக்குப் போட்டி என்ற அணுகுமுறை இங்கே கிடுகிடுக்கிறது.

தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த கல்வித் திட்டமா - ஏற்கமாட்டோம் என்று அவசர அவசரமாக சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

இப்பொழுது நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய கையுடன் குழுக்கள் அமைக்கப் படுகின்றனவாம். ஆராய்ச்சி செய்யப் போகிறார்களாம். தலைமைச் செய லாளர்தான் இந்தக் குழுவின் தலைவராம்.

முதல் அமைச்சரின் மனப்பான்மை இதில் என்ன என்று தெரிந்துவிட்ட பிறகு அதிகாரிகள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். - எழுதி வைக்கப்பட்ட முடிவுதான். (இப்பொழுது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆலோசகர்கள், கேட்கவும் வேண்டுமோ!)

சோ அய்யர் எழுதுவதைப் பார்த்தால் இதில் வெறும் அரசியல் கண்ணோட்டம் என்பதை விட வருணாசிரமக் கண்ணோட்டம் என்ற கொம்பு நீட்டிக்கொண்டிருப்பதை நன்றாகவே அறிய முடிகிறது.

சிலர் உயர் வகைக் கல்வியைப் பெறுவதை, தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்ட திட்டம் என்று சமச்சீர் கல்வியைக் குறிப்பிடுகின்றார். (துக்ளக் தலையங்கம் 22.-6.-2011)


யார் அந்த சிலர்? அந்த உயர் வகைக் கல்வி என்பது என்ன? என்ற கேள்வி எழுகிறது.

அந்தச் சிலர் என்பது பார்ப்பனர்களே! அவர்களுக்குத் தேவையானது என்பது. அந்த உயர் வகைக் கல்வி என்பதே! சமச்சீர் கல்வி என்று வந்து விட்டால் அந்தச் சிலர் - இந்தச் சிலர் என்ற வேறுபாடு இல்லாமல், அந்த உயர் வகைக் கல்வி _ இந்த வகைக் கல்வி என்ற மேடு பள்ளம் இல்லாமல் அனைத்துக் குடி மக்களும் ஒரே வகையான கல்வியைப் படிக்க வேண்டும் என்ற சமநோக்கும், அகலப் பார்வையும் வந்து விடுமே! ஏற்பார்களா மேட்டுக் குடியினர்?

இதுதான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பார்ப்பானுக்கும் பறையனுக்கும் ஒரே மாதிரியான கல்வியா என்கிற பார்ப்பனத்தனம் இதில் திமிர் முறித்து பூணூல் கொழுப்புடன் எகிறிக் குதிக்கிறது.

நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் (ஜூன் 2011) இதழில் தலையங்கப் பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ள பகுதி முக்கியமானது. இது குறித்து விடுதலையில் இதற்கு முன்பே தலையங்கமும் தீட்டியுள்ளது. (14.6.2011) உங்கள் நூலகம் தலையங்கம் என்ன கூறுகிறது?

ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். சமச்சீர் கல்வித் திட்டப் பாடப் புத்தகங்களை நிபுணர் குழு வைத்து ஆராயப் போவதாக அறிவித் துள்ளார். அவர் நிறுத்தி வைத்துள்ளாரா? குப்பைத் தொட்டியில் வீசி விட்டாரா? என்று தெரியவில்லை. இது பற்றி வெளி வந்திருக்கும் செய்திகளுக்கு இணைய தளங்களில் பலர் தங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்களாகப் பதிவு செய்துள்ளனர். அவற்றிலிருந்து பார்ப்பனியக் கருத்து நிலையை ஊக்கமுடன் ஆதரிக்கும் சீரழிந்த நடுத்தர வர்க்கத்தினர் சமச்சீர் கல்வித் திட் டத்தை ஜெயலலிதா குப்பைத் தொட்டியில் வீசி விட்டதாக குதூகலிக்கின்றனர் என்று தெரிகிறது.

*********************************
தினமலர் உள்ளிட்ட ஒரு சில பார்ப்பனிய கருத்து நிலை சார்ந்த ஊட கங்களும், உயர் நடுத்தர வர்க்கப் பிரிவினரும் சமச்சீர் கல்வித் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் சமத்துவம் என்ற பேச்சே அவர்களுக்குக் கசக்கிறது : தகுதி, திறன் என்பன பற்றி யெல்லாம் வாய் கிழிய அவர்கள் பேசுகின்றனர். இன்னொருபுறம் இவர்கள் தங்கள் பார்ப்பனிய - சாதிய கருத்து நிலையையே பெரும்பகுதி யினரின் கருத்து நிலையாகக் காட்ட முயற்சிக்கின்றனர். தகுதி, திறமை பற்றிய பொய்மைகளைக் கிழித்தெறிய வேண்டியது நமது கடமை என்று உங்கள் நூலகம் தலையங்கத்தில் எழுதியிருப்பது உண்மைத் தன்மையதாகும்.

நல்லவர்களின் நாடித் துடிப்பு நம் வாழ்வு என்னும் கிறித்தவ அமைப்பு நடத்தி வரும் வார இதழில் (19-6-2011) ஒரு கருத்துக் கூறப்பட்டுள்ளது.

அம்மாவின் மனுதர்ம பார்ப்பன சித்தாந்தம் அய்ந்தாண்டுகளுக்கு இனி மறைமுகமாக அமல்படுத்தப் படும். முதலடியே முதல் கோணலானது. நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்மா செய்த துரோகமாகும். சமச்சீர் கல்வி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை ராஜாஜியின் குலக் கல்வித் திணிப்பு போன்ற பார்ப்பன இனச் சதியின் நூற்றாண்டு காலப் போராட்ட தொடர்ச்சியாக இனம் காணலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற எழுத்தாளர் சின்னக் குத்தூசி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும்போது (29-5-2011) ஒரு கருத்தினைப் பதிவு செய்தார்.

பறையனுக்கும், பார்ப்பானுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைத் தருகின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை இங்கே நடைமுறைப்படுத்த விடக்கூடாது. அதை அழித்தே தீருவேன் என்கிற கருத்துப் போர் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது

(தமிழ்மண் ஜூன் 2011 பக்கம் 10) என்று விமர்சித்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி, அதுவும் சமமான கல்வி என்பது பார்ப்பனியத்துக்கு எதிரானதே! சோவின் தலையங்கம் அதனை வெளிப்படையாகவே கூறுகிறது.

வெறிநாயை அடித்துக் கொல்லுவது போல வெகு மக்களால் அடித்து விரட்டப்பட்ட ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை - இந்தக் கால கட் டத்திலும் சோ ஆதரித்து எழுதுகிறார் என்றால், அந்தப் பார்ப்பனப் புத்தி அனைவருக்கும் சமமான கல்வி என்னும் சமச்சீர் கல்வியை எப்படி ஏற்றுக் கொள்ளும்? சுருக்கமாகச் சொன்னால் சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்கள் ஆச்சாரி யாரின் குலக்கல்வித் திட்ட புத்தி யுள்ளவர்கள். சமச்சீர் கல்வி வேண்டும் என்பவர்கள் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒழித்த தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வழிபட்டவர்கள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்ல வேண்டுமா?

சமச்சீர் கல்வி பார்ப்பனர் அல்லாதாருக்கானது. சமச்சீர் கல்வி எதிர்ப்பே பார்ப்பனர்களுக்கானது.

ஆம். குலக் கல்வித் திட்டப் போர் வேறு ஒரு பெயரில் மூண்டுவிட்டது.

தமிழர்களின் கல்வியில் கை வைத்த வர்களைத் தமிழர்கள் தண்டிக்காமல் விட்டதில்லை. 1952 இல் ஆட்சிக்கு வந்த ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வர்களின் தலையில் கைவைத்த எம்.ஜி.ஆர். அவர்கள் 1980 இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சரியான அடி வாங்கினார். (மொத்தம் 39 இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றி பெற்றார்.)

சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களைக் கொண்ட ஒரு குழுவினை முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அறி வித்து விட்டார்.

அதற்கான விலையை இந்த ஆட்சி கொடுக்க வேண்டி வரும்; -இது கல்லின் மேல் எழுத்தாகும்.

************************************

குலக்கல்வித் திட்ட காதலர்கள் உஷார்! உஷார்!!

அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும்; அரை நேரம் படித்தால் போதும் என்று கூறி அன்று ஆச்சாரியார் (ராஜாஜி) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தாரே - அந்தக் குலக் கல்வித் திட்டத்தை... இன்றைக்கும் ஆதரித்து எழுதுகிற பார்ப் பனர்கள், பார்ப்பன ஏடுகள் இருக்கத்தானே செய்கின்றன.

அந்தக் குலக்கல்வித் திட்ட ஆதரிப்புக் கனவான்கள்தான் சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றனர் என்பதை அடிக்கோடிட்டு மனதில் நிறுத்துக!

தினமலர் - வாரமலரில் (4.4.2010) கேள்வி ஒன்றக்குப் பதில் என்ன தெரியுமா?

கேள்வி: இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பல்கலைக் கழகங்கள் கல்வி கற்றுத் தருவதைவிட, ஏதாவது கைத் தொழில் கற்றுத் தந்தால் என்ன? பட்டத்தை வைத்துக் கொண்டு, ரோடு ரோடாக அலைந்து திரிவதைவிட கைத்தொழில் ஒன்றை கற்று தொழில் செய்யலாமே... தினமலர் அத்துமணியின் பதில் இதோ:

கற்றுத் தருவதைவிட என்பதைவிட, கற்றுத் தருவதுடன் நீங்கள் கூறும் திட்டத்தையும், அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத்தினாராம் (படித்து, கேட்டு தெரிந்து கொண்டதால், ராம் போட்டுள்ளேன்). அப்போது இந்தத் திராவிட கட்சிகள், குய்யோ முறையோ எனக் கத்தி, பைசா பெறாத காரணங்களையும், ஜாதிவெறியையும் தூண்டிவிட்டு, இக்கல்வி முறையை (காலையில் ஏட்டு கல்வி, மாலையில் தொழிற்கல்வி) தொடர விடாமல் தடுத்துள்ளனர். பலனை இன்று அனுபவிக்கிறோம்! ஏதோ தினமலர் மட்டும்தான் இப்படி கூறுகிறது என்று கருத வேண்டாம்.

குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப் பட்ட 26 ஆண்டுகளுக்குப்பிறகு (1980 ஜூலை) கல்கி என்ன எழுதியது தெரியுமா?

ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒரு வேளை தொழில் என்றார். அவர் திட்டம் இருக்கிற பள்ளிகளையும் ஆசிரியர்களையும் வைத்துக் கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழி வகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத்தையும் பெருக்கியது. எந்தத் தொழிலானாலும் அதில் இழிவில்லை என அறிவுறுத்தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டி அடிப்பது, தொழில் உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவது, வேலையில்லாதத் திண்டாட்டத்தைப் போக்குவது.

தொழிற்கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாய் இருந்தது. அவ்வளவுதான் என்று கல்கி எழுதியது என்றால் அவாளின் இரத்தத்தில் சூடேறிக் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த உணர்வைத் தமிழர்கள் ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்!

தினமலரும், கல்கியும் மட்டுமா? இன்றைக்குப் பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற பெருந் தலைவர் யார் தெரியுமா? அவர்தான் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி.


குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட 34 ஆண்டு களுக்குப் பிறகு அவரின் துக்ளக்கில் (15.7.1988) எழுதுகிறார். ராஜாஜி கொண்டு வந்தது அருமையான திட்டம். அதனைத் திரித்துக் கூறி ராஜாஜியை விரட்டி விட்டனர் என்று எழுதினாரே!

இந்தக் கூட்டம்தான் தங்களுக்கு வசதியாக - இன ரீதியாக முதல் அமைச்சர் கிடைத்து விட்டார். என்றவுடன், சமத்துவக் கல்வி திட்டமாம் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு உலை வைக்கின்றனர். உஷார்! உஷார்!!

------------------மின்சாரம் அவர்கள் 18-6-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை5 comments:

தமிழ் ஓவியா said...

சமச்சீர் கல்விக் குழுவா? சர்வமும் பார்ப்பனமய மந்திரா?

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை முடக்கும் சட்டம் ஒன்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் சமச்சீர் கல்வியை செயல் படுத்துவது குறித்து முடிவெ டுக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு ஒன் றினை அமைக்குமாறு சில வழி காட்டும் குறிப்புகளுடன் உச்ச நீதி மன்றம் ஆணையிட்டது.

அதன்படி தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பெரும்பாலும் பார்ப் பனர்களாகவே இருக்கின்றனர். சமச்சீர் கல்வியை எதிர்க்கும் மெட்ரி குலேஷன் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

குழுத் தலைவர்:

(1) தேபேந்திரநாத் சாரங்கி, (தமிழக அரசின் தலைமைச் செயலாளர்) - பார்ப்பனர்.
மாநிலப் பிரதிநிதிகள்:

(2)ஜி.பாலசுப்பிரமணியன், (முன்னாள் இயக்குனர் (கல்வி) மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) - பார்ப் பனர்.

(3) விஜயலட்சுமி சீனிவாசன், (முன்னாள் முதல்வர், லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை மற்றும் ஆலோசகர், சென்னை சேவாசதன் (உதவி பெறும் பள்ளி), தாம்பரம்) -பார்ப்பனர்.

இரு கல்வியாளர்கள்:

(4) சி. ஜெயதேவ், (நிறுவனர் மற்றும் செயலாளர், டி.ஏ.வி. பள்ளிகள் குழுமம், கோபாலபுரம், சென்னை) - பார்ப்பனர்.

(இவர் நிர்வாகியே தவிர கல்வி யாளர் அல்லர்).

(5) திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, (இயக்குனர், பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை) - பார்ப்பனர்.

(இவர் கல்விக் கூடம் ஒன்றின் உரிமை யாளரே தவிர, கல்வியாளர் அல்லர்.)

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரு பிரதி நிதிகள்: (NCERT)

(6) பேராசிரியர் பி.கே.திரிபாதி, (அறிவியல் மற்றும் கணிதவியல், கல்வித் துறை, டெல்லி) - பார்ப்பனர்

(7) பேராசிரியர் அனில் சேத்தி, (சமூக அறிவியல் துறை, புதுடில்லி - பஞ்சாபி).

(8) டி. சபீதா, பள்ளிக் கல்வித்துறை செயலாளர்.

(9) வசுந்தராதேவி, பள்ளிக் கல்வி இயக்குநர். (இவர்கள் இருவரும் அரசு அதிகாரி கள்.)
ஆக 9 உறுப்பினர்களில் 6 பேர் பார்ப்பனர்கள்.

கல்வியாளர்கள் என்று கூறி நியமனம் செய்யப்பட்ட இருவரும் கல்வியாளர்களே அல்லர். கல்விக் கூட உரிமையாளர்கள் - நிர்வாகிகள். நிர்வாகிகள் எல்லாம் கல்வியாளர்கள் அல்லர். மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.ஈ. பள்ளிக் கூட நிர்வாகிகள் சமச்சீர் கல்விக்கு எதிராக உள்ளவர்கள். (இன்றைக்குக் கூட சமச்சீர் கல்வியை நீக்கியதற்காக முதல் அமைச்சருக்கு பாராட்டு விழா ஒன்றை மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சென்னையில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்).

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையில் அரசு நடத்தும் பள்ளிகளிலிருந்து ஒரே ஒரு கல்வியாளர் கூட நியமிக்கப்படாதது ஏன் என்பது முக்கிய கேள்வியாகும்.

மூன்று பேர், தனியார் பள்ளிகள் சம்பந்தப்பட்டவர்கள்.

நண்டைச் சுட்டு
நரியைக் காவல் வைக்கலாமா?

----"விடுதலை” 18-6-2011

தமிழ் ஓவியா said...

சமச்சீர் திட்டத்தை ஒழிக்க ஒரு குழுவா?


தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒழிக்கப்பட்டது என்ற நிலை வரும்போல் தோன்றுகிறது.

சமச்சீர் கல்வியை உருவாக்கும் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் இதுபற்றிக் கூறுகிறார்:

கல்விபற்றிய முடிவுகளில் பயிற்றுமொழி போன்ற சில மட்டுமே அரசியல் சார்ந்தவை. மற்றவை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எடுக்க வேண்டியவை. பாடத் திட்டம் கல்வியாளர்களது பொறுப்பு. சமச்சீர் கல்விக் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக நான் இருந்துள்ளதால் இன்று எழுந்துள்ள சில பிரச்சினைகளை விளக்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு வாரியங்களைச் சார்ந்த மூத்த ஆசிரியர்களைக் கொண்ட உட் குழுக்கள் அமைக்கப் பட்டு, நான்கு வாரியப் பாடத் திட்டங்களை ஒப்பிடுமாறும், பொதுப் பாடத் திட்டம் வகுக்க வழிமுறைகளை கூறவும் அவை கேட்டுக் கொள்ளப்பட்டன.

அந்த உட் குழுக்களின் அறிக்கைப்படி பாடத் திட்டங்களிடையே பெருத்த வேறுபாடுகள் ஏதுமில்லை என்றும், ஒரு சிலவற்றில் மாநில வாரியப் பாடத் திட்டங்கள் கல்வியல் கோட்பாடுகளுக்கு ஏற்ப தயாரிக்கப் பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பாடத் திட்டங் கள் தரமற்றவை என்ற குற்றச்சாற்று தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளினால் கூறப்படுகிறது. நன்முறையில் தயாரிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்விப் பாடத் திட்டங்களை முடக்குவது சரியான முடிவல்ல என்று கூறியுள்ளார்.

(புதிய தலைமுறை கல்வி 6.6.2011)

சமச்சீர் கல்வித் திட்டத்துக்குத் தலைமை வகித்த பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் முத்துக்குமரன் அவர்களோ, எஸ்.எஸ். ராஜகோபாலன் போன்றவர்களோ அரசியல்வாதிகள் அல்லர் - கல்வியாளர்களே!

உண்மை இவ்வாறு இருக்க, அரசியல் கண்ணோட்டத் தோடு இந்தக் கல்விச் சமத்துவத் திட்டத்திற்கு மூடு விழா செய்யும் போக்கில் அ.இ.அ.தி.மு.க. அரசு நடந்து கொண்டு வருவது பிற்காலத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

உச்சநீதிமன்ற ஆணைப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய முதல் அமைச்சர் அவர்களால் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட குழு உறுப்பினர்களைப் பார்க்கும் பொழுது சமச்சீர் கல்வித் திட்டம் கூடவே கூடாது என்ற மனப்பான்மை உள்ளவர்களாகத் தேடிப்பிடித்து நியமனம் செய்ததுபோலவே தோன்றுகிறது.

பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே அவர்கள் இருப்பது அதிர்ச்சிக்கு உரியதாகும்.

மாநிலப் பிரதிநிதிகள் இருவர்

(1) ஜி. பாலசுப்பிரமணியன் (முன்னாள் இயக்குநர்
(கல்வி) மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பார்ப்பனர்

(2) திருமதி விஜயலட்சுமி சீனிவாசன்- பார்ப்பனர். (முன்னாள் முதல்வர் லேடி ஆண்டாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி, சென்னை மற்றும் சேவா சதன் (உதவி பெறும் பள்ளி) தாம்பரம்)

----தொடரும்

தமிழ் ஓவியா said...

தொடர்ச்சி----------

இரு கல்வியாளர்கள்

1. சி. ஜெயதேவ் (நிறுவனர் மற்றும் செயலாளர் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமம் கோபாலபுரம், சென்னை) - வடநாட்டுப் பார்ப்பனர்,

டாக்டர் திருமதி ஓய்.ஜி. பார்த்தசாரதி - பார்ப்பனர் (இயக்குநர் பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளிகள் குழுமம் சென்னை)

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT)
இரு பிரதிநிதிகள்

(1) பேராசிரியர் பி.கே. திரிபாதி - பார்ப்பனர்

(2) பேராசிரியர் அனில்சேத்தி - பஞ்சாபி

குழுவுக்குத் தலைமை வகிப்பவர் (தமிழக அரசின் தலைமைச் செயலாளர்) தேபேந்திரநாத் சாரங்கி - பார்ப்பனர் மற்றும் இருவர் பள்ளி கல்வி அரசு செயலாளர் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்.

அரசுத் துறை அதிகாரிகளைத் தவிர்த்து மற்ற உறுப்பினர்கள் 6 பேர்களில் 5 பேர் பார்ப்பனர்கள் ஆவார்கள். குழுத் தலைவரும் பார்ப்பனரே!

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாக அல்லவா இது இருக்கிறது!

கல்வியாளர்கள் இருவர் என்று சொல்லப்படுபவர்கள்கூட கல்வி நிறுவனங்களின் முதலாளிகளே தவிர, நிர்வாகிகளே தவிர கல்வியாளர்கள் அல்லர்.

அதுவும் மெட்ரிக், சி.பி.எஸ்.ஈ. கல்விக் கூடங்களை நடத்திக் கொண்டு இருப்பவர்கள். இவர்கள் சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களே!

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) பிரதிநிதிகள் இருவரில் ஒருவர் பார்ப்பனர் இன்னொருவர் பஞ்சாபி. (இவர்களுக்குத் தமிழும் தெரியாது)

ஸ்டேட் போர்டு பிரிவிலிருந்து பிரதிநிதிகள் யாரும் கிடை யாது. கல்வியாளர் குழுவில் இடம் பெற்றிட அரசுப் பள்ளிகளி லிருந்து ஒரு தலைமை ஆசிரியர்கூட கிடைக்கவேயில்லை (அரசுத் துறைப் பள்ளிகளைப்பற்றி அரசுக்கு அப்படி ஒரு இளக்காரம் போலும்) இதனைப் பார்க்கும் பொழுது இந்தக் குழுவின் முடிவு எப்படி இருக்கும் என்பது மிகவும் வெளிப்படை!

ஒரு நாயைக் கொல்லுவதற்குமுன் அதற்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று கூற வேண்டும் என்ற ஆங்கிலேயர்களின் பொன்மொழிதான் நினைவிற்கு வருகிறது.

குலக் கல்வித் திட்ட சிந்தனையோடு காய்கள் நகர்த்தப்படுகின்றன. மேல் ஜாதிக்காரனும், கீழ் ஜாதிக்காரனும் ஒரே மாதிரியான சமத்துவக் கல்வியைப் பெறக் கூடாது என்ற மனப்பான்மை இதற்குள் கொடுக்கு நீட்டிக் கொண்டு இருக்கிறது.

குலக்கல்வித் திட்ட காலத்தில் எழுந்த உணர்வு மீண்டும் வெடிக்கும் நிலையை அரசு உருவாக்குமோ!

---------------------"விடுதலை” தலையங்கம் 18-6-2011

தமிழ் ஓவியா said...

சமச்சீர் கல்வியும் - மக்களின் நிலைப்பாடும்!


அ.இ.அ.தி.மு.க. அரசின் ஒரு மாத சாதனைகள் குறித்து லயோலா கல்லூரி 3132 பேரிடம் ஆய்வு நடத்தியதாக ஒரு செய்தி வெளிவந்தது. இத்தகு ஆய்வுகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது ஒருபுறம் இருந்தாலும்,

அந்த ஆய்வின் அடிப்படையில் பார்த்தாலும் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு 62.3 சதவிகித மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்பதை தமிழ்நாடு முதல் அமைச்சர் கருத்தில் கொள்வது நல்லது.

தி.மு.க. அரசு கொண்டு வந்தது என்பதற்காக அத்திட்டத்தை ரத்து செய்யும் முடிவைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை உணர வேண்டும்.

யாரோ சில உயர்ஜாதிக்காரர்கள், உயர் ஜாதி மனப்பான்மையுடன் சமச்சீர் கல்வித் திட்டம் கூடாது என்று கூறுவதை அரசு ஏற்கத் தேவையில்லை.

அவர்கள் ஏதோ உயர்தரமான பாடத் திட்டங்களைப் படித்துக் கொண்டு இருப்பதாகவும், இந்த சமச்சீர் கல்வித் திட்டம் அந்த உயர் தரத்தைக் கீழே தள்ளி விடுவதாகவும் கூறுவதை ஏற்றுக் கொண்டால், இந்த அரசு அந்த மேல் தட்டு மக்களின் ஆசையை நிறைவேற்றும் அரசாகவே கருதப்படும். பெரும்பான்மை மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாத எந்த முடிவும் அரசுக்கு எதிர்ப்பாக மாறும் என்பது பால பாடமாகும்.

முந்தைய அரசின் கால கட்டத்தில் உருவாக்கப் பட்டது என்பதற்காக செம்மொழி லட்சனையான திருவள்ளுவர் படத்தின்மீது ஸ்டிக்கர் ஒட்டுவது எல்லாம் கண்டிப்பாக எதிர்விளைவையே ஏற்படுத் தும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.

பாடத் திட்டங்களைத் தயாரித்தவர்கள் கல்வி யாளர்களே தவிர அரசியல்வாதிகள் அல்லர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமச்சீர் கல்வித் திட்டத்துக்காகக் கல்வி யாளர்கள் - விற்பன்னர்கள் கடுமையாக உழைத் திருக்கிறார்கள் - இதற்காக நூல்கள் அச்சிடுதல் உள்பட 500 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்குச் செலவு ஏற்பட்டுள்ளது.

இப்பொழுது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்தை ஜூலை மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப் பிக்க வேண்டும். நாள்தோறும் வழக்கு நடை பெற்றாலும்கூட ஜூலை மாத இறுதியில் தீர்ப்பு அளிக்கப்படும்.

அதற்குப் பிறகு நூல்களை அச்சிடுவது என்று ஆரம்பித்தால் ஆகஸ்டு, செப்டம்பர் வரை நீண்டு கொண்டே போனால், இவ்வாண்டு மாணவர்களின் படிப்பு எந்த கதிக்கு ஆளாக நேரிடும் என்பதைக் கவலையுடன், பொறுப்புணர்ச்சியுடன் சிந்திக்க வேண்டாமா?

கல்வி என்பது என்ன கடைச் சரக்கா?

கடந்த ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் படித்தவர்கள் இந்த ஆண்டு முறையே இரண்டாம் வகுப்பிலும் ஏழாம் வகுப்பிலும் சமச்சீர் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் கல்வி பயில்வது தானேமுறையானது?

இல்லை - இல்லை அவர்கள் பழைய கல்வித் திட்டத்தின் அடிப்படையிலான பாடப் புத்தகங் களைத் தான் படிக்க வேண்டும் என்று திணிப்பது சரியானது தானா?

இந்தப் பிரச்சினையை அரசியல் கண்கொண்டு பார்க்காமல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்துக் கட்சிகளும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொது மக்களாகிய பெற்றோர்களும் அரசினை வற்புறுத்த வேண்டாமா? ஊடகங்களும், தன் ஒழுக்கமான கடமையினைச் செய்ய வேண்டாமா?

தந்தை பெரியார் அவர்களின் விடா முயற்சி யாலும் பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் கடமை உணர்வாலும், ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி ஏணியில் படிப்படியாக மேலே வந்தார்கள்.

அவர்களை அரசியல் காரணங்களுக்காக குப்புறத் தள்ளிவிட வேண்டாம்! அரசு என்பது முந்தைய அரசின் தொடர்ச்சிதானே தவிர முந்தைய ஆட்சியின் திட்டங்களை மூட்டைக்கட்டி வைக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற நினைப்பு ஆபத்தானது! ஆபத்தானது!!

-------------------------"விடுதலை” தலையங்கம் 20-6-2011

தமிழ் ஓவியா said...

கடும் முயற்சியில் கருக்கொண்டது சமச்சீர் கல்வி - அரசியல் பார்வை தேவையில்லை!


புலவர் அருணா - பொன்னுசாமி
(சமச்சீர் கல்வி பாடத் திட்டக் குழு உறுப்பினர்)

கரூர் நகர திராவிடர் கழகத் தலைவர் செல்வ ராசு, கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மு.க. இராசசேகரன், கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன், சமச்சீர் கல்வி பாடத் திட்டக்குழு (தமிழ்) உறுப்பினர் புலவர் அருணா - பொன்னுசாமி, பெரியார் பெருங் கவிஞர் பாரி ஆகியோர் (கரூர் 19.6.2011)


(ஓய்வு பெற்ற தமிழாசிரியரும் தலைமை ஆசிரியருமான புலவர் அருணா - பொன்னுசாமி எம்.ஏ. அவர்கள் தமிழ்நாடு அரசு - சமச்சீர் கல்விக் குழுவின் உறுப் பினராக இருந்து பணியாற்றியவர். சமச்சீர் கல்வி தொடர்பாக அவரி டம் தொடர்பு கொண்டு கேட்கப்பட்டபோது அவர் கூறியவை வருமாறு:)

சமச்சீர் கல்வி தொடர்பான தமிழ்ப் பாட நூல் குழுவில் 72 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். கரூர் புலவர் அருணா பொன்னுசாமி எம்.ஏ., அவர்களும் அதில் ஓர் உறுப் பினர் ஆவார்.

சென்னையில் நான்கு மாதங்கள் தங்கி நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பாடநூல் தயாரிப்பில் ஈடுபட்டதாக புலவர் அருணா - பொன்னுசாமி கூறினார்.

திருச்சி - பாரதிதாசன் பல் கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமார் தலைமை யில் ஒன்பது பேர்கள் கொண்ட குழு ஒன்று உலகின் பல்வேறு நாடு களிலும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் பாடத் திட்டங்கள் எந்த வகையில் அமைந்துள்ளன என்பதை நேரில் அறிந்து ஆய்வு செய்து, அதன் அடிப் படையில் சமச்சீர்க் கல்விக்கான பாடத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன. பின்லாந்து நாட்டில் மட்டுமே அனைத்து நிலைக்கல்வி நிறுவனங் களும் அரசால் நடத்தப்படுகின்றன. புத்தகங்கள் உட்பட எல்லாம் இல வசமாக அந்நாட்டில் வழங்கப்படு கின்றன.

உலகமயமாக்கல் என்பதன் அடிப்படையில் உண்டாக்கப்பட்டது தான் மெட்ரிக் கல்வி. சமச்சீர் கல்வி என்பது படைப்பாற்றலை ஊக்குவிக்கக் கூடியதாகும்.

திருக்குறளில் இருந்து குறள் களைச் சொல்லிக்கொடுக்கும் பொழுது சிற்றினம் சேராமை என்று சொல்லிக் கொடுப்பதைவிட (எதிர்மறையில் அல் லாமல்) நட்பு என்ற அதிகாரத்திலிருந்து குறள்கள் இடம் பெறும்படிச் செய்யப் பட்டது.

கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் அறிவியலுக்குப் புறம்பாக அது அமையக் கூடாது - எடுத்துக்காட்டாக பித்தா பிறை சூடிப் பெருமானே என்ற செய் யுள் இடம் பெற்றால், சிவபெருமான். தலையில் சூடப்பட்டு இருக்கும் சந் திரன் என்று பொருள்படுகிறது. இது அறிவியலுக்கு மாறான ஒன்று. இது போல் அமையக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டு பொதுவான கடவுள் வாழ்த்துப் பாடல் இடம் பெறச் செய் யப்பட்டது. அறவே கடவுள் வாழ்த்து நீக்கப்படவும் இல்லை. இரண்டாவதாக மொழி வாழ்த்துப் பாடலாக நீராரும் கடலுடுத்த என்ற பாடல் வைக்கப் பட்டது.

மூன்றாவதாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் குறிக்கோள் பாடல் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களால் இயற்றப்பட்டது. இடம் பெறச் செய்யப்பட்டது. இதுபற்றியெல் லாம் விவாதித்துதான் முடிவு எடுக் கப்பட்டது. கலைஞர் எழுதினார் என்ப தற்காக அல்ல - கலைஞர் படைப் பாற்றல் மிக்கவர் என்பது அரசியலுக்கு அப்பால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

கவிஞர் கனிமொழி கவிதை இடம் பெற்றதாகச் சொல்லுவது தவறாகும். தமிழர்கள் கையாண்ட இசைக் கருவிகள்பற்றி வரும்பொழுது சங்கமத் தில் ஒரு காட்சி இடம் பெறுகிறது. அவ்வளவுதான் அதில் கனிமொழி பெயர் கிடையாது.

பாரத ரத்னா பட்டம் பெற்றவர்களில் ஒருவரைப்பற்றி பாடத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிற முறையில் எம்.ஜி.ஆர். பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது.

தந்தை பெரியார், அண்ணா, காமராசர், அம்பேத்கர் பற்றிய பாடங்களும் இடம் பெற்றுள்ளன. இவர்கள் எல்லாம் சமுதாயத்துக்குப் பாடுபட்ட தலைவர்கள் அல்லவா!

நாங்கள் தயாரித்த பாடத் திட்டங்களை அதற்குமேல் ஒன்பது கல்லூரிப் பேராசிரியர்கள் ஆய்வு செய்வார்கள். அவர்கள் கூறும் திருத்தங்களின் அடிப்படையில் இறுதியாக பாடத் திட்டங்கள் நிறைவு பெறும்.

இந்தப் பாடத் திட்டங்கள் இணைய தளத்தில் வெளியிடப் பட்டன. பொது மக்களின் கருத் துகள் வரவேற்கப்பட்டன. அதுபோல் தெரிவிக்கப்பட்ட கருத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. சமச்சீர் கல்வித் திட்டம் என்பது வணிக ரீதியான கல்வித் திட்டத்துக்குப் போடப்பட்ட ஒரு கடிவாளம் ஆகும்.

அனைவருக்கும் சமமான, சமத்துவமான கல்வி என்பதுதான் இதன் குறிக்கோளாகும். ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி அளிக்கப்படும் சீரான கல்வியாகும்.

பெரு முயற்சியில் கல்வியாளர் களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு திட்டத்தை அரசியல் கண் கொண்டு பார்ப்பது சரியானதாகாது என்று கூறினார் புலவர் அருணா -பொன்னுசாமி அவர்கள்.


நேர்காணல் கலி. பூங்குன்றன்
19.6.2011, கரூர் -"விடுதலை”21-6-2011