Search This Blog

26.5.13

பகுத்தறிவு - பெரியார்
தோழர்களே!
திண்டிவனம் தாலுகா பகுத்தறிவுச் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் பேற்றை எனக்களித்ததற்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனேயாவேன்.

அதோடு தாங்கள் அன்பாய் வாசித்தளித்த வரவேற் புப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் புகழ் மாலைகளுக்கு நான் அருகனல்லவானாலும், என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும், எனது கொள்கைகளையும், ஆசைகளையும் நீங்கள் வரவேற்று ஆதரிக்கிறீர்கள் என்பதையும் அறிவதற்கு இது ஓர் அளவு கருவியாய் இருக்கின்றது என்கின்ற அளவில் வந்தனத்தோடு பெற்றுக் கொள்ளுகிறேன்.

இந்த ஆண்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் ஆண் களும், பெண்களும் பல ஜாதி பல வகுப்புகளும் கூடி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நமது பகுத்தறிவுக்கு விரோதமான கூட்டத்தார்கள், மனித சமூக முன்னேற்றத்துக்குத் தங்கள் சுயநலத்தின் காரணமாக முட்டுக்கட்டையாய் இருக்கும் வகுப்பார்கள் நம்மைப் பற்றியும் நமது இயக்கக் கொள்கைகளைப் பற்றியும் விஷமப் பிரச்சாரம் செய்தும், திரித்தும், பழித்தும் கூறி வந்த இந்த ஊரில் இன்று இவ்வளவு பேர் இங்கு இந்த ஆண்டு விழாவுக்கு கூடி இருப்பதென்றால் எனக்குப் பெரும் ஆனந்தத்தையும், நம்பிக்கையையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரக் கூடியதாக இருக்கின்றது.

பகுத்தறிவு

பகுத்தறிவுச் சங்க ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் தலைவன் என்கின்ற முறையில் நான் ஏதாவது பேசுவதாய் இருந்தால் பகுத்தறிவு என்பதைப் பற்றி விளக்கிச் சில வார்த்தைகள் பேசுவது பொருத்த முடையதாகுமென்றே கருதுகிறேன்.

பகுத்தறிவு என்றால் என்ன? ஜீவப் பிராணிகளின் சிந்தனா சக்தியையும், சிந்திப்பதின் உணர்ச்சியையும் தான் அறிவு என்று சொல்லப்படுகிறது. அச்சிந்திக்கும் தன்மையின் கூர்மையை பகுத்தறிவு என்றுச் சொல் லலாம். ஆனால் அப்பகுத்தறிவை பெரிதும் மனித னுடைய சிந்திக்கும் தன்மைக்கும், சிந்திப்பதின் கூர்மைக்குமே சொல்லப்படுகின்றது.

உலகில் உள்ள பல கோடி ஜீவராசிகளில் மனிதன் என்கின்ற ஜீவப் பிராணியும் ஒன்று என்பது மக்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயமாகும். மரம், புல், பூண்டு, செடி, கொடி ஆகியவைகளும் ஜீவ வர்க்கத்தில் சேர்ந்தவைகள் என்பது நவீன ஆராய்ச்சியால், ஆராய்ச்சி நிபுணர்களால் சொல்லப்பட்டு அறிஞர்களுக்கு மெய்ப்பித்தும் காட்டப்பட்டுவிட்டது.

வங்காள மாகாணத்தைச் சேர்ந்தவரும், உலகம் போற்றுபவருமான ரசாயன சாஸ்திரியார் டாக்டர் போஸ் அவர்கள் தாவர வர்க்கங்களுக்கு ஜீவன் (உயிர்) உண்டு என்பதை மெய்பித்துக் காட்டி செடிகளில் ஒரு சிறு கிளையை துண்டித்த போதிலும் அச்செடி துடிதுடிப்பதை ருஜுப்பித்துக் காட்டி இருக்கிறார். மற்றும் மண், கல், மலை ஆகிய அசேதனப் பொருள்கள்கூட வளருவதும், சேதிக்கப்பட்டால் வளர்ச்சி தடைப்படுவதும் முதலிய காரணங்களால் அவைகளின் இயங்குதல்கள் விளங்கு கின்றன.
இப்படிப்பட்ட காரியங்கள் மனிதன் நேரே காண முடியாமலும், மிக மிக மந்த கதியிலும், இயந்திரங்கள் மூலமல்லாமல் அறிய முடியாததாகவும் இருப்பதால் மக்கள் அதை சுலபத்தில் ஒப்புக் கொள்ள முடியாதவர்களாக இருந்து வருகிறார்கள்.

ஆன போதிலும் ஓர் அளவுக்கு அதாவது ஜீவப் பிராணிகள் இன்னின்னது தான் என்று ஒப்புக் கொண்ட அளவுக்கு அதனதனின் இயங்குதலை அறிந்து அதற் கேற்றபடி அவற்றின் அறிவை ஒப்புக் கொள்ளு கிறார்கள். அவ்வறிவின் மேலான தன்மைக்குப் பகுத்தறிவு என்ற பெயர் கொடுத்து அது மனிதனுக்கே உரித்தானது என்றும், அதனாலேயே மனிதன் ஜீவப் பிராணிகளிலெல்லாம்விட உயர்ந்தவன் என்றும் சொல்லுகிறார்கள்.
அறிவின் தன்மையும், அவற்றின் படிகளும் எப்படி இருந்தாலும் பரிணாம வாதக் கொள்கைப்படி (அதாவது ஒன்று மற்றொன்றாக மாறிக் கொண்டிருப்பது) பிரபஞ்சத் தோற்றங்கள் எல்லாம் ஒவ்வொரு வஸ்துவின் ஆரம்ப தோற்றமுமே இன்றிருப்பது போன்றல்ல. ஒன்று மற் றொன்றாக மாறி வருவதாலேயே பல்வேறு தோற்றங்கள் காணப்பட்டு நாளடைவில் ஜீவப் பிராணிகள் என்று சொல்லப்படுவனவாக காணப்படுகின்றன.
எப்படி இருந்தபோதிலும் மனிதன் என்கின்ற ஜீவப் பிராணியும், அசேதனமாகவும், தாவரமாகவும், அவசர மாகவும் இருந்த வஸ்துக்களில் இருந்தே படிப்படியாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கிறானே ஒழிய வேறில்லை.

உலகம் எப்பொழுது உற்பத்தி ஆயிற்று என்பதற்கு எவ்வளவு வருஷக் காலம் தான் ஆயுள் சொல்லுவதாய் இருந்தாலும் பல லட்ச லட்சக்கணக்கான வருஷங் களுக்கு முன்பு அணுக்களாய் அணுக் கிருமிகளாய், இருந்து வந்த பொருள்கள் தான் இன்று மனித ரூபமாய் இருக்கும் (பகுத்தறிவு பெற்ற ஜீவன் என்று சொல்லப்படும்) மனிதனானவன் என்பது அறிஞர்களும், தத்துவ சாஸ்திரிகளும், விஞ்ஞான விற்பன்னர்களும் ஏற்றுக் கொண்ட விஷயமாகும்.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று மேம்பட்டது

இது இவ்வாறாக, மனிதன் பகுத்தறிவு உடையவனாவன் என்பதனாலேயே பகுத்தறிவு இல்லாத ஜீவராசிகள் என்பன வற்றைவிட மனிதன் மேம்பட்டவன் என்று சொல்லிவிட முடியாது.

ஜீவராசிகளில் ஊர்வனவற்றில் பாம்புக்கு இல்லாத கால்கள் எப்படி பல்லி ஓணான்,  பாம்பரணை முதலியவை களுக்கு இருக்கின்றனவோ, அதுபோலும் நாய், கழுதை களுக்கு இல்லாத கை சவுகரியங்கள், விரல்கள் முதலியவை எப்படி குரங்கு, தேவாங்கு முதலிய ஜாதிகளுக்கு இருக்கின் றனவோ, அதுபோல் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத ஒரு அளவு அறிவின் சிந்தனா சக்தி மனிதனுக்கு இருக்கின்றது என்கின்ற அளவு  வித்தியாசம் மாத்திரம்தான் உண்டே தவிர மற்றபடி தனிப்பட்ட மேன்மை ஏதும் சொல்லுவதற்கில்லை. ஏனெனில், மனிதனுக்கு இல்லாத பல சக்திகள் விசேஷக் குணங்கள் முதலியவை மற்ற ஜீவராசிகளிடத் தில் இருப்பதையும் காணலாம்.
அதுபோலவே, மற்ற ஜீவராசிகளிடம் இல்லாத சில கெட்ட குணங்களும், பல அசவுகரியங்களும், துன்பங் களும், கவலை களும், திருப்தி அற்ற தன்மைகளும் பகுத்தறி வுடைய மனிதனிடத் தில் இருப்பதையும் காணலாம்.
உதாரணமாக மனித னுடைய ஆசைக்கும், மற்ற ஜீவராசிகளுடைய ஆசைக் கும் எவ்வளவோ வித்தியாச முண்டு.

மனிதனுடைய ஆசை எல்லையற்றது. அவசிய மில்லாதது, வெறும் கற் பனையையும், மூடநம்பிக் கையையும், பொறாமையை யும், பலவீனத்தையும் அஸ் திவாரமாகக் கொண்டது மாகும். தனது தேவைக்கு மேலும் எவ்வளவு இருந் தாலும் தனது பின் சந்ததி யையும், தான் இறந்த பிறகு மோட்ச லோகம் என்பதில் பயன்படவும் வேண்டும் என்கின்ற அவிவேகமான ஆசையாகும்.
உதாரணமாக, நாடு பிடித்து ஆட்சி செய்ய வேண்டும் என்று கருதுகிறவனுக்கு எவ்வளவு நாடு இருந்தாலும் உலகமே அவனது ஏக சக்ராதிபத்திய சர்வாதிகாரத் தன்மைக்குக் கீழ் வந்து விட்டாலும்கூட மேல்லோகமும், கீழ்லோகமும் தனது ஆட்சிக்குள் வந்தால் நல்லது என்று முட்டாள்தனமான கற்பனைக்கு அடிமையாகி திருப்தி யற்றவனாகிறான். எவ்வளவு பூமி இருந்தாலும் சமுத்திரப் பரப்பெல்லாம் பூமியாகி அதற்கும் தானே மிராசுதாரனாக இருந்தால் நல்லது என்கின்ற ஆசைக்கு அடிமையாகி குறை பாட்டுக்குக் கட்டுப்பட்டவனாகிறான்.

அதுபோலவே, செல்வம் எவ்வளவுதான் கோடிக் கணக்காக இருந்தாலும்  எண்ணிக்கைக்கு எப்படி ஒரு அளவு கிடையாதோ, அதுபோல் எவ்வளவு பெருகினாலும் மேலும் மேலும் சொத்து சேர வேண்டும், வருவாய் பெருக வேண்டும் என்கின்ற ஆசையில் இருந்து விலக முடியாத வனாகி, போதவில்லையே போதவில்லையே என்கின்ற தரித் திரத்துக்கு அடிமை ஆகிறான்.

இந்த குணங்கள் பகுத்தறி வில்லாத ஜீவராசிகள் என்பவைகளிடம் காணக் கிடையாது. தன் பிள்ளைக்குட்டி, பேத்து, பிதுர் ஆகிய பின் சந்ததி களைப் பற்றிய முட்டாள்தனமான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குத்தான் இருக்கிறதே ஒழிய, பகுத்தறிவில்லாத வைகளுக்கு இல்லை. அநேக ஜீவராசிகள் தன் பிள்ளைக் குட்டிகளை கவனிப்பதே இல்லை. அனேக ஜீவராசிகள் தன் பிள்ளை குட்டிகள் தனியே இரை தேடிக் கொள்ளும் பருவம் வந்தவுடன் வெறுத்துத் தள்ளி விடுகின்றன. எவையும் அவைகளைப் பற்றி சதா கவலைப்படுகிறதில்லை.

பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவ தில்லை. தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின் மீது சவாரி செய்வதில்லை.
பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தை கீழ்ப்படுத்து கிறான், வருத்துகிறான். வாகனமாய் உபயோகப்படுத்து கிறான். சோம்பேறியாய் இருந்து, தன் இனத்தின் உழைப் பிலேயே வாழ்கிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும், பயனை அனுபவிக்க ஒரு கூட்டமாகவும் பிரிந்து கொள்ளுகிறான்.
உதாரணமாக நாய், கழுதை, பன்றி என்கின்ற இழிவான மிருகக் கூட்டத்தில் பார்ப்பன ஜாதி, பறை ஜாதி, நாயுடு ஜாதி, முதலி ஜாதி என்கின்ற பிரிவு கிடையாது. ஆனால் மனித வர்க்கத்தில் தன் இனத்தையே பிரித்து இழிவுபடுத்தப்படுகின்றது.

மனிதன் மீது மனிதன் சவாரி செய்கிறான். மனிதன் உழைப்பை மனிதன் கொள்ளை கொள்ளுகிறான். மனிதனை மனிதன் வஞ்சிக்கிறான்.
பகுத்தறிவின் பயன் இதுவாயிருக்கும்போது பகுத்தறிவு இருப்பதாலேயே மேன்மை யானவன் என்று எப்படி சொல்ல முடியும்?

மனிதன் வாழ்க்கை நிலை

பொதுவாகவே, மனித வாழ்க்கையின் தன்மை மிக்க குறைபாடும், கவலையும், அதிருப்தி கொண்டதாகவே இருக்கிறது. இந்த குணம் எல்லா தேசத்திலும், எல்லா மனிதர்களிடையும் அரசன், குடிகள், பணக்காரன், ஏழை-மேல் ஜாதிக்காரன், கீழ் ஜாதிக்காரன், முதலாளி, தொழிலாளி என்கின்ற பேதங்களாக, தாரதம்மியங்களாக இல்லாமல் எல்லா மக்களிடமுமே இருந்து வருகின்றது.
அறிவில்லாததால் கஷ்டப்படுகிறான் என்று சொல்லுவதற்கு இல்லாமல் பகுத்தறிவு என்பதும் இருந்தும் மனிதன் ஏன் இத் தன்மையில் இருக்க வேண்டும்? மனிதன் காட்டுமிராண்டியாயும், சமுக வாழ்க்கை இல்லாமலும் காட்டில் தனித்தனியாய் திரியும்போது இல்லாத கஷ்டங்கள், கெட்ட எண்ணங்கள் எல்லாம் சமுக வாழ்க்கைக்கு வந்த பின்பு அனுபவிக்கின்றவனாகவும், உடைய வனாகவும் இருந்து வருகிறான்.
மனிதன் காட்டுமிராண் டித் தனி வாழ்க்கைக்கு வரும்போது ஒவ்வொரு மனிதனும் சமுதாய வாழ்க் கையில் ஒருவனுக்கொரு வன் உதவி செய்து வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி வந்திருப்பானே ஒழிய, மற்ற மனிதனைக் கொடுமைப் படுத்தி, இழிவுபடுத்தி, கஷ் டப்படுத்தி, அதன் பயனாய் தான் வாழலாம் என்று கருதி இருக்க மாட்டான். அப்படி கருதி இருந்தால் சமுக வாழ்க்கை ஏற்பட்டே இருக்காது.

பரஸ்பர உதவிக்காக ஏற்பட்ட சமுக வாழ்க்கை பரஸ்பர தொல்லைக்கும், உபத்திரவத்துக்கும் ஆளாக ஏற்பட்டு விட்டது. சமுதாயத் துறையில் இன்று உள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடமை முதலிய குணங்கள் மனிதன் அறிவுக் குறைவினால் பகுத்தறிவு இல்லாததால் அல்லது பகுத் தறிவை செவ்வனே பயன்படுத்தாததால் ஏற்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, காலக் கொடுமையாலேயோ, கடவுள் தன்மையாலோ, அரசாட்சியாலோ ஏற்பட்டது என்று எவரும் சொல்லிவிட முடியாது.

ஏனெனில், சமுக வாழ்க்கையில் சரித்திர ஆரம்ப காலம் எதுவோ அக்காலத்திலிருந்தே இக் குணங்கள் மனித சமுகத்தில் இருந்து வந்திருப்பதை சரித்திர ஆதாரங்களில் பார்க்கக் காணலாம்.

கடவுள் தன்மை என்பதிலும், எப்படிப்பட்ட கடவுள் காலத்திலும், அவதாரங்களின் காலத்திலும் கடவுள் தன்மை பெற்ற தூதர்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், சமயக் குறவர்கள் என்பவர்கள் காலத்திலும், இக்கொடுமைகளும், குறைவுகளும், இழி குணங்களும் நிலவி வந்திருக்கின்றன.

அதுபோலவே அரசாங்க விஷயத்திலும் இன்றுள்ள அந்நியர் வெள்ளைக்காரர் வியாபார உணர்ச்சியோடும், பொறுப்பில்லா மலும் ஆளுகின்ற ஆட்சி என்பன மாத்திரம் அல்லாமல் கடவுள் அவதார ஆட்சி, கடவுள் அருள்பெற்ற ஆட்சி, தர்ம தேவதைகள் ஆட்சி, மனு நீதி ஆட்சி, மற்றும் சேர, சோழ, பாண்டியன், பார்ப்பனர், நாயக்கர், முகமதியர் ஆகிய எல்லா ஆட்சிக் காலத்திலும் இருந்து வந்த குறைகளேதான் இன்று காணப்படுகின்றன.

எந்தக் காலத்திலும், எப்படிப்பட்ட கடவுளாலும், யாருடைய ஆட்சியிலும் இக்குறைபாடுகள் நீங்கி இருந்ததாகவோ, நீக்கப் பட்டதாகவோ காண முடியவில்லை.

ஆகவே, இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிப்பதாய் இருந்தால் இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று மனிதனுக்கு பகுத்தறிவு ஏற்பட்ட காரணத்தினாலேயே மனிதன் இத்யாதி கொடுமைக்கும், துக்கத்துக்கும், இழிவுக்கும் ஆளானான் என்று சொல்ல வேண்டும்.

இதை அறிஞர் ஒப்புக் கொள்ள முடியுமா? முடியாது. மற்றென்னவென்றால் மனிதன் அறிவை தப்பாய் பயன்படுத்தி இயற்கையையும், மனித சுபாவத்தையும் மனிதன் தவறுதலாய் கற்பித்துக் கொண்டு மனித ஜன்மமே அளவற்ற ஆசைக்கு அடிமைப்பட்டதென்றும், மனித ஜன்மமே துக்கம் அனுபவிக்கவும், கவலையால் மூழ்கவும் ஏற்பட்டதென்றும், மனிதன் தனது சமுக வாழ்க்கையே (சம்சார சாகரம்) துக்கம் என்று கருதி அதையே இயற்கை ஆக்கிவிட்டதால் இந்நிலையில் இருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.
மனித வாழ்க்கை நிலை முழுவதையும் கட்டுப்படுத் திக் கட்டுப்பாட்டுக்கு அடிமைப்படுத்திக் கொண்டான். மனிதனுடைய இந்த சிந்தனா சக்தியையும்கூட கட்டுப் படுத்திவிட்டான். இயற்கைக்கு மாறாக இன்னின்ன படிதான் நடக்க வேண்டும். இன்ன இன்னபடி தான் சிந்திக்க வேண்டும் என்கின்ற கட்டுப்பாட்டுக்கும் கூட ஆளாகி விட்டான்.

மனிதன் தனக்கு என்று ஏற்படுத்திக் கொண்ட கடவுள், மதம், மதக் கட்டளை, கடவுள் கட்டளை என்பவைகள் முதலியவைகள் எல்லாவற்றையும் பெரிதும் இயற்கைக்கும், உண்மைக்கும் விரோதமாகவும், அனுப வத்திற்கு முடியாததாகவுமே கற்பித்துக் கொண்டான்.

இந்தத் தவறுதலோடு மாத்திரம் நிற்காமல் மனித சமுகத்தையே தேசம், பாஷை, மதம், ஜாதி என்பவை களால் பிரித்து வேற்றுமைப்படுத்திக் கொண்டான். அதோடு நிற்காமல் பல மதம், பல கடவுள், பல வேதம் என்பதாக ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களுடன் கற்பித்துக் கொண்டான். இவற்றில் ஒன்றுக்காவது பகுத்தறிவை சுதந்திரமாய் பயன்படுத்த உரிமை இல்லாதவனாகி விட்டான். வஸ்துக்களை, உனது, எனது என்று பிரித்துக் கொண்டான். மனிதனின் ஓய்வு எல்லாம் மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்தி, அடிமைத்தனத் திற்குப் போவதற்கே பயன்பட்டதே தவிர பகுத்தறிவால் பயன்படவோ, மேன்மை அடையவோ முடியவில்லை.
மனித சமுக நன்மைக்காக, அதாவது மக்கள் சமுகம் சரீர உழைப்பினின்றும், கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிக பயன் அடையவும் கண்டு பிடிக்கப்பட்ட யந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு ஆளாகி உழைப்பாளி, பாட்டாளிகட்கும் பட்டினியாக பயன்படுகின்றதோ, அதுபோலவே மனிதனுக்கு மேன்மையையும், திருப்தியையும், கவலை யற்ற தன்மையையும் உண்டாக்கித் தீர வேண்டிய பகுத்தறிவானது சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமை யாகி மக்களுக்கு துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகின்றது.

இவற்றாலும், இன்னும் இவை போன்ற காரணங் களாலேயும் மனிதன் பகுத்தறிவு பெற்றதால் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத தொல்லையையும், கவலையையும், குறைவும், அதிருப்தியும், தரித்திரமும் அடையக் காரணஸ்தவனாகிவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
எனவே மனிதன் இப்படிப்பட்ட கீழ்மை நிலையில் இருந்து மேம்பாடு அடைய வேண்டு மானால், முதலாவ தாக தன்னம்பிக்கை உடையவனாகவும், தனது சக்தி என்ன என்பதை உணர்ந்தவனாகவும் இருக்க வேண்டும்.

இன்று மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னைத்தான் நடத்துவதாக அவன் நினைப்பதில்லை. தனது காரியத்துக்குத்தான் பொறுப்பாளி என்பதில் நம்பிக்கை இல்லை. மனிதன் தான் கற்பித்துக் கொண்ட கடவுளையும், கடவுள் கட்டளையையும், கடவுள் சித்தாந் தத்தையும் வெகு குளறுபடி ஆக்கிக் கொண்டான்.

அதோடு மாத்திரமல்லாமல் தனது சவுகரியத்துக்கு ஏற்றபடியெல்லாம் மாற்றிக் கொள்ளுகிறான். பெரிதும் சோம்பேறி வாழ்க்கைக்கே கடவுளை பயன்படுத்திக் கொள்ளுகிறான். இவ்வளவோடு அல்லாமல் தலைவிதி, முன் ஜன்ம கர்ம பலன் என்பவைகளை கற்பித்துக் கொண்டு தனது முட்டாள்தனத்துக்கும், அயோக்கியத் தனத்துக்கும் பரிகாரமாக்கிக் கொண்டான்.

மனிதன் முதல் முதல் தவறிப் போன இடம் இதுவேயாகும். கடவுளும் கருமமுமே மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்திப் பகுத்தறிவு அற்ற ஜீவராசிகளைவிட கேவலமாக்கி இன்று மனிதனைத் துக்க ரூபமாகவும், கவலைக் களஞ்சியமாகவும் ஆக்கிவிட்டது.

பகுத்தறிவுக்கு கடவுளும், கருமமும் நேர் விரோதி களாகும். ஏனெனில் கடவுளுக்கும், கருமத்துக்கும் அடிமைப்பட்டவனிடம் சொந்தமாக ஒன்றுமே கிடையாது. அவன் மரக்கட்டை. தண்ணீர் அலையில் அலைவது போன்றவனேயாவான். ஆதலால், இந்த உணர்ச்சிகளில் இருந்து விடுபடுவதே பகுத்தறிவின் வெற்றிக்கு முதல் படியாகும்.

இந்தப்படி சொல்லுவதை மக்கள் நாஸ்திகம் என்கின்றார்கள். இதனாலேயே பகுத்தறிவு வாதிகள் நாஸ்திகர்கள் என்று உலகமெங்கும் பழிக்கப்படு கிறார்கள். பகுத்தறிவு மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப் பட்ட சங்கமானது நாஸ்திகப் பழிப்புக்கு பயப்படக் கூடாது.  

------------------------18.05.1935 அன்று திண்டிவனம் தாலுகா இராஜாகுளம், வடகரைத் திடலில் நடைபெற்ற பகுத்தறிவு சங்கத்தின்  முதலாவது ஆண்டு விழாவில்- தந்தை பெரியார் அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவு.”குடிஅரசு” - சொற்பொழிவு - 26.05.1935

20 comments:

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்அச்சம்

செய்தி: திருப்பதி கோயில் நகைகள் அனைத் தும் சரியாகவே உள்ளன. பக்தர்கள் அச்சம் அடைய வேண்டாம்.

- திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை

சிந்தனை: இந்த அறிக் கையைப் பார்க்கும்பொழுதே அச்சப்பட வேண்டிய அள வுக்கு ஏதோ நடந்திருக் கிறது என்பது புரிகிறதே!

தமிழ் ஓவியா said...

முக்கிய தகவல் கல்லீரல் புற்று நோயை தடுக்க தடுப்பூசிசென்னை, மே 26- சர்வதேச ஜீரண (கேஸ்ட் ரோஎன்டராலஜி) ஆரோக்கிய தினம் ஆண்டு தோறும் மே மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உலக கேஸ்ட்ரோஎன்டராலஜி அமைப்பின் இயக்குனர் டாக்டர் கே.ஆர்.பழனிச்சாமி, இந்திய கேஸ்ட்ரோ என்டராலஜி சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் வி.பாலசுப்பிர மணியன் ஆகி யோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நோய் வர காரணமாக இருப்பது உடல் பருமன், சர்க்கரை நோய், மது அருந்துவது மற்றும் ஹெபடைடஸ் பி, ஹெபடைடஸ் சி வைரஸ்தான். கல்லீரலை சுற்றி கொழுப்பு படர்ந்து அதனால் கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. ஹெபடைடஸ் பி வைரசுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஹெபடைடஸ் சி வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை. தற்போது தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை களுக்கு ஹெபடைடஸ் பி தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள ரூ.1000 மட்டுமே செலவு ஏற்படும்.

இதுவரை ஹெபடைடஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. இதனால் கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

தமிழ் ஓவியா said...


என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை மத்திய அரசுக்கு கலைஞர் எச்சரிக்கை


என்.எல்.சி. நிறுவன பங்குகளைத் தனியா ருக்கு விற்க முற்படுவது, தமிழர்களை வீண் வம் புக்கு இழுக்கும் செயல் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கலைஞர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மே 23-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதி னார். அந்தக் கடிதத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முயற்சிப்பதாக வும், அது கூடாது என்று எழுதியுள்ளார்.

ஆனால் என்.எல்.சி. நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் 10 அம்சக் கோரிக்கை வலியுறுத்தி 2012 ஏப் 21-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர்.

ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தீர்வு காண மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும் என்று மட்டும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கூறினார்.

ஒப்பந்தத் தொழி லாளர்கள் தொடர்பாக அதிகாரிகள் நிலையில் நாள் கணக்கில் பேச்சு வார்த்தை நடந்ததே தவிர, முதல்வரோ, அமைச்சர்களோ இதில் ஈடுபடவில்லை.

இறுதியாக இந்தப் போராட்டம் 2012 ஜூன் 5 -ஆம் தேதி முடிவுற்றது.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் நாரா யணசாமி என்.எல்.சி. பங்குகளை விற்பதில் தவறு ஒன்றுமில்லை என்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

இந்தக் கருத்து புதுவை உள்பட தமிழ கத்துக்கும், குறிப்பாக தொழிலாளர்களுக்கும் விரோதமானதாகும். எனவே, என்.எல்.சி. பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது.

அது தேவையின்றி, தமிழர்களை, குறிப்பாக நெய்வேலி தொழிலாளர் களை வீண் வம்புக்கு இழுக்கும் செயல்.

அப்படிப்பட்ட செயலில் மத்திய அரசு ஈடுபட்டு, மேலும் ஓர் எதிர்ப்பை தேடிக் கொள்ள வேண்டாம் என கலைஞர் எச்சரித் துள்ளார்.

தமிழ் ஓவியா said...


கா. அப்பாதுரையார்


பன்மொழிப் புலவர் என்று சொன்னால் முதன்மையாக கா. அப்பாதுரையார் அவர் களைத் தான் குறிக்கும். அவரது ஏழாம் பாட்டனார் 40 மொழிகளை அறிந்தவர் என்றால் நம் அப்பாதுரையார் 10 பத்து மொழிகளில் பண் பட்ட புலமையாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 170 நூல்களை யாத்தவர் இவர். ஜஸ்டிஸ் லிபரேட்டர், திராவிடன், விடுதலை முதலிய ஏடுகளில் பணியாற் றியவர் ஆவார். இவர் சென்னை வருவதற்கு முதற் காரணம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்கள்.

இவர் எழுதிய இந்தியா வில் மொழிச் சிக்கல் எனும் ஆங்கில நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கம் முன் னுரை எழுதினார் என்றால், அது என்ன சாதாரணமா?

சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அ. சிதம்பரநாதர் அவர் களின் தலைமையில் தொகுக் கப்பட்ட ஆங்கில - தமிழ் அகராதித் துறையில் இணை ஆசிரியராகப் பணியாற்றிய பெருமையும் பன்மொழி புலவருக்கு உண்டு.

தந்தை பெரியார் அவர் களிடம் நெருக்கமான தொடர்பு இருந்தது. திராவி டர் கழகத்தின் பொதுச் செயலாளராக ஆகும் அள வுக்குக்கூட அவர் பேசப்பட்ட துண்டு. தென் சென்னையில் கழகத்தை வளர்க்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் என்றால் யாருக்கும் ஆச் சரியமாக இருக்கலாம்.

மதச் சார்பற்ற முறையில் குறளுக்கு ஓர் உரையினை எழுதுமாறு தந்தை பெரியார் கேட்டுக் கொள்ள, முப்பால் ஒளி எனும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி திருக்குறளுக்கு விளக்க வுரை எழுதினார். இருபது அதிகாரங்களுக்கு அவர் எழுதிய உரை ஆறு தொகுதி யானது.

திராவிடர் இயக்க ஆர்வ லரும், பதிப்பக உரிமையாளரு மான வெள்ளையம்பட்டு சுந்தரம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் கா. அப்பா துரையார் குறிப்பிடும் கருத் தினை வெளியாக்கியுள்ளார்.

மொழி வகை மூன்று

1) திராவிட மொழிக் குடும்பம்

2) ஆசியாவை உள்ளடக் கிய ஆரிய மொழிக் குடும்பம்

3) மேலை நாட்டார் மொழிக் குடும்பம் அறிஞர் கால்டுவெல், மறைமலை அடிகளார், தேவ நேயப்பாவாணர் மூவரும் தமிழ் தந்த மூவர் என்றார்; படித்தவர்களைவிட தந்தை பெரியார் சிந்தனையும் செய லாற்றலும் மிக மிகச் சிறந்தது - ஈடு இணையற்றது என்று குறிப்பிடுகிறார் புலவர்.

சென்னை பெரியார் திடலில் சங்கராச்சாரி யார்? எனும் தொடர் சொற் பொழியை ஆறியவர் அன் றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள். ஒரு தொடருக்கு அப்பாதுரையார் தலைமை வகித்தார் (5.6.1983) அப்பொழுது அவர் சொன்னார்.

ஆதி சங்கரர் எழுதிய மனேசாப் பஞ்சகம் எனும் நூலில் கடவுள் மறுப்புக் கூறப்பட்டுள்ளது. மதச் சடங்குகள் கூடாது, உருவ வணக்கம் தவறு என்றும் ஆதிசங்கரர் கூறியுள்ளார் என்று குறிப்பிட்ட அப்பாதுரை யார் ஆதி சங்கரரைக் கொன்றது பார்ப்பனர்களே என்கிறார்.

கா. அப்பாதுரையின் நினைவு நாள் இன்று (1989).

- மயிலாடன்

குறிப்பு: முகம் மாமணி எழுதிய அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார் நூலினைப் படியுங்கள்.

தமிழ் ஓவியா said...


இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதா? தமிழர் தலைவர் கண்டனம்!


இலாபம் தரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியாருக்கு விற்பது பொன் முட்டை யிடும் வாத்தினை அறுப்பதாகும். இந்த முயற்சியினை மத்திய அரசு கைவிட வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்பது லாபந்தரும் பொதுத்துறை நிறுவனம். நவரத்தினங்களில் ஒன்று. முன்பே 10 சதவிகித பங்குகளை விற்கும் யோசனை வெளிவந்தபோது, திராவிடர் கழகம், அதுபோலவே தி.மு.க. அத்துணைக் கட்சி தொழிற் சங்கங்கள் எல்லாம் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தின! தி.மு.க. அய்க்கிய முற் போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாக எச்சரிக்கை விடுத்தது; அதன் விளைவு அன்று இத்திட்டம் கை விடப்பட்டது.

மீண்டும் இப்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று என்ற பழமொழி போல் 5 சதவிகிதப் பங்கினை விற்கும் ஆபத்தான யோசனை முளைவிட்டுக் கிளம்பியுள்ளது.

இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகள் மட்டுமல்ல; அ.தி.மு.க.வும் தமிழக அரசும் அதன் தோழமைக் கட்சிகளும்கூட இதனை எதிர்த்துள்ள நிலையில், இந்த வகை யில் விபரீத முயற்சியில் ஈடுபட்டு, (காங்கிரஸ்) தேவையின்றி தமிழ் நாட்டில் உள்ள கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் அழித்துக் கொள்ள முடிவு செய்து விட்டது போலும்!

நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தைக்கூட லாபத்தில் இயங்க வைக்க முன் வருவதுதான் ஒரு நல்ல அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, லாபத்தில் இயங்கும் நிறுவனப் பங்குகளை இப்படி தனியாருக்குத் தாரை வார்ப்பதா?

பொன் முட்டையிடும் வாத்தினை கொல்லும் பேதைமைத்தனம் அது என்பதல்லாமல் வேறு என்ன?

எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

கொள்கை முடிவுகள் கோணல் இல்லாமல் இருக்க வேண்டும்; தனியார் கொள்ளைக்குக் கதவு திறந்து விடுவதாக இருக்கக் கூடாது!

சென்னை
26.5.2013

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


ஓடி விளையாடும் ஆட்டமா?


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியாருக்கு விற்பது தொடர்பான பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் மத்திய அரசு இப்படி ஓர் அறிவிப்பைக் கொடுப்பதும், அதனை எதிர்த்துத் தமிழ்நாட்டில் கண்டனக் குரல் கொடுப்பதும், திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்பதும் வழமையான ஒன்றாகி விட்டது. ஓடி விளை யாடும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

2004ஆம் ஆண்டில் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போதே குறைந்தபட்ச செயல் திட்டம் (Common Minimum Programme) ஒன்று அறிவிக்கப்பட்டதே நினைவிருக்கிறதா?

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவ னங்கள் எதுவும் அரசின் கையை விட்டுப் போகாது; அதன் பங்குகளை விற்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று அதில் கூறப்பட்டதே - மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணமா?

பிரதமர் உள்ளிட்டவர்கள் இதுபற்றியெல்லாம் பொறுப்போடு சிந்திக்க வேண்டாமா? அரசு ஒரு வார்த்தையைச் சொன்னால் அதனைக் காப்பாற்றும் பண்பாட்டைக் கை கொள்ள வேண்டாமா?

1930இல் ஆய்வுப் பணி தொடங்கப்பட்டு கர்ம வீரர் காமராசர் அவர்களின் முயற்சியினால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட் டுக்குக் கிடைத்தது!

டி.டி.கே. போன்ற பார்ப்பனர்கள் இது பயன்படாத திட்டம் என்று சொன்ன நிலையில், வெளிநாட்டு நிபுணர்கள் சிறந்த திட்டம் என்று கூறினர்.

1957இல் தொடங்கப்பட்டாலும், அது இலாபம் தரும் நிறுவனமாக மாறியது - 1976ஆம் ஆண்டு முதல்தான். 1976இல் கிடைத்த லாபமும் வெறும் மூன்று கோடி ரூபாய்தான்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; ஆந்திரா, கருநாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் வரை - இந்த நெய்வேலி அனல் மின்சாரத்தால் தான் வெளிச்சம் பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

தனக்கு மிஞ்சிதான் தான தருமம் என்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதெல்லாம் பழைய மொழிதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை விற்பது என்பது ஒரு கொள்கையாகவே ஆகிவிட்டது.

பிஜேபி ஆட்சியில் இருக்கும் பொழுது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கென்றே ஒரு தனித்துறையும், அதற்கென ஓர் அமைச்சருமே இருந்து வந்தார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியானாலும், தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் பொருளாதாரக் கொள்கையில் சம எடை உள்ளவர்களாகவே இருந்து வருகின்றனர்.

சோப்பு, சீப்பு விற்க வந்த வெள்ளைக்காரன், பிறகு இந்தியாவையே 350 ஆண்டுகள் வரை ஆண்டான்; அவனை விரட்டி சுதந்திரம் பெற்றதாக மார் தட்டினோம்.

இப்பொழுது என்னடா என்றால் சோப்பு, சீப்பு, காய்கறிகள், மளிகை சாமான்கள் வரை விற்பதற்கு வெளிநாட்டுக்காரர்களை சிகப்புக் கம்பளம் போட்டு, பூர்ண கும்பமும் அளித்து, வரவேற்கத் தயாராகி விட்டோம்! இதற்குப் பெயர் சுதந்திர நாடாம்.

புதிய பொருளாதாரம் என்பதன் உண்மை யான பொருள் என்னவென்றால் ஒரு நாட்டின் சுதந்திரத்தை சூட்சமமான முறையில் இன்னொரு நாட்டுக்கு விலை பேசுவதே!

தனியார்த் துறைகளில் இருந்தவற்றை நாட்டுடைமையாக்குவது தான் சோசலிசம் என்று ஒரு காலத்தில் கூறப்பட்டது. இப்பொழுது என்னடா என்றால் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை, அதன் பங்குகளை தனியா ருக்கும், வெளிநாட்டுக் காரர்களுக்கும் விற்பது என்ற தலைகீழ் நிலை ஏற்பட்டுள்ளது. இது என்ன இசமோ தெரியவில்லையே!

மக்கள் விழிப்புணர்வுதான் இதற்கெல்லாம் முடிவை ஏற்படுத்தும் என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மையாகும். 27-5-2013

தமிழ் ஓவியா said...


பிள்ளையார் உடைப்பு!


1953 - இதே நாளான மே 27 இல் தமிழ்நாடே - ஏன் இந்(து)திய நாடே திடுக்கிடக் கூடிய ஒரு போராட்டத்தை நடத்தி யவர் தந்தை பெரியார்.

ஆம்! பிள்ளையார் உடைப்புப் போராட்டம் தான் அது. புத்தர் விழா வில் தந்தை பெரியார் பேசிய உரையை ஒலி பரப்புவதாக ஒப்புக் கொண்டு ஒலிப் பதிவும் செய்த அகில இந்திய வானொலி நிலையம், உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை. நட்டக் கணக்குப் பெரியார் வரலாற்றுப் பேரேட்டில் ஏது? முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தார். புத்தர் ஜெயந்தியன்று நாடெங் கும் பிள்ளையார் பொம் மைகளை உடையுங்கள் கழகத் தோழர்களே என்று ஆணையிட்டார்.

ஆட்சியோ ஆச்சாரி யாருடையது - பொது மக்கள் பார்த்துக் கொள் வார்கள் என்று வன் முறைக்குத் தூபம் போட்டார். ஆனாலும் அய்யா அவர்கள் அறிவித்த வாறே நடத்தியும் காட் டினார்.

இவ்வளவுப் புரட்சிகர மான போராட்டத்தை நடத்தினாலும் தந்தை பெரியார் எப்படி வழி காட்டினார்? போராட்டம் என்றாலே வன்முறை வெறியாட்டம் என்ற அகராதியைத் தயாரித் துள்ள தலைவர்கள் (?) தெரிந்து கொள்ள வேண் டும்.

இதோ பெரியார் கூறுகிறார்:

விக்ரகங்களை உடைக் கிறேன் என்றவுடன் கோயிலுக்குள் போய் புகுந்துஉடைப்போம் என்று யாரும் கருத வேண்டாம்; இந்தப்படி கோயிலுக்குள் புகுந்து கலாட்டா செய்வோம் என்று யாரும் அஞ்சத் தேவையில்லை - கோயிலுக்குள் யாரும் போக மாட்டோம். குயவரிடத்தில் மண் கொண்டு வந்து இன்றைய கோயி லில் இருக்கிற சாமியைப் போல செய்து தரச் சொல்லி, அல்லது கடை களில் விற்கிறதே, வர்ணம் அடித்த பொம்மை கள், அதைக் கடையிலே வாங்கிக் கொண்டு வந்து, ஒரு தேதியில் இப்படி இதை உடைக்கப் போகிறோம் என்பதாக எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு நடு ரோட்டிலே போட்டு உடைப் போம்! (விடுதலை 4.5.1953) என்றார்.

வருணாசிரம ஜாதி ஏற்பாட்டையும் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்ட கடவுளையும் எதிர்ப்பதற்கும், மறுப்பதற்கும் இந்தப் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் என்ற முறையில் நடத்தப்பட்ட போராட்டம் இது. - மயிலாடன் 27-5-2013

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க பகுத்தறிவாளர் நியமனம்! கர்நாடக அரசின் அட்வகேட் - ஜெனரலாக சட்டமேதை ரவிவர்மக் குமார் நியமனம்!


பெங்களூரு - 27.5.2013 கர்நாடகாவின் மேனாள் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுத் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான சட்டமேதை பேராசிரியர் ரவிவர்மக்குமார் அவர்கள் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞராக (Advocate General) அரசால் நியமிக்கப்பட்டார். கடந்த மூன்று நாள்களுக்கு முன் பொறுப்பேற்றார்.

அவருக்குக் கழகத் தலைவர் அவர்கள் தொலை பேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்!

சமூக நீதி வழக்குரைஞர் ஃபோரத்தின் டிரஸ்டிகளில் ஒருவர் இவர்.

சிறந்த சமூக நீதியாளர். அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும். கி.வீரமணி சமூக நீதி விருது இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனன் செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகி விட்டோமானால், கொல்லுவாரின் றியே பார்ப்பனன் செத்தான்.

(விடுதலை, 14.3.1970)

தமிழ் ஓவியா said...


கடமை வீரர் மனோகரனுக்கு நமது புகழ் அஞ்சலி!


எத்தனை பேர் நம் நாட்டில் கடமையாற்றுவதில் தவறாதவர்கள்? என்ற ஒரு கணக்கெடுத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்! பெரும்பாலும் பணியாற்றும் பலரும் - எந்த நிறுவனமும் நம் நாட்டில் எளிதில் விலக்கல்ல - கடியாரத்தையும் காலண்டரையும் தான் பார்த்துப் பணியாற்றுகிறார்களே தவிர, தங்கள் மனச் சாட்சிக்குக்கூட அவர்கள் நீதி வழங்குவதில்லை! எப்போது இடை வெளி - மணி - வருவதேகூட கால தாமதம் பல சாக்குப் போக்குகள்! சமாதானங்கள்! விளக்கங்கள் - வியாக்யானங்கள் இத்தியாதி! இத்தியாதி!

நெருக்கடி நிலை பிரகடனத்தைக் கூட இன்னமும் நம் வயதானவர்கள் சிலர் சிலாகித்துப் பேசுவதற்கே ஒரு முக்கிய காரணம் - அப்போது எல்லாம் அரசு பணிமனைகள் சரியாக இயங்கின. எவரும் தாமதித்து வர மாட்டார்கள். லஞ்சம் கேட்டதில்லை. திருமணங்களைக்கூடச் சிக்கனமாக நடத்தினர்; காரணம் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளைக்கூட அதிகாரிகளை விட்டு கணக்கெடுத் தது அரசு - அபராதம் - சிறை வருமே என பயந்து எல்லோரும் கடமையாற்று வதில் கண்ணும், கருத்துமாக இருந்தனர் என்பர்.
உண்மைதான்!

மனிதர்களுக்கு சுதந்திரக் காற்று - சுயக்கட்டுப்பாடும் அல்லவா தனி அடையாளம் - அவர்களது ஆறாம் அறிவு காரணமாக. அதை விடுத்து எப்போதும் கட்டுப்பாடு! கடுமையான அடக்குமுறை இருந்தால்தான் ஒழுங்கீனத்தைத் தவிர்க்க முடியும் என்றால் அது என்ன வாழ்க்கை? சிறைக்கூட வாழ்வு அல்லது சர்க்கஸ் கூடார மிருக வாழ்க்கை! இல்லையா?

தானே கடமையாற்றும் நல்லவர் பலர் இன்னும் நாட்டில் இல்லாமல் இல்லை!

இதோ ஒரு அருமையான உடல் புல்லரிக்கும் செய்தி. கடமையாற்றி விட்டு உயிரைவிட்ட ரயில் என்ஜின் ஓட்டுனர் மனோகரன்!

இதோ அந்தச் செய்தியைப் படியுங்கள்! கும்மிடிப்பூண்டி, மே.25- கும்மிடிப்பூண்டி- சென்னை இடையே சென்ற மின்சார ரெயிலில் என்ஜின் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சாகும் முன் ரெயிலை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத் திற்கு மின்சாரரெயில் நேற்று முன்தினம் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டது. அந்த ரெயிலை மனோகரன் (வயது 48) ஓட்டி வந்தார்.

ரெயில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்றது. பயணிகள் ஏறிய தும் ரெயில் புறப்பட்டது. கவரைப் பேட்டையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் ரெயில் என்ஜின் டிரைவர் மனோகரன் திடீர் என்று ரெயிலை நிறுத்தினார். நடுவழியில் ரெயில் நிறுத்தப் பட்டதால் பயணிகள் என்னவோ ஏதோ என்று பயந்து கீழே இறங்கினார்கள். அதற்குள் டிரைவர் மனோகரனும் கீழே இறங்கினார். வலியால் நெஞ்சை பிடித்த படி மனோகரன் தரையில் சாய்ந்தார்.

உடனடியாக அதிகாரிகள் மனோகரனை மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மனோகரனின் உயிர் பிரிந்தது. மரணத்தின் பிடியில் இருந்த போதும் ரெயிலில் இருந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற் றுவதற்காக சிரமப்பட்டு ரெயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி இருக்கிறார் மனோகரன்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மனோகரன் இறந்து விட்டார் என்ற தகவலை அறிந்ததும் அந்த ரெயிலில் வந்த பயணிகள் கண்ணீர் மல்க மனோகரனின் மனிதாபிமானத்தை நெகிழ்ந்து பாராட்டினார்கள். மரணம் அடைந்த மனோகரனின் சொந்த ஊர் திருவள்ளூர் ராஜீவ்நகர் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். பல நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றி விபத்து நேராமல், ஸ்டேஷன் கவரைப் பேட்டை அருகில் கொண்டு வந்து ரயிலை நிறுத்தி விட்டார்.

அவருக்கு நெஞ்சு வலி. மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார் அந்த கடமை வீரர் மனோகர்! அவருக்கு நமது வீர வணக்கம். விபத்தினை தவிர்த்தார். இவருக்கு ரயில்வே துறையினர் தனி சிறப்பு விருது - வழங்க வேண்டும் குடும்பத் தினருக்கு - செய்வார்களா?

தமிழ் ஓவியா said...


சட்டம் ஒழுங்கு - அபாய நிலை!


நாட்டில் சட்டம் ஒழுங்கு வெகு நேர்த்தியாக இருப்பதாக சட்டப் பேரவையில் அறிவிக்கப்படு கிறது; அவ்வப்பொழுது அரசு சார்பில் சொல்லப்படுகிறது.

ஆனால் அன்றாடம் நாட்டில் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் வேறு எப்பொழுதும் கேள்விப்படாதவை - நடக் காதவை.

நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே புகுந்து கொலை. ஆளுங் கட்சிக்காரர்களேகூட கொல்லப்படுகிறார்கள் - இரவு நேரத்தில் மட்டுமல்ல; பட்டப் பகலிலேயே கொலைகள் பட்டவர்த்தனமாக நடைபெறத் தொடங்கி விட்டன.

ஏதோ குக்கிராமங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைப் பெரு நகரத்திலேயே குலை நடுங்கும் கொலைகள்.

காவல்துறை அதிகாரிகள் மாற்றப்படுவதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டு விடுமா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தருமபுரி மாவட் டத்தில் தொடங்கப்பட்ட - தாழ்த்தப்பட்டவர் களின் பகுதிகள் எரிப்பு என்பது இப்பொழுது மரக்காணம் வரை பரவி விட்டது.

அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அறிக்கை வெளியிடுவதால் நிலைமையைச் சமாளித்து விட்டதான நெருப்புக் கோழி மனப்பான்மை அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தி விடாது.

மக்கள் அன்றாடம் நாட்டில் நடக்கும் வன்முறையை நேரில் கண்டு கொண்டு தானிருக்கிறார்கள் - ஏடுகளிலும் படித்துக் கொண்டு தானிருக்கிறார்கள். கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவைப்படாது.

வீட்டைப் பூட்டி விட்டு வெளியூருக்குச் செல்ல முடியாது. அப்படியே சென்றால் வீட்டில் உள்ள பொருள்கள், நகைகள் பணத்திற்கு உத்திரவாதம் கிடையவே கிடையாது.

வெளியூர் சென்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து படுக்கையறையில் ஓய்வும் எடுத்துக் கொண்டு, சர்வ சாதாரணமாக, எந்தவிதப் பதற்றமுமின்றிப் பொருள்களை வாரிச் சுருட்டிக் கொண்டு, வீட்டுக்காரரின் இரு சக்கர வாகனத்தையும் பயன்படுத்தி செல்லுகிறார்கள் என்றால் இவை எல்லாம் சினிமாவில் நடப்பதுபோல் தெரியவில்லையா?

காவல் நிலையம் அருகே படுகொலை என்றெல்லாம் செய்தி வருகிறது.

பட்டப்பகலில் நடந்து செல்லும் பெண்களின் நகைகள் பறிக்கப்படுவது சர்வ சாதாரணம். தங்க நகை என்று நினைத்துப் பறித்துச் சென்றவன், அது போலி என்று தெரிந்து கொண்டபிறகு, அந்தப் பெண்ணிடம் திரும்பி வந்து ஓர் அறை அறைந்து விட்டுச் சென்றான் என்று எல்லாம் சேதி வருகிறதே - இது எங்கே கொண்டு போய் விடும்?

கொலைகாரர்களும், கொள்ளைக்காரர் களும் எளிதாக பிணை பெற்று வந்து விடுகிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக் கிறது. பிணையில் வெளிவந்த ஆளே வெட்டிக் கொல்லப்படும் செய்தியும் வருகின்றது.

இது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல - வாய்ச் சவடால் விடுவதற்கு; மக்களின் உயிருக்கும், உடைமைக்கு உத்தரவாதம் என்பது மிகவும் அடிப்படை உரிமைப் பிரச் சினை. இதனைச் செய்து கொடுக்க முடியா விட்டால் அரசாங்கம் இருப்பது என்பதற்கே பொருளில்லாமல் போய் விடும்.

மூல காரணத்தைக் கண்டு அறிவதில் அரசும், காவல்துறையும் போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும்.

தேவை வெறும் அறிக்கையல்ல - நடை முறையில் மாற்றம்தான்!

ஊடகங்கள் மவுனசாமியார் ஆகிவிட்டன என்ன பின்னணியோ! யார் அறிவார் பராபரமே!28-5-2013

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இது


உண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப் பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது.

(விடுதலை, 28.10.1967)

தமிழ் ஓவியா said...

மத நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?

கேள்வி: மத நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?

கலைஞர்: அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பைக் கூறுகிறேன். அந்தக் கருத்துக் கணிப்பு 2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதற்கும் தற்போது எடுக்கப்பட்டதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுவதாக உள்ளது. 2005ஆம் ஆண்டு உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகமாக மத நம்பிக்கை கொண்டி ருக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை எடுத்த போது, இந்தியா முழுவதும் சுமார் 87 சதவிகிதம் பேர் மத நம்பிக்கையுடன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மத நம்பிக்கைபற்றி அண்மையில் உலகம் முழுவதும் ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. 51 ஆயிரத்து 927 பேரிடம் இதுபற்றி கருத்துகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று முன்தினம் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு மத நம்பிக்கை இருப்பது தெரியவந்துள்ளது. 2005ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 6 சதவிகித அளவிற்கு இந்தியர்கள் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பட்டியலுக்கு மாறியிருப்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தக் கணக் கெடுப்பில் தெரிய வந்திருப்பது, சீனாவில் 47 சதவிகிதம்; ஜப்பானில் 31 சதவிகிதம்; செக் குடியிருப்பில் 30 சதவிகிதம்; பிரான்சில் 29 சதவிகிதம்; இந்தியாவில் 3 சதவிகிதத்தினர் தான் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தப் புள்ளி விவரம் கூறுகிறது.

தமிழ் ஓவியா said...


இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கூடாது தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தல்


சென்னை, மே 29- இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டு கோள் என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி: தமிழக மக்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு, தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் திரு. ஏ.கே. அந்தோணி தஞ்சையில் கூறியிருக்கிறாரே?
கலைஞர்: இலங்கை ராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட ராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வரு கிறது; ஆனால் தமிழக மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அவர்களுக்குத் தமிழ கத்தில் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று நண்பர் ஏ.கே. அந்தோணி அவர்கள் தஞ்சை யில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட செய்திதான் இது. ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத் தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். இந்திய அரசிடம் நாம் பலமுறை அந்த வேண்டு கோளை விடுத்து விளக்கியுள்ளோம். இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அவர்களே, இலங்கையில் தமிழர் மறு வாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்று ஒருமுறை கூறியிருக்கிறார். இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், இந்தியாவில் இலங்கை ராணு வத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை. அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகா ரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை என்று கூறினார். அப்போதே அதற்குப் பதி லளித்த மத்திய அமைச்சர் அந்தோணி அவர்கள், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை. இலங்கையில், அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஒருபுறம் தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்துகொள்வோம். எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம்.

அதே சமயம் மற்றப் பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம் என்று கூறினார். இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத் தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோள். இந்த உண்மையை நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள் புரிந்து கொண்டு அதற் கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்பதே மீண்டும் மீண்டும் நாம் விடுக்கின்ற கோரிக்கை யாகும்.

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியடையும்!நமக்குப் புதிதாகக் கருத்துச் சொல்லக்கூடியவர்கள் கூட இப்போது தேவையில்லை. நம் கருத்துகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இல்லாமலிருந்தாலே போதும். மனித அறிவும், சமுதாயமும் நல்ல வண்ணம் வளர்ச்சியடையும்.
(விடுதலை, 24.7.1969)

தமிழ் ஓவியா said...


திராவிடக் கட்சிகளுடன் உறவு கிடையாதா? கூட்டணி வைக்க பாமகவை யாரும் அழைக்கவில்லையே: மு.க.ஸ்டாலின் பேட்டி


சென்னை, மே 29-திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட வாரியாக மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தென்சென்னை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம், நேற்று (28.5.2013) காலை அன்பகத்தில் நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் மா.சுப்பிர மணியன், அசன் முகமது ஜின்னா, சுபா சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு, துணை அமைப்பா ளர்கள் வடிவேல், ஆனந்தம், சுரேஷ், பிரபாகர் ராஜா, ஆனந்த் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
ஓராண்டுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனத்தில் விதிக்கப்பட்ட சில விதிமுறைகள் அடிப் படையில் நிர்வாகிகளை நேர்காணல் மூலம் தேர்ந் தெடுத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் 5000 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களின் ஓராண்டு செயல்பாடு பற்றி கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சரியாக பணியாற்றாதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. சில இடங்களில் மாற்றப்பட வேண்டிய நிலையும் இருக்கிறது. அந்த பணியும் முறைப்படுத் தப்படும்.

கேள்வி: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது?

பதில்: சட்டம், ஒழுங்கே இல்லை. பிறகு எப்படி எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்ல முடியும்.

கேள்வி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளாரே?
பதில்: ஒகேனக்கல் குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. 2006இல் கலைஞர் முதல்வ ரான பிறகு, மீண்டும் அந்த திட்டத்தை முழுவீச்சில் முடுக்கிவிட்டார். நானும், அதிகாரிகளும் ஜப்பான் சென்று தேவையான நிதியை பெற்று வந்தோம். 90 சதவீத பணிகள் திமுக ஆட்சியில் முடிந்துவிட்டது.
2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த பணிகளை தொடர்ந்திருந்தால் 6 மாதத்தில் திட்டம் முழுமையாக முடிந்திருக்கும். ஆனால், அப்படி செய்யாத தால் தேக்க நிலை இருந்தது. இப்போது கூட, பணிகள் முழுமை பெறவில்லை. அவசர கோலத்தில் திறந்து வைக்கப்படுகிறது என்று செய்தி வந்துள்ளது. இதுதான் உண்மை. பல பகுதிகளில் பணிகள் முழுமை அடைய வில்லை. புதிய தலைமைச் செயலகம், சேது சமுத்திர திட்டம் போல், இந்த திட்டத்தையும் கிடப்பில் போடாமல், திறந்து வைப்பது வரவேற்கதக்கது. மீதமுள்ள பணிகளை முழுமையாக முடித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

கேள்வி: ராமதாசை நீங்கள் சந்தித்தீர்களா?

பதில்: நான் அவரை சந்திக்கவில்லை. மருத்துவ மனையில் இருந்த துரைமுருகனை சந்தித்து உடல்நலம் விசாரிக்க சென்றேன். அப்போது, எதிர் அறையில் ராமதாஸ் குடும்பத்தினர் இருந்தனர். அவர்கள் கட்சியை சேர்ந்த தனராஜ் இதை தெரிவித்ததால் நான் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தேன்.

கேள்வி: திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அன்புமணி கூறியிருக்கிறாரே?

பதில்: எந்த திராவிட கட்சியினர் இவர்களை அழைத் தார்கள் என்று தெரியவில்லை.

கேள்வி: அய்பிஎல் சூதாட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

கேள்வி: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடுமா?

பதில்: இதுபற்றி கட்சித் தலைவர் கலைஞர் அறிவிப்பார்.

தமிழ் ஓவியா said...


தடையானவர்கள்மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும், மனிதத் தன்மைக்கும் இமயமலை போன்ற தடையானவர்களும், கேடானவர்களும், நமது சோசியர்களும், மந்திரவாதிகளும், மத, புராண, இதிகாசப் பிரச்சாரகர்களும் ஆவார்கள்.
(விடுதலை, 4.4.1968)

தமிழ் ஓவியா said...


பக்தியின் யோக்கியதையைப் பாரீர்!கோயில் விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு - மந்திரித்துத் தருவதாக மோசடி!

திருட்டைக் கண்டுபிடிக்க தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை!!


சென்னை, மே 30- திருட்டைக் கண்டு பிடிக்க தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை - மழை பெய்ய கழுதைகளுக்கும் திருமணமாம் - கிடா வெட்டி சிறப்புப் பூஜை யாம் - கோயில் விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு - மந்திரித்துத் தருவதாகக் கூறி பெண் ணிடம் நகை மோசடி செய்தவர் கைது போன்ற பக்தியின் பெயரால் நடக்கும் மோசடிகள் - மூடநம்பிக்கைகளை இங்கே காணலாம்.

தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை!

குஜராத்தில் ரூ. 3 லட்சம் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட 10 பேரை தீச்சட்டியில் கையை விட சொன்ன சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட் டத்தின் கனா கிராமத் தில் ஒருவரது வீட்டில் கடந்த ஞாயிறன்று ரூ. 3லட்சம் திருடு போனது. இது குறித்து சந்தேகத் தின் பேரில் அக்கி ராமத்தைச் சேர்ந்த 10 பேரை பிடித்து விசாரித் தனர்.அவர்கள் நாங்கள் திருடவில்லை என கூறினர். அப்படியெனில் அங்குள்ள கோயில் ஒன்றில் தீச்சட்டிக்குள் கையைவிட்டு திருட வில்லை என கூற வேண் டும் என கட்டாயப் படுத்தினர். நேற்று நடந்த இந்த சம்பவத்தில் 10 பேரின் கையும் தீயில் கருகின. சம்பவம் தொடர் பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரிக்கின் றனர். தீக்காயங்களுடன் 10 பேரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மந்திரித்துத் தருவதாக கூறி நகை மோசடி

தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த வர் காளிமுத்து. ஜவுளிக் கடை அதிபர். இவரது மனைவி சுந்தரம்மாள், (வயது 55). இவர்களின் கடையில் வேலை செய்தவர் மாரிமுத்து, (வயது 26). சில ஆண்டுகள், மாந்த்ரீகம் கற்பதற்காக வெளியூர் சென்று விட்டார். பின், ஊர் திரும்பியவர், சுந்த ரம்மாளிடம், தொழில் அபிவிருத்திக்கும், தோஷம் கழிக்கவும், நகைகளை மந்திரித்து தருவதாக கூறியுள்ளார். சினிமா பாணியில், கொஞ்சம், கொஞ்சமாக பணம், நகை வாங்கி மோசடி செய்துள்ளார். இதற்கு இவர்கள் வீட்டில் வேலை செய்த மாரியம்மாள், (வயது 56), என்பவரும் உடந் தையாக இருந்துள்ளார்.

இருவரும், 118 பவுன் நகை, 7.25 லட்சம் பணம் மோசடி செய்து உள் ளனர். இது பற்றி, சுந்த ரம்மாள் சின்னமனூர் காவல்துறையில் புகார் செய்தார். காவலர்கள், மாரிமுத்துவை கைது செய்தனர்.

கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் கடந்த ஆண்டு தென் மேற்கு, வடகிழக்கு பருவ மழை பொய்த்த தால் நடப்பாண்டு மேட்டூர் அணை வறண்டு விட்டது. தமிழக எல் லையில் மேட்டூர் அணை கரையோரம் கோவிந்தபாடி, செட் டிப்பட்டி, காவேரிபுரம், கருங்கல்லூர் உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளது.

கடும் வறட்சியால் அணை வறண்டதால் கரையோர கிராமங் களில் நிலத்தடி நீர், 800 அடிக்குக் கீழே சென்று விட்டது. இதனால் விவ சாய பணிகளும் முடங் கியதால் மக்கள் அவதிப் படுகின்றனர். கழுதை களுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற மூடநம் பிக்கை அப்பகுதியில் நிலவுகிறது.

இதனால், அணை கரையோரம் உள்ள காவேரிபுரம் கிராம மக்கள் நேற்று அங் குள்ள வினாயகர் கோயில் முன், கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். பின், தாரை, தப்பட்டை முழங்க கழுதை தம்பதியரை கிராமங்களில் வீதி, வீதியாய் அழைத்து சென்றனர். வீதிகளில் பெண்கள் கழுதை களுக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினராம்!

கழுதைகளுக்கு திரு மணம் செய்து வைத்த மாணிக்கம் கூறியதா வது: கழுதைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற அய்தீகம் எங்கள் பகுதியில் நிலவுகிறது. எங்கள் பகுதியில் ஒரு ஆண் கழுதை இருந்தது. அதற்கு திருமணம் செய்து வைப்பதற்காக சுற்று கிராமங்களில் பெண் கழுதைகள் தேடி யும் கிடைக்கவில்லை.

அருகிலுள்ள கருங் கல்லூர் கிராமத்தில் பெண் கழுதை இருப்ப தாக தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் கருங் கல்லூர் சென்று நாங் கள் கழுதை உரிமை யாளிடம், "முறைப்படி' பெண் கேட்டோம். ஆனால், அவரது பெண் கழுதைக்கு திருமணம் செய்து வைக்க, அவர் மறுத்து விட்டார். வேறு வழியின்றி நள்ளிரவில் கருங்கல்லூர் சென்று மணப்பெண்ணை (கழுதை) கடத்தி வந்து விட்டோம்.

இதனால், மணப் பெண் தரப்பில் திரும ணத்தில் யாரும் பங்கேற் கவில்லை. திருமணத்தை சிறப்பாக நடத்தியதைத் தொடர்ந்து, பெண் வீட்டார் சமாதானமாகி விட்டனர். முதல் முறை யாக கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதால், எங்கள் பகுதியில் மழை பெய்யும் என நம்பு கிறோம், என்றார். இப் படியும் ஒரு மூடந ம்பிக்கை.

தமிழ் ஓவியா said...

பெண்களிடம் 25 சவரன் பறிப்பு

காஞ்சிபுரம் வரத ராஜ பெருமாள் கோயிலில் நேற்று தேர்த் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கூட்டத்துக்குள் திருடர் கள் புகுந்து கைவரிசை காட்டினர். காஞ்சிபுரம் புத்தாகரத்தை சேர்ந்த பூதேரியம்மாளிடம் நான்கரை பவுன் செயின், பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி யிடம் 2 சவரன், ஜோதிமாலா என்பவரி டம் 5 சவரன், ராஜேஸ் வரியிடம் 5 சவரன் செயினை திருடர்கள் பறித்தனர். இதுபோல் சென்னை கூடுவாஞ் சேரியை சேர்ந்த செண் பகத்திடம் 5 சவரன் செயின், சென்னை கொரட்டூரை சேர்ந்த இந்துமதியிடம் மூன் றரை சவரன் செயினை பறித்தனர். செயினை பறி கொடுத்தவர்கள் கூச்சல் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந் திருந்த காவலர்கள் திருடர்களை தேடினர். ஆனால் கூட்டத்தில் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கொடுக் கப்பட்டுள்ள புகார்கள் அடிப்படையில், சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை வேண்டி அணையில் கிடா வெட்டி சிறப்புப் பூஜையாம்!

நாகர் கோவில் நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே நாகர்கோவில் நகரசபை சார்பில், மழை வேண்டி முக்கடல் அணை பகுதியில் உள்ள ஆலமரத்து இசக்கி அம்மன் கோவில் முன்பு யாகம் வளர்த்து வழி பாடு நடத்தப்பட்ட தாம்! பின்னர் கிடா வெட்டி அம்மனுக்கு படைத்து சிறப்புப் பூஜைகளும் நடத்தப் பட்டனவாம்! இந்த சிறப்பு பூஜை குறித்து நகரசபை தலைவி மீனாதேவி கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. அணை களிலும் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் சரிந்து வருவ தால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் அடியில் உள் ளது. இந்த ஆண்டாவது பருவ மழை பெய்தால் தான் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முடியும். இதனால் முக் கடல் அணை அருகே உள்ள இசக்கியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினால் மழை பெய்து பஞ்சம் தீரும் என்று அந்த பகுதி மக்கள் கூறினர். எனவே தான் கிடா வெட்டி சிறப்பு பூஜை நடத்து கிறோம் என்று அவர் கூறியுள் ளார். இப்படி ஒரு மூடநம்பிக்கை.

தமிழ் ஓவியா said...


புலிகளின் மனைவிகளுக்கு இலங்கை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமை!


கொழும்பு, மே 31- இலங்கையில் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளின் மனைவிகள் இலங்கை ராணுவத்தின ரால், பாலியல் வன் கொடுமைக்கு ஆளாவ தாக தெரிய வந்துள்ளது. இலங்கை திரிகோண மலை பகுதியில் வாழும் முன்னாள் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அவ்வப்போது விசா ரணை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தின ரால் கைது செய்யப் படுவது உண்டு, அத் தகைய சூழ்நிலைகளில் அவர்களை காவலில் அடைத்துவிட்டு அந்த குடும்பத்தின் பெண் களிடம் இலங்கை ராணுவத்தினர் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொள்வது தற் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியன்று இலங்கை யின் சுதந்திர தின கொண்டாட்டங்களை அடுத்து கட்டாய்-பாரிச்சான் ராணுவ முகாமில் இருந்து வந்த வீரர்களால், மூத்தூர் என்ற இடத்தில் இருந்து 16 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 15 பேர் திருமணமானவர்கள். சிலரின் மனைவிகள் முன்னாள் பெண் புலிகள். கணவன்மார் களை சிறையில் அடைத்து விட்டு, வீட்டில் தனியாக இருக்கும் அவர்களது மனைவிகளை இலங்கை ராணுவத்தினர் அத் துமீறி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றன ராம். இது குறித்து, மூத்தூர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த முன் னாள் பெண் புலியான கந்தபோடி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய ராணுவத்தினர் முயன்றதாக தெரிவித் துள்ளார். மேலும், தங் கள் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சிங்களர்களும் தமிழ் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக வும், இரு வாரங்களுக்கு முன்னர், கந்தபோடி தனது குடிசையில் தனி யாக இருந்தபோது நள் ளிரவில் குடிசைக்குள் நுழைந்த நபர் ராணுவ புலனாய்வு துறை அதி காரி என்று கூறிக் கொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக வும் கூறியுள்ளார்.