Search This Blog

22.8.09

கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ விமர்சிப்பதில்லையா?


திராவிடர் கழகம் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறதா? கிறித்து,இஸ்லாம் மதங்களை விமர்சிக்கவில்லையா?

சங்கராச்சாரிகள் தாழ்த்தப்பட்டவகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?

சங்கராச்சாரியார் பேச்சைகேட்டு துக்ளக் “சோ” ஆள்காட்டி வேலை பார்த்தது உண்மையா?

சங்கராச்சாரி வேண்டிக் கொண்டதால்தான் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு காய்ச்சல் வந்ததா?

இவ்வளவுக்கும் பிறகும் பெரியார் தொண்டர்களின் பெருந்தன்மை எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவும்,

இது போல் பல உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ள


("எதிரொலி" நாளேட்டில் அன்றாடம் சுயமரியாதைக் கருத்துக்களை கட்டுரைகளாக வடித்து வரும் சின்னக் குத்தூசி - ஞானி அவர்கள் - கஞ்சி சங்கராச்சாரியை நேரில் கண்ட கருத்தாழ மிக்க பேட்டி)

1983 ஆம் ஆண்டு உண்மை நாடுவோர் வெளியிட்டுள்ள சங்கராச்சரியாரின் முகத்திரையை கிழித்தெறிந்த “சின்ன சங்கராச்சாரி –யார் ?” என்ற நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு பதிவு செய்யப் படுகிறது. நமது வாசகர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிய வேண்டுகிறோம் -

நன்றி


*************************************************************************************
சின்ன சங்கராச்சாரி - யார்?


பகுதி - 1

"ஆச்சார்ய ஸ்வாமிகள் உங்களைப் பார்க்க விரும்புகிறார்" என்றார் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராசன். நமக்கு அதிசயமாக இருந்தது.

கெல்லீசில் உள்ள கார்பொரேஷன் பாங்க் கிளையின் நிர்வாகி சீனிவாசன் ஒருநாள் பிற்பகல் வந்தார். அவருடன் நாமும் பரீக்ஷா நாடகக் குழுவின்அமைப்பாளர் ஞாநியும் ஸ்வாமிகளை சந்திக்கப் புறப்பட்டோம்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவல்லிக்கேணியில் வசந்த மண்டபத்தில் தங்கி இருந்தார்கள். வசந்த மண்டபத்தின் வாயிலில்நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமிகளை தரிசனம் செய்யக் காத்திருந்தார்கள்.

கார்ப்பொரேஷன் பாங்க் சீனிவாசன் எங்கள் வருகையை ஸ்வாமிகளுக்கு ஒரு ஊழியர் மூலம் சொல்லி அனுப்பினார். உடனடியாக நாங்கள் சுவாமிகள்தங்கியிருந்த கட்டிடத்திற்குச் சென்றோம். சிலபடிகள் ஏறியவுடன் ஒரு சிறிய ஹால் இருந்தது. அந்த அறையின் தரை பாயோ சமுக்காளமோவிரிக்கப்படாமல் வெறுமையாக இருந்தது. அந்த அறையில் நாங்கள் காத்திருந்தோம்.

இரண்டொரு நிமிடங்களே ஆகியிருக்கும்; ஸ்வாமிகள் உள்ளே வந்தார். நாங்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தோம். ஸ்வாமிகள் எங்கள் அருகில் வந்துஅமர்ந்தார். ஒரு ஊழியர் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வெளியே போய்விட்டார். அறையில் நாங்கள் மூவரும் ஸ்வாமிகளும் மட்டுமேஇருந்தோம்.

"என்ன இதெல்லாம்" என்றார்.

"இதுவரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பகுத்தறிவுப் பிரச்சார நூல்களும் பெரியார் எழுதிய நூல்களும் இதில் இருக்கின்றன"என்றோம்.

"இதெல்லாம் எதற்காக?" என்றார் ஸ்வாமிகள்.

"சமீப காலமாகத் தாங்கள் பேசி வருவதை எல்லாம் நாம் படித்து வருகிறோம். சுயமரியாதை இயக்கம் சம்பந்தமாகத் தாங்கள் ஒரு தவறானமனோபாவத்தை வளர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக எமக்குத் தோன்றுகிறது. ஸ்வாமிகள் இந்த நூல்களை எல்லாம் படித்தால் உண்மை தெரியும்"என்றோம்.


ஸ்வாமிகள் வாய்விட்டுச் சிரித்தார்.

பின்னர்,

"நான் தினசரி வேறு எந்தப் பத்திரிகை படித்தாலும் படிக்காவிட்டாலும் 'விடுதலை' பத்திரிகையை மட்டும் படிக்காமல் இருப்பதில்லை" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு,

"என்ன உங்கள் கட்சியின் வேலை? ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசவேண்டியது இதுதானே..." என்றார்.

சின்னக்குத்தூசி: "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தனிப்பட்ட முறையில் எவரையும் தாக்கிப் பேசுவது பகுத்தறிவு இயக்கத்தவரின் வழக்கமல்ல"

ஸ்வாமிகள்: "ஏன் இல்லை? எல்லா இடங்களிலும் நான் போகும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தினர் கலாட்டா செய்கிறார்கள்; கறுப்புக்கொடிகாட்டுகிறார்கள். என்னை எதிர்த்து ஆபாசமான வார்த்தைகள் கூறி திட்டுகிறார்கள்."

சி.கு.: "தங்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் எந்த திராவிடர் கழகத்தவரும் தாக்கிப் பேசி இருக்க மாட்டார்கள். தாங்கள் ஒரு அமைப்பின் வர்ணாஸ்ரம தர்மத்தின் பிரதிநிதியாக இருப்பதால் தங்கள் வருகைக்கும் தங்களது பேச்சுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களே தவிர,தனிப்பட்ட முறையில் இருக்காது."

ஸ்வாமிகள்: "திருவான்மியூரில் ஒருவர் எதையோ என்மீது விட்டெறிந்தார். பல இடங்களில் அராஜகம் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். சுவர்களைப் போய்ப்பாருங்கள். எப்படி எல்லாம் ஆபாசமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்."

சி.கு.: "தாங்கள் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. எங்காவது ஓரிரண்டு இடங்களில் வன்முறைப் போக்கு தலைதூக்கி இருக்கலாம். ஆனால்,அதையெல்லாம் வைத்துக்கொண்டு, "எல்லாமும் வன்முறைதான்" என்று முடிவுகட்டக் கூடாது. வன்முறை எங்காவது தலைதூக்குவது என்பது எல்லாஇயக்கங்களுக்கும் பொதுவானதுதான். காந்திஜி நடத்திய அகிம்சைப் போராட்டத்திலேகூட அவ்வப்போது வன்முறைகள் தலைதூக்கி இருக்கின்றன.சவுரிசவுரா போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தியது போன்ற வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதை வைத்துக் கொண்டு காந்திஜியின் இயக்கமே வன்முறைஇயக்கம்தான் என்று முடிவுகட்டிவிட முடியுமா?"


நான் இன்னொரு விஷயத்தையும் ஸ்வாமிகளுக்கு ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் கடந்த அய்ம்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த அய்ம்பது வருட காலத்தில் எத்தனை வன்முறைச்சம்பவங்கள் நடந்துவிட்டன என்று ஸ்வாமிகளால் பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா? என்னால் முடியும்! பட்டுக்கோட்டை டேவிஸ் என்பவர் ஒருபிராமணரின் பூணூலை அறுத்திருக்கிறார். தூத்துக்குடி புது கிராமம் அக்கிரகாரத்திலே தி.மு.க போராட்டத்தின்போது வன்முறை நடந்ததாகக் கூறப்பட்டது.தஞ்சாவூரிலே, மன்னார்குடியிலே, கோவைக்கருகிலே சமீப காலத்தில் வன்முறை நடந்ததாகச் செய்தி வெளிவந்தது.

அய்ம்பது வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ஒரு இயக்கத்திலே இப்படிப்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சம்பவங்கள் நடந்தது ஒன்றும் பெரியவிஷயமல்ல. திராவிடர் கழகக்காரர்களால் பெரியார் தொண்டர்களால் இதுவரையிலும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டதாகவோ, எந்தஉயிருக்கும் ஆபத்து ஏற்பட்டதாகவோ வரலாறு கிடையாது.


ஆனால், தங்களைப் போன்றவர்கள் இந்துமத எழுச்சி, இந்துமத ஒற்றுமை என்ற பேரால் சமீப வருடங்களில் செய்துவரும் பிரச்சாரத்திற்குப் பிறகுஎத்தனை கலவரங்கள் நடந்து இருக்கின்றன? எத்தனை உயிர்ச் சேதங்கள், எத்தனை பொருட்சேதங்கள். மீனாட்சிபுரம், ராமநாதபுரம், மண்டைக்காடு,புத்தநத்தம், புளியங்குடி என்று எத்தனை எத்தனை வன்முறைச் சம்பவங்கள் துப்பாக்கிச் சூடுகள் நடந்துவிட்டன.

இந்துமத ஒற்றுமையின் பேரால் நடந்த இதுபோன்ற வன்முறைகள் கலவரங்கள் மத எதிர்ப்பு இயக்கமான திராவிடர் கழகத்தினரால் ஒருபோதும்நடந்ததில்லை.."

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாமிகள் இடையில் குறுக்கிட்டு,

"பிராமணர்களைப் பற்றி சுவற்றில் எழுதுகிறார்களே, அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே" என்று கேட்டார்.

நண்பர் ஞாநி சொன்னார்:

"எங்களுடன் மைலாப்பூருக்கு வாருங்கள். உங்களை வரவேற்பவர்கள் எப்படியெல்லாம் சுவர்களில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றுகாட்டுகிறோம்.

'வீரமணியின் மனைவியை பொதுவுடைமை ஆக்குவோம்' என்றுகூட எழுதி வைத்திருக்கிறார்கள்."

ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானேஇருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே" என்றார்.

சி.கு.: "ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்."

ஸ்வாமிகள்: "இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம்சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.

'சோ'வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்."

சி.கு.: "தாங்கள் அப்படிக் கருதுவது தவறு இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவமதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.

மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.

எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்துஎன்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே;இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.

கிறிஸ்துவர்கள் முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும்ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்துமுற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள்வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின்பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்."


-------------------நூல்:- சின்ன சங்கராச்சாரி-யார்? பக்கம்:-3-8

2 comments:

கபிலன் said...

நல்ல கற்பனை!

தமிழ் ஓவியா said...

உண்மையைச் சொன்னால் உங்களுக்கு கற்பனையாத்தான் தெரியும்.

கற்பனையாக இரூப்பது உங்களுக்கு உண்மையாகத் தெரியும்.

என்ன செய்வது பக்திப் போதையில் அல்லவா நீங்கள் இருக்கிறீர்கள்.
போதையில் இருந்து மீண்டால் உண்மை தெளிவாக புரியும்.