Search This Blog
24.8.09
காந்தியாரிடம் பெரியார் கேள்விகள்???
1924- காந்தியாருக்கும், தந்தை பெரியாருக்குமிடையே நடந்த உரையாடல்
காந்தியார்: சந்தானம் ஏன் ராஜினாமா செய்தார்?
ஈ.வெ.ரா: கதர் போர்டின் காரியதரிசி என்ற முறையில் அவர் கதர் போர்டின் உத்தியோகங்களை யெல்லாம் பார்ப்பனர்களுக்கே கொடுத்து வந்தார். நான் அதன் தலைவன் என்ற முறையில் அப்படிச் செய்வது நீதியல்ல என்றேன். அது திருப்தியின்றி அவர் விலகுகிறார்.
காந்தியார்: இது நம்ம சி.ஆர்.க்குத் தெரியாதா?
ஈ.வெ.ரா: இந்த விஷயத்தில் அவர்கள் எல்லோரும் (பிராமணர்கள் எல்லோரும்) ஒன்றுதான்.
காந்தியார்: அப்படியானால் உங்களுக்கு சி.ஆர். மீது கூட நம்பிக்கை இல்லையா?
ஈ.வெ.ரா.: ஆம், பார்ப்பனர்களுக்கு அவரிடம் உள்ள அளவு நம்பிக்கை எனக்கு இல்லை.
காந்தியார்:அப்படியானால் பார்ப்பனரிடத்திலேயே உமக்கு நம்பிக்கையில்லையா?
ஈ.வெ.ரா: இந்த விஷயத்தில் நம்பிக்கையே உண்டாவதில்லையே?
காந்தியார்:அப்படியானால் உலகத்திலேயே நல்ல பார்ப்பனர் இல்லை என்பதுதான் உமது கருத்தா?
ஈ.வெ.ரா: யாரும் என் கண்ணுக்குத் தென்படவில்லையே, நான் என்ன செய்யட்டும்?
காந்தியார்: அப்படிச் சொல்லாதீர்கள். நான் ஒரு நல்ல பார்ப்பனரைக் கண்டிருக்கிறேன்.
ஈ.வெ.ரா: நல்ல பார்ப்பனரா! யார் அவர் . . .
காந்தியார்: கோபால கிருஷ்ண கோகலே. யாராவது அவரைப் பிராமணர் என்று கூப்பிட்டாலும், பிராமணர் என்பதற்காக மரியாதை செய்தாலும்கூட ஆட்சேபிப்பார். மிகவும் நல்லவர்.
ஈ.வெ.ரா.: மகாத்மா கண்ணுக்கே ஒரே ஒரு யோக்கியமான பிராமணர் தென்பட்டிருக்கும்போது என் போன்ற சாமானியர்கள் கண்ணுக்கு யோக்கியமான பிராமணர்கள் எப்படித் தென்பட முடியும்?
காந்தியார்: (வேடிக்கையாக சிரித்துவிட்டு) அதிருக்கட்டும்; சந்தானம் காரியதரிசி வேலை பார்ப்பதில் உமக்கு ஆட்சேபனை உண்டா?
ஈ.வெ.ரா. : நன்றாகப் பார்க்கட்டும். ஆட்சேபனையே கிடையாது. ஆனால் பிராமணர் அல்லாதார்க்கு 100 க்கு 50 பங்காவது தரவேண்டும்.
சங்கர்லால் பாங்கர்: (உரையாடலின்போது கூட இருந்தவர்) நூற்றுக்கு 50 போதுமா! அது கூடவா தரவில்லை?
ஈ.வெ.ரா.: ஆம்.
பாங்கர்: இது என்ன அதிசயம்! நூற்றுக்கு 50 போதும் என்கிறாரே!
காந்தியார்: நான் ஒரு போதும் சம்மதியேன். நூற்றுக்கு 90 கொடுக்க-வேண்டும்.
ஈ.வெ.ரா.: நூற்றுக்கு 50 கொடுக்க ஒவ்வாதவர்கள் நூற்றுக்கு 90 கொடுப்பது எப்படி?
காந்தியார்: (சந்தானத்தைப் பார்த்து) பார்ப்பனர் அல்லாதார்க்கு உத்தியோகம் கொடுக்க உமக்கு ஆட்சேபனை இல்லையே?
சந்தானம்: (மிகத் தந்திரமாக) இல்லை. ஆனால் அவர்கள் யாரும் வருவதில்லையே!
காந்தியார்: என்ன நாய்க்கர்ஜீ! யாரும் வருவதில்லை என்கிறாரே!
ஈ.வெ.ரா.: அது சரியல்ல. வேலை கொடுக்க வேண்டும் முதலில். பிறகு மரியாதையாய் நடத்த வேண்டும். அப்பொழுது வேண்டிய பேர் வருவர்.
காந்தியார்: அப்படியானால் இனி உத்தியோக நியமனத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
சி.ஆர்.: (சி. இராசகோபாலாச்சாரியார், தற்போதைய வங்காள கவர்னர்): அது முடியாது. யார் வேலை வாங்குகிறார்களோ அவர்கள்தான் வேலைக்காரரை நியமிக்க வேண்டும்.
காந்தியார்: (சிரித்துக் கொண்டே) நாய்க்கர் சொல்வதில் உண்மை இருக்கும் போல்தான் தோன்றுகிறது. நான் காங்கிரஸ் பிரசிடென்ட். ஜவகர்லால் காரியதரிசி. நான் நியமித்த ஆளைக் கொண்டு ஜவகர்லால் வேலை வாங்க முடியாதா?
சி.ஆர்: வகுப்புப் பிரிவினை மட்டும் போதுமா? வேலை நடக்க வேண்டாமா? தகுதியையும் திறமையையும் பார்க்க வேண்டாமா?
காந்தியார்: நாய்க்கர்ஜீ அதையும் பார்த்துக் கொள்வார். அப்படி, பார்ப்பனல்லாதாரை நியமிப்பதன் மூலம் கொஞ்சம் வேலை கெட்டுப் போனாலும் பாதகமில்லை. இரண்டு காரியங்களும் நடக்க வேண்டும். கதர் விஷயம் எப்படி முக்கியமோ, அப்படி வகுப்பு அதிருப்தி நீங்க வேண்டியதும் முக்கியமே. உத்தியோக நியமனம் நாய்க்கர் கையிலேயே இருக்கட்டும்.
காந்தியார், ஆச்சாரியார், சங்கர்லால் பாங்கர், சந்தானம், பெரியார் ஆகிய அய்வர் 1924இல் பெல்காம் காங்கிரசின்போது தனியே இருந்து பேசிய உரையாடல் இது; கற்பனை அல்ல.
அன்று தமிழ்நாடு கதர் போர்டிற்குத் தலைவர் சிறீமான் இராமசாமி நாயக்கர் (தமிழ்நாடு பெரியாரை அன்று அழைத்த விதம் இது). அதன் செயலாளர் சந்தானம் என்ற ஓர் ஆரியர். கதர் வளரவேண்டும் என்பதற்கத் தமிழ்நாடு முழுவதும் பம்பரம் போல் சுழன்று சுழன்று பெரும்பணியாற்றி வந்தார் பெரியார். கதர் மூட்டைகள் தோளில்; கைராட்டை கையில்; வேற்று நாட்டு ஆடைகளை வெறுத்தொதுக்க வேண்டு-மென்னும் தீவிரப் பிரசாரம்பேச்சில்; எந்நேரமும் கதர் வளர்ச்சியைப் பற்றிய ஓயாத சிந்தனை உள்ளத்தில்; எந்தெந்த ஜில்லாவில், கதர் சப்ளை போதாது, எங்கெங்கே பிரச்சாரம் குறைவு, எந்த வட்டாரத்தில் கதர்பக்தி கொஞ்சம், கதரைத் தீவிரமாகப் பரப்புதற்கு என்ன வழிஎன்பன போன்ற பிரச்சினைகளிலேயே நினைப்பு நாள் முழுவதும் - இப்படிப்பட்டவர்தான் பெரியார் இராமசாமி 1924 இல்!
கதர் ஒரு மூட நம்பிக்கை என்று பிரச்சாரம் செய்தார் பெரியார்; விஞ்ஞான காலத்தில் காட்டு மிராண்டிக் கதர் ஏன் என்று அஞ்சாது கேட்டார்; மக்கள் முன்னேற்றத்திற்கு அதுமுட்டுக் கட்டை என்று அழுத்தந்திருத்தமாக கூறினார். ஆனால் இது 1927 இல்.
கதர் ஓங்கவேண்டும் என்பதற்காகத் தென்னாட்டில் மகத்தான பணி புரிந்து வந்தார் பெரியார் 1925 வரை.
அந்தக் காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிதான் மேலே குறிப்பிட்டுள்ள உரையாடல்.
--------------------- நன்றி:-"போர்வாள்", 6.12.1947
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment