Search This Blog

26.8.09

சுருட்டு, பிராந்தி,கஞ்சா குடிக்கும் பெண் சாமியாரிணி சுதா கைதானது எப்படி?

திருவண்ணாமலை சாமியார்களும்,
போதை சாமியாரிணி கைதும் -
பொதுமக்களின் கேள்வியும்!


நம்நாட்டில்- அதுவும் தமிழ்நாட்டில் சாமியார்களுக்குப் பஞ்சமேயில்லை!

ஏறத்தாழ 80, 90 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டம் திருச்சுழி என்ற கிராமத்திலிருந்து வீட்டை விட்டு ஓடிவந்தான் ஒரு சிறுவன். பார்ப்பன ஜாதியைச் சேர்ந்த அவன் பெயர் வேங்கட ரமணன். ஆப் டிராயர் அணிந்த சிறுவன் திருவண்ணாமலைக்கு வந்து அங்கிருந்த ஒரு மலைக் குகையில் அமர்ந்து கொண்டான். அவன் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டான். ஆரம்பத்தில் அவனை ஆதரிப்பாரற்ற அனாதைச் சிறுவனாகப் பார்த்த திருவண்ணாமலை பக்தகோடிகள் நாளாக நாளாக அவனை பகவானின் மறு அவதாரமாகப் பார்த்து வழிபடவும் வணங்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

வேங்கட ரமணனாக ஓடி வந்த அந்த சிறுவன் ஆண்டுகள் செல்லச் செல்ல ரமணன் ஆகி, பின்னர் ரமண மகரிஷியாகி, பிற்காலத்தில் பகவான் ரமண ரிஷியாகிவிட்டார்!


பகவான் ரமணரை தரிசிக்காத பெரிய மனிதர்களே இல்லை எனலாம்.

உதாரணமாக_

1940 களில் சென்னை மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள். அவர் சிறந்த மனிதாபிமானி. தந்தை பெரியாரின் கொள்கைகளை அரசு மூலம் நடத்துகிறார் என்று அக்கிரகாரத்தாரின் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆளானவர்.

கோட்டைக்கு வெளியே கறுப்புச் சட்டை ராமசாமி, கோட்டைக்கு உள்ளே கதர்ச்சட்டை ராமசாமி - கோட்டைக்கு வெளியே தாடி வைத்த ராமசாமி, கோட்டைக்கு உள்ளே தாடி வைக்காத ராமசாமி என்று பார்ப்பன ஏடுகளால் துவேஷிக்கப்பட்ட ஒரு நல்ல மனிதரவர். அவர் பார்ப்பனத் துவேஷி என்று தலையங்கம் எழுதிய இந்து ஏடு -அவரை பார்ப்பனத் துவேஷி என்று குற்றஞ்சாட்டி அன்றைய பிரதமர் நேருவுக்கே புகார்க் கடிதம் எழுதியது!


அப்பேர்ப்பட்ட ஓமந்தூரார் அவர்கள் பகவான் ரமணரின் பரமபக்தர். ரமணரின் ஆலோசனையையும் ஆசியையும் பெறாமல் எந்த முக்கிய முடிவையும் எடுக்க மாட்டார்.

அவரை ஆந்திரகேசரி டி.பிரகாசத்துக்கு பதிலாக புதிய முதலமைச்சராக காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.

அப்போது ஓமந்தூரார் என்ன சொன்னார் தெரியுமா?

நான் நாளையே திருவண்ணாமலை செல்வேன்; பகவான் ரமணரை சந்திப்பேன். அவரிடம் முதல்வர் பதவியை ஏற்கலாமா? கூடாதா? என்று கேட்பேன்! பதவியை ஏற்கலாம் என்று ரமண பகவான் ஆசி வழங்கினால் மட்டுமே முதல்வர் பதவியை ஏற்பேன். இல்லாவிடில் நீங்கள் எனக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வர் பதவிக்குத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்! என்று சொன்னார். சொன்னபடியே திருவண்ணாமலை சென்றார், பகவானின் ஆசி கிடைத்தது; முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

அந்த அளவுக்கு பகவான் ரமண பக்தி எல்லோரையும் ஆட்டிப் படைத்தது.

காலப்போக்கில் பார்ப்பனர்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், கோவில் பிரச்சாரங்கள் மூலம் பகவானின் மகாத்மியம் குறித்து எழுதியவை உலகின் பல்வேறு நாடுகளிலும் ரமண பகவானுக்குப் பக்தர்களை ஏராளமான அளவில் உருவாக்கித் தந்து விட்டன! அதே சமயம் -

பகவான் ரமணரும் பக்த கோடிகள் வழங்கிய காணிக்கைகள் மூலம் கோடீசுவரராக உயர்ந்து விட்டார். பகவானிடம் பணம் சேரச் சேர அவரது தாயார், தம்பி எல்லாம் ரமணரின் ஆசிரமத்துக்கு வந்து விட்டார்கள்!

ஒரு கட்டத்தில் முற்றும் துறந்த முனிவரான பகவான் ரமணரிஷிக்கு கோடிக்கணக்கில் தன்னிடம் குவிந்த சொத்துக்களை யாருக்கு வழங்குவது என்ற கவலை பிறந்துவிட்டது.

அனாதைச் சிறுவனாக ஆதரிப்பார் யாருமின்றி, ஆப் டிராயர் சிறுவனாக மலைக்குகையில் அடைக்கலம் புகுந்த தன்னை கோடீசுவரனாக்கிய மக்களுக்கே எழுதி வைக்க வேண்டும் என்று தோன்றவில்லை பகவானுக்கு!

ஊரார், உலகத்தார் கொட்டிக் கொடுத்த கோடி கோடி ரூபாய் சொத்துக்களை எல்லாம் பகவான் ரமணர் தனது தம்பி வாசுதேவன் பெயருக்கே உயில் எழுதி வைத்தார்.


இந்தச் செய்தி வெளிவந்தபோது திருவண்ணாமலை மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பகவான் - பொதுச் சொத்தை_ குடும்பச் சொத்தாக ஆக்கி தம்பிக்கு உயில் எழுதி வைத்ததை எதிர்த்து ஒரு வழக்கு போடப்பட்டது.

அந்த வழக்கினையொட்டி_ பகவான் ரமணர் ஒரு வாக்கு மூலம் கொடுத்தார். அது என்ன?

நான் சன்னியாசம் வாங்க வில்லை. அதனால் நான் சன்னியாசி அல்ல! நான் குடும்பஸ்தன்தான்! நான் எனது சொத்துக்களை உயில் எழுதியது எவ்விதத்திலும் தவறல்ல என்பதே அந்த வாக்குமூலம்!

இதையெல்லாம் மறைத்துவிட்டு பார்ப்பனர்களும் பார்ப்பன ஏடுகளும் கதாகாலட்சேபத்துக்காரர்களும் இன்னமும் ரமணரின் மகாத்மியங்கள் பற்றி பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டேதான் இருக்கிறார்கள்; மணிக்கணக்கில் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.


அது ஒரு புறமிருக்க - அனாதைச் சிறுவனாக வந்த ஒருவர் திருவண்ணாமலையில் பகவானாகி - கோடீஸ்வரராகவும் ஆகிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்ட ஒரு டஜன் சாமியார்களுக்கும் மேல் திருவண்ணாமலைக்கு வந்து குடியேறி, குட்டிகுட்டி மகான்களாக மாறிவிட்டார்கள். இந்த சாமியார்களில் பெரும்பாலானவர்கள், திருமணமாகி - குழந்தை குட்டிகள் பெற்று குடும்பத்தைக் காப்பாற்ற வக்கின்றி - குடும்பத்தாரை அம்போ என்று விட்டு விட்டு பிழைப்பு தேடி திருவண்ணாமலை வந்து, இந்து மதத்தின் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் மாறிவிட்டார்கள்.

இந்த திடீர்ச் சாமியார்கள் - திடீர் மகான்கள், திடீர் சுவாமிகள் ஆகியோரின் பூர்வாசிரமம் (அதாவது சாமியார் ஆவதற்கு முந்தைய அவர்களது வாழ்க்கை நிலவரம்) குறித்து பரணிதரன் ஆனந்தவிகடன் வார இதழில் அருணாசல மகிமை என்ற தலைப்பில் பக்தி ரசம் நனி சொட்ட சொட்ட படு சுவாரசியமாக கட்டுரை தொடர் எழுதினார்.

அது இரண்டு பாகங்கள் கொண்ட தொகுப்பு நூலாகவும் வெளிவந்து பரபரப்பாக விற்பனை ஆனது. பரணிதரனின் கட்டுரையால் - பக்தி மார்க்கமும் வளர்ந்தது. அதே சமயம், திருவண்ணாமலை சென்றால் - சாமியார் என்ற பேரால் பிழைப்புக்குப் பெரும் பலம் ஏற்படும், உட்கார்ந்த இடத்தில் பணத்தைக் குவிக்கலாம் என்ற நம்பிக்கையும் பலருக்கு உதயமானது.

அதன் விளைவாக, திருவண்ணா மலையின் கிரிவலப் பாதையில் தடுக்கி விழுந்தால் அது ஒரு சாமியாரின் ஆஸ்ரமமாகவோ மடமாகவோதான் இருக்கும் என்கிற அளவுக்கு, சாமி யார்கள் மயமாகி விட்டது கிரிவலப் பாதை!

திருவண்ணாமலை சாமியார்களின் செல்வச் செழிப்பைக் கண்ட, கேள்விப்பட்ட பலரும் - மாவட்டம் தோறும், பீடிச்சாமியார், எச்சில் துப்பும் சாமியார், அடித்துத் தாக்கும் சாமியார், தகாத வார்த்தைகளால் திட்டும் சாமியார், என்று பல்கிப் பெருகிவிட்டார்கள்.


கேட்க ஆங்காங்கும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது! இப்படிப்பட்ட சாமியார்களின் சக்தியில் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் போன்றோரும் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதால், சாமான்ய மக்களும் இந்த சாமியார்களிடம் சர்வ சக்தியிருப்பதாக நம்பி கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள். சாமியார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகுகிறது.

இந்த நிலையில்தான் கிரிவலப் பாதையில் கொல்லிமலைச் சாமியார் ஆஸ்திரமத்தில் துரை என்ற ஓய்வு பெற்ற சாலை அதிகாரி சிறீ கருப்பசாமி சிறீ சக்தி காளி கோயிலை அமைத்தார். அவரது மகள் சுதா என்பவர் பக்தர்களுக்குக் குறி சொல்ல ஆரம்பித்தார். எப்படி?

தண்ணி அடிப்பார் அந்தப் பெண் சாமியார் - சிகரெட்டோ, சுருட்டோ வாயில் புகைத்துக் கொண்டே இருப்பார், கஞ்சாவும் அடிப்பார்.

அவர் மீது கருப்பணசாமி வந்து ஆவாஹனம் ஆவார். அப்போது அவர் கருப்பணசாமியாகவே ஆகி ஆரூடம் சொல்வார். அந்த ஆரூடம் பலிக்கும் என்பது அவரை நாடிவரும் பக்தர்களின் நம்பிக்கை!

இப்படி அவர் ஆரூடம் சொல்வதற்கு அவர் கட்டணம் வசூலிக்காமல் இருப்பாரா? அப்புறம் அவர் என்ன சாமியார்?

சாமியாருக்கு செலுத்த வேண்டிய காணிக்கை என்ன தெரியுமா? பீர், பிராந்தி பாட்டில்கள், சிக்கன் பிரியாணி, ஆயிரக்கணக்கில் பணம்! இந்த லேட்டஸ்ட் பெண் சாமியாரைப் பற்றி பல்வேறு ஏடுகளும் பரபரப்பாக புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டன!

அண்ணாமலை என்ற பக்தர் சாமியாரிடம் வந்து நான் பாசனத்திற்கு ஒரு கிணறு தோண்ட இடம் பார்த்திருக்கிறேன். அந்த இடத்தில் தோண்டினால் தண்ணீர் வருமா? என்று ஆரூடம் கேட்டார். ஆரூடம் சொல்ல அன்புக் காணிக்கையாக ரூபாய் அய்யாயிரத்தையும் தந்தார்.

சாமியாரிணி, அதே இடத்தில் தோண்டு, அபாரமாகத் தண்ணீர் வரும் என்று சொன்னார். இந்த ஆரூடத்தை நம்பி அண்ணாமலை கிணறு தோண்டினார் - 50 ஆயிரம் ரூபாய் செலவிட்டு. அவர் தோண்டிய கிணற்றில் எத்தனை அடிகள் தோண்டிய பிறகும் தண்ணீர் மருந்துக்கும் கண்ணில் தென்படவில்லை. அவருக்குக் கிடைத்தது கல்தான்.

நொந்து போன அவர் ஆசிரமத்துக்கு வந்து முறையிட்டார். சாமியாரிணியின் தகப்பன் அவரைத் தெருவரையில் அடித்து விரட்டிவிட்டார்.


வேறு வழியின்றி காவல் நிலையம் சென்று அண்ணாமலை புகார் கொடுத்தார்.

இதற்கிடையில், திருவண்ணாமலை சென்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ரமணர் காலத்திலிருந்து கிரிவலப் பாதையில் சாமியார்கள் ஆரூடம், குறி என்ற பேரால் நடத்தி வரும் மோசடிகளையும்,

இப்போது முளைத்துள்ள பெண் சாமியாரின் ஏமாற்று வேலைகளையும் பட்டியலிட்டுக் காட்டி, இவர்கள் மீது 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்று பிரகடனம் செய்தார்.

மறுநாளே சாமியாரிணியும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு விட்டார்கள்!


இதுகுறித்து இன்றைய (25.8.2009) இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தி விமர்சனக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதிலே இறுதிப் பகுதியில் சுதா சாமியாரை மட்டும் கைது செய்தால் போதுமா? திருவண்ணா மலை முழுவதும் அவரைப் போல் எத்தனை எத்தனை சாமியார்கள் - எதிர்காலம்பற்றி ஆரூடம் கூறுவதாக மக்களை ஏமாற்றிப் பணம் பறித்துக் கொண்டிருக்கிறார்கள்? என்று திருவண்ணாமலை மக்கள் கேட்கிறார்கள் என்று எழுதியிருக்கிறது அது!

நன்றி:- சின்னக்குத்தூசி அவர்கள் அவர்கள் 26.8.2009 "முரசொலி" யில் எழுதிய கட்டுரை

0 comments: