Search This Blog

20.8.09

மூத்ரத்தை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பானம்




கோமூத்ர தேசம் பஞ்ச கவ்யம் தெரியும்.

மாட்டின் மலம், மூத்ரம், பால், தயிர், நெய் ஆகியவற்றின் கலவை. இந்துமதச் சடங்குகளில் வழங்கப்படும் தெய்வீகப் பிரசாதம். நக்கிக் குடித்துவிட்டு மீதியைத் தலையில் தடவிக் கொள்வார்கள். கொஞ்சங்கூட வீணாகக்கூடாது என்கிற உணர்வு.

இப்போது வந்திருப்பது சப்த கவ்யம். ஏழும் ஒன்றாகச் சேர்ந்த திவ்ய பானம். மாட்டுச் சாணமும், மூத்ரமும்தான் பிரதான கலவை. கான்பூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. கான்பூர் கோசாலா சங்கம் தயாரிக்கிறது. இச்சங்கம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தொடர்பு உடைய சங்கம். சென்ற ஆண்டில் மட்டும் 2 கோடி ரூபாய்க்குத் தன் தயாரிப்புகளை விற்றுள்ளது.

கொசுவிரட்டி, சவரத்திற்குப் பின் முகத்தில் தடவிக் கொள்ளும் லோஷன், பினாயில் போன்ற பலவும் உற்பத்தியாகின்றன. மூலப் பொருள்கள் மாட்டுச் சாணமும், மூத்ரமும்தான் என்கிறார்கள். ஆனால், கொசு விரட்டியில் எல்லாரையும் போல, சிட்ரநெல்லா எண்ணெய்யில்தான் தயார் செய்கிறார்கள். பசு பேரில் பித்தலாட்டம்.

மோசமான சங்கதி என்னவென்றால், குடிக்கும் பானம் ஒன்றும் சாணத்திலிருந்தும், மூத்ரத்திலிருந்தும் தயாரிக்கிறார்கள்.

கோலோகா பேவ் என்பது இந்த ஆண்டு புதிதாகத் தயாரித்துள்ள பானத்திற்கான பிழிவுச் சாறு (கான்சன்ட்ரேட்). மூத்ரத்தைப் பெருமளவிலான மூலப் பொருளாகக் கொண்டு தயாரிப்பதோடு, துளசி, பிரம்மி, சங்குப்புஷ்பம் ஆகியவற்றையும் கலந்து தயாரிக்கி-றார்கள். ஆரஞ்சு, எலுமிச்சை ருசிகளில் கிடைக்கிறது. அரை லிட்டர் பாட்டில்களில் அடைத்து விற்கிறார்கள்.


சாணம், மூத்ரம் ஆகிய மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் மாடுகள் 1500 வளர்க்கிறார்கள். இவற்றிலும் ஜாதி உண்டு. பார்ப்பனர் போல, மாதா என்று அழைக்கப்படும் உள்ளூர்ப் பசுக்கள். ஜெர்சி, ஹோல்ஸ்டின் ஆகிய மேலைநாட்டு இனப் பசுக்கள் சத்திரியர் போல! இவற்றிற்கு மவுசி எனப் பெயர். எருமைகள் சூத்ர ஜாதி.

நம் ஊரில் மதன்மித்ர, சிட்டுக்குருவி லேகியங்களுக்கு டஜன் கணக்கில் நற்சான்றுப் பத்திரங்களை நாட்டு வைத்தியர்கள் காட்டுவார்கள். இந்த மாட்டு மூத்ர பானம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டோஷ்னிவால். இதுபோன்ற பல சான்றிதழ்களை வைத்துக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் இதன் ஸ்பெஷல் தயாரிப்பான, கோமூத்ர கோலோகா பேவ் பானத்தை இவர் குடிக்கமாட்டேன் என்கிறார். என்ன பயமோ? அருவருப்போ? அசிங்கத்தை நாமே ஏன் குடிக்கவேண்டும் என்ற எண்ணமோ?

ஆனால், கேள்வி கேட்டால், நான் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை சங்கத்தின் தயாரிப்பைச் சாப்பிடமாட்டேன் என்கிறாராம்! காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடலாம் அல்லவா? என்ன தளுக்காக ஏமாற்றுகிறார் பாருங்கள்!

கண்ட கசுமாலத்தையும் மற்றவர் தலையில் கட்டிக் காசு பார்க்கும் இந்து மதவெறிக் கூட்டத்தின் சங்கத்திற்கு ஆர்.எஸ்.எஸ். _ பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான பல்பீர் புஞ்ச் என்பவர் தமது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 10 லட்சம் கொடுத்திருக்கிறார்? எப்படி? இது என்ன வளர்ச்சியைச் செய்யப் போகிறது? நாடாளுமன்றத் தலைவர்தான் கேட்கவேண்டும்!

ஆனால், விலங்குகளின் கழிவுப் பொருள்களைக் கூடப் புனிதம் எனக் கூறி பிசினஸ் செய்பவர்களை மக்கள்தான் கேட்கவேண்டும். பாம்பாட்டிகள் நாடு என்பது மாறி கோமூத்ர நாடு என நாம கரணம் செய்யப் போகிறார்கள், வெளிநாட்டினர்!

-------------------------"விடுதலை" 12-8-2009

0 comments: