Search This Blog
17.8.09
உலக நாடுகள் -தூரப்பார்வை -வனுவாட்டு - வாடிகன் நகரம்
வனுவாட்டு
இத்தீவுகள் 1606இல் போர்த்துகீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1774இல் பிரிட்டிஷ்காரரான ஜேம்ஸ் குக் இந்தத் தீவுக் கூட்டங்களை ஆய்வு செய்து பெயர் சூட்டினார். நியூ ஹெப்ரைட்கள் எனும் பெயரைத் தீவுக் கூட்டத்திற்கு வைத்தார். 1906 முதல் பிரிட்டனும் பிரான்சும் கூட்டாக ஆண்டன. இரண்டாம் உலகப் போரின் போது போர்த்தளமாக இத்தீவுகள் பெருமளவில் பயன்பட்டன. நேசநாடுகள் பயன்படுத்திக் கொண்டன. 1980இல் விடுதலை அளிக்கப்பட்டது. வனுவாட்டு எனப் புதுப் பெயர் இட்டுக் கொண்டனர்.
ஓசியானியா பகுதியில், தென் பசிபிக் கடலில் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பகுதிக்கு வட கிழக்கே அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு 12 ஆயிரத்து 200 சதுர கி.மீ. மலைகளும் எரிமலைகளும் நிறைந்த நாடு. மக்கள் தொகை 2 லட்சத்து 10 ஆயிரம். கிறித்துவத்தின் எல்லாப் பிரிவுகளையும் மக்கள் பின்பற்றுகின்றனர். 100க்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகளை 73 விழுக்காடு மக்கள் பேசுகின்றனர். 53 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள்.
30.-7.-1980இல் விடுதலை நாள். குடியரசுத் தலைவரும் பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளு மன்றக் குடியரசு நாடு. நாட்டில் இருப்புப் பாதையே கிடையாது.
வாடிகன் நகரம்
வாடிகன் நகர அரசு ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான கி.மீ. பரப்புள்ள நாடு சிறுத்து இன்று எஞ்சியிருக்கும் போப் சாம்ராஜ்யத்தின் அளவு 0.44 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நகரம் மட்டுமே. 19ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டை ஒன்றுபடுத்தும் இயக்கம் நடந்தபோது போப் அரசின் பெரும்பகுதி நாட்டுடன் சேர்க்கப்பட்டது. பரமண்டல சாம்ராஜ்யம் இருக்கும்போது நர (மக்கள்) மண்டல சாம்ராஜ்யம் எதற்கு என எடுத்துக் கொண்டார்கள் போலும்!
1929இல் ஏற்பட்ட லாட்டரன் ஒப்பந்தப்படி வாடிகன் நகரம் மட்டுமே தனி அரசு என ஆக்கப்பட்டது.
ரோம் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் வாடிகன் நகரம் அரை சதுர கி.மீட்டருக்கும் குறைவான பரப்புள்ளது. 2006இல் எடுத்த கணக்கெடுப்பின்படி 932 பேர்கள் வசிக்கின்றனர். போப்பும் அவர் பரிவாரங்களும் இவர்கள். அனைவரும் ரோமன் கத்தோலிக்கர்.
இத்தாலி, லத்தீன், பிரெஞ்ச் முதலிய பல மொழி பேசுகிறவர்கள். அனைவரும் படித்தவர்கள்.
இதற்கும் கூட ஒரு சுதந்திர நாள் உண்டு. 11-.2.-1929 நாட்டின் தலைவர் போப். அரசின் தலைவர் மற்றொரு கார்டினல். யூரோ நாணயத்தை இந்நாடும் ஏற்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள் அளிக்கும் சிறப்பு வசூல் தொகைதான் இந்நாட்டின் பொருளாதாரம். பீட்டரின் பென்ஸ் என்ற பெயரில் இத்தொகை வசூல் செய்யப்படுகிறது. பீட்டர் என்பவர்தான் முதல் போப். இது தவிர, கண்காட்சி, நுழைவுக் கட்டணம், தபால் தலை விற்பனை, மெடல்கள், நாணயங்கள், நினைவுப் பொருள்கள், நூல்கள் விற்பனை, கட்டட வாடகை போன்ற வழிகளிலும் வருமானம் வருகிறது.
இந்த நாட்டில் 860 மீட்டர் நீளத்திற்கான ரயில் பாதை உண்டு. இந்த நாட்டுக்கெனத் தனியே இணைய தளக்குறியீடு உண்டு. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைப் பேசிகள் உண்டு.
-------------------"விடுதலை" 15-8-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment