Search This Blog

24.8.09

ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியின் அருவருக்கத்தக்க பிரார்த்தனை!


திராவிடர் கழகம் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறதா? கிறித்து,இஸ்லாம் மதங்களை விமர்சிக்கவில்லையா?

சங்கராச்சாரிகள் தாழ்த்தப்பட்டவகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?

சங்கராச்சாரியார் பேச்சைகேட்டு துக்ளக் “சோ” ஆள்காட்டி வேலை பார்த்தது உண்மையா?

சங்கராச்சாரி வேண்டிக் கொண்டதால்தான் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு காய்ச்சல் வந்ததா?

இவ்வளவுக்கும் பிறகும் பெரியார் தொண்டர்களின் பெருந்தன்மை எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவும்,

இது போல் பல உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ள


("எதிரொலி" நாளேட்டில் அன்றாடம் சுயமரியாதைக் கருத்துக்களை கட்டுரைகளாக வடித்து வரும் சின்னக் குத்தூசி - ஞானி அவர்கள் - கஞ்சி சங்கராச்சாரியை நேரில் கண்ட கருத்தாழ மிக்க பேட்டி)

1983 ஆம் ஆண்டு உண்மை நாடுவோர் வெளியிட்டுள்ள சங்கராச்சரியாரின் முகத்திரையை கிழித்தெறிந்த “சின்ன சங்கராச்சாரி –யார் ?” என்ற நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு பதிவு செய்யப் படுகிறது. நமது வாசகர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிய வேண்டுகிறோம் -

நன்றி


*************************************************************************************
சின்ன சங்கராச்சாரி - யார்?


பகுதி - 3காஞ்சி சங்கர மடத்தின் தற்போதைய தலைவரான ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்திக்க நண்பர் சின்னக்குத்தூசி சென்றபோது நானும் தற்செயலாக உடன்செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.

தன்னை, தன் கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர்களை ஒருவர் சந்திப்பதோ, அளவளாவுவதோ தவறானதல்ல. எனினும், தன்னைப் பற்றி விமர்சித்து எழுத வேண்டாம் என்று மடாதிபதி ஒரு துறவி சொல்லியனுப்புவதும், அதற்குப் பயன் இல்லாது போன நிலையில் குறைந்தபட்சம் சந்திக்கவாவது வரச்சொல்லுங்கள் எனத் தூதனுப்பியதும் இன்றைய கலாச்சார, அரசியல், சமூக சூழ்நிலையில் எனக்கு சாதாரண விஷயங்களாகத் தோன்றவில்லை.

வாளால் அறுப்பினும், தாளில் பணியினும் ஒரே நிலையோடு இருக்க வேண்டிய பற்றற்ற சுவாமிகள், விமர்சனங்களுக்காக மனம் பதைப்பதும் விமர்சகரின் மனம்மாற்ற (கொள்கை ரீதியாக அல்ல) வழிகள் தேடுவதும் மதமும் அரசியலும் இணைய ஆரம்பித்திருக்கிற காலத்தின் கோலம்தான்.


சுவாமிகளைக் காணச் சென்றபோது அவரையும் தற்போது மடத்தின் நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெற்று ஒதுங்கிப் போய்விட்ட முந்தைய மடாதிபதியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் ஒப்பிட்டு உலாவி வரும் கருத்துக்கள் என் மனதில் உலா வந்தன.

"பெரியவர் விளம்பரம் தேடாதவர். சின்னவர் பப்ளிசிடிக்கு அலைகிறார். பெரியவரோட ஞானம் சின்னவருக்கு வராது. பெரியவர் எங்கு போனாலும் நடந்துபோவார். இவர் கார்ல போறார். பெரியவர் அனாசாரமா சேரிக்கெல்லாம் போகமாட்டார். சின்னவர் ஆகம விரோதமா சேரிக்கெல்லாம்போறார். பெரியவர் காலத்துல அவரோட ஒரு உறவினரைக்கூட மடத்துப் பக்கம் அண்டவிட்டதில்லை. இவர் நேர்மாறு. பெரியவர் இளைஞர்களைஅட்ராக்ட் பண்ண முடியல. சின்னவர் இளைஞர் படையையே திரட்டியிருக்கார்."

இப்படி எத்தனை எத்தனையோ கருத்துக்கள். இச்சூழ்நிலையில் ஜயேந்திர சரஸ்வதிகளை சந்தித்து உரையாடச் செல்வதில் ஒரு பெரிய ஆவல் எனக்கு இருந்ததில்

வியப்பில்லை.மடாதிபதிகள் பொதுவிவாகாரங்களில் வெளிப்படையாகத் தலையிடாமல் ஒதுங்கியிருந்த காலம் மாறிவிட்ட நிலையில் இதில் முன்னணியில் இருக்கிற இந்தசங்கராச்சாரி எப்படிப்பட்ட மனிதர், ஜாதியும் மதமும் எதற்காக இன்னமும் தேவை என்று கருதுகிறார் என்றெல்லாம் அறிய விரும்பினேன்.

நேரில் சந்தித்து உரையாடியபோது, அவருடைய பல கருத்துக்கள், அவரும், அவருடைய மடமும் காலங்காலமாக சார்ந்து நிற்கும் கருத்துக்களின் வெளிப்பாடாகவே அமைந்தன. அவை எனக்கு எந்த விதத்திலும் வியப்பை ஏற்படுத்தவில்லை.

ஆனாலும், அவருடன் சின்னக் குத்தூசியும் (ஓரளவு) நானும் நடத்திய விவாதத்தில் நான் உணர நேர்ந்த ஒரு சில விஷயங்கள் மட்டுமே இன்னும் என்னை நெருடிக்கொண்டிருக்கின்றன.

கலைஞர் கருணாநிதி, வீரமணி, சோ போன்றவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவன், இவன் என்றெல்லாம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதைக் கூட முக்கியமானதல்ல என்று ஒதுக்கிவிடலாம்.

குன்றக்குடி அடிகளார் மார்க்சியம் பேசுவதற்கு ஜயேந்திர சுவாமிகள் கண்டனம் தெரிவித்ததைக் கூட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிசுவாமிகளுக்கு அக்கறையில்லை என்பதாக விட்டுவிடலாம். மார்க்சியத்தின் அடிப்படையே மனித நேயம்தான் என்று நான் சுட்டிக்காட்டியபோதும்சுவாமிகள் அதை ஏற்கவில்லை.

கலைஞர் கருணாநிதி காமகோடி பீடத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும், அதனால் தான் கோபமுற்றதாகவும் கூறிய சுவாமிகள் "என் பக்தி சுத்தமானதாக இருந்தால் (கருணாநிதிக்கு) ஏதாவது உடம்புக்கு வரணும்னு பிரார்த்தனை செஞ்சேன். அதேமாதிரி (கருணாநிதியை) படுக்கப் போட்டுடுத்து"என்று சொன்ன போது நானும் சின்னக் குத்தூசியும் ஒருகணம் அதிர்ந்து போனோம். ஒரு துறவி செய்கிற பிரார்த்தனையாக இது இல்லையே என்றுஅதிர்ச்சியடைந்தபோதும், விவாதத்தை ஆரோக்கியமாக நடத்த வேண்டும் என்ற அக்கறையோடு சின்னக்குத்தூசி தன் கருத்து ரீதியான கேள்விகளைத்தொடர்ந்தார். சுவாமிகளின் அருவருக்கத்தக்க பிரார்த்தனை அவரது மனித பலவீனத்துக்கு அடையாளமாய் நிற்பதைக் கூட ஒதுக்கிவிட்டு மேலேபோவோம்.

எங்களிடம் பேசும்போது மணியனின் முரண்பாடுகளை பற்றி ஒப்புக்கொண்ட சுவாமிகள், மணியன் மதத்தையும் ஆன்மிகத்தையும் வியாபாரமாகவே நடத்துவதாகக் கருத்து தெரிவித்த சுவாமிகளிடம் இதை நீங்கள் பொதுமேடையில் பகிரங்கமாகச் சொல்ல வேண்டாமா? அவர் செய்வதற்கெல்லாம் உங்கள் ஆசிர்வாதம் இருப்பதாக வெளியில் நிலவும் கருத்தை நீங்கள் தவறென்று கருதினால், அதை வெளியே சொல்ல வேண்டாமா? என்று நான்கேட்டபோது,

பதில் சொல்லாமல் சிரித்தார். "இதை வெளியில் சொல்ல நீங்கள் மறுத்தால், மணியன் செய்யும் காரியங்களுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள் என்றுதானேஅர்த்தம்" என்று மீண்டும் நான் சொன்ன போது,

அப்போதும் சிரிப்பையே பதிலாக்கினார் சுவாமிகள்.

இதே போல் தமிழ் அர்ச்சனை பற்றியும் அரிஜனங்கள் அர்ச்சகராவது பற்றியும் பேசியபோது என் நேரடியான கேள்விகளுக்கு பதில் சொல்வதுசிக்கலாகிவிட்ட போது சிரிப்பையே உதிர்த்தார். அந்தச் சிரிப்பை தெய்வீகச் சிரிப்பு என்று மெய்சிலிர்த்து ஒருபோதும் எழுதிவிட முடியாது. அதில் தெய்வீகம்இல்லை. விஷமத்தனம் தான் இருந்தது.

எங்களைத் திருப்திப்படுத்த சில பதில்களைத் தருவதும் அதே நேரத்தில் அவற்றைப் பகிரங்கமாகப் பேசமறுப்பது என்ற போக்கும் விருப்பு வெறுப்பற்ற துறவிகளுக்கு சரியானதல்ல... சில குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக அப்படியெல்லாம் நடந்துகொள்வது, சில பல அரசியல்வாதிகளுக்கே உரியகுண இயல்பு.

ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் எனக்கு நெருடலாக நின்ற மற்றொரு விஷயத்துக்கு வருவோம்.

தன்னை பிராமணர்களின் தலைவர் என்று கூறுவதை வன்மையாக ஆட்சேபித்த சுவாமிகள், அந்தக் குறுகிய வட்டத்தில், தன்னை அடைப்பதைவிரும்பவில்லை. அதைவிடப் பெரிய இன்னொரு வட்டமான இந்து வட்டத்துக்குள்ளே தன்னை குறுக்கிக் கொள்வதையே விரும்பினார்.

இந்துமதத் தலைவர்களில் ஒருவராகத் தன்னை எல்லோரும் அடையாளம் காண்பதையே சுவாமிகள் அவாவுவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. மதங்கள்,சாதிகள், கடவுள் முதலியவற்றின் மீதான பற்றுக்கள் முற்றாக நீங்கும் காலம், மக்களிடையே விழிப்புணர்ச்சியின் விளைவாக வரும்வரையில், மதத்தலைவர்கள் நம் சமூகத்தில் இருந்தே தீருவார்கள் என்ற யதார்த்தத்தை மறுக்க முடியாது.

ஆனால், ஒரு மதத்தின் தலைவர்கள் இன்னொரு மதத்தின் மீது துவேஷம் பாராட்டுவதையோ, அதன் விளைவாக மக்களிடையே பிளவுகளூம்மோதல்களும் ஏற்படுவதையோ ஒருபோதும் சகிக்கலாகாது. கடவுள் நம்பிக்கை உள்ளவராயினும் சரி, அற்றவராயினும் சரி, மதம் ஜாதி முதலியவற்றின் பெயரால் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை ஏற்க முடியாது.

ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சின்னக்குத்தூசியை சந்திக்க விரும்பியதன் இரண்டு அடிப்படை நோக்கங்களை எனக்கு அந்த விவாதத்தில் உணர முடிந்தது.

தன்மீதான விமர்சனங்களை நிறுத்தக் கோருவது ஒன்றாகும்; அதை தனிப்பட்ட பலவீனமாக விட்டுவிடலாம். இன்னொரு நோக்கமேமுக்கியமானதாகிறது.

"இந்து மதத்தின் குறைகளை திராவிடர் கழகம் விமர்சிப்பது பரவாயில்லை. ஆனால், அதனால் முஸ்லீம்களுக்கு பலம் வந்துவிடுகிறது. எனவே,திராவிடர் கழகம் இந்து மதத்தையோ, சங்கராச்சாரியையோ விமர்சிப்பதற்கு பதிலாக, சேரிகளில் சங்கர மடம் செய்யும் நிவாரணப் பணிகளில்,கைகொடுக்கட்டும்.

எது எப்படியானாலும் முஸ்லீம்களை வளரவிடும் விதத்தில் திராவிடர் கழகம் செயல்படக் கூடாது."

என்பதுதான் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடர்ந்து வலியுறுத்திய விஷயம்.


அப்போது நான் குறுக்கிட்டு, "எல்லா மனிதரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதானே மதங்களின் நோக்கம்! இந்துவானால் என்னமுஸ்லீமானால் என்ன" என்று கேட்டேன்.

"அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு இந்துக்களை பற்றித்தான் கவலை. எல்லா மனுஷங்களைப் பத்தியும் கவலையில்லை" என்று ஜகத்குருஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடித்து சொன்னார்.

"அதெப்படி சொல்லலாம்? இது சரியாக இல்லையே என்று நான் மீண்டும் சொன்னேன்.

"முஸ்லீம்கள் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலையில்லை. நான்? ஹிண்டுஸ் பத்திதான் அக்கறை எடுத்துக்க முடியும்" என்று மீண்டும் சுவாமிகள் சொல்லிவிட்டார்.

இந்த இரண்டு விஷயங்களும்தான் என்னை நெருடின. அன்பு, சமரசம், மனிதநேயம் இவற்றையே மதம் போதிப்பதாக கூறுவதும், இப்படி போதிக்கிறமதத்தின் தலைவர்களாக உள்ளவர்கள் வெளியில் ஒன்றும் உள்ளே வேறொன்றுமாகப் பேசும் நிலை இருக்குமானால் ...

மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம். மத நம்பிக்கை என்பதும் ஜாதி நம்பிக்கை என்பதும்சமூக விஷயங்கள். எனவே, நம்மிடையே மோதல்களை உருவாக்க மதத்தையும் ஜாதியையும் பயன்படுத்துவதை எதிர்க்க கடவுள் நம்பிக்கையுள்ளவராயினும் அற்றவராயினும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது.

அமைதியான தமிழகத்தில் மதக் கலவரங்களை அரசியல் ரீதியில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு அண்மைக் காலத்தில் முயற்சிகள் நடந்து வருகின்றன.இவற்றின் விளைவாக 1983 மீண்டும் 1948 ஆக மாற்றப்பட்டு மனிதர்கள் ரத்த ஆறு ஓடுமானால் அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோபொறுப்பானவர்களின் பட்டியலில் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் இருப்பார் என்றே என்னால் இப்போதைக்கு என்னால் அனுமானிக்க முடிகிறது.

ஏனென்றால் துறவியைச் சந்திக்கப்போன நான் தரிசித்தது காவியுடையில் இருந்த ஒரு "பூர்ஷ்வா" அரசியல்வாதியைத்தான்.

இது குறித்து நாம் எல்லோரும் வருத்தப்படவும், சிந்திக்கவும் கடமைப்பட்டவர்களாவோம்

--------------------ஞானி

---------------------நூல்:-சின்ன சங்கராச்சாரி - யார்? பக்கம்:-15-21

0 comments: