Search This Blog

12.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - அய்க்கிய அரசு (United Kingdom)


அய்க்கிய அரசு (United Kingdom)

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து (ஆறில் ஒரு பங்கு மட்டும்) ஆகியவை அடங்கிய நாடு அய்க்கிய அரசு. இங்கிலாந்து, பிரிட்டன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. பொது ஆண்டுக்கு 100 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதிகளை ரோமர்கள் படையெடுத்துக் கைப்பற்றினர். 600 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ஸ்கான்டி நேவியர்கள் படையெடுத்து வந்தனர். ஆங்கிலேய - சாக்ஸன் அரசுகள் பல உருவாகின. சாக்ஸன் மன்னரை நார்மண்டியின் மன்னன் வில்லியம் தோற்கடித்த போது, பிரான்சு நாட்டு ஆட்சியும் சட்டங்களும் நடைமுறைக்கு வந்தன.

நாளடைவில் மன்னரிடம் அனைத்து அதிகாரங்களும் குவியவே பிரபுக்களின் செல்வாக்கினை அரசர் ஒழித்தார். இதன் விளைவாக ஏற்பட்ட கலவரத்தின் விளைவாக 1215இல் அரசர் ஜானுக்கும் மக்களுக்கும் உடன்படிக்கை ஏற்பட்டது. மகாசாசனம் எனும் பொருள்படும் மாக்னா கார்ட்டா வெளியிடப்பட்டு மக்களுக்குப் பல உரிமைகள் அளிக்கப்பட்டன.

இங்கிலாந்தும் வேல்சும் 1284இல் இணைந்தன. பின்னர் 1536இல் இதற்கான சட்டமும் இயற்றப் பட்டது. பிரான்சின் அரச பதவிக்குக் குறி வைத்த மூன்றாம் எட்வர்டு மன்னரால் நூறாண்டுப் போர் இரு நாடுகளுக்கும் மூண்டது. 1338 முதல் 1453 வரை போர் நடந்தது. பிரான்சில் இருந்த பிரிட்டனின் பல பகுதிகளை இழக்க நேர்ந்தது. 14ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பாவில் பரவிய பிளேக் நோயால், பிரிட்டனின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் இறந்துவிட்டனர்.

1455 முதல் 1485 வரை நடந்த ரோஜா சண்டை என்பது யார்க் பகுதிக்கும் லங்காஸ்டர் பகுதிக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி. இதன் முடிவில் ஏழாம் ஹென்றி மன்னர் வெற்றி பெற்றார். இவர் காலத்தில்தான் இங்கிலாந்து சர்ச் மீது ரோமன் கத்தோலிக்கத் தலைமை குரு போப் செலுத்தி வந்த ஆதிக்கம் உடைபட்டது.

ஹென்றியின் மகள் முதல் எலிசபெத் ஆட்சியில் அய்ரோப்பிய நாடுகளில் வலிமை மிக்க நாடாக இங்கிலாந்து வளர்ந்தது. இந்த அரசி தன்னை சக்ரவர்த்தி என்றுதான் அழைத்துக் கொண்டார். சக்ரவர்த்தினி என அழைக்கக்கூடாது எனக் கட்டளையிட்டார். பெண்ணாகப் பிறந்திருந்தாலும் ஆணாகச் செயல்பட்ட வீரத்தன்மையின் அடையாளம் இது. 1588இல் ஸ்பெயின் நாடு மிகப் பெரிய கப்பற் படையை அனுப்பி இங்கிலாந்தின் மீது தாக்குதல் நடத்தியது. அதனை பிரிட்டிஷ் படை தோற்கடித்து கடலிலும் தன் வலிமையை நிரூபணம் செய்தது.

1642இல் மன்னர் சார்லஸ், நாடாளு மன்றத்துடன் மோதல் போக்கைக் கடைப் பிடித்தார். சண்டை மூண்டது. மன்னர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 1649 முதல் 1653 வரை மாநிலக் கவுன்சில் நாட்டை ஆண்டது. நாடாளுமன்ற உறுப்பினரான ஆலிவர் கிராம்வெல் 1653 முதல் 1658 வரை நாட்டின் பாதுகாவலராகவும் பொறுப்பேற்று ஆண்டார். அவரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் மன்னராட்சி ஏற்பட்டது.

1660இல் இரண்டாம் சார்லஸ் பதவிக்கு வந்தார். 1668இல் ஏற்பட்ட புரட்சியில் அப்போதிருந்த அரசர் ஜேம்ஸ் பதவியிலிருந்து துரத்தப்பட்டார். 1707இல் இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் சட்டப்படி இணைந்தன. 17ஆம் நூற்றாண்டில் பிரிட்டனின் ஆட்சி பூமியெங்கும் பரவியது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்தது. பிரான்சுடன் ஏற்பட்ட போரில் 1815இல் வாடர்லூவில் இங்கிலாந்து பிரான்சைத் தோற்கடித்தது.

விக்டோரியா மகாராணி 1837 முதல் 1901 வரை ஆட்சி செய்தார். 1876 முதல் 1901 வரை இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்துடன் விளங்கினார். அவர் காலத்தில் மன்னராட்சி இளகி, மக்கள் ஆட்சியின் மாண்புகளுக்குப் படிப்படியாக இடம் கொடுக்கத் தொடங்கியது. மன்னர் பெயரளவுக்கு இருப்பவராக நிலைமைகள் உருவாகின.

1920இல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அயர்லாந்து பகுதிக்கு இரு நாடாளுமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. வட அயர்லாந்தில் ஆறு பிரதேசங்கள் (மாவட்டங்கள்) ஒரு நாடாளு மன்றத்தின் கீழும் ஏனைய பிரதேசங்களுக்கு மற்றொரு நாடாளுமன்றமும் ஏற்படுத்தப்பட்டன. 1921இல் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி பிரிட்டிஷ் மன்னருக்கு உட்பட்ட சுதந்திர மாநிலத் தகுதி அயர்லாந்துக்கு அளிக்கப்பட்டது. எனினும் வட அயர்லாந்திலிருந்து இத்தனிச் சுதந்திரப் பகுதி பிரிந்து விட்டது. வட அயர்லாந்து பிரிட்டனில் இன்றளவும் நீடிக்கிறது. கத்தோலிக மதப் பிரிவினர் பிரிந்து சென்றனர். புரொடஸ்டன்ட் பிரிவினர் இணைந்தே உள்ளனர் மத அடிப்படையில்.

இரண்டு உலகப் போர்களிலும் ஈடுபட்ட பிரிட்டன் வெற்றி வாகை சூடியது. போர்க்காலத்தில் கூட்டு அமைச்சரவை நாட்டை ஆளும் முறை அமைந்தது. இதற்கு வாய்ப்பாக பிரதமர் சாம்பர்லின் பதவி விலகினார். வின்ஸ்டன் சர்ச்சில் தேர்ந்தெடுக்கப்பட்டு 1940 முதல் 1945 வரையிலும், 1951 முதல் 1955 வரையிலும் பதவி வகித்தார். போரின் போதும் போருக்குப் பிறகும் திறமையாக நிருவாகம் செய்தார். இந்திய விடுதலையின்போது தொழிற்கட்சி ஆண்டது. பிரதமர் கிளெமன்ட் அட்லி இருந்தார்.

1936 ஜனவரியில் எட்டாம் எட்வர்டு அரசர் பதவிக்கு வந்தார். எனினும் டிசம்பரில் பதவியைத் துறந்தார். அவருடைய காதலி மணவிலக்கு பெற்றவர். அவரைத் திருமணம் செய்து கொண்டால் அரசராக நீடிக்க முடியாது எனப் பிரிட்டிஷ் பழக்கம். காதலுக்காக அரச பதவியைத் துறந்து வரலாற்றில் இடம் பெற்றார். பிறகு பதவிக்கு வந்தவர் எட்வர்டின் தம்பி ஆறாம் ஜார்ஜ். அவருக்குப் பின் அவரின் மகள் இரண்டாம் எலிசபெத் (இயற் பெயர் எலிசபெத் அலக்ஸான்ட்ரா மேரி) பதவியில் இருக்கிறார்.

குடிக்கோனாட்சி என்றாலும் அரசர் அலங்காரப் பதவியை வகிக்கிறார். நாடாளுமன்றம் தான் சர்வ அதிகாரமும் பெற்றது. இரு சபைகள் உள்ளன. மக்கள் சபை 646 உறுப்பினர்கள் கொண்டது. அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவர். மற்றொன்று பிரபுக்கள் சபை. 557 பேர்கள் ஆயுள் பிரபுக்கள். 118 பேர் வமிசாவழி உறுப்பினர் (பிரபுக்)கள். பரம்பரை பிரபுக்களின் இடம் காலியாகும்போது மட்டும் அவ்விடத்திற்குத் தேர்தல் நடக்கும்.

எழுதப்படாத அரசமைப்புச் சட்டப்படி 800 ஆண்டுகளாக நடைபெறும் நாடாளுமன்ற அமைப்பு முறை உள்ளது. பிரிட்டனைப் பொறுத்த மட்டில் பாராளுமன்றம் என்றே குறிப்பிடப்பட்டது; பார் முழுதும் ஆண்ட காரணத்தால். இப்போது நாடாளு மன்றம் என அழைப்பதுதான் பொருத்தம்.

இந்நாட்டின் பரப்பளவு 2 லட்சத்து 44 ஆயிரத்து 820 சதுர கிமீ. மக்கள் தொகை 6 கோடியே 9 லட்சம். மக்களில் பெரும்பாலோர் கிறித்துவத்தின் இரு பெரும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். முசுலிம்கள் 15 லட்சம் பேர். இந்துக்கள் 5 லட்சம் பேர். சீக்கியர்கள் 5 லட்சம் பேர். யூதர்கள் மூன்றரை லட்சம் பேர் அளவுக்கு உள்ளனர்.

இங்கிலீஷ், வெல்ஷ், ஸ்காட்டிஷ் மொழிகள் பேசப்படுகின்றன. 99 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள்.

அரசி நாட்டின் தலைவர். தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் ஆட்சியின் தலைவர். அந்நாட்டு நிலவரப் படிக்கான வறுமைக் கோட்டுக்குக் கீழ் 17 விழுக்காடுப் பேர் உள்ளனர். 5 விழுக்காடு வேலை கிட்டாதவர்களும் இருக்கின்றனர்.

------------------"விடுதலை" 10,11-8-2009

0 comments: