Search This Blog

26.8.09

தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆறு கோடி பேரும் இந்தி கற்றுக்கொள்ளவேண்டுமா?


மீண்டும் மும்மொழித் திட்டமா?
தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறார் மனிதவள அமைச்சர் கபில்சிபல்


மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ள, பள்ளிகளில் மும்மொழித் திட்டம் அறிவிப்பு வீணான பிரச்சினையை, தலை வலியை ஏற்படுத்தக் கூடிய தாகும். முதலமைச்சர் கலைஞர் இதில் தலையிட்டு தேவையான இணக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. அவரது அறிக்கை வருமாறு:

கல்விக் கண்ணை நாட்டில் உள்ள அனைத்து மக்களும், குறிப்பாக கிராமங்களில் உள்ள ஏழை, எளிய, விவசாய தொழிலாளிகளின் பிள்ளைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களின் பிள்ளைகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் அனைவரும் எழுதப் படிக்கவும், அதற்குமேல் பள்ளிக் கல்வி, கல்லூரி கல்வி போன்றவைகளைப் படிக்கும் ஒரு தீவிர செயல்திட்டம்தான் மத்திய அரசின் அவசர முன்னுரிமைத் திட்டமாக அமையவேண்டும்.

நெருக்கடி காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித் துறை

இப்போதுதான் ஆரம்பக் கட்டாய கல்வித் திட்ட சட்டமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது நாடாளுமன்றத்தில்!

1960 க்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய ஒரு சட்டம் (அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளது) 50 ஆண்டுகளுக்கு பின் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதே வேதனைக்குரிய ஒன்றாகும்.

நெருக்கடி காலத்தில், மாநிலப் பட்டியலில் (State List) இருந்த கல்வி முறை பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டு விட்டது. அதன் விரும்பத்தகாத விளைவுதான் இது!

திடீர் குண்டுகளைப் போடும் மத்திய அமைச்சர் கபில்சிபல்

மத்தியக் கல்வி அமைச்சர் திடீர் திடீர் என்று, பல குண்டுகளைத் தூக்கிப் போட்டு, தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ளது மிகவும் விசித்திரமாக இருக்கிறது!

அவர் பொறுப்பேற்றவுடன், நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும் என்று சகட்டுமேனிக்குக் கூறி, அதற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன், பின்வாங்கி இப்போது, தேவையானவர்கள் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி.யை ரத்து செய்யலாம் என்று மாற்றி அறிவித்துள்ளார்!

மும்மொழித் திட்டமா?

இப்போது நாடு முழுவதிலும் இந்தியாவிலுள்ள எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் மும்மொழித் திட்டம் இடம்பெறவேண்டும். 3 மொழிகளில் மாணவர்கள் திறன் பெறும்போது கலாச்சார ஒருங்கிணைப்பு ஏற்பட உதவும். இந்தி மொழி தேசிய ஒருங்கிணைப்பு ஏற்பட உதவும். இந்தி மொழி தேசிய ஒருங்கிணைப்புக்கும், ஆங்கிலம் உலக அளவில் தொடர்பு கொள்ளவும் உதவும் என்று புதுடில்லியில் நடைபெற்ற பள்ளிக் கல்வி வாரியக் குழுக்களின் ஆண்டு மாநாட்டில் பேசியுள்ளார்!

கல்வி என்பது மாநில அரசும், மத்திய அரசும் அதிகாரம் படைத்துள்ள ஒரு துறை. பல்வேறு மொழிகள், கலாச்சாரம் உள்ள மாநிலங்களில் ஒருமைப்பாடு ஏற்படுத்த இதுவா வழி? எல்லோரும் கோதுமையையே சாப்பிட வற்புறுத்த முடியுமா?

இதில் மத்திய அரசோ, ஏதோ மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்துவிட்ட நிலைபோலத்தானே தென்படுகிறது.

முதலமைச்சர் அண்ணாவின் மூன்று முக்கிய சாதனைகள்

1967 இல் தி.மு.க. அறிஞர் அண்ணா நூற்றாண்டு நாயகர் தலைமையில் ஆட்சி ஏற்றபோது, செய்த முப்பெரும் சாதனைகள்:

1. சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம்

2. சென்னை ராஜ்ஜியத்தினை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தது.

3. தமிழ், ஆங்கிலம், இந்தி என்ற மும்மொழித் திட்டத்திற்கு விடை கொடுத்து, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை அண்ணா அறிவித்து 42 ஆண்டுகள் ஆகிவிட்டன.


இந்தியை யாராவது விரும்பிக் கற்றுக்கொள்ள விரும்பினால், இந்திப் பிரச்சார சபா என்று உள்ளதிலோ, தனிப்பட்ட முறையில் பிரெஞ்ச், ஜெர்மனி, ஜப்பான், சீனம், ரஷ்ய மொழிகளைக் கற்றுக்கொள்வதுபோல், தமிழ்நாட்டு மாணவர்கள் எவரும் கற்றுக்கொள்ள எவ்விதத் தடையும் இல்லையே!

புதிய தலைவலி!

தாய்மொழி தமிழையே சரிவரப் படிக்கத் தெரியாது, கல்லூரி பட்டதாரிகளாக, மேல் பட்டதாரிகளாகி வெளியேறும் வெட்கப்படத்தக்க சூழல் தமிழ்நாட்டிலேயே இன்னமும் இருக்கிறது. கிராமப்புறங்களில் தமிழ் படிக்கத் தெரியாத பிள்ளைகளும், பெற்றோர்களும் ஏராளமாக லட்சக்கணக்கில் உள்ள நிலையில், இந்தித் திணிப்புப் பள்ளிகளில் தேவையா?

கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்பதுபோல ஏன் இந்த வீண் சர்ச்சையை மத்திய கல்வி அமைச்சர் கபில்சிபல் வரவழைத்து, மத்திய, மாநில அரசுகளுக்குத் தலைவலியை மோதல் ஏற்படுமோ என்று அஞ்சும் சூழலை உருவாக்கவேண்டும்?

மாணவர்கள் சும்மா இருப்பார்களா?

தமிழ்நாட்டில் 1967 லிருந்து இன்றுவரை காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலாததற்கு மூலகாரணம் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் அல்லவா? அதை மறந்துவிடலாமா?

மற்ற அரசியல் கட்சிகள் சும்மா இருந்தாலும், உணர்ச்சிப்பூர்வமான இந்த மொழிப் பிரச்சினையில் மாணவர்கள் சும்மா இருப்பார்களா?

தேவையான தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்கவேண்டும்!

மத்திய அரசு குறிப்பாக மனித வளத்துறை அமைச்சர் கபில்சிபல் சிந்திக்கவேண்டும். கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்யப்படவேண்டியவை எவ்வளவோ உண்டு.

அவற்றை விட்டுவிட்டு இதுபோன்றவற்றில் ஈடுபடவேண்டாம் என்பதே நமது அழுத்தமான, அன்பான வேண்டுகோள்.

இதுபற்றி நமது முதலமைச்சர் அவர்கள் தேவையான தடுப்பு நடவடிக்கையை எடுக்கவேண்டும்; எடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

தீப்பொறி கிளம்புமுன்பே அதனை அணைப்பதுதான் சாதுரியமான அணுகுமுறையாகும். வெறும் வாயை மெல்லும் சிலருக்கு இந்த அவலைத் தருவது தேவையற்றது; புத்திசாலித்தனமும் ஆகாது!

******************************************************





அண்ணா நூற்றாண்டில் அண்ணா சாதனைக்கு வெடியா?

மத்திய அரசு மத்திய அமைச்சர் கபில்சிபல் மூலம் இந்தியைத் திணிக்க முற்பட்டிருக்கிறது. அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்தபொழுது தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டமில்லை. இருமொழித் திட்டம்தான். ஆங்கிலமும், தமிழும்தான் என்று சட்டம் கொண்டு வந்தார். அந்த சாதனைக்கு அதுவும் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டிலே வெடி வைப்பதுபோல் இது அமைந்துள்ளது.

உடனடியாக மத்திய அரசு இந்தித் திணிப்பை நிறுத்திட வேண்டும். இதை ரத்து செய்யவேண்டும். இல்லையேல், அடுத்து இதுபற்றி முடிவு செய்வோம்!

-------------- செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்,26.8.2009

*****************************************************




இந்தியின் இரகசியத்தை 1926ஆம் ஆண்டிலேயே
அம்பலப்படுத்தி எழுதியவர் தந்தை பெரியார்
செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்


சென்னை, ஆக. 26- சென்னை பெரியார் திடலில் இன்று (26.8.2009) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நேற்றைய பத்திரிகைகளில் மத்திய மனித வளத் துறை அமைச்சர் கபில்சிபல் ஒன்றை அறிவித்து உள்ளார். இந்தியா முழுவதும் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட்டிட நாடு முழுக்க இந்தியைக் கட்டாயம் கற்கவேண்டும் என்று அவர் ஒரு கல்வித் திட்டத்தையே அறிவித்துள்ளார்.

இது மிகுந்த வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

இந்தி மொழி தேவையற்றது என்பதை 1926 ஆம் ஆண்டிலேயே குடிஅரசில் தந்தை பெரியார் அவர்கள் இந்தியின் இரகசியம் என்று ஒரு கட்டுரையையே எழுதியுள்ளார். இந்தி என்பது ஆரிய கலாச்சாரத்தை பரப்பிடும் ஒரு திட்டம்தானே ஒழிய, இதை ஒரு மொழியாக, பயனுள்ள மொழியாக கற்றுக்கொள்வதற்கு இதில் ஒன்றுமில்லை.

இந்தித் திணிப்பை எதிர்த்து அண்ணா சர்வாதிகாரியாக பொறுப்பேற்று சிறை சென்றார். தந்தை பெரியார் அவர்கள் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

1965 ஆம் ஆண்டு மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போராட்டம், மாணவர்களாலே நடத்தப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கும் அது முக்கிய காரணமாகும்.

கல்வி மத்திய பட்டியலுக்கா?

கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்து நெருக்கடி காலத்தில் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. மத்திய அரசுக்கு மட்டுமே அது சொந்தம் என்று மத்திய அரசு செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. இதை மத்திய அரசின் பட்டியலுக்கு கொண்டு சென்று விடுவார்களோ என்று அய்யப்பட, அச்சப்பட வேண்டியுள்ளது.

இந்தி திணிக்கப்படுவதை திராவிடர் கழகம் எதிர்க்கிறது. இந்தித் திணிப்பை மத்திய அரசு நிறுத்திக் கொள்ளவில்லையென்றால், அடுத்தக் கட்டப் போராட்டத்தை திராவிடர் கழகம் அறிவிக்கும்.

முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இதைப்பற்றி நன்றாகத் தெரியும். அவரும் இந்தி திணிப்பைத் தடுக்க தேவையான முயற்சிகளை எடுப்பார். அவர் மாலையில் படிக்கின்ற முதல் ஏடே விடுதலைதான்.

என்னுடைய அறிக்கையும் அவருக்கும், அரசுக்கும் போய் சேரும்.

மாணவர் கிளர்ச்சி ஏற்படும்

மாணவர்கள் மத்தியிலே இது ஒரு பெரும் போராட்டமாக வெடிக்கும் முன்பே தீப்பொறி பற்றிக் கொள்ள ஆரம்பிக்கும் முன்பே இதைத் தடுத்திடவேண்டும் என்பதை பத்திரிகையாளர்-களாகிய உங்கள்மூலம் மத்திய அரசுக்கு வேண்டுகோளாக வைக்கின்றோம்.

நான் துபாய் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு அரேபிய மொழியை எல்லோரும் பேசுவதில்லை. பெரும்பாலும் மலையாள மொழிதான் பேசுகின்றனர். விமான நிலையத்தில்கூட மலையாள மொழியில் அறிவிப்புகளைத் தருகின்றனர்.

சிங்கப்பூரில் நான்கு மொழிகள் இருக்கின்றன. ஆங்கிலம் பொது மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

தமிழ் மொழியும் நான்கு மொழிகளில் ஒன்றாக சம அந்தஸ்து படைத்த ஆட்சி மொழியாக இருக்கிறது.

கபில்சிபல் தமிழில் பேசுவாரா?

தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆறு கோடி பேரும் இந்தி கற்றுக்கொள்ளவேண்டுமா?

மத்திய அமைச்சர் கபில்சிபல் தமிழ்நாட்டிற்கு வந்து பேசினால் இங்கு தமிழ் மொழியில்தான் பேசவேண்டும் என்று நாம் வற்புறுத்தினால் அது சரியாக இருக்குமா?

இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு அடையாள-மாக எல்லோரும் இனிமேல் கோதுமைதான் சாப்பிடவேண்டும் என்று சொன்னால், அது ஏற்புடைத்ததாகுமா?

வேலை வாய்ப்புக்காக இந்தி படிக்கவேண்டும் என்கிறார்கள் _ இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில் எல்லாம் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்துவிட்டதா? அப்படியே தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தனியே படிப்பதில் தடை ஒன்றும் இல்லையே! யாரோ ஒரு சிலருக்காக ஆறு கோடி மக்களும் இந்தி படிக்கவேண்டுமா?


இந்திய அரசியல் சட்டத்தில் இந்தி மொழியின் நிலை என்ன?

இந்திய அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் எட்டு, ஒன்பது மொழிகள் தேசிய மொழிகளாக இருந்தன. இப்பொழுது 22 மொழிகள் இருக்கின்றன. அதில் இந்தியும் ஒன்று. அவ்வளவுதான்.

இன்னமும் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் ஆங்கிலம்தான் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட இக்காலத்தில் இன்னமும் உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை, வாதாடுவதற்குரிய மொழியாக ஆட்சிமொழியாக நாம் கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருக்கின்ற வேளையில், மூன்றாவது மொழியான இந்தி மொழியைத் திணிப்பதா?

தமிழ் மொழியை நீதிமன்றத்தில் ஆட்சி மொழியாக்குவதற்கு குடியரசுத் தலைவர் தான் ஒப்புதல் தரவேண்டும். மத்திய அமைச்சரவை அதற்கு முறையான அனுமதி வழங்கவேண்டும்.

குஜராத் நீதிமன்றத்தில் மாநில மொழி...!

குஜராத் மாநிலத்தில் அந்த மாநில மொழியான குஜராத் மொழியில்தான் நீதிமன்றங்களில் வாதாடுகிறார்கள். உ.பி. அலகாபாத் நீதிமன்றத்தில் இந்தியில் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் தமிழுக்கு அதே வாய்ப்பு கிடைக்கவேண்டாமா?

அதற்குள்ளாக மத்திய அரசு இப்படி ஒரு புதுக்கரடியை விடுவதா? என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குறிப்பிட்டார்.

-------------------"விடுதலை" 26-8-2009

3 comments:

சுதாகர் said...

திரும்பவும் இந்தி எதிர்ப்பு போராட்டம். மறுபடியும் இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு இந்தி தெரியாது.

எவனாவது இங்கிருந்து வடக்கே போனா, அவ்ளோதான்.

MP சீட் கேட்டா, உனக்கு இந்தி தெரியாதுன்னு சொல்லி மாப்பிள்ளை, பேரன், பேத்தி, கொள்ளு பேரனுக்கு கொடுத்துட்டு அமர்க்களம் ப்ண்ணுங்க!

இதல்லாம் அரசியல்ல சகஜமப்பா!

Cinema news said...

நீங்க சொல்லற கருத்து சரிதான் .அனா ஹிந்தி அவசியம் வேண்டும் .ஹிந்தி மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து மொழி களும் கற்க எம் தமிழின சிறார்கள் தயாராக உள்ளனர் .உலகில் போட்டி போடோ அன்னை மொழி யை காப்போம் அனைத்து மொழியைடும் கற்ப்போம் .

நம்பி said...

//சுதாகர் said...

திரும்பவும் இந்தி எதிர்ப்பு போராட்டம். மறுபடியும் இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு இந்தி தெரியாது.

எவனாவது இங்கிருந்து வடக்கே போனா, அவ்ளோதான்.//

அப்ப வடக்கேயிருந்து தெற்கே வந்தா தமிழ் தெரிஞ்சிருக்கணுமா? இல்லைன்னா அவ்வளவு தானா...

தாய் மொழி, ஆங்கிலம் என இரண்டு மொழி தான். மற்றதெல்லாம் அவரவர் விருப்பம்...கட்டாயப்படுத்த முடியாது.