Search This Blog

11.8.09

வகுப்புவாரி உரிமை கிடைத்தது யாரால்? எப்படி?



உத்தியோகத்திற்கு இடஒதுக்கீடு இருக்கிறது
கல்விக்கு இடஒதுக்கீடு முழுமையாக வரவில்லையே!

சென்னையில் தமிழர் தலைவர் விளக்கமான உரை


உத்தியோகத்திற்கு இடஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் கல்விக்கு இடஒதுக்கீடு முழுமையாக இல்லையே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரையாற்றினார்.

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 25.7.2009 அன்று நடை-பெற்ற பாராட்டுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அதே நேரத்திலே உங்களுக்கு வேண்டியதெல்லாம் சமூக நீதியைப் பற்றி என்றைக்கும் நீங்கள் மறக்கக் கூடாது. சமுதாயத்திற்கு நன்றி செலுத்த வேண்டும்

பூத்து, காய்த்து, கனிந்து தொங்குகிற கனிகளைப் பார்க்கும் பொழுது அது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

மாணவர்களாகிய நீங்கள் சமுதாயத்திற்கு நன்றி செலுத்த வேண்டும். எப்படி நீங்கள் குடும்பத்திற்கு கடன்பட்டிருக்கின்றீர்களோ அது போல நீங்கள் இந்த சமுதாயத்திற்கு நன்றி காட்டுகிறவர்களாக இருக்க வேண்டும்.

நியாயமான வழியில் உதவ வேண்டும். மற்றவர்களைக் கை தூக்கி விட வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் காலம் காலமாக வழி தெரியாமல் தவித்தவர்கள். இன்னும் கூட வழியில்லாமல் தவித்துக்கொண்டிருப்பவர்கள். இந்த இடஒதுக்கீடு என்பது எவ்வளவு பெரிய விசயம்? சாதாரணமானதல்ல.

இந்தியாவில் முதன்முதலில் சோசியல் எஞ்சினியரிங்

நீங்கள் பல எஞ்சினியரிங் பற்றி படிக்கீன்றீர்கள். என்வரான்மெண்ட் எஞ்சினியரிங் படிக்கின்றீர்கள். அதே போல கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிக்கின்றீர்கள். எலக்ட்ரானிக் என்று இந்த மாதிரி எஞ்சினியரிங் சப்ஜெக்டாக வருகிறது. ஆனால் அதை விட மிக முக்கியமானது அடிப்படையில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சோசியல் எஞ்சினியரிங். இந்தியாவிலேயே பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில்தான் முதல் முறையாக சோசியல் எஞ்சினியரிங் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. (கைதட்டல்). அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கொடுக்கக் கூடிய நிலை இருக்கிறது.

சோசியல் எஞ்சினியரிங்கில் என்ன இருக்கிறது என்று பல பேர் நினைக்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வை ஒழிப்பது. என்னங்க தனியார் துறையில் போய் இடஒதுக்கீடா? என்ன அக்கிரமம்? என்று ஆத்திரப்படக் கூடியவர்கள் இருக்கிறார்களா? அந்த சோசியல் எஞ்சினியரிங் உலகம் முழுவதும் எப்படியிருக்கிறது? வளர்ந்த நாடுகளாக இருக்கக் கூடிய அமெரிக்கா போன்ற நாடுகளிலேயேAffirmative Action என்ற பெயராலே அங்கே ரிசர்வேசன் இருக்கிறது.

வெள்ளை மாளிகை கருப்பு மாளிகையாக

அங்கே நிறபேதம் இருந்தது. ஒரு காலத்திலே கருப்பர்கள் என்று கருதினார்கள். அவர்கள் எல்லாம் ஒதுக்கப்பட வேண்டியவர்கள், அவர்கள் வேறு விதமாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள் என்று காலம் காலமாக, அழித்து வைத்திருந்தார்கள். அதற்கு எத்தனையோ தீர்ப்புகள் வந்தன. கருப்பர்கள் என்று அவர்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அந்த நாடே முதல்முறையாக வெள்ளை மாளிகை கருப்பு மாளிகையாக ஆகக் கூடிய அளவிற்கு மாற்றங்கள் வந்திருக்கின்றன என்று சொன்னால் சோசியல் எஞ்சினியரிங் தேவை எப்படிப்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சுனாமி பயம் போல்

கடலில் அலைகள் வேகமாக வந்தவுடனே எங்கே சுனாமி வந்துவிடுமோ என்று சிலர் பயப்படுவதைப் போல கடற்கரை ஓரத்தில் குடியிருக்கின்றவர்கள் பயப்படுவது அச்சம். இந்தப் பயம் சாதாரண, நியாயமான பயம்.

ஆனால், காலம் காலமாக அனுபவித்தவர்களுக்கு ஒரு அடி. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 96 பேர், அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக வந்திருக்கின்றார்கள். இந்த அலை எழும்பினால் எங்கே போய் நிற்கும் என்று கேட்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கின்றார்கள்.

தமிழ்நாடே வழிகாட்டி

தமிழ்நாடுதான் இதற்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு இருக்கிறது என்பதற்கு அடையாளம் என்னவென்று சொன்னால் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம் திராவிடர் இயக்கம், நீதிக்கட்சியின் பாரம்பரியமாக வந்த சமூக நீதியின் கோரிக்கை மிகப்பெரிய தடைகளை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கின்றது என்பதற்கு என்ன அடையாளம் என்றால் எந்த பார்ப்பனர்கள் இந்த சமூக அநீதிக்கு வித்திட்டார்களோ, அவர்களே இப்பொழுது எங்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்று கேட்க வேண்டிய அளவிற்கு வந்திருக்கின்றார்கள் என்று சொன்னால் இந்த இயக்கம் வெற்றி வெற்றிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். (கைதட்டல்) நாம் ஒன்றும் அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்கிற கொள்கை உடையவர்கள் அல்லர். எல்லோருக்கும் இடஒதுக்கீடு இருக்க வேண்டும். விமானத்திற்குச் செல்கிறவர்கள் யாராவது விழுந்தடித்துக் கொண்டு செல்கிறார்களா? கிடையாது.

முத்தையா முதலியார் வாழ்க்கை வரலாறு

ஏனென்றால் எவ்வளவு இடங்கள் இருக்கிறதோ அவ்வளவு இடங்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதே நேரத்திலே ரயிலுக்குப் போகிறவன் ஜன்னல் வழியாக எகிறிக்குதிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. காரணம் அன் ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் இருக்கிறது.

வகுப்புவாரி உரிமை உத்தரவைக் கொண்டு வந்த முத்தையா முதலியார் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். அதன் விளைவாக ஒவ்வொரு குழந்தைக்கும் முத்தையா என்று பெயரிடுங்கள் என தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். 1928லே கம்யூனல் ஜி.ஓ உத்தரவை வகுப்புவாரி உரிமையை முத்தையா முதலியார் அவர்கள் கொண்டுவந்தார்கள். அந்த வகுப்புவாரி உரிமையிலேயே 12 இடங்கள் என்று சொன்னால் அந்த 12 இடங்களிலே பார்ப்பனர்களுக்கும் தனியே இடங்களைக் கொடுத்தார்கள். எனவே யாருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படவில்லை.

12 இடங்களில்

இந்த வரலாற்றை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அன்றைக்கு மொத்த இடங்கள் 12 என்று சொன்னால், இந்து பார்ப்பனரல்லாதாருக்கு 5, பார்ப்பனர்களுக்கு 2, இஸ்லாமியர்களுக்கு 2, கிறிஸ்தவர்களுக்கு 2 ஆங்கிலோ இந்தியர்கள் உள்பட, ஆதி திராவிடர்கள் 1_மொத்தம் 12 இடங்கள். அய்ந்து மடங்கு ஆறு மடங்குகளுக்கு வாய்ப்புகளைக் கொடுத்தார்கள். வஞ்சிக்கப்படவில்லை அவர்கள். இன்றைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உணர்வுகள் ஏற்பட்ட காரணத்தினாலே பெரிய மாறுதல் ஏற்பட்டது. இன்றைக்கு கொண்டு வரக்கூடிய நிலை இருக்கிறது.

அரசியல் சட்டப்படிதான் பதவி பிரமாணம்

நாம் கேட்பது அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல. அமைச்சர் நெப்போலியன் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தின் மீது பதவி பிரமாணம் எடுத்துதான் பதவி ஏற்றார்கள்.

நம்முடைய வடசென்னை, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் இங்கே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றார்.

அவர்கள் எல்லாம் பதவிப் பிரமாணம் எடுத்த நேரத்திலே அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சரத்துகளின் படிதான் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். அந்த அரசியல் சட்டத்தில் தெளிவாக என்ன இருக்கிறதோ அதை செயல்படுத்துங்கள் என்று தான் கேட்கின்றோம். வேறொன்றும் அதிகமாக நாம் கேட்கவில்லை.

செங்கல்பட்டு மாநாட்டிலே தந்தை பெரியார் தீர்மானம் போட்டார்கள். பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று சொன்னார் பெரியார்.

பெரியாரிடம் கிண்டலாகக் கேட்டார்கள்

உடனே பலர் தந்தை பெரியார் அவர்களிடம் வழக்கம் போல கிண்டலாகக் கேட்டார்கள். பெண்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்று சொல்லுகின்றீர்களே அது எந்த அளவுக்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார்கள்.

பெரியாருக்கு அந்தக் கிண்டலின் தன்மை புரிந்தது. தந்தை பெரியார் சொன்னார் ஒன்றும் அதிகமான அளவுக்குக் கொடுக்க வேண்டாம். ஆண்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்கு உரிமை இருந்தால் போதும் என்று தெளிவாக எடுத்துச் சொன்னர்கள்.

பெரியாரின் உழைப்பினாலே வகுப்புவாரி உரிமை

அது மாதிரி இந்த சமுதாயத்திலே மற்றவர்கள் எவ்வளவு அனுபவிக்கிறார்களோ, அந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார். அரசியல் சட்டம் 16 (4). தந்தை பெரியார் அவர்களுடைய உழைப்பினாலே வகுப்புவாரி உரிமைக்காக 1951லே கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடுதான் வழிகாட்டியது.

பண்டித நேரு அவர்கள் பிரதமர். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அன்றைக்கு சட்ட அமைச்சர். அவர்கள் சட்டத்தையே உருவாக்கியவர்கள். அதிலே என்ன குறைபாடு என்று சுட்டிக்காட்டியவுடனே அதை ஏற்று 15 (4) என்னும் புதுப்பிரிவையும் அரசியல் சட்டத்தில் போட்டு கல்வி, உத்தியோகம் இப்படி எல்லாத்துறையிலும் சமூகநீதி வரவேண்டும் என்று நினைத்த நேரத்திலேதான் இந்த வாய்ப்பு வந்தது. கல்விக்கு இடஒதுக்கீடு இல்லையே

உத்தியோகத்திற்கு இடஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் கல்வியில் இடஒதுக்கீடு இல்லையே. தொட்டியில் தண்ணீர் இருந்தால்தானே கீழே உள்ள குழாயைத் திறந்தால் தண்ணீர் வெளியே வர முடியும். ஆகவேதான் 15 (4) என்பது மிக முக்கியம்.

இங்கே நம்முடைய கிளர்ச்சியின் காரணமாக தமிழ்நாட்டினுடைய போராட்டத்தின் காரணமாகத்தான் இது வருகிறது என்று நேரு அவர்கள் நாடாளுமன்றத்திலே சொன்னார்கள்.

இவ்வளவு நீண்ட சரித்திரத்தை உடைய ஒரு சமூக நீதிப்போராட்டம், அந்தப் போராட்டத்-தினுடைய விளைவாக நீங்கள் இன்றைக்கு வந்திருக்கின்றீர்கள். உங்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லுகிற அதே நேரத்திலே சமுதாயத்திலே அடித்தளத்திலே இருக்கக் கூடியவர்களுக்கு நீங்கள் கைகொடுங்கள்.


தன்னம்பிக்கையை ஏற்படுத்த ஒரு குறிப்பிட்டவர்கள் அய்.ஏ.எஸ், பதவிக்கு வந்தால் அந்தச் சமுதாயமே முன்னேறியதாக ஆகிவிடுமா என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லுகின்றேன். மண்டல் அவர்கள் எழுதுகிறார்கள். முதலாவதாக, அந்தப் பிரிவினர் படித்து முன்னேறிவிட்டால் அந்த சமுதாயமே உயர்ந்ததல்ல என்பது எனக்குத் தெரியும் ஆனால் அது ஒரு தன்னம்பிக்கையை மற்றவர்களுக்கு உருவாக்குகிறது.

நாம் வரமுடியாது என்று அவர்கள் கருதியிருந்த எண்ணத்தை மாற்றி நம்மால் முடியும். நம்மால் வரமுடியும் என்று சொல்லக் கூடிய தன்னம்பிக்கையை வளர்க்கிறார்கள்.

ரோல் மாடல்களாக

எனவேதான் இங்கு வந்திருக்கிறவர்கள் எல்லாம் பிறருக்கு ரோல்மாடல்கள் இளைஞர்களுக்கு ரோல் மாடல்கள். நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழுங்கள்; மற்றவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

நாங்கள் பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம் என்று கடந்த 20 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகின்றோம்.

நம்முடைய பிள்ளைகளுக்கு சிறப்பாக பெரியார் திடலிலே சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இலக்கு மட்டும்தான் தெரிகிறது என்று குறி வைத்து படித்ததினாலே சிறப்பாகத் தேர்விலே வெற்றி பெற்றிருக்கின்றீர்கள். அடுத்ததாக மாணவர்களுக்கு உங்களுடைய அனுபவங்களை நீங்கள் சொல்ல வேண்டும். முதல் முறையாக இல்லாமல் இரண்டாவது முறையாக, மூன்றாவது முறையாக வெற்றி பெற்றவர்கள் இருப்பீர்கள்.

அதைத் தாராளமாக நீங்கள் எடுத்துக்கூறுகின்ற பொழுது தான் மற்றவர்களுக்கு ஒரு துணிவு வரும். நாம் ஒரு முறை தோற்றுப்போனால் ஏதோ கவுரவப் பிரச்சினை மாதிரி மற்றவர்களுக்குத் தெரியும்.

தோற்றதால் தான் இன்று நெப்போலியன் அமைச்சர்

பல நேரங்களில் தோல்வியே வெற்றியாக அமையும். இதோ நெப்போலியன் அவர்கள் இருக்கின்றார்கள். அவரை மயிலாப்பூர் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்று ஆக்கிய அந்த வாக்காளர்களுக்கு நான் மனதார நன்றி செலுத்துகின்றேன். அவர்கள் செய்த செயலால்தான் இன்றைக்கு நெப்போலியன் அவர்கள் மத்திய அமைச்சராகவே வந்து உட்கார்ந்திருக்கின்றார். (கைதட்டல்) எனவே தோல்வியினாலே அற்புதமாக வெற்றிகளும், அதன் விளைவுகளும் வரும் (கைதட்டல்). என்பதற்கு இங்கே கூட ஓர் எடுத்துக்காட்டு இருக்கிறது. ஆகவேதான் தைரியமாக தோல்வியையும் எதிர்க்கக்கூடிய பக்குவம் உங்களுக்கு வரவேண்டும்.

----------------தொடரும் ...."விடுதலை" 11-8-2009

0 comments: