Search This Blog

10.8.09

பாபர் மசூதி இடிப்பு - சங்கரராமன் கொலை -மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு வழக்கு


மூக்கறுபடும் மூன்று வழக்குகள்



பாபர் மசூதி இடிப்பு

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கு

மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு


1) இம்மூன்று வழக்குகளின் தீர்ப்பை இந்திய மக்கள் வெகுவாக எதிர்பார்க்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னதாகவே இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் யார் என்ற எண்ணம் பொது மக்களின் அடி மனத்திலே பதிந்து விட்டவையே. ஆனால் வழக்கு போகும் போக்கைப்பார்த்தால் மக்கள் மத்தியில் பல அய்யப்பாடு அலைகள்...

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் 49 பேர் வெளியில் சுதந்திரமாகத் திரிகிறார்கள்.
இவ்வளவுக்கும் வீடியோ சாட்சியங்கள்கூட வெளிப்படையாக இருக்கின்றன.

குற்றங்களோ சாதாரணமானவையல்ல. கலகம் விளைவித்தல் (இபிகோ (147), குரோத உணர்வைத் தூண்டுதல் (153ஏ) சட்ட விரோதமாகக் கூடுதல் (149) தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல் பா.ஜ.க., சங்பரிவார் பெருந் தலைவர்களின்மீது இவ்வளவு பெரிய குற்றச்சாற்றுகள்!

இவ்வளவு இருந்தும் ஒன்றுமே நடக்காததுபோல நாட்டிலே ஒரு மவுனம் நிலவுகிறது. 17 ஆண்டுகள் ஓடி விட்டனவே. மக்கள் மறந்தே போய்விட்டனர். எந்த யுகத்தில் தீர்ப்பு வரும் என்று யாருக்கும் தெரியாது. காந்தி-யார் படுகொலை வழக்கில் வெளிவந்த செய்தி போலவே, இவ்வழக்கறிஞர் சில ஆவணங்கள் காணவில்லை என்று தகவல் வெளி வந்துள்ளது.

2) சங்கரராமன் கொலை வழக்கு

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு. இதில் முக்கிய குற்றவாளிகள் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகிய இருவரும் உள்பட மொத்தம் 24 பேர்கள்மீது வழக்கு. என்னென்ன குற்றங்கள்? அந்த வழக்கின் நிலையும் என்ன? மிக முக்கிய சாட்சிகளான படுகொலை செய்யப்பட்ட சங்கரராம-னின் மனைவி, பத்மா மகள் உமாமைத்ரேயி, மகன் அனந்தகிருஷ்ணன் வர்மா ஆகியோர்கூட பல்டி அடித்து விட்டனர்; நேரடி சாட்சிகளான கணேஷ், குப்புசாமி, துரைக்கண்ணு மற்றும் சங்கராமன் குடும்பத்தினர் நழுவலாக சாட்சியளித்தனர்.
குஜராத் பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியான ஜாஹிரா அடித்த பல்டிக்கு நிகரானது இது.

வழக்குகளோ சாதாரணமானவையல்ல கொலை செய்யத் தூண்டுதல் (இபிகோ 302) கூட்டுச் சதி (120பி) பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல் (34) கொலை (201).

இத்தனை ஆண்டு கால இடைவெளி நாட்டில் என்னதான் நடக்கிறது? குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றோர் சாதாரணமானவர்களா? வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம் மறுபடி ஏமாற்றம்!

மாலேகவ்ன் குண்டுவெடிப்பு வழக்கு!

மூன்றாவது, மகாராட்டிர மாநிலம் மாலேகான் சிமி அலுவலக முன் குண்டு வெடிப்பு! (29.9.2008)

5 பேர் பலி, 90 பேர் படுகாயம் மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்ட சதி!

அந்த மோட்டர் பைக்குக்குச் சொந்தக்காரர் பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்கூர் என்பவர் மாணவப் பருவந்தொட்டு ஆர்.எஸ்.எஸில் தொடர்பு கொண்டவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் குஜராத் முதல் அமைச்சர் மோடியின் அன்புக்குப் பாத்திரமானவர் ஆதலால் குஜராத்தில் சூரத்தில் குடியேறியவர்.

இதில் மிக முக்கிய குற்றவாளி கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் - இராணுவத்தில் புலனாய்வுத்துறையில் பணி புரிந்தவர். பயிரை மேய்ந்த வேலி இவர். மகாராட்டிர மாநிலம் நாசிக் அருகில் போன்ஸ்லா என்ற இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தவர்.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையாள்வது எப்படி போன்ற பயிற்சிகளை இந்துத்துவவாதிகளுக்கு அளிக்கும் இராணுவ அதிகாரி. வெடிகுண்டுக்குப் பயன்படுத்தப்-பட்ட வெடி மருந்தோ வெளியில் எங்கும் கிடைக்காதது. பாகிஸ்தான், இந்தியா இராணுவத் துறையில் மட்டும் கிடைக்கக் கூடியதாம். இராணுவத்தையே இந்துத்துவாவுக்குப் பயன்படுத்தும் பயங்கரவாதிகள் இவர்கள்.

இந்தியாவை இந்துமயமாக்கு இந்திய இராணுவத்தையும் இந்துமயமாக்கு! - என்பதுதானே ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கூட்டத்தில் குரல்.

கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டவர்கள் பதினொன்று பேர்.
லெப்டினென்ட் கர்னல் பி.எஸ். ஸ்ரீகாந்த் பிரசாத புராஹித், பெண் சாமியார் பிரக்ஞா சிங்தாக்கூர், சாமியார் தயானந்த பாண்டே, சிவநாராயணன் கல்சன்கரா, ஷாம்சாகு, முன்னாள் இராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாயா, சமர்குல்கர்னி.அஜய ரசிர்கர், ராகேஷ் தாவ்டே, சுதாகர் சதுர்வேதி, ஜெகதீஷ் மார்த்ரே ஆகியோர் குற்றவாளிப் பட்டியலில் உள்ளவர்கள்.

பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு வெடிப்புகளிலும் இந்தக் கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்கிற அளவுக்குத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு 4000 பக்கங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் இராணுவ அதிகாரி புரோ-கித் என்பவர் தயாரித்து வைத்திருந்த திட்டம் திடுக்கிடக் கூடியதாகும்.

இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான திட்டம் அது! அதற்கான வரைபடம் அரசியல் சட்டம், கொடி முதலியவை எல்லாம் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

இசுரேலில் தஞ்சமடைந்து போட்டி அரசு அமைப்பது என்கிற அளவுக்குப்போயிருக்கிறார்.
இந்த நிலையில் என்ன நடந்தது?

தீவிரவாதத் தடுப்புக் காவல்துறையின் முக்கிய அதிகாரியாக இருந்து, தீவிரமாகப் புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்துக் கைது செய்து 4000 பக்கங்களைக் கொண்ட அறிக்கையும் உருவாவதற்குக் காரணமாக இருந்த ஹேமந்த் கார்க்கரேயும் மற்ற இரு முக்கிய அதிகாரிகளும் மும்பைத் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானார்கள் என்ற செய்தி வந்தது.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை நடத்துவதில் உயிர் நாடியாக இருந்த அதிகாரி கொல்லப்பட்டு விட்டார்.

இதில் ஏதோ சதி இருக்கிறது என்ற சந்தேகம் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல; மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் அந்துலே அவர்களுக்கே வந்தது. நாடாளுமன்றத்திலேயேகூட பிரச்சினைப் புயலைக் கிளப்பினார்.

அவருடைய சந்தேகம் நியாயமானது என்று ராஷ்டிரிய ஜனதா தளம் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ் வாடி கட்சி, காங்கிரசைச் சேர்ந்த சில மூத்த தலைவர்களும்கூட அந்துலேக்கு ஆதரவாக நின்றனர்.

அந்துலே எழுப்பிய வினாக்கள் மிகவும் விவரமானவை, வினயமானவை!

தீவிரவாதத் தடுப்புக் குழுவின் தலைவர் ஹேமந்த் கார்க்கரேயையும், அவருடன் இரு மூத்த அதிகாரிகளையும் சேர்த்து காமா மருத்துவமனைக்கு அனுப்பியவர் யார்? உத்திரவிட்டவர் யார்? எந்தச் சூழ்நிலையில் அம்மூவரும், பொதுவாக யாரும் அறிந்த சம்பிரதாயப்படி ஒரே வாகனத்தில் சம்பிரதாய விதிமுறைகளைமீறி பயணம் செய்தனர். சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் பணியிலிருந்த அம்மூவரையும் அங்கிருந்து விடுவித்தது யார்? தாஜ் ஹோட்டலுக்கு, ஓபராய் ஹோட்டலுக்கும் போகாமல் காமா மருத்துவமனைக்கு போகச் செய்தற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். யாரோ ஒருவர் அவர்களை அங்கு போகும்படி சொல்லியிருக்க வேண்-டும். புலன் விசாரணையில் தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம்கள் அல்லாத சிலர் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தவர் கார்கரே! தீவிரவாதத்தில் அடி வேர் வரை சென்று உலுக்கி எடுத்த சூறாவளியும்கூட!

தீவிரவாத எதிர்ப்பில் பலியானாரா?இல்லை அதைத் தவிர வேறு கூடுதல் காரணங்களுக்காகப் பலியானாரா என்பது எனக்குத் தெரியாது. அவர் முடிவு எப்படி நடந்தது என்பது தனியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் அந்துலே!

அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டதா? எதுவும் இல்லாமலே போய் விட்டதே! ஒரு முக்கிய சதிப் பின்னல் வழக்கில் தீவிர பணியில் ஈடுபட்டு, பலவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் ஒரு முக்கிய கட்டத்தில் கொல்லப்பட்டதானது திடுக்கிடக் கூடியதுதான் திகி-லூட்டக் கூடியதுதான்.

இப்பொழுது அந்த வழக்கின் நிலை என்ன? அந்த 11 பேர்களின்மீது இருந்த கடுமையான குற்றங்களுக்கு ஆதாரங்கள் இல்லையாம்.

இவர்கள் எல்லோரும் அபினவ் பாரத் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள். குண்டு வெடிப்புக்குக் காரணம் இந்து அமைப்பினர்தான் என்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது. இவர்கள் எல்லோரும் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டு கடும் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதை ரத்து செய்கிறேன் என்று மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிண்டே கூறி விட்டார். மற்றபடி சாதாரண நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுமாம்.
இந்தியாவில் பரவலாகப் பேசப்பட்ட மூன்று வழக்குகளின் கதி இந்த நிலைக்குத் தேரையாகத் தேய்ந்துவிட்டது.

ஆட்சி யார் கையில் இருந்தாலும் நிருவாகத்தின் கை எங்கே இருக்கிறது என்பதுதானே முக்கியம்?

மனுதர்மம் ஆட்சியில் நிருவாகத்தில், நியாயமன்றத்தில் நேரடியாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அதன் சாரத்தின் காரம் குறையவில்லையே!

------------------- மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை "விடுதலை"ஞாயிறுமலர் 8-8-2009

2 comments:

Thamizhan said...

சட்டம் ஒரு கழுதை--பெர்னார்ட் ஷா.

இந்தியாவில் சட்டம் சட்டப் புத்தகத்தையே தின்று மக்கள் முகத்தில் துப்பிக் கொண்டுள்ளது.சாட்சிகளை மாற்றியதற்காகச் சுப்புணியை இன்னும் அதிகமாகத் தண்டிக்கலாம்,துணிவில்லையே!
ரவி யின் தலைக்கு என்ன தரப்போகிறாரோ சுப்புணியார்!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா