ஓய்வு வயது அறுபத்திரெண்டா?
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60லிருந்து 62 ஆக உயர்த்தப்பட இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதற்கான கருத்துருவை மத்திய அரசிடம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்குக் கூறப்படும் காரணம் மிகவும் விசித்திரமானது. மத்திய அரசு ஊழியர்கள் ஒரு லட்சம் பேர் இவ்வாண்டு ஓய்வு பெறவிருப்பதாகவும், ஒரே சமயத்தில் இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் ஓய்வு பெற்றால் அதற்குரிய பணிக்கொடை, ஓய்வூதியம் முதலியவற்றிற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுமாம். மேலும் புதிய ஊழியர்களை அமர்த்தினால் அதற்காகவும் பெருந்தொகை தேவைப்படுமாம்; அதற்காகத்தான் 60 லிருந்து ஓய்வு வயது 62 ஆக உயர்த்தும் ஏற்பாடாம்.
பொருளாதாரத்தில் கரை கண்ட மேதைகள் என்று கூறப்படுபவர்களின் சிந்தனையின் லட்சணம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்காக இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவைப்படாது. ஓய்வு வயதை இரண்டாண்டு காலம் உயர்த்தினாலும் இரண்டாண்டு கழித்தும் இதே பிரச்சினைதானே உருவாகும். அந்தக் காலகட்டத்தில் மேலும் இரண்டாண்டுகள் ஓய்வு வயதை உயர்த்துவார்களா?
உப்பு அதிகமாகப் போய்விட்டது என்று கூறி தண்ணீர் ஊற்றுவதும், தண்ணீர் அதிகமாகப் போய்விட்டது என்று கூறி உப்பை அள்ளிப் போடுவதும் போன்ற பைத்தியக்காரத்தனம்தான் இது என்பதில் அய்யமில்லை.
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது ஓய்வு வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது (12.5.1998). அதன்மூலம் 28 லட்சம் ஊழியர்கள் மேலும் இரண்டாண்டுகள் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றனர்.
அந்தக் காலகட்டம் என்பது, மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசு அலுவலகங்களுக்குள் நுழையும் வாய்ப்பு இருந்தது.
அதனைத் தட்டிப் பறித்து, ஏற்கெனவே மத்திய அரசு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் மேலும் ஈராண்டு பலன் பெறும் வாய்ப்புக்கு வழி செய்யப்பட்டது.
அதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோர் 7,56,000 பேர்களின் வாய்ப்பும் தாழ்த்தப்பட்டோர் 6,30,000 பேர்களின் வாய்ப்பும் தடை செய்யப்பட்டது. அதனை எதிர்த்து நாடெங்கும் சைக்கிள் பேரணி நடத்தியது திராவிடர் கழகம் மட்டுமேதான்.
அதற்கடுத்தபடியாக இப்பொழுது மேலும் இரண்டாண்டுகள் ஓய்வு வயது கூடுதலாக்கப்படுகிறது என்றால், இதன் பொருள் வேலை வாய்ப்பற்ற கோடானுகோடி மக்களின் எதிர்காலம் இருட்டடிக்கப்படுகிறது என்பதே!
இந்தியாவில் வேலை வாய்ப்பற்றோர் எண்-ணிக்கை 3.47 கோடி. நகர்ப்புறங்களில் 18.5%, கிராமப்-புறங்களில் 15.7% பட்டதாரிகளுக்கு வேலையில்லை. 15 முதல் 29 வயதுவரை உள்ளிட்ட பெண்களுக்கு நகர்ப்புறத்தில் 30.4% கிராமப்புறங்களில் 36.3%. வேலை வாய்ப்பு இல்லை. 2011 இல் 2 கோடியே 33 லட்சமாகக் குறையக்கூடும் என்று மக்களவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னாண்டசு தெரிவித்தார் (22.4.2008).
வேலையில்லாத் திண்டாட்டம் இந்த அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் தலைவிரித்தாடும் ஒரு வேளையில் ஓய்வு வயதை உயர்த்துவது என்பது என்ற எண்ணமே அபாயகர மானதாகும்.
நாட்டில் வன்முறைக் கலாச்சாரம் பெருகுகிறது பெருகுகிறது என்றும், இதற்கு முக்கிய காரணம் வேலை வாய்ப்பு இன்மையே என்றும் ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினையை இணக்கமாக அணுகுவதற்குப் பதிலாக, தீயை அணைக்கத் தண்ணீரை ஊற்றுவதற்குப் பதிலாக பெட்ரோலை ஊற்றும் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையில் மத்திய நிதியமைச்சர் இறங்கலாமா?
இதில் வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டும் அடங்கியிருப்பதாகக் கருத முடியாது கூடாது; சமூகப் பிரச்சினையும் முக்கியமாக அடங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
புதிய வேலை வாய்ப்பின் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மக்கள் தொகையில் பெரும்பகுதியினரான இவர்களைப் புறக்கணித்து-விட்டு திட்டம் தீட்டுவது எந்த ஊர் ஜனநாயகம் என்றே தெரியவில்லை.
தீட்டப்படுவது எந்தத் திட்டமாகயிருந்தாலும் அதில் இந்தச் சமூகநீதிக் கண்ணோட்டமும் மிகவும் முக்கியம் என்பதை மறந்துவிடக்கூடாது.
எனவே, ஓய்வு வயதை உயர்த்தும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இல்லையேல், வெகுமக்கள் கிளர்ச்சி என்பது தவிர்க்கப்பட முடியாததாகிவிடும். எச்சரிக்கை!
----------------"விடுதலை"தலையங்கம் 17-8-2009
0 comments:
Post a Comment