Search This Blog

10.8.09

பெரியார் இல்லாவிட்டால் சமூகநீதி ஏது?


நாங்கள் கல்லூரிக்கு மனு போடுவதற்கே பலரைத்
தேடிச்சென்று விவரம் கேட்க வேண்டியநிலை அந்தக்காலம்
சமுதாய சூழ்நிலையை விளக்கி தமிழர் தலைவர் உரை


நாங்கள் கல்லூரிக்கு மனு போடுவதற்கே பலரைத்தேடிச் சென்று விவரம் கேட்டு மனு போட்ட காலம் அந்தக் காலம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 25.7.2009 அன்று நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

இந்த நெப்போலியன் போராட வேண்டியிருக்கிறது

இன்றைக்கு எல்லையற்ற ஒரு மகிழ்ச்சியை இரண்டு காரணங்களாலே நாம் பெறுகிறோம். ஒன்று, சமூக நீதித்துறையிலே சமூக நீதியைப்பற்றி அக்கறை கொண்டவர்கள் பொறுப்பிலே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நமக்கு அதிலே பயனுள்ளதாக இருக்கும் என்ற அளவிலே முதல் முறையாக தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒருவர் அதுவும் திராவிடர் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சார்பிலே வெற்றி பெற்ற ஒருவர் மத்திய அரசிலே இணை அமைச்சராக சமூக நீதித்துறையிலே அமர்ந்து வாழ்நாளிலே இது எனக்கு கிடைத்தற்கரிய பேறு; நான் பொறுப்பிலே இருக்கும் பொழுது என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவும் செய்வோம் என்ற ஒரு உறுதியை; நம்முடைய மாண்புமிகு இணை அமைச்சர் சகோதரர் நெப்போலியன் அவர்கள் இங்கே சொன்னர்கள்.

நெப்போலியன் என்ற பெயரே ரொம்ப சிறப்பான பெயர். வரலாற்றிலே முக்கியத்துவம் வாய்ந்த பெயர். அந்த நெப்போலியன் பல போர்களிலே வென்றிருக்கின்றார். ஆனால், இந்த நெப்போலியன் அவர்கள் போராட வேண்டிய போர்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. ஏனென்றால் அந்த நெப்போலியனுக்கு எதிரிகள் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள். ஆனால், இந்த நெப்போலியனுக்கோ கண்ணுக்குத் தெரியாதவர்கள் நிறைய இருக்கிறார்கள். (கைதட்டல்)
இதுதான் இருப்பதிலேயே சிக்கலான விசயங்கள். ஆனால், நாங்கள் அதற்கெல்லாம் துணையாக இருப்போம். எங்களுடைய பணி அதுதான். சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ் படை போல. எப்பொழுதும் முன்னாலே இருப்போம். அதற்காக நீங்கள் கொஞ்சம் கூட அஞ்சவேண்டிய அவசியமில்லை.

கலைஞர் சரியாக நியமித்திருக்கின்றார்

காரணம், முதல்வர் கலைஞர் அவர்கள் உங்களை சரியாகத்தான் நியமித்திருக்கின்றார். இதனை இவனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்
என்று சொல்லக்கூடிய அளவிற்கு வைத்திருக்கிறார்கள். எனக்கொரு பெரிய மகிழ்ச்சி. பல பேர் கூட நினைக்கலாம். இவர் திரைப்படத் துறையைச் சார்ந்தவராயிற்றே. இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்று நினைக்கலாம். ஆனால், எல்லோரும் தங்களுடைய எண்ணத்தை திருத்திக்கொள்ளக் கூடிய வகையிலேயே அவர்கள் எடுத்த எடுப்பிலேயே ரொம்ப அற்புதமான வகையிலே சொன்னார்கள். குறட்டை விட்டுத் தூங்கியவர்களை எல்லாம்
சமூக நீதியினுடைய வேர், சமூக நீதியினுடைய வரலாறு, அதனுடைய சாதனைகள் செல்ல வேண்டிய எல்லை, இலக்கு இவை அத்தனையும் அவர்கள் ஆரம்பத்திலேயே தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் பதவி ஏற்றவுடனே எங்கெங்கே குறட்டைவிட்டுத் தூங்கக் கூடிய இடங்கள் எல்லாம் என்று பார்த்து குறட்டை விட்டுத் தூங்கியவர்களை எல்லாம் அங்கே தட்டி எழுப்பியிருக்கின்றார்கள்.

இதுவரைத் தமிழனைத் தட்டி எழுப்புவதுதான் நம்முடைய வேலையாக இருந்தது. இப்பொழுது வடக்கேயும் குறட்டைவிட்டுத் தூங்கக் கூடிய ஓர் அற்புதமான பணியை செய்கிறபொழுது எங்களைப் போன்ற குள்ள உருவம் இருந்து செய்தால் எழுந்து பார்த்து மறுபடியும் படுத்துவிடுவார்கள். ஆனால் இவரைப் போன்றவர்கள் செய்தால்தான் அவர்கள் விழித்துப் பார்த்தவுடனே அரண்டு போய் எழுவார்கள். பயப்படுவார்கள்.
ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சிறப்பான பணிக்குத் தகுதியான ஒருவர் வந்திருக்கிறார். கமிட்-மெண்ட் அண்டு இன்வால்வ்மெண்ட் என்று சொல்லக் கூடிய அளவிற்கு உறுதிப்பாடு, ஈடுபாடு. இந்த உறுதிப்பாடும், ஈடுபாடும் அவரது துறையிலே அவர்கள் காட்டு-கின்ற பல்வேறு பணிகளை சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள்.

முதல்முறையாக பாராட்டுகிறேன்

முதல் முறையாக இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்துகொண்டு அவரை வாழ்த்துவதிலே, அவரை பெருமைப்படுத்துவதிலே நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த அரங்கம் சிறியதாக இருக்கலாம். ஆனால், மத்திய அமைச்சர் நெப்போலியன் அவர்களுடைய பணியை உலகம் முழுவதும் இருக்கின்ற கோடானுகோடி ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகப்பெரிய அளவிலே பாராட்டக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
நம்முடைய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர், கோ.கருணாநிதி அவர்கள் இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து, அதற்காகவே இவ்வளவு நண்பர்களை எல்லாம் திரட்டியிருக்கிறார்கள்.

சென்ற முறையும் இதே போன்று மிக அருமையாக நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த மூன்று எழுத்து இருக்கிறது. அய்.ஏ.எஸ் _ அய்.பி.எஸ் நமக்கு சுலபமாகக் கிடைக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எங்கள் தலைதானா கிடைத்தது?

காரணம், நமக்கெல்லாம் தலை எழுத்து சரியாக இல்லை. ஆகவே தான் இப்படி எல்லாம் இருந்தது என்று ஒரு காலத்திலே நினைத்திருந்த நேரத்திலேதான் தந்தை பெரியாரைப் போன்றவர்கள், அதே போன்று நீதிக்கட்சித் தலைவர்கள், அதற்கடுத்து திராவிட இயக்கத் தலைவர்களாக இருந்த நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள், பெருந்தலைவர் காம-ராஜர் அவர்கள் இன்றைக்கும், சமூகநீதிக்கொடியை இந்தியாவிலே உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கின்ற நம்முடைய ஆற்றல் வாய்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டிருக்கலாம். இவர்கள் தான் கேள்வி கேட்டார்கள். யார்? உங்களுடைய தலையிலே எழுதியது? அவர்களைக் காட்டுங்கள். இப்படி எழுதுவதற்கு எங்கள் தலைதானா கிடைத்தது? மற்றவர்கள் எல்லாம் தலையைக் காட்ட மறுத்துவிட்டுப் போய்விட்டார்களா? என்று தெளிவாக, துணிவாகக் கேள்வியை எழுப்பினார்கள்.

வெற்றி வாகை சூடிய வீரர்கள்

இன்றைக்குத் தன்னம்பிக்கையினுடைய சிகரங்களாக, வெற்றிவாகை சூடிய அற்புதமான வெற்றி வீரர்களாக இங்கே நம்முடைய இளைஞர்கள், தோழியர்கள், இருபால் இளைஞர்கள் அற்புதமாகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.

உங்களைப் பாராட்டுவது

இதுதான் எடுத்துக்காட்டு. உங்களைப் பாராட்டுவது இவர்களுக்காக அல்ல; உங்களுடைய பெற்றோகளுக்காக மட்டுமல்ல; இந்தச் சமுதாயத்திற்கும், எங்களுக்கும் திறமை உண்டு.

முதலில் வாய்ப்பு வேண்டும்

எங்களுக்கும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றல் வெளியே வரவேண்டும். எவ்வளவுதான் ஒருவர் அறிமுக மானவராக இருந்தாலும் அவர் பேச்சாளர் என்று வெளியே தெரிவதற்கு முதலில் ஒலிபெருக்கி வேண்டும். மேடை அவருக்குக் கிடைக்க வேண்டும். அது கிடைத்-தால்தான் அவருடைய ஆற்றலை அறிவை, திறமையை, தகுதியை வெளியே கொண்டுவர முடியும். அதுபோன்ற ஒரு சூழல்.

உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்து நீங்கள் கடுமையாக உழைத்த நேரத்திலே உங்கள் எல்லோருக்கும் இந்த அமைப்பின் சார்பாக பாராட்டுதல்களை, வாழ்த்துகளைத் தெரிவித்துக்-கொள்கிறோம். காலம் காலமாக அழுத்தி வைக்கப்பட்ட சமுதாயம்
நீங்கள் நல்ல அளவுக்கு வளர வேண்டும்; வளருவீர்கள். இன்றைக்கு உங்களுடைய உழைப்பினாலே எவ்வளவு பெரிய வெற்றியை நீங்கள் ஈட்டியிருக்கின்றீர்களோ, அந்த உழைப்பு நல்ல வண்ணம் மேலும் மேலும் மெருகேற்றப்பட வேண்டும். மெருகேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் உண்டு.

ஏனென்றால், காலம் காலமாக அழுத்தி வைக்கப்பட்ட சமுதாயம் நம்முடைய சமுதாயம். ஒரு உதாரணத்தை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதிலே ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்று சொன்னால் இங்கே பாராட்டுப்பெற்ற அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், மாணவர்கள் அவரவர்களுடைய மாவட்டத்தைச் சொன்னார்கள்.அதிலே இன்னும் ஆழ்ந்து பார்த்தீர்களேயானால் பல கிராமங்களிலிருந்து அருமைத் தோழர்கள், தோழியர்கள், தேர்ந்து வந்திருக்கிறார்கள். பல கிராமங்களிலிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள்.

பல கிராமத்துப் பிள்ளைகள் வந்திருக்கின்றார்கள்

கிராமத்திலிருந்து வரக்கூடிய பிள்ளைகள் என்பது முதல் தலைமுறை இரண்டாவது தலைமுறை. இன்னும் கேட்டால் என்னைப் பொறுத்த வரையிலே நான் முதல் தலைமுறையிலிருந்து வந்த ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தவன்.

1950இல் எஸ்.எஸ்.எல்சி முடித்துவிட்டு அண்ணா மலைப் பல்கலைக்கழகம் எங்களுடைய ஊர் கடலூருக்குப் பக்கத்திலே இருந்த காரணத்தினாலே ரயிலிலே சென்று படிக்கக் கூடிய வாய்ப்பைப் பெறுகின்ற நேரத்தில் இன்ட்டர் மீடியட் என்ற படிப்பு இருந்தது. வயதானவர்-களுக்கு மட்டும் தெரியும்.

அந்த இன்ட்டர் மீடியட் படிப்பிற்கு எப்படி மனு போடுவது என்று அப்பொழுது எங்களுக்குத் தெரியவில்லை. பல பேரை நாங்கள் போய் பார்த்து இந்த மனுவை எப்படிப் பூர்த்திசெய்வது என்பது எங்களுக்குத் தெரியாது.

காரணம், எங்களுடைய வீட்டிலே பெற்றோர்கள் படித்தவர்கள் அல்லர். அதே போல எங்களுக்கு வழிகாட்டக் கூடிய அளவுக்கு எங்களுடைய சகோதரர்கள் படித்தவர்கள் அல்லர். எனவே எங்கள் குடும்பத்திலே முதல் பட்டதாரியே நான் தான்.

பெரியாருக்கு முன் - பெரியாருக்குப் பின்

பல பேரை பார்க்கும் பொழுது மற்றவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். தமிழ்நாட்டினுடைய சமூக நீதி வரலாற்றை எழுத வேண்டும் என்று சொன்னால் எப்படி கி.பி., கி.மு.,என்று பிரிக்கின்றார்களா அதேபோல

பெரி-யா-ருக்கு முன்னால், பெரியாருக்குப் பின்னால் என்று தான் சமூகத்தைப் பிரிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் கொஞ்சநாள்களுக்கு முன்னாலே அற்புதமாகத் தீர்ப்பு எழுதுவதைப் போலச் சொன்னார்கள். அப்ப டிப்பட்ட ஒரு சமுதாய மாற்றம் தான் தேவை.

சமூக மாற்றங்கள் எளிதாக வராது

இந்த நாட்டிலே அரசியல் மாற்றங்கள் எளிது. பொருளாதார மாற்றங்களும் ஓரளவுக்குப் போராடி வெற்றி பெறக்கூடிய சூழல் வரலாம். ஆனால் சமூக மாற்றங்கள் என்பதிருக்கிறதே, அது அவ்வளவு எளிதாக வந்துவிட முடியாது.

நம்முடைய அமைச்-சர் அவர்களுடைய துறை Ministry of social Justice என்று நிறுத்திவிடாமல், அடுத்து இன்னொரு வார்த்தையும் போட்டி-ருக்கின்றார்கள். Emporsment என்று இப்பொழுது போராட்டமே அதுதான். நீங்கள் எல்லாம் அய்.ஏ.எஸ் அதிகாரிகளாக அய்.பி.எஸ் அதிகாரிகளாக வரவேண்டும் என்று விரும்பியவர்கள் நாங்கள். வகுப்புரிமைப் போராட்டம் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே நடந்தது.

அதிகாரம் சேர வேண்டிய இடத்திலே சேர வேண்டும் என்பது சாதாரணமல்ல. அதற்கு மிகப் பெரிய போராட்டங்களை நடத்தித்தான் வந்திருக்கிறார்கள். எனவே எல்லாத் துறைகளிலும் போராட்டம்.

ஆளும் வர்க்கம் அவர்களல்லவா?

ஜனநாயகத்திலே வயது வந்தவர்களுக்கு வாக்களிப்பு; அதுவும் 18 வயது வந்தாலே வாக்குரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதன் மூலமாக ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் இதுவரையிலே அவர்களுடைய பிரதிநிதிகளை எக்கட்சியினராக இருந்தாலும் பரவலாக அவர்களைத் தோந்தெடுக்கக் கூடிய ஒரு வாய்ப்பு. வந்திருக்கிறது. சமூகநீதிச் சிந்தனை அங்கே வந்துவிட்டது.

ஆனால், பீரோகிரசி என்று சொல்லக்கூடிய அதிகார வர்க்கம் இருக்கிறதே அந்த அதிகார-வர்க்கத்திற்கு அவர்கள் வந்தார்களா? இல்லை. அமைச்சராக மற்றவர்களாக வந்தாலும் கூட, அந்த பீரோகிரசி என்கிற நிருவாக எந்திரம். அவ்வளவு வேகமாகச் சுழலாது.
அது மட்டுமல்ல; அதிகார வர்க்கத்தினர் எப்படி எல்லாம் சொல்ல முடியுமோ அப்படி எல்லாம் சொல்லிவிடுவார்கள். அய்.ஏ.எஸ் போன்ற மிக முக்கியமான இடத்திலே நிருவாகத் துறையிலே வரக்கூடியவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள், கிராமத்திலே இருக்கக் கூடியவர்கள். சமுதாயத்தின் அடித்தட்டிலே இருக்கக்கூடியவர்கள் வரவேண்டும் என்று சொன்னால் இரண்டு காரணம் தேவை. மண்டல் அவர்கள் இல்லாவிட்டால், நீங்கள் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்க முடியாது.

பெரியார் இல்லாவிட்டால் சமூகநீதி ஏது?

எப்படித் தந்தை பெரியாரும், நீதிக்கட்சியும் இல்லாவிட்டால் சமூக நிதியைப் பெற்றிருக்க முடியாதோ, அது போல மண்டல் கமிஷன் வந்த காரணத்தினாலேதான் 27 சதவிகித இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் கிடைத்தது.
27 சதவிகிதம் எப்படி வந்தது? மண்டல் அவர்களுடைய காலத்திலே பிற்படுத்தப்பட்டவர்களுடைய தொகை 52 விழுக்காடு. 27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

--------------------தொடரும்...."விடுதலை"9-8-2009

0 comments: