Search This Blog

17.8.09

வருணாசிரமக் கொள்கையும் ஜாதிப் பிரிவினையுமே சமூகக் கேடுகளுக்கு மூலகாரணம்!


ஈரோட்டில் சந்திப்போம் தோழர்களே!



ஈரோடு என்ற பெயர் உலகெல்லாம் பரவியிருக்கிறது. ஏன், எப்படி, எதற்கு என்பதற்கான ஆய்வுகள் தேவையில்லை ஆம்! அந்த மண்ணில் பிறந்த தந்தை பெரியார் அவர்களின் பெருமையால் அந்த வாய்ப்பு அந்த மண்ணுக்குக் கிட்டியது.

தந்தை பெரியார் பெயரில் உள்ள முதல் எழுத் தான ஈ என்பது ஈரோட்டைத் தானே குறிக்கிறது.


அந்த ஈரோட்டின் நகராட்சித் தலைவராக இருந்தவர் தந்தை பெரியார்.

ஒரு பதவி, இரு பதவிகள் அல்ல; 29 பதவிகளை அங்கு வகித்திருந்தபோதுதான் ஒரே நாளில் ஒரு சிறு காகிதத்தில் 29 பதவிகளையும் தூ என தூக்கி எறிந்து காங்கிரசில் இணைந்தார் என்பது சாதாரண செய்தியல்ல.


ஈரோட்டில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பான நிகழ்ச்சிகள், மாநாடுகள் எத்தனை எத்தனையோ!

1929-இல் செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரி யாதை மாநாடு நடைபெற்றது என்றால், இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்ற இடம் ஈரோடுதான் (10.5.1930) எம்.ஆர். ஜெயகர் தலைமையில் நடை பெற்ற அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இன்று நினைத்தாலும் மலைப்பாகவே இருக்கும்.

வருணாசிரமக் கொள்கையும் ஜாதிப் பிரிவினையுமே இந்திய சமூகக் கேடுகளுக்கு மூலகாரண மென்று இம்மாநாடு கருதுகிறது. பிரிவினையால் ஏற்றத் தாழ்வு - ஏற்படுமென்னும் கொள்கையை இம் மாநாடு மறுப்பதுடன், அக்கொள்கையை வெளியிடும் வேத புராணங்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறது.

ஜாதி, வகுப்பு வித்தியாசங்களின்றி ஒருவருக்கொருவர் விவாகம் செய்து கொள்ள அனுமதிக்கத்தக்க சிவில் விவாகச் சட்டமொன்று இயற்றப்பட வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் சொத்துரிமை, வாரிசு பாத்தியம் ஆகியவைகளில் சம உரிமை இருக்க வேண்டுமென்றும், எந்தத் தொழிலிலும் ஈடுபடவும் அதைக் கையாளவும் சம உரிமை இருக்க வேண்டுமென்றும், குறிப்பாக ஆரம்பக் கல்வி உபாத்தியாயர் விஷயத்தில் அவர்களை அதிகமாக நியமிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு அபிப்பிராயப்படுகிறது. எந்தப் பொதுக் கூட்டத்திலும் ஆரம்பத்திலாவது, முடிவிலாவது ராஜ வணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்களின் வணக்கம் ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இளைஞர்கள் கல்யாணம் செய்து கொள்வதாகயிருந்தால், நம் நாட்டில் உள்ள கல்யாணம் செய்து கொள்ள அபிப்ராயமுள்ள விதவைகளையே முக்கியமாய்க் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இன்றைக்கு 78 ஆண்டுகளுக்கு முன் இத்தகு தீர்மானங்கள் ஈரோட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

புரட்சி கொச்சைப்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் காலத்தையும், உண்மையான புரட்சிப் பூகம்பம் நிகழ்த் தப்பட்ட அந்தக் காலத்தையும் கருத்துடன் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும்.


ருசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்த நிலையில் மயிலாப்பூர் வெங்கடாசலம் சிங்கார வேலரையும் இணைத்துக் கொண்டு சமதர்மத் திட்டங் களை தந்தை பெரியார் வெளியிட்டதும். இதே ஈரோட் டில்தான் (1932 டிசம்பர்)

தூத்துக்குடி மாநாட்டுக்கு அண்ணா வராத நிலை யில் அண்ணா அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தந்தை பெரியார் கூட்டிய சிறப்பு மாநாடும் இதே ஈரோட்டில் தான் நடைபெற்றது. (23,24.10.1948) அண்ணாவை சாரட் வண்டியில் உட்கார வைத்து தந்தை பெரியார் ஊர்வலத்தில் நடந்தே சென்றார் என்பதெல்லாம் இனிமை மிகுந்த அத்தியாயங்கள். கறுப்புச் சட்டை அணிந்து மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு வெண்தாடி வேந்தர் ஈரோட்டு வீதியில் நடந்து வந்தார் என்றால் அடடா, அந்தக் காட்சியை என்னென்று சொல்வது!

பெட்டிச் சாவியைத் அண்ணாவிடம் தருகிறேன் என்று அய்யா அறிவித்ததும் இதே மாநாட்டில்தான்.

அன்னை நாகம்மையார் உருவப்படத்தைத் திறந்து வைத்து உங்களையெல்லாம் கடைசி கடைசியாகப் பார்த்து விட்டுப் போகத்தான் வந்தேன்? என்று அஞ்சா நெஞ்சன் அழகிரி நெஞ்சுருகிப் பேச, தொண்டர் குழாம் கதறிய காட்சியும் இந்த ஈரோட்டு மாநாட்டில் தான் நிகழ்ந்தது (ஆம், அஞ்சா நெஞ்சன் சொன்னபடியே அவருக்கு அது கடைசி மாநாடாகவே அமைந்துவிட்டது!)

பகுத்தறிவு பரவுவதற்குத் தடையாக மூடநம் பிக்கை மக்களிடையே மேலும் வளர்வதற்கான முறை யில் உள்ள புராண சினிமாக்களை எதிர்த்து மறியல் நடத்துவதற்கும் தக்க திட்டங்களை வகுத்துக் கொடுக்குமாறு தலைவர் பெரியாரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது

60 ஆண்டுகளுக்குமுன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு இன்றைக்கும் வேலையிருக்கத்தானே செய்கிறது.


இன்னும் எத்தனை எத்தனையோ புகழ் பூத்த பொன் அத்தியாயங்கள் இந்த ஈரோட்டு மண்ணுக்கு உண்டு! உண்டு!!

அந்தப் புகழ் பூத்த அத்தியாயத்திற்கு நவரத்தின மகுடம் சூட்டுவதுபோன்ற ஒரு விழா இம்மாதம் 24 ஆம் தேதி!

விடுதலை பவளவிழா நடைபெற உள்ளது. விடுதலைக் கும் ஈரோட்டுக்கும்கூட அழுத்தமான தொடர்பு உண்டு. ஈரோட்டிலிருந்தும் குறிப்பிட்ட காலம் விடுதலை வெளி வந்தது என்பது தான் அந்த மகத்தான உறவும் தொடர்பும்!

75_ ஆண்டு கால விடுதலை வரலாறு என்பது எத்தனையோ ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தை ஆழக் குழி தோண்டிப் புதைத்து, திராவிட சமூகத்தை விழிப்புறச் செய்த வீர வரலாறு விடுதலைக்கு உண்டே!

சமூகநீதிக் களத்திலும் சரி, ஜாதி ஒழிப்புத் தடத்திலும் சரி, பெண்ணுரிமை முழக்கத்திலும் சரி, தொழிலாளர் உரிமைக்கான முரசொலிப்பிலும் சரி, மூடநம் பிக்கைகளை முறியடிக்கும் மார்க்கத்திலும் சரி, விடுதலை வீறு கொண்ட வெற்றிக்கான மிகப் பெரிய போர்வாளாகும். அதுவும் அது பகுத்தறிவுப் பகலவன் கையில் அன்றோ சுழன்றது!

ஏடு ஒன்று மிகப் பெரிய அளவு சமூக மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது என்ற கம்பீரமான வரலாறு விடுதலைக்கே உண்டு.

ஒரு நாத்திக ஏடு, கொள்கையில் சறுக்கலின்றி முக்கால் நூற்றாண்டு தொடர்ந்து பீடு நடைபோட்டது என்ற பெருமையும் விடுதலை ஏட்டுக்கு மட்டுமே உண்டு!

அத்தகு ஏட்டின் பவள விழா தஞ்சையையடுத்து ஈரோட்டில் நடக்கிறது என்றால் கொங்கு மண்டல மக் கள் குதித்துக் கிளம்ப வேண்டாமா? அதுவும் குடும்பம் குடும்பமாகப் புறப்பட வேண்டாமா?

விடுதலையின் பவளவிழாவையொட்டி மத்திய அரசு சிறப்பு தபால் தலை உறை வெளியிட உள்ளது. 75 ஆண்டு விடுதலையின் வயதில் 47 ஆண்டு காலம் ஆசிரியர் என்ற சாதனை படைத்த தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை யேற்க, மத்திய அமைச்சர் மானமிகு மாண்புமிகு ஆ. இராசா அவர்கள் விடுதலைக்கான அஞ்சல் துறை சிறப்பு உரையை வெளியிட தமிழ்நாடு துணை முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் பெற்றுக் கொள்ள விழா கோலாகலமாய் நடைபெற உள்ளது.

பகுத்தறிவுப் பகலவன் மறைவிற்குப் பிறகு இவ்வளவுப் பெருமை அவர்தம் கொள்கைக்கும் இயக்கத்துக்கும், ஏட்டுக்கும் சிறப்புகள் வந்து சேர் கின்றன என்பதுதானே தந்தை பெரியார் அவர் களுக்குக் காட்டப்படும் உண்மையான மரியாதை!

அத்தகு காட்சிகளைக் காணாமல் வீட்டுக்குள் நம்மால் முடங்கிக் கிடக்க முடியுமா? முடியாது _ முடியவே முடியாது!

அன்று மாலை 4 மணிக்கு மகத்தான பேரணியும் உண்டு விடுதலையின் 75 ஆண்டு கால சாதனை களின் அணி வரிசை காண்போரைக் கருத்தூன்றச் செய்யும்; கலை நிகழ்ச்சி உண்டு.

துணை முதல்வரான பிறகு முதல் முதலாக ஈரோடு வருகிறார் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் என்கிறபோது திமுகவினருக்கு ஒரு பக்கம் உற்சாகம், இன்னாரு பக்கம் பொது மக்களும் பெரும் எதிர் பார்ப்பில் உள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்பு முதல் முதலாகத் துணை முதல்வர் ஈரோடு வருகிறார் என்ற பேச்சும் பரவலாக இருக்கிறது.

விழா ஏற்பாடுகளை ஈரோடு மற்றும் கோபி மாவட்-டக் கழகத் தோழர்கள் இரவு பகலாகச் செய்து கொண்டு இருக்கிறார்கள். சுவர்கள் எல்லாம் பேசும் சித்திரங் களாக மாறியிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் விடு தலை விடுதலை என்ற விளம்பர முழக்கங்கள்தான்!

ஒரு நாளேட்டை வைத்து ஓர் இனத்தின் உணர்ச்சி வெளிப்பாடு என்பதுதான் இந்த விழாவுக்கான தனித்தன்மையாகும்.

எத்தனையோ எழுச்சிமிகு மாநாடுகளை நாம் கண்டவர்கள்தாம். ஆனாலும் இது ஒரு வித்தியாச மான வியூப்பூட்டும் விவேகம் நிறைந்த தனிப் பெரும் விழா!

எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்பார்கள். அது பழைய மொழி! எல்லா மார்க்கங்களின் சந்திப்பும் ஈரோட்டில்தான் என்பது புதுமொழி!

சந்திப்போம், வாருங்கள் தோழர்களே!

--------------மின்சாரம் அவர்கள் 16-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: