Search This Blog

12.8.09

கடவுள் இல்லாமல் நீங்கள் நன்றாக இருக்க முடியும்!


நாத்திகத்தின் அவசியம்


அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் இதர அய்ரோப்பிய நாடுகளில் பேருந்துகளில் செய்யப்படும் நாத்திக பிரச்சாரத்திற்கு ஆதரவு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடவுள் மறுப்புக் கொள்கைகளை பேருந்துகளில் பிரச்சாரம் செய்வதற்காக இங்கிலாந்து மனிதநேய கழகமும், பல்வேறு நாத்திக அமைப்புகளும் முன்வந்துள்ளன. லண்டனில் உள்ள பேருந்துகளில் நாத்திக விளம்பரங்கள் செய்யப்படுவதற்காக கட்டணம் செலுத்தி அவை இடங்களை பிடித்துள்ளன. பேருந்துகளின் வெளிப்புறங்களில் கடவுள் மறுப்பு குறித்து எழுதப்படுவதற்காக புதுப்புது வாசகங்களை தயாரிக்கும் பணியிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

பரிணாம வளர்ச்சியின் தந்தையான சார்லஸ் டார்வினின் கொள்கைகளில் மீது நாட்டம் கொண்டவரும் கடவுள் மாயை என்ற நூலின் ஆசிரியருமான ரிச்சர்ட் டாவ்கின்ஸ், இந்த வகை நாத்திகப் பிரச்சாரத்திற்காக பொதுமக்களிடம் நிதி கேட்டு பிரச்சாரம் செய்தார். இதற்கான இலக்காக அவர் எதிர்பார்த்த தொகை 5 ஆயிரம் பவுண்டுகள் மட்டும் தான். ஆனால் கடவுள் இல்லை என்று சொல்லக்கூடிய இந்த நாத்திகப் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் அள்ளிக் கொடுத்த தொகையோ ஒன்றரை லட்சம் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 40 பேருந்துகளில் பிரச்-சாரம் செய்ய திட்டமிட்டிருந்ததை, 200 பேருந்துகளில் பிரச்சாரம் செய்வதென முடிவு செய்யப்பட்டு இந்தப் பிரச்சராம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

பேருந்துகளில் செய்யப்பட்டு வரும் இந்த நாத்திகப் பிரச்சாரத்திற்கு கிறித்துவ தேவாலயங்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த விளம்பரங்கள் மத உணர்வுகளையும், நம்பிக்கைகளயும் காயப்படுத்துவதாகவும் அவர்கள் அரசிடம் முறையிட்டனர். ஆனால் இந்தப் புகார் குறித்து விசாரித்த சம்-மந்தப்பட்ட அமைப்புகளோ, இது கருத்துச் சுதந்திரம். இவற்றை தடை செய்யமுடியாது என்று கூறி புகார்களை தள்ளுபடி செய்தது.

பேருந்துகளில் செய்யப்படும் நாத்திக விளம்பரத்தில் கீழ்கண்ட வாசகங்கள்தான் இடம்பெற்றுள்ளன.

* கடவுள் என்பதெல்லாம் கிடையாது. கடவுள் குறித்த கவலையை விடுத்து, மகிழ்ச்சியாய் இருங்கள்.

* கடவுள் இல்லாமல் நீங்கள் நன்றாக இருக்க முடியும்.


இதுபோன்ற வகைவகையான கடவுள் மறுப்பு வாசகங்கள் பேருந்துகளின் வெளிப்புறங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி உள்ளது. நியூயார்க் மற்றும் மான்ஹத்தான் நகரங்களில் மட்டும் 20_க்கும் மேற்பட்ட பேருந்துகளில் நாத்திக பிரச்சார வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. நியூயார்க்கில் உள்ள பேருந்தில் நீங்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்றால் உங்களை நீதிமான் என்றோ அல்லது ஒழுக்க சீலர் என்றோதான் அழைக்கப்பட வேண்டும் . மேலும் சிகாகோ நகரில் ஓடும் 25 பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் என்ன தெரியுமா? உலகத்தின் தொடக்கத்திலிருந்தே கடவுளை உருவாக்கியவன் மனிதன் தான் என்பதாகும்

லண்டனில் தொடங்கிய இந்த நாத்திக விளம்பர உத்தி இப்போது கனடா மற்றும் இதர அய்ரோப்பிய நாடுகளுக்கும் பரவத் தொடங்கி விட்டது. இதனால் தங்களுடைய இலக்கை அடைந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர் நாத்திகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்போர்.

நாத்திகத்தை எதிர்த்து தேவாலயங்களால் செய்யப்படும் பிரச்சாரங்கள் எடுபடுவதாகத் தெரியவில்லை. ஆனால், உலகத்திலேயே நாங்கள் கடவுளை நம்புகிறோம் என்று பணத்தில் அச்சிட்டு வெளியிட்டிருக்கும் ஒரே நாடு அமெரிக்காதான். இவ்வளவு ஆழமான இறை நம்பிக்கை உள்ள நாட்டைச் சேர்ந்தவர்கள் எப்படி நாத்திகத்தின் பக்கம் திரும்பினார்கள்? அங்கே மதம் என்ற கோட்பாடு செயல் இழக்கத் தொடங்கி விட்டதா? பேருந்துகளில் செய்யப்படும் இதே நாத்திகப் பிரச்சாரம் இந்தியாவுக்கும் வந்தால் என்ன நடக்கும்? தெய்வக் குற்றம் என்பதற்காக பேருந்துகள் எரிக்கப்படுமா? இதனால் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு ஆபத்து ஏற்படுமா? இந்தச் சந்தர்ப்பத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் தங்களை காலாச்சாரத்தின் காவலர்கள் என்ற புதிய சித்தாந்தத்தை நிறுவ முன்வருவார்களா? இந்தியாவில் இருப்பது ஒரே ஒரு மதம் அல்ல. இங்கிருப்பதும் ஒரே ஒரு கடவுள் அல்ல. ஏராளமான மதங்களும் ,கடவுள்களும் இங்கே நிறைந்துள்ளன. சரியான காரணத்தை சொல்லத் தவறினால் தன்னுடைய மதப் பிரச்சார கருத்துகளை கூட ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றுதான் தன்னுடைய சீடர்களிடம் புத்தர் தெளிவாகக் கூறினார். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால், கெட்ட ஆவிகளும் , சாத்தான்களும் இங்கே சுற்றி இருப்பது எப்படி? என்றும் அவர் வினவினார். மனித உடம்பில் ஆத்மா என்ற ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுவதை புத்தமதம் அறவே நிராகரிக்கிறது என்றும் அவர் விவரித்தார்.

அதேபோல ஜைன மதத்தை எடுத்துக் கொண்டால் கடவுள் என்பதே பொய்யானது என்பதைத்தான் கூறுகிறது .உலகம் என்பது கடவுளால் படைக்கப்பட்டது அல்ல என்பதில் மகாவீரர் தெளிவாகவே இருந்தார். கடவுளைத்தேடி விரயம் செய்யும் சக்தியை வேறு விதமாக இன்னும் கூடுதல் பலத்துடன் வேறு ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று மனித இனத்தை ஜைன மதம் வலியுறுத்துகிறது. இந்தியாவின் மிகப் பெரும்பான்மையான மதமாக இந்து மதம் உள்ளது.ஆனால் அதே இந்து மதத்தில் பிறந்த நிறையப் பேர் நாத்திகர்களாக தங்கள் கொள்கைகளைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளனர்.

இந்து மதத்தில் பிறந்த பல பிரமுகர்கள் கடவுள் இல்லை என்ற கொள்கையில் தீவிரமாகவே உள்ளனர். பாரம்பரியமிக்க இந்து குடும்பத்தில் பிறந்த ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், வீர சவர்க்கார், ராம் மனோகர் லோகியா, தந்தை பெரியார், கலைஞர், பாபா ஆம்தே, குஷ்வந்த் சிங்... இப்படி இந்து மதத்தில் பிறந்த நாத்திகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. நாத்திகம் என்பது வெறும் மறு பிறவி, கடவுள், ஆவி என்பதை மட்டும் மறுப்பதல்ல. அதனையும் தாண்டி மதம் என்ற போர்வையில் அரங்கேற்றப்படும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளை துடைத்தெறிவதுதான்.

இந்தியாவில் உள்ள இந்துக்களில் 2 சதவிகிதம் பேர் நாத்திகவாதிகள். இந்து மதத்தில் உள்ள சிலர் மட்டுமே மத விசயத்தில் விழிப்புணர்ச்சி பெற்று நாத்திகர்களாக மாறியுள்ளனர். நாத்திகவாதிகள் மத நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பகிரங்கமாக எதிர்ப்பதால் அவர்களை நீதிநெறிக்கு முரண்பட்டவர்கள் என்று இந்து மதத்தில் உள்ள பெரும்பாலோர் கருதுகின்றனர்.

ஆனால் ஒரு நாட்டில் நாத்திகம் இருப்பது என்பது அது முறையான , நியாயமான ஒரு பகுதி என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கடும் எதிர்ப்புகள் காணப்பட்டாலும் மேற்கத்திய நாடுகளில் பேருந்துகளில் செய்யப்படும் நாத்திக பிரச்சாரமும் இதேபோல் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பேருந்துகளில் செய்யப்படும் நாத்திக பிரச்சரத்திற்கு அங்கு பெரிய அளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் இல்லை.

----------------நன்றி: பிரகாஷ் சேஷ் - டைம்ஸ் ஆஃப் இந்தியா, 9.8.2009

2 comments:

Unknown said...

நன்பரே இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்.

http://oviya-thamarai.blogspot.com/2009/08/2.html

நன்றி

Unknown said...

கடவுள் இல்லையென்றால் நீங்கள் தினமும் இப்படி பிளேடு போட முடியாது.