Search This Blog
26.8.09
1948 இல் ஈரோட்டில் நடந்த தி.க சிறப்பு மாநாடு- ஒரு பார்வை
1948-ஈரோட்டில் தடம் பதித்த வரலாற்றுச்சுவடுகள்!
19ஆவது தி.க சிறப்பு மாநாட்டில் மக்கள் வெள்ளம்
தந்தை பெரியார் தலைமையில் அண்ணா,திரு.வி.க., என்.எஸ்.கே பங்கேற்பு!
ஈரோட்டுப் பாசறையில் இளங்காளைகள் எக்காளம்!
விடுதலையில் அந்த காலத்தில் (ஈரோட்டில்) வெளிவந்த சம்பவங்களை இங்கே தருகின்றோம்.
ஈரோடு, அக். 24 (1948)_ ஈரோட்டில் திராவிடர் கழக 19ஆவது சிறப்பு (ஸ்பெஷல்) மாநாடு நேற்று பிற்பகல் தோழர் சி.என்.அண்ணாதுரை எம்.ஏ, தலைமையில் துவங்கியது.
இம்மாநாட்டில் திராவிடத் தலைவர் பெரியார் அவர்களும் தமிழ்ப்பெரியார் திரு.வி.க அவர்களும், நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் ஏனைய தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
காலையில் ஈரோடு இதுவரை கண்டிராத அளவில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரமாயிரம் தாய்மார்களும், பல்லாயிரக்கணக்கான திராவிட இளங்காளைகளும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு அய்ம்பது ஆயிரத்துக்கு மேற்பட்டு மக்கள் வந்து குழுமியிருந்தனர்.
தலைவராகத் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களைப் பிரரேபித்ததை ஆதரித்து திராவிடர் தலைவர் பெரியார் அவர்கள் குறிப்பிடுகையில் இளைஞர் வசம் பொறுப்பை ஒப்படைப்பதே தனது கருத்தாகுமெனக் குறிப்பிட்டார்.
மாநாட்டின் நேற்றைய நடவடிக்கை தலைவர் தளபதி அண்ணாதுரை அவர்கள் முன்னுரையுடனும் நகைச்சுவையரசு தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காந்தியார் படத்திறப்பு விழாவுடனும் முடிவடைந்துள்ளது.
பெரியாருடைய இடத்தில் மாநாடு
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திராவிட நாட்டின் பல நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கழக நிருவாகஸ்தர்களும், தலைவர்களும், தோழர்களுமாக நேற்று காலை முதற்கொண்டே இவண் வந்து குவிந்து கொண்டிருந்தனர். மாநாட்டுத் தொண்டர்கள் ரயிலடியிலும், பஸ் நிலையங்களிலும் இருந்து, தோழர்களை வரவேற்று அவரவர்களுக்-கென்றே மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்டிருந்த இருப்பிடங்களுக்கு அழைத்துச்சென்று வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து உதவிவந்தனர்.
மாநாட்டுப் பந்தல் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகாமையில் வாய்க்காலுக்கு ஓரமாய் அமைந்துள்ள பெரியார் அவர்களுக்குச் சொந்தமான திடலில் அமைக்கப்பட்டிருந்தது. பந்தல் மிகப்பெரியதாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்க வசதியுள்ளதாகவும் அமைக்கப் பெற்றிருந்ததோடு மின்சார விளக்குகளால் நன்கு அழகு செய்யப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி வசதியும் நன்கு அமைக்கப்பட்டிருந்தது. இடையிடையே மழையினால் தொல்லை ஏற்பட்டுக்கொண்டிருந்தும் பந்தல் வேலை செவ்வனே முடிவு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தலைவர்கள் தங்கி சொற்பொழிவாற்றுவதற்கான மேடையும் கருப்பு துணிகளாலும், கருப்புக்கொடிகளாலும், படங்கள் வரைந்த பலகைகளாலும் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது-.
மாநாட்டுப் பந்தலுக்கு அடுத்தாற்போலவே உணவு விடுதியும் அமைக்கப்பெற்றிருந்தது. மாநாட்டிற்கு வந்திருந்த தோழர்களுக்கு மிகுந்த வசதியாய் இருந்தது.
ஈரோடு கண்டிரா ஊர்வலம்
ஊர்வலத்தில் கலந்துகொள்ளவேண்டி உணவு விடுதியில் சிற்றுண்டி எடுத்துக்கொண்டு தோழர்கள் இன்று அதிகாலையிலேயே முனிசிபல் ரெஸ்ட் ஹவுஸூக்கு முன்னிலையில் வந்து சேர்ந்துவிட்டனர்.
பெரியார் அவர்கள் மற்ற தோழர்களுடன் காலை 9 மணி சுமாருக்கு மேற்படி ரெஸ்ட் ஹவுசை அடையவும் முன்னே மேள வாத்தியம் முழங்க அதைத் தொடர்ந்து கருஞ்சட்டைத் தோழர்கள் இயக்க ஒலி முழக்கம் செய்துகொண்டுபோக பெரியாரவர்கள், அவர்கள் பின் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் புடைசூழ, சிம்மநடை நடந்து செல்ல அவர்கள் பின் பெத்தாம்பாளையம் தோழர் பழனிசாமி, தோழர் சி.என்.அண்ணாதுரை, தோழியர் குஞ்சிதம் அம்மையார், தோழர் குருசாமி, தோழியர் இந்திராணி பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் இரண்டு செங்காளைகள் பூட்டப்பட்ட சேரியெட்டில் அமர்ந்து செல்ல சுமார் 20 ஆயிரம் தோழர்களைக் கொண்டு ஊர்வலம் காலை 9 மணிக்குப் புறப்பட்டு மணிக்கூண்டு, கருங்கல்பாளையம் வழியாக சுமார் 5மைல் சுற்றி சரியாக 12 மணிக்கு மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது. வழி நெடுக இருமருங்கிலும் தலைவர்களைக் காண பொதுமக்கள் கூடியிருந்து புன்முறுவல் செய்தும் வாழ்த்தொலி முழக்கம் செய்தும் வரவேற்றனர். வீதிகள் முழுவதும் தோரணங்களாலும், அட்டை வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கருங்கல்பாளையத்தில் தலைவர்களுக்கு நேர்த்தியான வரவேற்பு அளிக்கப்பட்டது. (தந்தை பெரியார் ஊர்வலத்தில் நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்துடன் நடந்தே வந்தார்)
பிறகு தோழர்களும் தாய்மார்களும் மாநாட்டு விடுதியில் உணவெடுத்துக்கொண்டு பந்தலில் வந்து அமர்ந்தனர்.
பிற்பகல் நிகழ்ச்சிகள்
சரியாக 3.30 மணி சுமாருக்கு பெரியார் அவர்கள், தமிழ்ப் பெரியார் திரு.வி.க, தோழர் அண்ணாதுரை, தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிவர்களுடன் பந்தலை வந்தடையவும் கூடியிருந்த மக்கள் யாவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்து தமது மகிழ்ச்சியைக் காட்டிக்கொண்டனர்.
சற்றுநேரத்திற்குப் பிறகு அமைதி நிலவும் தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தமது பக்க வாத்தியங்களுடன் திராவிட மாநாடு வாழ்க செல்வத்திருநாடு என்று இன்னிசை பாட மாநாட்டு நிகழ்ச்சி இனிது துவக்கமாகியது-.
கொடியேற்றுவிழா
தோழர் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்கள் தோழியர் இந்திராணிபாலசுப்பிரமணியம் அம்மையார் அவர்களைக் கொடியேற்றுவிக்குமாறு கேட்டுக்கொள்ள அம்மையாரும் எழுந்துவந்து திராவிட நாட்டின் இணையற்ற இருண்ட நிலையையும் எடுத்துக்கூறி, தாய்மார்கள் தம் மூடநம்பிக்கைகளையும் மூட பக்தியையும் விட்டு திராவிட நாட்டிற்கு நற்பணியாற்ற முற்படக்-கேட்டுக்கொண்டு கழகக் கொடியை ஏற்றுவித்தார்கள்.
மாநாடு திறப்பு
பிறகு தோழர் எஸ்.குருசாமி அவர்கள் திராவிடர் கழகத்தின் வளர்ச்சியைப் பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு இம்மாநாட்டில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் இறுதியாக நடைபெற இருக்கும் ஆரியர் திராவிடர் போராட்டத்தில் எல்லா திராவிடத் தோழர்களும் கலந்துகொண்டு மிகுந்த கட்டுப்பாட்டோடும் பொறுப்போடும் பணியாற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு திராவிடனும் ஒவ்வொரு பெரியாராக வேலை செய்ய வேண்டுமென்றும் கூறி மாநாட்டைத் திறந்து வைத்தார்.
பிறகு தோழர் பழனிசாமி அவர்கள் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவர்க்கும் நல்வரவு கூறி மாநாட்டிற்கு வந்துள்ள தோழர்களுக்கு போதிய வசதி செய்து கொடுக்க இயலாமற்போய்விட்டதற்காக தம்மை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பிறகு தோழர் ஈ.வி.கே.சம்பத் அவர்கள் தற்கால நெருக்கடியை உத்தேசித்து மாநாடு மிக அவசரமாகவும் போதிய முன்னேற்பாடில்லாமலும் கூறப்பட்டதால் சகிக்க முடியாத சில இடைஞ்சல்கள் ஏற்பட்டுவிட்டதென்றும் இவ்விடைஞ்சல்களை அண்மையில் வர இருக்கும் சிறைச்சாலை அனுபவத்தின் ஒத்திகையாகக் கருதிக்கொண்டு தோழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு ஏற்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களை தலைவராகப் பிரரேபித்தார்.
தலைவர் பிரரேபணை
குடந்தை தளபதி தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் கழகத்தினிடையே இருந்து வந்த சில்லரை அபிப்பிராய பேதங்கள் எல்லாம் நெருப்பிலிடப்பட்டு சுட்டு சாம்பலாக்கப்பட்டதற்காக தாம் உண்மையிலேயே மிகமிக மகிழ்ச்சியடைவதாகவும் அம் மகிழ்ச்சிப் பெருக்கின் காரணமாகவே தாம் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களைத் தலைவராகப் பிரரேபிக்க முன்வந்திருப்பதாகவும் கூறி தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களை தலைமையேற்று மாநாட்டைச் சிறப்பாக நடத்திக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பிறகு சேலம் தோழர் எ.சித்தையன் அவர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை கிண்டல் செய்து திரியும் காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல படிப்பினை கற்றுக்கொடுக்கும் ரீதியில் காரியம் ஆற்றப்படு-வதற்கான வகையில் இம்மாநாட்டின் கண் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறி தலைவர் பிரரேபணையை ஆதரித்துப் பேசினார்.
தள்ளாத நிலையில்
பிரரேபிக்கும் முறையில் பெரியார் அவர்கள் மாநாட்டில் தமிழ்ப்பெரியார் திரு.வி.க அவர்களும், நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் மற்றும் தோழர் எம்.ஆர்.இராதா, தோழர் மு.கருணாநிதி ஆகியவர்கள் தம் குழுவினர்களுடனும் கலந்துகொண்டிருப்பதின் சிறப்பை எடுத்துக்கூறியதோடு,
தமது தள்ளாத நிலையில் இனி ஜெயிலில் நல்ல இடம் பார்த்துக்கொண்டு ஓய்வெடுத்துக்கொள்வது தான் விரும்பத் தக்கதென்றும், இனி இளைஞர்கள் கையிலேயே சகலமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தினால்தான் தோழர் சி.என்.ஏ அவர்களை தலைமை வகிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்கிற வரவேற்புக்கமிட்டியினரின் விருப்பத்திற்கு தாம் ஒப்புக்கொண்டதாகவும் இளைஞர்களின் உள்ளங்களிலெல்லாம் தோழர் அண்ணாதுரை அவர்கள் எவ்வளவு தூரம் குடிகொண்டுள்ளார் என்பது தமக்குத்தெரியு-மென்றும் கூறி மாநாட்டிற்கு வந்திருப்போர் தமக்கு ஏற்படும் சில்லரை இடைஞ்சல்களுக்குத் தம்மை மன்னிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
தலைவர் அண்ணாதுரை
பிறகு தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமை ஏற்று திராவிடர் கழகம், திராவிட நாட்டிற்கு நல்லதோர் திட்டம் வகுத்துத் தரத்தான் பாடுபட்டு வருகிறதே ஒழிய வேறு யாருக்கும் விரோதமாக அது வேலை செய்து வரவில்லையென்றும் திராவிடர் கழகம் எதை நல்ல திட்டமென்று கருதுகிறதோ அதை நிறைவேற்றி வைப்பதற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கும். மற்ற கட்சியினரை தமது முயற்சிக்கு விரோதமாயிருக்கும் அளவுக்குக் கண்டனம் செய்யத்தான் வேண்டியிருக்கிறதென்றும் விரைவில் அறப்போர் கூடுமானால் நவம்பர் முதல் தேதியே அறப்போர் துவங்கும் என்றும் அதில் எல்லோரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
பிறகு நகைச்சுவையரசு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காந்தியார் படத்தைத் திறந்து வைத்தார்கள்.
இதோடு மாலை நிகழ்ச்சி முடிவுற்றது. இரவு நாடகம் நடைபெறும். விவரம் நாளை. (நமது நிருபர்) விடுதலை 24.10.1948
ஈரோடு தனிமாநாட்டில் உரிமையாளரிடம் கழகச் சாவியை ஒப்படைக்க உறுதிகொண்டேன்- பயணம் சொல்லிக்கொள்ளும் மாநாட்டுச் சிறப்பு பற்றி- பெரியார்! மக்கள் உள்ளத்தின் சாவியைப் பெற்றேன் உவகையுடன் உபயோகிப்பேன் - அண்ணாதுரை!
இன்பத் திராவிடமெய்தப்பெற ஈரோடு காட்டும் பாதை
என்னுடைய பொறுப்பை ஒரு இளைஞரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று நெடு நாளாகவே எனக்கு ஆசையிருந்து வருகிறது. பெட்டிச் சாவி என்னிடமிருந்தால் ஆபத்து ஒன்றுமில்லை யென்றாலும், எத்தனை நாளைக்குத்தான் நாமே வைத்திருப்பதென்று அலுப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்க உறுதி கொண்டுவிட்டேனென்பதாகத் தலைவர் பெரியாரவர்கள் ஈரோடு மாநாட்டில் தளபதி அண்ணாதுரையைத் தலைவராக வழி மொழிந்து பேசுகையில் குறிப்பிட்டார்.
பிரசார இயக்கமாகப் பணியாற்றி வந்த திராவிடர் கழகத்தை சர்க்கார் தாமாகவே பெரும் போராட்ட இயக்கமாக மாற்றிவிட்டனரென்பதாக மாநாட்டைத் திறந்து வைத்த ஆசிரியர் குருசாமி அவர்களும், பெரியார் தம் வாழ்விலேயே இன்பத் திராவிடத்தைக் கண்டு களிப்பாராக என்று கொடியேற்று விழாச் சொற்பொழிவாற்றிய இந்திராணி சுப்ரமணியம் அம்மையாரவர்களும், வாழ்வு அல்லது சாவு என்பதாக வரவேற்புக் கழகத்தலைவர் பெத்தாம் பாளையம் தோழர் பழனிசாமியவர்களும் குறிப்பிட்டார்கள்.
ஈரோட்டில் இம்மாதம் 23, 24 தேதிகளில் நடை பெற்ற 19 ஆவது திராவிட கழக தனி மாநாட்டில் தோழியர் இந்திராணி பாலசுப்ரமணியம் அம்மையார் அவர்கள் ஆற்றிய கொடியேற்று விழா சொற்பொழிவின் சுருக்கமாவது:
இம்மாதிரி நமது இயக்க சரித்திரத்திலேயே மிக முக்கிய மாநாடாக இருக்கும் என்று கருதுகிறேன். காங்கிரஸ்காரர்கள் இந்நாட்டுக்கு சுதந்திரம் வந்து விட்டதாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அது உண்மைதானா என்று பரீக்ஷை பார்க்கும் நீதியில் உண்மையில்லை என்று நிரூபிக்கும் ரீதியில் நாம் ஹிந்தி எதிர்ப்பு மறியலை மீண்டும் துவக்கி நடத்த தீர்மானம் செய்யப்போகும் மாநாடு இது. இதன் முக்கியத்தைக் கருதியே நீங்களும் பெருவாரியாக வந்திருக்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் எப்பக்கம் திரும்பினாலும் ஒரே கருப்பு மயமான காட்சியே கண்ணுக்குப் புலனாகிறது. நான் ஏற்றப்போகும் கொடியும் செங்குருதி தெளிக்கப்பெற்ற கருப்புக் கொடிதான். அக்கருப்பு நம் நாட்டின் இன்றைய நிலையையும், அச்சிகப்பு இவ்விருண்ட நிலையைப் போக்க நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சியையும் காட்டுகிறது. ஒரு காலத்தில் பகுத்தறிவுடைய மக்களாக வாழ்ந்த நாம்இன்று பல ஆரிய மூட நம்பிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அறிவிழந்திருக்கிறோம். ஒரு காலத்தில் இந்நாட்டைத் தவிர்த்த ஏனைய பல நாடுகளையும் புகழுடன் அரசாண்ட நம்மவர்கள் இன்று அதோ வெளிநாடுகளில் கால் வயிற்றுக் கஞ்சிக்கு கங்காணிகளாக, கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள்.
பெரியார் வழி நிற்போம்
சொந்த நாட்டில் சொந்த மொழிக்காக சொந்த மக்களுடனேயே போரிட்டுத் தீரவேண்டிய இழி நிலையில் நாமிருக்கிறோம். இதை விட இருண்ட நிலையையா நாம் காணப்போகிறோம்? இவ்விருண்ட நிலை ஒழிந்து நம்நாட்டில் சுதந்திரம் கமழ நாம் எல்லோரும் பெரியார் வழி நின்று பாடுபட்டு வருவோமாக. பெரியாரும் தம் வாழ்விலேயே நாம் நினைக்கும் இன்பத் திராவிடத்தை செங்கொடி பறக்கும் திராவிடத்தைக் கண்டு களிப்படையட்டும்.
மேற்படி மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசுகையில் தோழர் எஸ். குருசாமி அவர்கள் திறந்து வைத்தார்.
பிறகு மாநாட்டுத் தலைவர் தோழர் சி.என். அண்ணாத்துரை அவர்கள் தலைமையுரையாகப் பேசியதாவது:
மதிப்பிற்குரிய பெரியார் அவர்களே! பெரியார் திரு.வி.க அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!
இம்மாநாடு கூட்டப்பட்டிருக்கும் நோக்கம் எனக்கு முன்பேசிய தோழர்களாலும், தலைவர் பெரியார் அவர்களாலும் நன்கு எடுத்துக்கூறப்பட்டது. நமது சென்ற மாநாடு தூத்துக்குடியில் பாட்டாளிகளின் விடுதலை சரித்திரத்தில் உலக புரட்சி சரித்திரத்தில் முக்கியமாயமைந்துள்ள மே மாதத்தில் நடைபெற்றது. அதன் பிறகு 5 மாதங்கள் கழித்து அக்டோபர் மாதத்தில் நாம் இன்று இங்கு கூடியுள்ளோம். அக்டோபர் என்பது பாட்டாளி மக்களுடைய புரட்சிப் போராட்டத்தின் மிக பயங்கரமான ஒரு பகுதியை குறிப்பிடும் மாதமாகும். அது எவ்வளவுக் கெவ்வளவு பயங்கரமானதோ அவ்வளவுக்கவ்வளவு முக்கியத்துவமும் வாய்ந்தது. ஏனெனில் அது அவர்களுக்கு வெற்றிகரமாக முடிந்தது. விடுதலை வாங்கித் தந்தது.
அக்டோபர் சிறப்பு
மே மாதம் விடுதலைக்கு வித்திட்ட மாதம் என்றால் அவ்வித்து முளைவிட்டு வளர்ந்து மரமாகி பூத்துக் காய்த்தது போல் அக்டோபர் மாதம் ஒரு மாபெரும் புரட்சிப் புயல் வீசப்பட்ட மாதம் ஆகும். சோவியத் ரஷ்யாவில் அடக்குமுறைக்கு ஆளான பாட்டாளி மக்கள் தம் உடலிலிருந்து ரத்தம் ஒழுக ஒழுக தம் தலைவர் முன் நின்று இனி ஒருபோதும் சகித்திரோம். எப்பாடு பட்டாயினும் எவ்வளவு கஷ்டத்திற்குள்ளாயினும் இவ்வடக்குமுறையை இக்கொடுங்கோன்மையை ஒழித்தே தீருவோம் என்று சூளுரைத்து நின்ற காலம் அது.
நாமும் அதுபோல்தான் நம் தலைவர் தோட்டத்தில் அவர் முன் சூளுரைக்க நிற்கின்றோம். சிறை சென்று அவதிப்பட்டவர்கள், தடியடிக்கு ஆளாகியவர்கள், மற்றும் சர்க்காரின் பல கொடுங்-கோன்மைக்கு ஆளாகியவர்கள் என நாம் அதே அக்டோபரில் கூடியிருப்பது கவனிக்கத்தக்கது.
உரிமைப் போர் துவக்கம்
புரட்சி முழக்கம் செய்ய உரிமை முழக்கம் செய்ய, நாம் இன்று ஈரோட்டில் கூடியுள்ளோம். இவ் உரிமைப் போர் துவக்க நிகழ்ச்சி நம் நாட்டுச் சரித்திரத்தில் ஏன், உலக சரித்திரத்திலேயே கூட பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்ச்சியாய் அமையக் கூடியதாகும்.
இன்று துவங்கும் இவ்வுரிமைப் போர் நம் ஆயுட்காலத்திற்குள்ளாகவே ஆகிவிட்டால் நமது பிள்ளைகள் சந்ததியார் தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட தொடர்ந்து நடத்தப்பட்டு வரவேண்டிய ஒரு தொடர்கதைப் போராட்டமாகும் இது.
எனவே, சர்க்கார் நூலை ஹிந்தியை எடுத்துவிடுவார்களானாலும் அதோடு இப்போராட்டம் நின்றுவிடாது. தொடர்ந்து உரிமை கிடைக்கும் வரை அறப்போர் நடைபெற்றே தீரும்.
இம்மாநாட்டுக்கு நான் தலைமை வகிக்க ஏதேனும் தனிமையான தகுதியோ, தக்க காரணமோ, அவசியமோ உண்டென்றால் இல்லையென்றுதான் கூற வேண்டும்.
மகனிடம் பெட்டிச்சாவி ஒப்படைப்பு
போராட்டம் நடைபெறுமானால் அண்ணாத்துரை நழுவிவிடுவானோ என்று சிலர் கொண்டிருந்த சந்தேகத்தை போக்கும் அளவுக்கு மட்டும் வேண்டுமானால் இது பயன்படலாமென்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன். போராட்ட காலத்தில் அபிப்பிராயம் பேதங்கள் இருக்க இடமேயில்லை. மற்றபடி பெரியார் அவர்கள் பெட்டி சாவியை என்னிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தார். பொறுப்புள்ள மகனிடம் பெட்டி சாவி ஒப்படைப்பதால் அவன் தாறுமாறாக அதை உபயோகித்து விடமாட்டான். திறக்கும் போது தந்தையைக் கேட்டுக் கொண்டு தான் திறப்பான். தனக்கு வயதுவந்த பிறகும் சாவி தந்தையிடமே இருந்தால் எவ்வளவு சாதுவான மகனுக்கும் கொஞ்சம் அருவருப்பு ஏற்படுவது சகஜம்தான். இருந்தாலும் அப்படியொன்றும் கிளர்ச்சி செய்தவன் அல்ல நான். மேலும் இயக்க பணப்பெட்டியின் சாவியை அவர் என்னிடம் அளித்ததாக நான் கருதிக்கொள்ளவில்லை.
மக்களுடைய உள்ளத்தின் சாவியை, சிறைச்சாலை பூட்டுச்சாவியை, இதைத் தான் என்னிடம் ஒப்படைப்பதாக நான் கருகிதுகிறேன்.
அதை மிக மிக பொறுப்புணர்ச்சியோடு உபயோகித்து வருவேன்.
மேலும் பெரியாரவர்கள் என்னிடம் மக்கள் உள்ளத்தின் சாவியை சிறைச்சாலை பூட்டு சாவியையே ஒப்படைத்ததாகக் கருதுகிறேன். அதை மிக மிக மகிழ்ச்சியாக உபயோகித்து வருவேனென்பதாகத் தளபதி அண்ணாதுரையவர்கள் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
---------------- தகவல்: சிங்.குணசேகரன் - "விடுதலை" 26.10.1948
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment