Search This Blog

23.8.09

பிள்ளையாரை உடைப்பது பிரசாரமேயாகும்!






27-ஆம் தேதி பிள்ளையார் பொம்மை உடைக்கும் காரியம், மக்களுக்கு மெய்ஞ்ஞான நிலை உண்டாக்கும் ஒரு பிரசார காரியமேயாகும். அதாவது கணபதி முதல் கிருஷ்ணன் ஈறாக உள்ள குறிகளை "நபர்களை" நமக்குக் கடவுள்கள் என்று ஆரியப் பார்ப்பனர்கள் பலவித ஏமாற்றுப் பிரசாரம் செய்து, நம் பிறவியை இழிவாக்கி, நம் செல்வாக்கைக் கவர்ந்து இன்று நமக்கு ஆட்சியாளர்களாகி, அந்த ஆட்சியில் நம்மை எக்காலத்திற்கும் தலை எடுக்கவிடாதபடி அழுத்தல் ஆட்சி - கொடுங்கோன்மைச் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
 
இந்த ஆதிக்க அட்டூழியத்தை அஸ்திவாரத்தோடு பெயர்த்து அழிக்கவே, இந்தக் கடவுள்கள் அஸ்திவாரத்தோடு பெயர்க்கப்படுகின்றன. இதை ஏற்காத முன்வர முடியாத கோழை சோம்பேறிகள், 'பொம்மைக் கடவுளை ஏன் உடைக்கிறீர்? நீர் ஆண்பிள்ளையாய் இருந்தால் கோவிலில் வந்து உடையும்' என்று மொட்டைக் காகிதமும், போக்கிரிக் காகிதமும் எழுதுகிறார்கள். இப்போதைய நமது போராட்டம் கோவில் இடிப்புப் போராட்டமல்ல. கோவில் "சாமி" விக்கிரக உடைப்பு போராட்டமல்ல.
  
இந்தக் கணபதி முதல் கிருஷ்ணன் ஈறாக உள்ள சாமிகள் என்பவை நமது கடவுள்கள் அல்ல; நமது அடிமைத்தனத்தையும் காட்டுமிராண்டித் தனத்தையும் காட்டும் சின்னம் ஆகும்.
 




இதை நாம் உணர்ந்து விட்டோம் என்பதற்கு அறிகுறியாக அச்சின்னத்தை உடையுங்கள். இதில் கலவரம், எதிர்ப்பு, சர்க்கார் பிரவேசம் முதலியவை இல்லாதிருக்கும்படி பார்த்து மற்றவர்கள் கவனம் உங்கள் பக்கம் திரும்பி இந்த உண்மை அறியும்படியான தன்மையில் காரியம் செய்வது மூலம் பிரசாரம் செய்யுங்கள் என்கிறேன்.


 
இதைப் பயன் இல்லை - கோவிலில் போய் உடைப்பதுதான் பயன் உள்ளதாகும் என்று கருதுகிற வீரசிகாமணி தனக்கு இதில் கவலை இருந்தால் தன் சொந்தப் பொறுப்பில் கோவிலில் சென்று உடைப்பதை நான் ஆட்சேபிப்பதில்லை. ஆனால் தகவல் கொடுத்துவிட்டுப் போகட்டும்.
 
ஒன்றும் இல்லாமல் மக்களை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் சோம்பேறிகள், செய்கையை விட்டுவிட்டுப் பிறத்தியானுக்கு புத்தி சொல்ல வருவது கீழ்மைத் தனமேமாகும்.
  
 
ஆகவே பிள்ளையார் சின்ன உடைப்பது ஒரு பிரசாரமேயாகும்.

 
 
 
----------------------தந்தை பெரியார் "விடுதலை", 15-03-1953
 

0 comments: