Search This Blog

11.8.09

தன்னலமில்லாமல் தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் வேலைசெய்த தலைவர் தோழர் ஈ.வெ.ரா


ஈ.வெ.ரா காங்கரஸை எதிர்ப்பது இன்றா? நேற்றா?

போகிறவர்கள் தாராளமாகப் போகட்டும்;
போகிற போக்கில் ஏன் திட்ட வேண்டும்?


சென்ற சில மாதங்களாக, சுயமரியாதை இயக்கத்திலிருந்த தோழர்களிற் சிலர் மேற்படி இயக்கத் தலைவராகிய, திரு.ஈ.வெ.ரா அவர்களைக் குறைகூறிக் கூட்டங்களில் தூற்றி வருகின்றனர். உடன் பிறந்தே கொல்லும் வியாதியென்பது போல், உடனிருந்து வேலை செய்த தோழர்களாகிய முத்துசாமி வல்லத்தரசு, நீலாவதி, சீவானந்தம் முதலியவர்களின் செயல் இருக்கின்றது.

காங்கரசை எதிர்ப்பது இன்றா? நேற்றா?

சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாள் தொட்டுக் காங்கரசையும், காங்கரசுக் கொள்கைகளையும் கண்டித்துப் பேசியும், எழுதியும், கூடும் மாநாடுகளிற் தீர்மானங்களின் மூலம் காங்கரசை எதிர்த்து நமது இயக்கக் கொள்கைகளை வெளியிட்டும் வந்திருப்பதை யாவரும் அறிவார்கள். திரு.ஈ.வெ.ரா இன்றுதான் காங்கரசை எதிர்க்கின்றாரென்பதில்லை. காங்கரசில் சேர்ந்து வேலை செய்து அங்குள்ள பார்ப்பன ஆதிக்கத்தையும், தன்னலக் கூட்டத்தினருடைய தந்திரங்களையும், கண்டறிந்து அக்காங்கரசினின்று வெளியேறி பன்னிரண்டு வருடங்களாகக் காங்கரசை எதிர்த்துத் தாக்கி வருகின்றார். மேற்கூறிய தோழர்கள் யாவரும் இவற்றை நன்குணர்ந்தவர்கள். இவர்களும் உடனிருந்து காங்கரசுக் கொள்கைகளை எதிர்த்துப் பேசியவர்கள், எழுதியவர்கள்; தீர்மானங்கள் கொணர்ந்தவர்கள், இவர்களே இன்று காங்கரசில் சேரப்போவதாக வெளிப்படையாக மகாநாடுகள் கூட்டித் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

போகிற போக்கில் ஏன் திட்ட வேண்டும்?


இவர்கள் காங்கரஸ் கட்சிக்குப் போனால் போகட்டும்; காங்கரஸ் அபேதவாதத் தலைவர்களானாலுமாகட்டும்; சிறை புகுந்து தேச பக்தர்களானாலும் ஆகட்டும். அது பற்றி நாம் சிறிதும் வருந்தவில்லை. போகின்றவர்கள் திரு.ஈ.வெ.ரா வையும் அவரைச் சேர்ந்த சகாக்களையும், தாறுமாறாகப் பேசி அதனால் காங்கரஸ்காரர்களிடம் நல்ல பிள்ளைகள் என்ற பட்டம் வாங்கலாம் என்றெண்ணினார்களானால், பெரிய ஏமாற்றத்திற்காளாவார்களென்பதை சில நிகழ்ச்சிகளின் மூலம் எடுத்துக் காட்டுகின்றோம். இவர்கள் அவசரப்பட்டுச் சுயமரியாதைச் சமதரும மகாநாட்டைத் திருச்சியில் கூட்டி, திரு.டாங்கே அவர்களைத் திறப்பு விழாவாற்றச் செய்து, திரு.நாயக்கர் போக்கைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டியதில்லை. கட்சித் தலைவருடைய போக்கு கட்சியிலுள்ள மற்றவர்கட்குப் பிடிக்கவில்லையென்றால் மகா நாட்டினைக் கூட்டிக் கட்சித் தலைவரையும் மற்றைய தோழர்களையும் வரவழைத்துத் தலைவருடைய கொள்கை பிடிக்கவில்லை யென்பதை நம்முடைய காரியக் கமிட்டிக் கூட்டத்திற்குள்ளேயே கலந்து பேசி தலைவரிடம் நம்முடைய அபிப்பிராய பேதத்தை எடுத்துக் கூறி நம் வழியிற் தலைவரைத் திருப்ப முயலவேண்டும். இயக்கத்திலுள்ள பெரும்பாலாருடைய ஆதரவையும் நாம் பெற்றிருக்க வேண்டும். இங்ஙனம், பெரும்பாலான அங்கத்தினர்களுடைய விருப்பத்திற்கு மாறாகத் திரு.ஈவெ.ரா அவர்கள் சென்றார்களானால் நாம் அவர்களைக் குறை கூறலாம். பாவனாசத்திற் கூடிய மகாநாட்டில் தோழர் ஈ.வெ.ரா அவர்கள் சீவானந்தம், முத்துசாமி வல்லத்தரசு முதலிய தோழர்கட்கு பதிலாக அளித்த அருமையான சொற்பொழிவைக் கேட்ட பின்னரும், இவர்கள் அவர்களிடம் வேற்றுமை கொள்வது மிகவும் அருவருக்கத் தக்க செய்கையாகும். தன்னலமில்லாமல் தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் வேலைசெய்த தலைவர் ஒருவர் உண்டென்றால் அவர் தோழர் ஈ.வெ.ரா அவர்களேயாவார். இப்படிப்பட்ட தன்னலமற்ற தலைவரைத் தாறுமாறாகத் தாக்குவது கொடுமையினும் கொடுமையன்றோ? இவர்கள் சொற்பொழிவெல்லாம் சுயமரியாதை இயக்கத்தைக் கெடுக்கவும் பிரிவினை உண்டாக்கி மற்றவனுக்கு இடங்கொடுக்கவும் வழிகாட்டியாய் இருக்கின்றதென்றே கொள்ளவேண்டும்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

இவர்கள், திரு.ஈ.வெ.ரா அவர்களைப் பற்றிக் கூறும் குறைகளிலொன்று: அவர் ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கின்றாரென்பது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்தே திரு.ஈ.வெ.ரா அவர்கள் பன்முறை சிறைக்கூடம் நண்ணினார்கள். ஏகாதிபத்தியத்தை எதிர்த்தே தனது பெரும் பொருளை இழந்தார்கள். இவை உலகறிந்த இரகசியமாகையால் இவைபற்றி அதிகம் எழுதாது விடுகின்றோம்.

இரண்டாவது: முதலாளி வர்க்கத்தை ஆதரிக்கின்றா ரென்பது. முதலாளிக் கூட்டத்தினரை எதிர்த்துக் கடன் கொடுத்து, மனிதனை மனிதன் சுரண்டல் முறையோடு சிறைக்கோட்டத்தில் அடைப்பது சீரிய செய்கை அன்றென்பதை அறிவுறுத்தவே, தான் பட்ட கடனைப் பலர் தீர்ப்பதாகச் சொல்லியும் அதற்கு உடன்படாமல் சிறைக்கூடம் அடைந்தார்கள். முதலாளிக் கூட்டமெல்லாம் திரு.ஈ.வெ.ரா அவர்களைக் கண்டால் எப்போதும் பயந்து கொண்டே வந்தன _ வருகின்றன. அரசாங்கத்தாரும் இவர்கள் மூச்சு விட்டாலும் அதைக் குறிக்கும்படி இரகசியப் போலீசாரை உடனனுப்பி வருகின்றார்கள். இச்செய்கைகள் யாவும் மேற்கூறிய தோழர்கள் அறிந்தனவே
.

இங்ஙனமாக இவர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து வேலை செய்வதற்குக் காரணம் என்ன என்பது ஒரு கேள்வி. அதற்குக் காரணம் சுயமரியாதைக்காரர்களால் வகுக்கப்பட்ட திட்டங்கள் பத்தினையும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொண்டு சில தீர்மானங்களை நடைமுறையில் (இனாம் குடிவார மசோதா முதலியன) கொண்டு வந்ததேயாம்.

இவ்வாறு திரு.ஈ.வெ.ரா அவர்களின் செயலுக்குத் தெளிவான காரணமிருப்பவும் அவற்றை அறியார் போன்று தங்கள் சுயநலங் காரணமாக அவர்களைக் குறை கூறித் தூற்றித் திரிவார்களேல், இன்று திரு.கண்ணப்பருக்கும், ஏனையோருக்கும் என்ன கதி ஏற்பட்டிருக்கின்றதோ அதே கதி தான் இவர்கட்கும் நேருமென்பதை முன் கூட்டி அறிவுறுத்த விரும்புகின்றோம்.

இங்ஙனம்:
ஒரு சுயமரியாதைத் தொண்டன்.

---------------- விடுதலை, 18.11.1936

0 comments: