Search This Blog

31.8.09

ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை காப்பாற்றப்பட செப்டம்பர் 2_இல் இரயில் மறியல்


ஈழத்தில் இதற்குமேல் தமிழர்கள் துயரத்தை அனுபவிக்கவே முடியாது
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு செயல்பட வேண்டும்
தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்த செப்.2-இல் ரயில் மறியல்!


ஈழத்தில் முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் காப்பாற் றப்பட வேண்டும்; வாழ் வுரிமை மீட்கப்பட வேண் டும் என்பதை வலியு றுத்தி வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் ரயில் மறியல் போராட்டம் நடை பெறும். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

செய்தியாளர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நேற்று கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:

நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். இந்திய அரசு அதிலே இன்னும் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இப்போது செலுத்தப்படுகிற கவனம் போதுமானதாக இல்லை என்று அதாவது இலங்கையிலே முள்வேலிக்கு இடையிலே சிக்கி, மழை தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கின்ற அப்பாவி தமிழ் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதையும் இன்னும் போதுமான அளவிற்கு அரசு நடவடிக்கை தேவை என்பதையும் தெரிவித்து வருகிறார்கள். அதை நானும் மத்தியிலே உள்ள பிரதமர் மற்றும் வெளி உறவுத் துறை அமைச்சர் போன்றவர்களுக்கு உடனுக்கு உடன் தெரிவித்து வருகின்றேன். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தின் சார்பாக மத்தியிலே அமைச்சர்களாக இருப்பவர்கள் வாயிலாகவும் வலியுறுத்தி தெரிவித்து வருகிறேன். உடன் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த வாக்குறுதியை விரைவிலே நிறைவேற்றி இலங்கையிலே இன்னமும் அவதிப்படுகின்ற தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

மரண வேதனையில் தமிழர்கள்

ஒரு முதல் அமைச்சரே இவ்வாறு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ள கருத்து என்பதுமிக முக்கியமானதாகும். முள்வேலிக்குள் மூன்று லட்சம் மக்கள் ஒவ்வொரு நொடியும் மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன ஏடுகள்தான் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு தங்களின் பாரம்பரியமான தமிழின வெறுப்பு உணர்வை வெளிப்படுத்திக் கொண்டுள்ளன.

இலங்கைத் தலைமை நீதிபதியின் ஒப்புதல்

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் என் சில்வா முள்வேலி முகாம்களைப் பார்வையிட்டு ரத்தக் கண்ணீர் வடித்தார்.

நமது நாட்டின் சட்டத்தில் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடி யாது. தமிழர்களின் துய ரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட வேயில்லை. இலங்கையின் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று இரண்டு இனம் இல்லை; ஒரே இனம் தான் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் பச்சைப் பொய்கள். இதனையெல்லாம் நான் பகிரங்கரமாக வெளிப்படுத்துகிறேன். இந்நிலை நீடித்தால் விடுதலைப் புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம். இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரி களால் நான் தண்டிக்கப் படலாம், கவலை யில்லை என்று இலங்கையின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கூறிவிட்ட பிறகு அங்கு நிலவும் கொடூரம் எத்தகையது என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பிரிட்டன் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி விட்டது

கடைசி ஒரு வாரத்தில் எத்தனை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற தகவல் எல்லாம் உலகையே உலுக்கிவிட்டது. அண்மையில் பிரிட்டனைச் சேர்ந்த சாணல் 4 தொலைக்காட்சி தமிழர்களை எப்படியெல்லாம் சிங்கள இராணுவத்தினர் சித்திரவதை செய்து கொன்றனர் என்ற உண்மையை உலகம் பூராவும் ஒளிபரப்பி விட்டது. இதுகுறித்து போர் விசாரணை நடத்த வேண்டும் என்று நார்வே அமைச்சரும் முன்னாள் சமாதான சிறப்புத் தூதருமான எரிக்-சொல்ஹைம் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத் தகுந்ததாகும். இதற்கு மேலும் ராஜபக்சே நாகரிக உலகின் முன் முகத்தைக் காட்டத் எந்த வகையில் தகுதி உடையவராக இருக்க முடியும்?

தமிழினத்தை நிரந்தரமாக அழிக்கும் வேலை

இலங்கையில் இரண்டு இனங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் ஒரே ஒரு இனம்தான். அது சிங்கள இனம்தான் என்பதை நிரந்தரமாக நிலை நிறுத்தும் அழிவு வேலையில் அவசர அவசரமாக ஈடுபட்டு வருகிறார்.

போரில் பல லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது போதாது என்று முள் வேலிகளுக்குள் மூன்று லட்சம் தமிழர்களை முடக்கி மிருகங்களைவிட கேவலமாக நடத்துகிறார்.

விலங்குகளைக் கூட வதைக்கக் கூடாது என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் இங்கே மனிதர்கள் வதைக்கப்படுகிறார்களே _ உலகில் மனசாட்சி உறங்குகிறதா என்கிற கேள்விதான் நம் முன் எழுந்து நிற்கிறது. அய்ரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும், அமெரிக்காவும்கூட இலங்கையின் போர்க் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று முன்வந்தபோது இந்தியா நடந்து கொண்ட முறை உலக முழுவதும் உள்ள தமிழர்களையும் மனிதாபிமானிகளையும் ரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்து விட்டது.

போர் முடிந்து விட்டது என்று அறிவித்த ராஜபக்சே தமிழர்கள் என்ற இன அடையாளம் எந்த விதத்திலும் இருக்கக் கூடாது என்கிற முறையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.
ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டு, தமிழர்களின் பூர்வீகமான இடங்களில் சிங்களக் குடியேற்றத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார். தமிழர்கள் மீண்டும் அங்கு குடியேறும் நிலை ஏற்பட்டாலும், தமிழர்கள் தங்களின் பூமியில் சிறுபான்மையினர் என்ற நிலைதான் ஏற்படும். அன்றாடம் சிங்களர்களின் வெறியாட்டத்துக்குப் பலியாகும் ஆடுகளாகத்தான் தமிழர்கள் ஆக்கப்படுவார்கள். தமிழர் பகுதிகளுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.

தமிழர்களே, நம் உணர்வைக் காட்ட வேண்டாமா?

இந்த இன சுத்திகரிப்பு தடுக்கப்பட்டாக வேண்டும். அதற்கான குரல் தமிழ் நாட்டிலிருந்து வெடித்துக் கிளம்பியே ஆக வேண்டும். முதல் அமைச்சர் என்ற முறையில் நமது மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் இந்திய பிரதமருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்திய அரசின் உதவி போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார். அது ஒரு பக்கம் நடக்கட்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியது நமது முக்கிய கடமையாகும். வீதியில் இறங்கி நாம் நடத்தும் போராட்டம் இந்திய அரசையும் உலகத்தையும் தட்டி எழுப்பக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சனையின்மீது கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் நிலை

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் அத்துமீறி தாக்கப்படுவது என்பது சர்வ சாதாரணமாகி விட்ட ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வப்பொழுது இந்திய அரசு வருத்தம் தெரிவித்து விட்டதோடு அதன் கடமை முடிந்து விட்டது.

இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல இந்திய அரசு கடலோர ரோந்து பணிக்காக இலங்கைக் கடற்படைக்கு விக்ரஹா என்ற கப்பலை வழங்கியுள்ளது. திரிகோண-மலையில் இந்தக் கப்பலை கோத்தபயா ராஜபக்சே தொடங்கி வைத்து இந்திய அரசை வானாளாவப் புகழ்ந்து தள்ளியுள்ளார். இது மிகவும் வன்மையகக் கண்டிக்கத்தக்க நடவடிக்கை-யாகும். இதன் மூலம் இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெறுப்புணர்வை மேலும் மேலும் மத்திய அரசு தேடிக் கொண்டு இருக்கிறது. இந்தக் கப்பல் திரும்பப் பெறப்பட வேண்டும்.

இதே செப்டம்பரில்தான்!

கடந்த ஆண்டு இதே செப்டம்பரில் 23_ஆம் தேதி திராவிடர் கழகம் இரயில் மறியல் போராட்டத்தை நடத்தி தமிழர்களின் போராட்ட உணர்வைத் தொடங்கி வைத்தது. அதே போல இந்த செப்டம்பரிலும் இரண்டாம் தேதி (2.9.2009) அதே இரயில் மறியல் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.

இதற்கு மேலும் ஈழத் தமிழர்கள் துன்பத்தை அனுபவிக்கவே முடியாது _ முடியவே முடியாது.
இந்திய அரசு உடனடியாக தலையிட்டு முகாம்களில் முடங்கிக் கிடக்கும் தமிழர்களை உடனடியாகக் காப்பாற்ற வேண்டும். அவர்களின் வாழ்வுரிமை காப்பாற்றப்பட வேண்டும்; இது மிக மிக அவசரம்! அவசியம்!

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செப்டம்பர் 2_இல் இரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.

ஒரு கட்சியின் போராட்டமல்ல!

இது ஒரு கட்சியின் போராட்டமோ, அரசியல் போராட்டமோ அல்ல _ ஓர் இனத்தின் வாழ்வுரிமைக்கான அடிப்படைப் போராட்டம். உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

அன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலிலிருந்து எனது தலைமையில் போராட்ட வீரர்கள் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று ரயில் மறியலில் ஈடுபடுவார்கள்.

தடையை மீறுவோம்!

அனுமதி கிடைக்காது என்று நன்றாகவே தெரியும். ஆனாலும் தடையை மீறிப் போராட்டத்தைத் தொடருவோம் வாரீர்! வாரீர்!! என்று கழகத் தோழர்களையும் இனவுணர்வுகொண்ட தமிழர்களையும் அழைக்கிறோம்!

-----------------------"விடுதலை"30-8-2009

1 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஈழத்தில் இதற்குமேல் தமிழர்கள் துயரத்தை அனுபவிக்கவே முடியாது
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு செயல்பட வேண்டும்

செய்தியாளர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நேற்று கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:

நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறோம்//


ஐயா,

இன்று இலங்கையில் நடக்கிற அவலத்தை கண்ணுற மட்டுமே நமக்கு முடிகிறது.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு வலியுறுத்துவாங்க ஐயா!

வலியுறுத்தி வலியுறுத்தி வயசாயிப் போச்சுங்களே!

முழு மெஜாரிட்டி இல்லாத போது காங்கிரஸ்காரனை பிடிச்சு உலுக்குறத விட்டுபுட்டு, இருந்த வாய்ப்புகளை எல்லாமும் துறந்துவிட்டு

அவனுக்கு முழு மெஜாரிட்டி இருக்கும் போது கேட்டா என்னங்க செய்வான்?

லாசிக்கா பாத்தா மதிக்க மாட்டானுங்களே!