Search This Blog

23.8.09

தமிழனுக்கு கடவுள் உண்டா?
உலகத்தில் மற்ற மதக்காரர்களுடைய கடவுளைப்பற்றிக் கவனித்துப் பார்த்தாலும், இவ்வளவு ஆபாசமாக இல்லா விட்டாலும், யுக்திக்கோ, வாதத்திற்கோ நிற்க முடியாமல் அவைகளுக்கு பெரிதும் பரிகசிக்கத்தக்கதாய்த் தானிருக்கின்றது. அதாவது, உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொருத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத் தானிருக்கின்றன.உதாரணமாக, இந்துமதத்தில் உலக சிருஷ்டிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் சொல்லுகிறபோது, கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி, அதன்மீது இருந்து கொண்டு அதில் ஒரு விதையைப் போட்டு. அந்த வித்திலிருந்து உலகத்தை உண்டாக்கி அவ்வுலகத்-திலிருந்து பிர்மாவை சிருஷ்டித்து, அந்த பிர்மா அந்த உலகத்தை இரண்டாக்கி ஒன்றைச் சுவர்க்க-மாகவும், மற்றொன்றை பூலோகமாகவும் செய்து, அந்த பூலோகத்தில் பஞ்ச பூதங்களையுண்டாக்கி, பிறகு மனிதர், மிருகம், பட்சி முதலிய ஜாதிகளை சிருஷ்டித்து என்று ஆரம்பித்து மற்றும் இவைபோல அடுக்கடுக்காக எப்படிச் சொல்லிக் கொண்டே போகின்றதோ, அதுபோலவே தான் கிறிஸ்து முதலிய இதர மதங்களிலும் கடவுள் முதல்நாள் ஒன்றை சிருஷ்டித்தார், மூன்றாவது நாள் வேறொன்றைச் சிருஷ்டித்தார் என்பதுபோலவே சொல்லிக் கொண்டு போகப்படுகின்றன.ஆகவே, அஸ்திவாரத்தில் கடவுள் சிருஷ்டியைப்பற்றிச் சொல்லுகிற விஷயம் எல்லா மதத்திலும் ஒன்று போலவேதானிருக்கின்றன. இவை ஏன் இப்படியிருக்கின்றன என்று பார்ப்போமேயானால், கடவுள் உண்டு என்பதற்கு சமாதானம் சொல்லும் போது, உலக உற்பத்திக்கு ஒரு ஆதாரம் வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, அதற்காக கடவுள் உலகத்தை உண்டாக்கினார் என்று ஆரம்பித்து, அந்த உண்டாக்கப்பட்டவையென்பதை முதலில் இன்னதையுண்டாக்கினார் இன்னார் என்பதாகச் சில மதமும், முதல் நாள் இன்னதை யுண்டாக்கினார், இரண்டாவது நாள் இன்னதையுண்டாக்கினாரென்பதாகச் சில மதமும் சொல்லுகின்றன. ஆகவே, இந்த இடம் மாத்திரம் எல்லாம் ஒன்றுபோலாகவே-தானிருக்கின்றன. இதில் ஏதாவது தகராறு ஏற்படுமானால் எல்லா மதக் கடவுளுக்கும் ஒரே கதிதான் நேரும்.கடவுள் ஸ்தாபனத்திற்கு ஒரே மாதிரி அஸ்திவாரம் ஏற்படுவதற்குக் காரணமென்னவென்று பார்ப்போமானால், முதன் முதலாக ஆரிய மதத்திலிருந்து சீர்திருத்தமாக கிறிஸ்தவ மதமேற்பட்டதும், அதிலிருந்து சீர்திருத்தமாக மகம்மதிய மதமேற்பட்டதும் நமக்குக் காணப்படுகிறபடியால், எல்லா மதமும் அதையே பின்பற்றிக்கொண்டு வருவதாயிற்றே தவிர வேறில்லை என்றே தோன்றுகிறது.ஆனால், நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமானால், "கடவுள்" என்கின்ற பதமே கட+உள் = (கடவுள்) என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர, வட மொழியிலும், ஆங்கில மொழியிலும் இருப்பது போன்ற பகவான் காட் அல்லா என்பது போன்ற ஒரு தனி வார்த்தையோ அல்லது அந்த விதங்களான அர்த்தத்தைக் கற்பிக்கக் கூடியதான வாக்கியமோ, தமிழில் இல்லையென்பதை உணர வேண்டும். தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் "கடவுள்" உணர்ச்சி இருந்து இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும்.

அது மாத்திரமல்லாமல், ஆங்கிலம் முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படு-வதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம், எத்தீஸ்ட், நாஸ்திகம், நாஸ்திகன் என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றனவோ அவைபோலவே தமிழிலும் கடவுள் இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கும், கடவுள் இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடு-வதற்கும் அப்பொருள்கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும். ஆகவே, அவற்றிலிருந்து தமிழர்களுக்கும் (அதாவது தமிழ் நாட்டாருக்கும்) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்பந்தமுமிருந்த-தில்லை என்பது ஒருவாறு புலப்படும்.இறைவன் என்கின்ற பதத்தை கடவுளுக்கு உள்ள தமிழ்ப் பதம் என்று பண்டிதர்கள் சொல்லக் கூடுமானாலும் அது அரசனுக்கும், தலைவனுக்கும் ஏற்பட்டதே தவிர, கடவுளுக்காக ஏற்பட்ட தனிப் பொருளமைந்த சொல் அல்லவென்றே சொல்லுவோம். ஆனால், கடவுள் என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன், பெரியவன் எனினும் பொருந்தும் என்று சப்புக் கட்டலாமே-ழிய அது அதற்கே ஏற்பட்ட தனி வார்த்தை ஆகாது.நிற்க; தமிழ்நாட்டில் பலர் காலம்சென்ற பிதுர்க்களையும், செல்வாக்குள்ள பெரியார்களையும் அன்பினாலும், வீரர்களை கீர்த்தியாலும் வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். மற்றபடி இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிரமன், பிள்ளையார், சுப்பிரமணியன் முதலிய கடவுள்களையோ மற்றும் அது சம்பந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந்தார்கள் என்றாவது சொல்லுவதற்குக்கூட இடமில்லை என்று கருதுகிறேன். இதற்கெனக்குத் தோன்றும் ஆதாரம் என்னவென்றால், இப்போது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட நீச்சக் கடவுள்கள் தவிர மற்ற கடவுள்கள் பெயர்களெல்லாம் வடமொழியிலேயே இருக்கின்றதென்பதே போதுமானதாகும்.ஆனால், வடமொழிப் பெயருள்ள சில கடவுள்களின் பெயர்களை தமிழில் மொழிபெயர்த்து அந்தக் கடவுள்களை தமிழில் அழைப்பதைப் பார்க்கின்றோம். என்றாலும், இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன் வருவதை நான் பார்க்கவில்லை.இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களைப் பிடித்த நோய்களான சைவ, வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வட மொழிப் பெயர்கள் உடையதாகவும், அவற்றின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேத சாஸ்திர புராண இதிகாசங்களாகவும்தானே இருக்கின்றதே அல்லாமல், தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்டதாகச் சொல்லக்கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும் கேட்டதும் இல்லை. இவற்றுக்கு செய்யப்படும் பூசை முதலியவையும், வடமொழி நூல்கள் ஆதாரப்படி, வடமொழிப் பெயர்கள் கொண்ட வஸ்துகளும் செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம். அதாவது அருச்சனை, அபிஷேகம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவையாகும்.தவிரவும், மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும், பக்தர்மார்களும் கும்பிட்டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண்டகம், பிரபந்தம் முதலியவை பாடினதும், மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும், ஆகிய எல்லாம் வடமொழிப் பேர் கொண்ட கடவுள்களைப் பற்றியும், அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப்பட்ட வடமொழிப் புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றியுமே இருக்கின்றனவே அல்லாமல் மற்றபடி அவை தமிழர்களோ அல்லது தமிழ் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத்தக்கதாக ஒன்றையுமே, ஒருவர் வாக்கையுமே நான் பார்த்ததும் இல்லை; பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை.மற்றும், சமயக் குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர, தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம். வேண்டுமானால் அதை தமிழில் - விபூதியை திருநீறு என்றும், திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனாலும், அது சரியான மொழி பெயர்ப்பல்லவென்று சொல்வதோடு, விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படுகின்றனவோ அந்தக் கருத்தும், பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன். விபூதி என்றும், நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துகள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்தப் பெயரையே அதாவது, சாம்பலுக்குள்ள மாறு பெயராகிய நீறு என்றும், மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்று-கின்றது.ஆகவே, தமிழில் காட், அல்லா, பகவான் என்பவற்றைக் குறிப்பதற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும், அதன் சின்னங்களையும் குறிப்பிடுவதற்கு தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும், அனுபவத்திலுள்ள கடவுள்களும், பெயர்களும் அவற்றின் நடவடிக்கைகளும்கூட தமிழில் இல்லை என்பதும், மற்றபடி இப்போது இருப்பவை எல்லாம் வடமொழியில் இருந்து தமிழர்கள் எடுத்துக்-கொண்டு தங்களுடையனவாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப் பட்டதை உங்களுக்குச் சொன்னேன்.--------------கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜ ஆண்டு விழாவில் தந்தைபெரியார் அவர்களின் தலைமை முடிவுரை -" குடிஅரசு", 29.6.1930.

0 comments: