Search This Blog

18.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - வெனிசுலா-வியட்நாம்


வெனிசுலா

1520ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் ஸ்பெயின் நாடு தன் குடியேற்ற முயற்சிகளைத் தொடங்கியது. ஸ்பெயின் நாட்டை பிரான்சின் நெப்போலியன் தாக்கித் தோல்வியுறச் செய்ததைத் தொடர்ந்து வெனிசுலா நாட்டினர் தம் விடுதலையைப் பிரகடனப் படுத்தி 1810இல் அறிவித்தனர்.

17.-12.-1819இல் உருவான மகா கொலம்பியா நாட்டின் அங்கமாக வெனிசுலா இருந்தது. இதன் அதிபர் சைமன் பொலிவர். இருப்பினும் 1829இல் மகா கொலம்பியாவில் இருந்து பிரிந்த வெனிசுலா, தன்னைக் குடியரசாக அறிவித்து காரகாஸ் நகரைத் தலைநகராகக் கொண்டது.

1830 முதல் 1935 வரை, ஒரு நூற்றாண்டுக் காலம், காடிலோக்கள் என்று அழைக்கப்பட்ட போர்த் தளபதிகள் மாற்றி மாற்றி ஆண்டு வந்தனர். 1935இல் சர்வாதிகாரி ஜுவான் வின்செட் கோமஸ் இறந்த பின்னர்தான இவ்வாட்சி முறை முடிவுக்கு வந்தது.

1928இல் உலகின் இரண்டாவது பெரிய பெட்ரோலிய உற்பத்தி நாடாக வெனிசுலா வளர்ந்தது. 1970லிருந்து இந்நாட்டுப் பொருளாதாரம், பெட்ரோல் விலை உயர்வால் வளர்ந்துள்ளது.

தென் அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் கொலம்பியாவுக்கும் கயானாவுக்கும் இடைப்பட்ட இந்நாட்டின் பரப்பளவு 9 லட்சத்து 12 ஆயிரத்து 50 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 கோடியே 58 லட்சம் ஆகும். ரோமன் கத்தோலிக மதத்தினர் 96 விழுக்காடு உள்ளனர். 94 விழுக்காடு மக்கள் படிப்பறிவு உள்ளவர்.

5.-8.-1811இல் விடுதலை நாள் கொண்டாடும் இந்நாட்டில், குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவரும் கூட. நாட்டின் நாணயத்தின் பெயரே பொலிவர். பொலிவியா நாட்டை விடுதலை பெறச் செய்ய ஆயுதம் ஏந்திப் போராடிய கொரில்லாப் போர் முறைத் தலைவர் சைமன்டி பொலிவர் நினைவாக இப்பெயர்.

47 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 12 விழுக்காடு மக்களுக்கு வேலை கிட்டவில்லை. நாட்டில் 682 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை உண்டு.

வியட்நாம்

டொன்கின் என அழைக்கப்பட்ட வட பகுதியும் கொச்சின் சீனா என்று அழைக்கப்பட்ட தென்பகுதியும் 17ஆம் நூற்றாண்டில் இரு பகுதிகளாகவே இயங்கின. அவை இணைந்த பகுதிதான் இன்றைய வியட்நாம். 1812இல் இணைந்த இப்பகுதியில் ஓர் அரச வமிசம் ஆட்சி நடத்தியது. இந்நாட்டின் தலைநகரான சைகோன் நகரைப் பிரெஞ்சுப் படையினர் 1859இல் கைப்பற்றினர். அதன் மூலம் நாடு முழுவதையும் ஆளத் தொடங்கினர்.

இரண்டாம் உலகப் போர் நேரத்தில், ஜப்பானியர்கள் வியட்நாமைக் கைப்பற்றி விடுதலை அளித்தனர். இதனை பிரான்சு எதிர்த்தது. இந்தோ சீனப் போர் தொடங்கியது. 1954இல் தோற்றுப் போன பிரெஞ்ச் நாட்டினர் வெளியேறினர். இதன் பின்னர், வியட்நாம் இரண்டு பிரிவானது. விடுதலைக்கான போரில் ஈடுபட்ட ஹோசிமின் தலைமையில் வியட்நாமிய ஜனநாயகக் குடியரசு நாடு என வட வியட்நாமும், அரசர் பாவோதால் தலைமையில் தென் வியட்நாம் குடியரசு எனவும் நாடு இரண்டானது. சிறிது காலத்திற்குள் பாவோதாலின் பிரதம அமைச்சர் நகோதின் தியம் அரசரைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார். இந்தச் செயலுக்கு அமெரிக்கா உடந்தையாக இருந்தது.

நகோதின்தியம் வட, தென் வியட்நாம் நாட்டுக்கு ஒரே தேர்தலை நடத்த ஒத்துக் கொள்ளவில்லை. இந்த முடிவும் அமெரிக்காவின் ஆலோசனைப்படியே, வட, தென் வியட்நாம் அரசுகளை ஒன்றுபடுத்திடவட வியட்நாம் போர் தொடுத்தது. 1975 வரை இப்போர் நடந்தது.தென் வியட்நாம் நிபந்தனையின்றி வட வியட்நாமிடம் சரண்அடைந்தது. 2-.7.-1976இல் இரண்டு வியட்நாம் அரசுகளும் அதிகாரப் பூர்வமாக இணைந்து வியட்நாம் சோஷலிசக் குடியரசு நாடாகியது. வடவியட்நாம் பகுதியில் உள்ள ஹனோய் தலைநகர் ஆனது.

இந்தப் பாதை வழியாக 10 லட்சம் பிரெஞ்ச் படையினர் போனார்கள்; ஒருவர் கூட உயிருடன் திரும்பவில்லை என்று சுதந்திரப் போர் நடைபெற்ற போது வைக்கப்பட்ட பலகை உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு எதிரான போர் 20 ஆண்டுக் காலமாக நடந்து அவமானகரமான தோல்வியை அமெரிக்காவுக்கு அளித்தனர் வியட்நாம் மக்கள்.

இந்நாட்டின் பரப்பு 3 லட்சத்து 29 ஆயிரத்து 560 சதுர கி.மீ. மக்கள் தொகை 8 கோடி 44 லட்சம். பவுத்த மதம், ரோமன் கத்தோலிகம், பழமை நம்பிக்கைகள் கொண்ட மக்கள். வியட்நாம் மொழி ஆட்சி மொழி. 94 விழுக்காடு படிப்பறிவு கொண்டோர். பொது உடைமை அரசில் குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 19 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்கும் கீழ் உள்ளனர். 2 விழுக்காடுப் பேர்களுக்கு வேலை கிட்டவில்லை.

------------------"விடுதலை" 16-8-2009

0 comments: