Search This Blog

21.8.09

நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகை ஒன்று


ஊடகங்கள்
எங்கே போகின்றன?


தொலைக்காட்சிகளோ, ஏடுகளோ, இதழ்களோ எந்த ஆன்மிகவாதிகளின் கை அசைப்பினாலும் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல; அறிவியலின் நன்கொடைதான் அவை.

அப்படியிருக்கும்போது கண்ட கண்ட மூடநம்பிக்கைக் குப்பைகளைக் கொட்டி மக்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது மன்னிக்கப்பட முடியாத ஒன்று.

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்துக்கொண்டால் மட்டும் போதுமா? ஏட்டுச் சுரைக்காய் எதற்கு உதவும்?

வானொலியில் வெள்ளிக்கிழமைதோறும் ஒவ்வொரு மதக்காரர்களின் சொற்பொழிவுகளுக்கு இடம் அளிக்கப்படுகின்றன. பகுத்தறிவுச் சிந்தனையாளர்களுக்கும் ஏன் வாய்ப்புக் கொடுக்கக் கூடாது? அரசு தொலைக்காட்சியும் இந்தத் திசையில் சிந்திக்கவேண்டாமா?


தனியார்த் தொலைக்காட்சிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். காலையில் விழிப்பதே இத்தகு மூட நம்பிக்கைச் சமாச்சாரங்களில்தான். எந்த நிறத்தில் சட்டை அணிவது, எந்த மாதிரியான மோதிரக்கல்லை அணிந்துகொள்வது அதனையும் தாண்டினால் சாமியார்களின் இதோபதேசங்கள்.

தடுக்கி விழுந்தவன் அரிவாள்மனையில் விழுந்த கதையாகத்தானிருக்கிறது. திட்டமிட்டு மக்களை மடையர்களாக்கித் தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதாகவே தெரிகிறது.

மாலை ஏடு ஒன்று இரு செய்திகளை கடந்த செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

தலைப்பு என்ன தெரியுமா? நம்புங்கள் நாராயணன் சொன்னது பலித்துவிட்டதாம். என்னவென்றால், சூரியகிரகணத்தின்போது நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்துச் சொன்னாராம். அதன்படி சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாம்.

நிலநடுக்கம் ஏற்பட்டது அந்தமான் தீவில். அதன் தாக்கம் சில இடங்களில் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பிடத்தக்க எந்தவித சேதமும் கிடையாது. மூடத்தனத்தைக் காப்பாற்றியே தீரவேண்டும் என்று மூச்சை அடக்கிப் பாடுபடும் ஏடுகளோ அதைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுவது வெட்கக்கேடாகும்.

இதே நம்புங்கள் நாராயணன்தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிதான் அமையும் என்றார். என்னாயிற்று? அதைப்பற்றி இந்த ஏடுகள் எழுதியதுண்டா? சோதிடர் கூறியது பொய்த்துவிட்டது என்று ஒரு பத்தி செய்தியை வெளியிட்டதுண்டா?

உலகக் கிரிக்கெட் போட்டியில் வெல்லப் போவது இந்தியாதான் என்று சோதிடம் கணித்த சிப்பாய்களின் முகத்திரையைக் கிழித்து, மூன்று வரி செய்திகளை வெளியிடும் அறிவு நாணயம் இந்த ஊடகங்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

கடந்த முறை சுனாமி தமிழ்நாட்டில் ஏற்பட்டதே அதை முன்கூட்டி சொன்ன ஒரே ஒரு சோதிடர் உண்டா?

காகம் உட்கார்ந்தது பனம் பழம் விழுந்தது என்பதுபோல நூறு சொன்னால், ஒன்று அரைகுறையாக நடந்துவிட்டால் 99 பொய்த்தகவல்களை மறைத்துவிட்டு ஒன்றே ஒன்றை மட்டும் ஆகாய உயரத்திற்கு ஊதிக்காட்டுவதுதான் இந்த ஊடகங்களின் வக்கிரப் புத்தி போலும். நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகை ஒன்று என்று தந்தை பெரியார் கூறியது எவ்வளவுத் துல்லியமானது என்பதை நடப்பதை வைத்து எளிதில் புரிந்துகொள்ளலாமே!

அதேபோல, அதே மாலை ஏடு ஆவிபற்றி விஞ்ஞானிகளின் ஆய்வு; இல்லை என்று மறுக்க முடியவில்லை என்பதுபோல பெட்டிச் செய்தியை வெளியிடுகிறது.

எந்த விஞ்ஞானி எப்பொழுது வெளியிட்டார்? என்ன ஆய்வுகளை மேற்கொண்டார் என்ற விளக்கங்கள் எல்லாம் கிடையாது. மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்ற தோரணையில் வெளியிடப்படுகிறது.

ஆவி என்றால் என்ன? நீராவியா _ வெள்ளாவியா? நீராவியாலாவது இட்லி சுடலாம்; இவர்கள் சொல்லும் ஆவி எதற்குப் பயன்படப் போகிறது?

ஆவி கூடுவிட்டுக் கூடு பாய்ந்தால் உலகில் உயிரினங்களின் எண்ணிக்கை எப்படி உயர்ந்துகொண்டே போகும்?

இலண்டன் தொலைக்காட்சியில் உருத்திராட்சையின் மாயாஜாலம்பற்றி ஒளிபரப்பியபோது, அது அறிவியலுக்கு விரோதமானது என்று உடனடியாகத் தடை செய்துவிட்டார்கள்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கச் சொல்லும் அரசியல் சட்டத்தை உடைய இந்திய அரசு ஏன் இலண்டனைப் பின்பற்றக்கூடாது?


தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள், திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் இவற்றின் அருமையை இப்பொழுதாவது நடுநிலையோடு நின்று சிந்திப்பவர்கள் உணர்வார்களாக!

-------------------"விடுதலை"தலையங்கம் 13-8-2009

0 comments: