Search This Blog

28.8.09

நாராயண குரு மூட நம்பிக்கையின் எதிரி




நாராயணகுரு

இன்று நாராயண குரு பிறந்த நாள் (1854) கேரள மாநிலம் திருவாங்கூரிலிருந்து பத்துகல் தொலைவில் உள்ள செம்பழாண்டி என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் மாடன் ஆசான், குட்டியம்மா. 18 வயது வரை உள்ளூரிலேயே இருந்தார்.

மதமே கூடாது, கடவுள் இல்லவே இல்லை என்ற கொள்கை உடையவர் அல்லர். கடவுள் நம்பிக்கையோடே அதேநேரத்தில் அதற்குள்ளேயே சில மாற்றங்களைக் கொண்டு வந்த ஒரு சீர்திருத்தக்காரர்.

ஒரே கடவுள், ஒரே மதம் என்ற போக்கைக் கொண்டவர், பிரச்சாரம் செய்தவர்.

ஒன்றே குலம் என்பதன்மூலம் வருண தர்மத்தை முற்றிலும் எதிர்த்தவர். அதன் காரணமாகப் பார்ப்பனர்கள் எதிர்ப்புக்கு ஆளானவர். நான் சொல்லும் சிவன் வேறு; பார்ப்பனர்களின் சிவன் வேறு என்று கூறியவர்.

அவர் இயற்றிய கவிதைகள் வெளிவந்துள்ளன. ஒரே இனத்தினுள் ஆணும், பெண்ணும் இணைந்தால் பிள்ளை பிறப்பதில்லையா? மனித இனத்தில்தான் பார்ப்பானும் பிறக்கிறான். பறையனும் பிறப்பதும் அதே மனித இனத்தில்தான். அப்படியானால் மனிதர்களிடையே ஜாதியில் வேறுபாடு ஏனிருக்கவேண்டும்?


பழங்காலத்திலேயே முனிபுங்கவரான பராசரர் பிறந்தது பறைச்சி ஒருத்திக்கே; வேதவியாசர் பிறந்தது மீனவக் கன்னி ஒருத்திக்கே என்றெல்லாம் பாடியிருக்கிறார்.

நாராயண குரு மூட நம்பிக்கையின் எதிரி. ஒருமுறை அவரின் சீடர் ஒருவர் குருவுக்குக் கஞ்சி கொண்டு வந்தார். உப்பு சரியாக இருக்கிறதா என்று கேட்டார். குருவுக்குக் கொண்டு போவதை நான் எப்படி ருசித்துப் பார்க்க முடியும் என்றான் சீடன்.

சீடனின் மூட நம்பிக்கையைக் கண்டித்த நாராயண குரு, அப்படியானால் அதை நாய்க்கு ஊற்று; அதாவது ருசித்து சாப்பிடுகிறதா என்று பார்ப்போம்! என்றாராம். அந்த அளவுக்கு அவர் பகுத்தறிவாளராக இருந்திருக்கிறார்.

தம் கருத்துகளைப் பரப்புவதற்காகவே என்.டி.பி.ஒய். என்னும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் என்னும் அமைப்பினைத் தொடங்கினார் (1903). நாடெங்கும் இந்தச் சீர்திருத்தக் கருத்தினை பிரச்சாரம் செய்தார். 1926 இல் தமிழ்நாட்டில் கோவையிலும், நீலகிரியிலும் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். வைக்கம் போராட்டத்தில் நேரிடையாக ஈடுபடாவிட்டாலும், மறைமுகமாக உதவி செய்திருக்கிறார்.

மதத்தில் இருந்துகொண்டே அவர் செய்த சீர்திருத்தங்களைக்கூட கேரள நம்பூதிரிப் பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்த்து வந்துள்ளனர். மாற்றம் என்றாலே மரணம் என்பதுதானே பார்ப்பனர்களின் சித்தாந்தம்!

------------ மயிலாடன் அவர்கள் 28-8-2009 "விடுத்லை"யில் எழுதிய கட்டுரை

0 comments: