Search This Blog
22.8.09
சுப்ரமணிய சங்கராச்சாரி பெண்களைப் பற்றிப் பேசியதும் எழுதியதும் லோகப் பிரசித்தம்!
உள்ளே விருப்பு வெளியே வெறுப்பு!
காஞ்சிபுரம் சங்கரமடம் ஏற்கெனவே கும்பகோணத்தில் இருந்தது. காஞ்சிபுரம் காமாட்சி கோயிலில் பூஜை புனஸ்காரம் செய்வதற்காக இங்கு வந்து தங்கிய மடத்தின் தலைவர்கள் காஞ்சிபுரத்திலேயே டேரா போட்டு கொட்டு முழக்கிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தொடக்க கால மாநாடுகளில் பங்கேற்றவர்களின் பட்டியலில், கும்பகோணம் சங்கராச்சாரி என்றே உள்ளது காங்கிரஸ் வரலாற்றை நூலைப் படித்து உண்மையை உணரலாம்.
காஞ்சிபுரத்தில் ஒண்டி, பிழைப்பு நடத்தி, பிறகு ஸ்தல புராணமே கட்டி லீட்டார்கள். காஞ்சிபுரத்தில் ஆதிசங்கரனே கட்டினான் எனக் கூறி வருகிறார்கள். இதையெல்லாம் அக்குஅக்காகக் கழற்றிப் பிய்த்துப் போட்டுப் பத்து நாள்கள் பேசி விட்டார், தமிழர் தலைவர்! ஆனாலும் இந்த வெட்கம் கெட்டதுகள் அந்தப் பல்லவியை விட்ட பாடில்லை. விழுப்புரம் சாமிநாதன் கட்டிய மடத்தை ஆதிசங்கரன் ஆர்யாம்பாளின் புத்திரன் கட்டியதாகப் புளுகிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதை நம்பிப் பலரும் காஞ்சிபுரம் வந்து சாமிநாதனைச் சந்தித்தனர். அவரவர் ஜாதிக்கேற்றவாறு அவர்களைச் சாமிநாதனும் சந்தித்து வந்தார். சிலரை மடத்தில் சிலரை வெளியில் சிலரைத் தெருவில் சிலரை மாட்டுக் கொட்டகையில் என்று ஜாதிக்குத் தக்கவாறு சந்தித்து வந்தார்.
பெண்கள் மீது பிரியம்
அவர் மறைந்த பிறகு, பட்டத்துக்கு வந்த இருள் நீக்கி சுப்பிரமணியம் ஆண்களைவிடப் பெண்களைச் சந்திப்பதில் மிகவும் தீவிரம் காட்டினார். ஆர்வமும் காட்டினார். காரணம் என்ன என்பது சகலமானவர்களுக்கும் சர்வ சாதாரணமாய்ச் செய்திப் பத்திரிகைகள் விலாவாரியாகவே தெரிவித்து விட்ட காரணத்தான், மீண்டும் எழுதத் தேவையில்லை. அப்படி ஒரு ப்ரீதி பெரியவாளுக்கு ஸ்திரீகள்மீது.
அந்தப் பிரியம், பெண் எழுத்தாளர் ஒருவரை லாரி ஏற்றிக் கொல்லும் அளவுக்குப் போனதை அந்த அம்மையாரே அறிவித்தார். நாடே நாறிப் போனது. ஆனாலும் சுப்ரமணியம் தன் போக்கை மாற்றிக் கொள்ளவேயில்லை. அதுவும் ஜகப் பிரசித்தம்.
இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் மேலாளர் கோயிலிலேயே கொலை செய்யப்பட்டார். காவல்துறை தீவிரப் புலன் விசாரணை செய்து, சுப்ரமணிய சங்கராச்சாரிமீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. 100 நாள்கள் சிறைக் கொட்டடியில், எட்டடிக் குச்சுக்குள்ளே ஏகாந்த தபஸ் பண்ணிவிட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளது.
பெண்களை வெறுப்பதுபோல்..
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று இவாளின் இந்து மதத்தின் பிலாக்கணம் பாடும். அந்த மதத்தைத் தூக்கிப் பிடிக்கும். தூமகேதுக்கள் இந்தக் கருத்தை வலியுறுத்துவார்கள். தாங்களே தாயின் புதல்வர்கள் என்பதை மறந்து விட்டு!
அதிலும் இந்தப் பேர் வழி சுப்ரமணிய சங்கராச்சாரி பெண்களைப் பற்றிப் பேசியதும் எழுதியதும் லோகப் பிரசித்தம். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றார். கணவனை இழந்த பரிதாபத்திற்குரியவர்களை தரிசு நிலம் என்று இகழ்ந்தார்.
பெண்களைப்பற்றி, அவர் எழுதிய சில நல்முத்துகளை நூலாக்கி விற்கிறார்கள் - 100 ஆண்டுகால நூல் பதிப்பாளர்கள். இந்தப் பதிப்பகத்திற்கு இருக்கும் பெருமையே(?) தனி! தமிழ் நூல்களை அச்சிட்டு விற்று வயிறு வளர்க்கும் இந்தப் பார்ப்பனர்கள், தமிழின் பெருமைமிகு நூலாம் திருக்குறளையே, வடமொழியின் தழுவல், வேதங்களின் சாரம்தான் குறள்பாக்கள் எனக் கூறிடும் குள்ள நரிக்கும்பலுடன் அல்லயன்ஸ் சேர்ந்தவர்கள்.
அந்த நூலில் ஒரு கேள்வி _ மின்ஒளி போல் சஞ்சலமானது எது? ஜகத்குரு, லோக குரு நடமாடும் தெய்வம்( படமெடுக்கும் பாம்பு) இருள்நீக்கி சுப்ரமணியன் கொடுத்த பதில் _ தீயவர் நட்பும், பெண்களும் என்பது. பெண்களை யாரோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்து மதக் கோணல்
இவரை இந்து மத குரு என்கிறார்கள். இந்தியாவில் இருப்பதில் பெரிய மதம் இந்து மதம். காஷ்மீர் முதல் குமரிமுனை வரை இருப்பது இந்தியா அதன் மதம் இந்து மதம் _ மக்கள் இந்தியர்கள் _ இந்துக்கள்! இந்நிலையில் இவர்களின் தோற்றம், நடையுடை பாவனை, பழக்க வழக்கங்கள் ஒன்றுபோல் இருக்க வேண்டாமா? இல்லையே!
இவரே பதில் கூறுகிறார் _ வட நாட்டு ஆச்சாரம் வேறு. நம் நாட்டு ஆசாரம் வேறு. நம்நாட்டில் சுமங்கலிகள் தலையில் துணி போடக்கூடாது (வடநாட்டுப் பெண்கள் முக்காடு போடுவதைப் போல, தமிழ்நாட்டுப் பெண்கள் போடக் கூடாது என்கிறார்) இவர் என்ன, திராவிடக் கட்சிக்காரரா? வடநாடு, தென் நாடு எனப் பிரித்துப் பேசுகிறாரே!
அடுத்து ஒரு கேள்விக்கு பெண்கள் ஒரு பூஜையும் செய்ய வேண்டாம். பாராயணங்கள் செய்தால் போதும் என்கிறார். சாமி கும்பிடக் கூடத் தேவையில்லை _ வெறுமனே பாடல்களை முணுமுணுக்கலாம் என்கிறார். பிறிதொரு கேள்விக்குப் பல்டி அடித்துப் பதில் சொல்கிறார் _ பெண்கள் வரலட்சுமி பூஜை, ரிஷி பஞ்சமி பூஜைதான் செய்யலாம். பெண்கள் சப்தமிட்டு எதுவும் செய்யக் கூடாது என்று வாய்க்குப் பூட்டே போடுகிறார்.
இந்த லட்சணத்தில், பெண்கள் அர்ச்சகராக வர வேண்டும் என்கிறார்கள். வரவிடுமா, இந்த வைதீகப் பிடுங்கல்?
பெண்கள் ஹோமம் செய்யக் கூடாது; அருகிலேயே வரக் கூடாது என்கிறார்.
ஏன் இவ்வளவு வெறுப்பு? பெண்களை வெறுப்பது போல் காட்டிக் கொண்டு திரைமறைவில் திருட்டுத்தனம் செய்வது என்றால் _ என்ன மனிதன் இவர்?
மனிதனாக இருக்கவே தகுதியற்ற ஆள் என்பதால்தான், தெய்வம் என்று கூறுகிறார்களோ?
-------------------செங்கோ அவர்கள் 22-8-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment