Search This Blog

26.8.09

நாடெல்லாம் வளருது நாத்திகம்






கனடா நாட்டின் போக்குவரத்துப் பேருந்துகளில் நாத்திக வாசகங்கள் எழுதப்பட்ட பேருந்துகள் டெப்போவை விட்டு இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் வெளியே வந்து பயணித்தன. அவற்றில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இவைதான்:

கடவுள் என்பதாக ஒன்றிருக்க வாய்ப்பு இல்லை; கவலைப்படுவதை விட்டுவிட்டு வாழ்வை அனுபவியுங்கள்

கனடாவின் தாராளச் சிந்தனையாளர் அமைப்பு இந்த விளம்பரத்திற்காக 45 ஆயிரம் டாலர் வசூலிக்கத் திட்டமிட்டது. இத்தொகையைக் கொண்டு டோரோன்டோ, ஒட்டோவா, கல்காலி ஆகிய ஊர்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதற்குச் சம்பந்தப்படாத, கனடாவின் மனித நேயர்களின் அமைப்பு இதே மாதிரியான விளம்பரத்தைத் தொடர்வண்டிகளில் செய்துள்ளது. ஆனால், வாசகம் சற்று மாறுபாடு: கடவுள் இல்லாமலேயே நீங்கள் நல்லவராக இருக்க முடியும். இதையே பிரெஞ்ச் மொழியில் எழுதி வைத்துள்ளனர் கியுபெக் பகுதியில் (இங்கே பிரெஞ்ச் மொழி பேசுவோர் நிறைய.)

இத்தகைய நாத்திக விளம்பரங்கள் தொடங்கியது லண்டன் நகரத்தில்தான். தொலைக்காட்சி நகைச்சுவை எழுத்தாளரான அரியேன் ஷெரீன் என்பார் இதன் தொடக்க கர்த்தா.

இதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு தெரியுமோ? கடைசி வரையில் நீங்கள் கடவுளோடு சேரவிடாமல் தடுக்கப்பட்டு, நரகத்தில் கஷ்டப்படுவீர்கள் என்கிற மிரட்டல் வாசகங்களைத் தங்களின் இணைய தளத்தில் வெளியிட்டு மிரடும் மதவாதிகள்.

வெறும் 5 ஆயிரம் பவுண்ட்கள் வசூலுக்குத் திட்டமிட்டதில் வசூல் தொகை ஒரு லட்சத்து 40 ஆயிரத்தைத் தொட்டது என்றால் மக்களிடையே எப்படிப்பட்ட வரவேற்பு என்பதை விளங்கிக்கொள்ளலாம். இதே பிரச்சார இயக்கங்கள் ஸ்பெயின், நெதர்லாண்டு, அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பின்லாந்து, சுவிட்சர்லாந்து, குரோஷியா, கனடா என நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும் அளவுக்குச் செல்வாக்கு பெற்று செயல்படத் தொடங்கி வளர்ந்து வருகின்றன.

அமெரிக்காவின் விளம்பர வாசகம் இப்படி உள்ளது: கடவுளை எதற்காக நம்பவேண்டும்? நன்மைக்காகவே நல்லவற்றைச் செய்யுங்களேன்.

அமெரிக்காவின் தலைநகராமான வாஷிங்டன் டி.சி.பகுதியில் கடவுளை நம்பவேண்டாம், நீங்கள் தனியாக இல்லை. (நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் எனப் பொருள்). டெக்சாஸ், கொலரடோ பகுதிகளில் இத்தகைய வாசகங்கள்தான். சுவரொட்டிகளும் அச்சடிக்கிறார்கள்; அரசாங்கக் கட்டடங்களிலும் விளம்பரத் தட்டிகளை வைத்திருக்கிறார்கள்.

லண்டனில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு ஆஸ்திரேலியாவில் அரசுத் தரப்பில் எதிர்ப்பு. புதிய வாசகம் நாத்திகம் கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்துங்கள் என்று அமைந்துள்ளது.

இத்தாலியில் இது இன்னும் வேடிக்கை. முதலில் எழுதப்பட்ட வாசகம் இது: கெட்ட சேதி_ கடவுள் இல்லை! நல்லசேதி கடவுள் உங்களுக்குத் தேவையே இல்லை! ஆ, ஊ என்ற அலறினர் மதவாதிகள். மக்களின் மனம் புண்படுகிறது என்றார்கள். வாசகம் மாற்றப்பட்டது. மதவாதிகள் ஒப்புக்கொண்டார்கள்: மாற்றப்பட்ட வாசகம் இதுதான்: நல்ல சேதி - பத்து லட்சக்கணக்கான நாத்திகர்கள் இத்தாலியில் இருக்கின்றனர். மிக நல்ல சேதி - அவர்கள் கருத்து சுதந்திரத்தை நம்புகிறார்கள்.

இத்தாலியின் ரோம் நகரின் ஒரு பகுதிதான் போப் வசிக்கும்வாடிகன். கத்தோலிக்க மதத் தலை நகரமாயிற்றே! அங்கேயே...!

கனடாவில் ஹாலிபாக்ஸ் எனும் கடற்கரை ஊரில் விளம்பர வாசகங்களுக்கு எதிர்ப்பு. நாத்திகர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்ளும் நிலை. ஆனாலும் ஒரு வெற்றி. பஸ்நிறுத்த பைபிள் பாடம் என்ற ஒரு மதவெறி அமைப்பு பேருந்து நிறுத்தங்களில் பைபிள் வாசகங்களை எழுதி வைத்து வந்தன. நாத்திகர்களின் விளம்பரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் காரணமாக அவர்களுக்கு அளித்து வந்த அனுமதி புதுப்பிக்கப்படவில்லை. அவர்கள் விளம்பரத்திற்கு அனுமதித்தால், நாத்திக விளம்பரத்தையும் அனுமதிக்கவேண்டுமே என்கிறார்கள். மனித உரிமை ஆணையம் ஏடுகளில் எழுதப்படும் ஆட்சேபகரமான கட்டுரைகளிலேயே கவனம் செலுத்துகிறது. கருத்துச் சுதந்திரம் பற்றிக் கவலைப்படுவதேயில்லை -அங்கேகூட!

ஒட்டாவா நகரில் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்தனர், கீழ் நிலை அலுவலர்கள். நாத்திகரான அலெக்ஸ் கல்லன் விடவில்லை. மேல்முறையீடு செய்தார். அதந்தக் குழுவில் 3_க்கு 3 என சமமான வாக்குகள் கிடைத்தன. சோர்ந்துவிடாமல் ஒட்டாவா நகர் மன்றத்திற்கு மேல் முறையீடு செய்தார். அங்கே இவருக்கு ஆதரவாக 13 வாக்குகளும் எதிர்ப்பாக 7 வாக்குகளும் கிடைத்தன. நாத்திகப் பரப்புரையாளர் களுக்கு வெற்றி; அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன.

இந்தியாவைப் போலவே, அங்கேயும் மதவாதிகள், கிறித்துவ மதத்தைப் பற்றி மட்டுமே தாக்குகிறீர்கள்; மற்ற மதங்களை விட்டு விட்டீர்கள் எனக் கூப்பாடு கிளப்பினர். கடவுள் என்று சொன்னாலே, அல்லா, பிரமன், தோர் போன்ற எல்லா மதக் கடவுள்களையும்தான் குறிக்கும் என விளக்கம் தந்தனர், நாத்திகர்கள்!

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி கனடாவில் 23 விழுக்காடு மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள். என்றாலும் ஓர் உண்மையைக் கவனிக்க வேண்டும். நாத்திக விளம்பரத்திற்காக வசூலிக்கப்பட்ட தொகை 45 ஆயிரம் டாலர். ஆனால் மதவாதிகள் வைத்து இருக்கும் அறக்கட்டளையின் தொகை ஓர் ஆயிரம் லட்சம் டாலர்.

அங்கேயும் ஒரு முசுலிம் மதகுரு சையத் சுரவர்தி என்பவர் எதிர்ப்பிரச்சாரத்திற்கு ஆள் சேர்க்கிறார். கடவுளை நம்பாதவர்களுக்காகவும் கடவுள் கவலைப் படுவார் எனப் பசப்பு வார்த்தை பேசுகிறார்.

எதைச் செய்தால் என்ன? அறிவுக்குத் தடை போட முடியுமா, என்ன?

------------------- தரவு: ஃப்ரீ என்கொயரி- தமிழில்: அரசு -நன்றி:-"விடுதலை" 25-8-2009

0 comments: