Search This Blog

19.8.09

கோயில் என்றால் காதை மூடு காத தூரத்தில் ஓடு!



தமிழ்த் தாய்க்குக் கோயிலா?


தந்தை பெரியார் மட்டுமல்ல; புத்தர் முதல் காந்தியார் வரை கோயிலைப்பற்றி நிரம்பவே கூறியிருக்கிறார்கள்.

இங்கு என்ன கோயிலுக்கா பஞ்சம்? தடுக்கி விழுந்தால் தம்பிரான்களும், தண்டபாணி கோயில்களும்தானே!

ஒரு கொள்கையை அழிக்க வேண்டும் என்றால் அதைக் கோயிலாக்கிவிடலாம். அதில் கடவுளாகவும் குந்த வைத்து விடலாம்.

புத்தறிவைப் புகட்டியவன் அல்லவா புத்தன். தந்தை பெரியார் சொன்ன முறையில் புத்தியைப் பயன்படுத்தியதால் அல்லவா அவன் புத்தனானான்.

சிந்தனை என்பது செத்துப் போய் கடந்த ஒரு கால கட்டத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன் மன்னவன் குலத்திலே தோன்றிய அந்தக் கோமகன் கொளுத்திய சிந்தனைத் தீயிலே பார்ப்பனியத்தின் வேதப் பருப்பும் சாஸ்திர சரக்கும், யாகப் புரட்டும் வெந்து சாம்பலாயின. வருணக் கொடுமையால் வாட்டி வதைத்த ஆரியத்தை கருணைவழியும் அறிவுத் திறவுகோலால் அஸ்தமிக்க செய்த அரச குலத்தில் உதித்த ஆசான் புத்தன்.

அந்தப் புத்தனை மகாவிஷ்ணுவின் அவதாரமாக்கி அதற்குப் பிறகு கடவுளாகவே ஆக்கிக் கோயில் கட்டியதன் பலன் அதோ முப்பது கல் தொலைவில் தெரிகிறதே இலங்கைத் தீவு அங்கே கடவுளாகச் செதுக்கப்பட்ட புத்தரின் உருவச் சிலைகள் எல்லாம் மனித ரத்தத்தால் குளிப்பாட்டப்படுகின்றன. கோயிலானால் கர்ப்பக் கிரகத்துக்குள் கடவுளாகக் குந்தினால் நித்தம் நித்தம் அபிஷேகம் கேட்குமே! புத்தன் போதித்த போதனைகள் என்ன, யாருக்குத் தெரியும்? சித்தார்த்தன் வெளியிட்ட சிந்தனைக் கருவூலங்கள் என்ன? எந்த கடையில் கிடைக்கும்?

புத்தன் ஒரு மனிதன் என்று சொன்னாலே புருவத்தை உயர்த்துகிறார்கள். சிந்தனையாளன் என்று சொன்னால் சீற்றம் கொள்கிறார்கள் சீச்.. சீ.. கேவலம் புத்தன் ஒரு மனிதனா? இல்லை இல்லை இல்லவேயில்லை! அவன் கடவுள்; ஆம் கடவுளே தான் என்று ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் ஒரு கூட்டம் உலகிலே தோன்றிவிட்டது.

கோயிலைக் கள்ளர்குகை என்று சொன்ன புத்தனுக்குக் கோயில்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் மந்திரகோஷங்கள்!

அருள்கூர்ந்து தமிழை தமிழாகப் பாருங்கள். தமிழனின் தாய்மொழியாக அணுகுங்கள் . மூத்த இனத்தின் மொழி என்று மொழியுங்கள்.

மாறாக கோயில் எழுப்பாதீர்கள்; கடவுளாக்கி விடாதீர்கள்; தலபுராணங்களை எழுதிக் குவித்து விடாதீர்கள்.

ஏற்கெனவே தலபுராணங்கள் என்னும் கோயில் புராணங்கள் மண்டிட கருவேல்முள் அடர்ந்த காட்டுக்குள்ளே கிடக்கிறாள் தமிழன்னை.

பதினெண்புராணங்களின் படைநோயாக அவளை உருமாற்றிக் காட்டியிருக்கிறார்கள். இதிகாச காச நோயின் பாதிப்பாலும் ஈளை கட்டியிருக்கிறது.

இதிலிருந்து மீட்பதற்கே எவ்வளவு விலையைக் கொடுக்க நேர்ந்திருக்கிறது. எத்தனை மாநாடுகளை நடத்த வேண்டியிருந்தது? எத்தனை எத்தனைத் தீர்மானங்கள் எத்தனை எத்தனை பேரணிகள்.

ஆரிய மேக நோயிலிருந்து தமிழைத் தடுத்தாட் கொள்ள தந்தை பெரியாரும் அவர்தம் சேனையும் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா?


மறுபடியும் தமிழுக்குப் பன்றிக் காய்ச்சலா? தஞ்சை மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த அன்பர்கள் தமிழ்த் தாய்க்குக் கோயில் எழுப்புகிறார்களாம் என்ன கொடுமை இது!

வேறு பல இடங்களில் தமிழ்த் தாய்க்குக் கோயில் உண்டு - நாங்கள் எடுக்கும் தமிழ்த்தாய் கோயிலுக்கே கலசங்கள் வைக்கப் போகிறோம் என்று கலகலப்பாகப் பேசுகிறார்கள்.

நல்ல தமிழர்கள்தான் அவர்கள்; கடவுளாக்கிக் கோயில் எழுப்பினால்தான் தமிழுக்குப் பெருமை என்ற தவறான கண்ணோட்டத்தால் தடுமாறியிருக்கிறார்கள்.

கோயில் கொள்ளை நோயின் குடியிருப்பு என்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டிருந்தால் தலை வைத்துப் படுத்திருக்க மாட்டார்கள் அந்தப் பக்கத்தில்.

தமிழுக்குச் செய்ய வேண்டிய தொண்டு இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

தமிழன் வீட்டுப் பிள்ளைகளின் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதமயமாகிக் கிடக்கின்றன. தமிழன் ஊர்ப் பெயர்கள் எல்லாம் ஆரியமயமாக்கப்பட்டு விட்டன.

தமிழர் கட்டிய கோயிலுக்குள் தமிழுக்குத் தனித்தன்மையான உரிமையில்லை; தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழனுக்கும் அங்கு உரிமை வந்து சேரவில்லை.

இன்னும் தமிழன் வீடுகளில் விவாஹசுப முகூர்த்தங்கள் நடக்கின்றன; அங்குத் தமிழுக்கு மருந்துக்கும் இடமில்லை.

இன்னும் கிரஹப்பிரவேசங்கள்தான்! அங்கோ சமஸ்கிருத இரைச்சல்தான்.

சஷ்டியப்த பூர்த்திகளும் தமிழர்கள் இல்லத்தில்; சங்கத் தமிழுக்கு அங்கு இடம் உண்டா?

தீபாவளிகளும், கார்த்திகைகளும், விஜய தசமிகளும், சதுர்த்திகளும் சதுராட்டம் தமிழன் இல்லங்களில். இவற்றிற்கு விடை கொடுக்க வேங்கைகளாக எழ வேண்டிய நேரம்; வெண்தாடி வேந்தரின் விழுமிய கொள்கைகளை நெஞ்சில் தாங்கி நெடும் பயணத்தைத் தொடங்க வேண்டிய கால கட்டம்.


கட்டாய தமிழ்ப் படிப்பு என்று கூறி கனத்த குரலெழுப்பிடக் களம் காண வேண்டிய தருணம்.

பணிகள் நம்முன் பலப்பல! அதைவிட்டுவிட்டு வேண்டாத வேலை ஏன்?

தமிழ்த் தாய்க்குக் கோயில் கட்டினால் அங்கும் அர்ச்சகன் பார்ப்பான் வரக்கூடும். அர்ச்சனை மொழிகூட அவாள் மொழியாகவே கோலோச்சும்.

கோயில் என்றால் காதை மூடு காத தூரத்தில் ஓடு! என்ற புரட்சிக் கவிஞனின் குரல் கேட்கவில்லையா!

தமிழுக்குத் தேவை உரிமை முரசம்; கலசமல்ல!

-------------------மின்சாரம் 15-8-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: