Search This Blog

15.8.09

நல்ல நாள் பார்த்து பெற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திரத்தின் இன்றைய நிலை?


ஆகஸ்ட் 15

இந்திய சுதந்திரம் நல்ல நாள் பார்த்து வெள்ளைக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.

ஆகஸ்ட் பதினைந்தா? அய்யகோ, நல்ல நேரம் இல்லையே அது! அஷ்டமி ஆயிற்றே! 16 ஆம் தேதி நவமி ஆயிற்றே! இந்த நாளில் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கினால் நாடு நாசமாகப் போகாதா என்று பார்ப்பனர்களும், அவர்களின் தொங்கு சதைகளும் காதுகளை அடைத்துக் கொண்டு கத்தினார்கள்.

17 ஆம் தேதி வேண்டுமானால் பெற்றுக்கொள்ளலாம். இத்தனை ஆண்டுகள் பொறுத்துக் கொண்டோமே! இடையில் ஒரு நாள்தானே குடியா மூழ்கிப் போகும் என்று மூக்கால் அழுதனர்.

நேரு பகுத்தறிவுவாதியாக இருக்கலாம் ஆனாலும் அவரைச் சுற்றியிருப்பவர்கள் சனாதனவாதிகள் ஆயிற்றே. அழுக்கு மூட்டைகள் ஆயிற்றே! அதையும் தாண்டி நேருவால் செயல்பட முடியுமா? அதுவும் பிரதமராகவும் அவர் ஆகவேண்டுமே வளைந்து கொடுத்தார்.


ஆங்கிலேய அரசை அணுகினார்; அதெல்லாம் முடியாது தேதி குறித்தாயிற்று மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அடித்துக் கூறிவிட்டனர்.

வேறு வழியில்லை. அதற்கும் ஒரு சில சமாதான சாஸ்திர வழியை வைத்துக் கொண்டிருப்பவர்கள்தானே இந்து சனாதனிகள். சறுக்கி விழுந்தாலும், சலாம் வரிசையில் இத்தனையாவது பகுதி என்று சொல்லக்கூடியவர்கள் ஆயிற்றே!

ஒரு சமாதானத்துக்கு வந்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு மறுநாள் என்பது இரவு 12 மணி. நமக்கோ காலை 5 மணிக்குத்தான் நாள் தொடங்குகிறது. எனவே, 15 ஆம் தேதி இரவு 12 மணிக்கு வெள்ளைக்காரர்கள் சுதந்திரம் கொடுத்தாலும், நம்மைப் பொறுத்தவரை காலை 5 மணிக்குமுன் என்பது முதல் நாள்தான் அது ஒன்றும் கெட்ட நாள் இல்லை என்று கூறி சுதந்திரத்தை வெள்ளைக்காரன் கொடுக்கப் பெற்றுக்கொண்டு விட்டனர்.

அப்படி நல்ல நேரத்தில் பெற்ற சுதந்திரத்தின் இன்றைய நிலை என்ன? மக்கள்தொகை வளர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் அமையவில்லை என்பதை மரியாதையாக ஒப்புக்கொண்டே தீரவேண்டும்.

சர்வதேச அட்டவணையில் 88 நாடுகளின் பட்டினிப் பட்டியலில் இந்தியாவுக்குரிய இடம் 66 ஆகும். வறுமைக்கோட்டுக்கும் கீழ் இந்தியாவில் உழல்வோர் 26 கோடியாகும். (47.15 விழுக்காடு) சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மய்யம் இதனைத் தெரிவித்துள்ளது.

டில்லியில் மாத சம்பளம் ரூ.506, மும்பையில் மாத சம்பளம் ரூ.540, கொல்கத்தாவில் மாத சம்பளம் ரூ.416, சென்னையில் மாத சம்பளம் ரூ.475_க்குக் கீழே இருந்தால் அவர்கள் எல்லாம் வறுமைக்கோட்டுக்கும் கீழே கிடப்பதாகப் பொருளாகும்.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த புள்ளி விவரம் இது. நாட்டில் 77 விழுக்காடு மக்களின் நாள் வருமானம் ரூ.20 தானாம்.

அதேநேரத்தில், பணக்காரர்களின் எண்ணிக்கை மட்டும் வளர்ந்துகொண்டே போகிறது. 2004 இல் 154 கோடீசுவரர்கள் என்றால், 2009 இல் 300 ஆகப் பெருகியிருக்கின்றனர். இந்தியாவின் சொத்து மதிப்பில் நான்கில் ஒரு பாகம் 48 பணத் திமிங்கலங்களின் கைகளில் கட்டுண்டு கிடக்கிறது.

பெரிய நிறுவனங்கள் செலுத்தாத வரி பாக்கி ஒன்றரை லட்சம் கோடி. இன்னொரு பக்கத்தில் இந்தியாவுக்கு இருக்கும் கடனோ 28 கோடியே 96 லட்சத்து 737 கோடியாகும். வட்டி மட்டும் ரூ.1,90,808 கோடியாகும்.

இந்திய அரசின் ஆண்டு வருமானம் 6 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவில் உள்ள கோடீசுவரர்களின் மொத்த சொத்தோ 5 லட்சம் கோடி. அரசுக்கும், தனி மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் விகிதாசார நிலையை எண்ணிப் பார்க்கவேண்டும்.

வேலை வாய்ப்பு அற்றோரோ 3.47 கோடியாகும். நகர்ப்-புறத்தில் 18.5 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் 15.7 சதவிகிதமாகும். வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

இன்னும் இரண்டரை லட்சம் கிராமங்களுக்கு முறையான குடிநீர் கிடையாது. 50 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் நோய் வாய்ப்படும் நிலை. வீடு அற்றோர் 2 கோடியே 40 லட்சம்.

ஆனால், திட்டங்கள் மட்டும் அய்ந்து நட்சத்திரக் கலாச்-சாரக் கண்ணோட்டம்தான். விவசாயிகளுக்குக் கொடுக்கும் கடனுக்குப் போகும் வட்டியைவிட கார் வாங்குவோருக்குக் குறைவு.

குடியரசு ஆன 10 ஆண்டுகளுக்குள் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி என்பது ஏட்டுச் சுரைக்காய். ஆறு பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆண்டு மறுபடியும் சட்டம், கல்லாமையைப் போக்குவதற்காக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் நிருவாகம் எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பது குறித்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியாசென் அழகாகவே கூறினார்.

பி.ஜே.பி. ஆட்சியில் 6 கோடி டன் தானியம் தேங்கியிருக்கிறது. இந்த 6 கோடி டன் தானிய மூட்டைகளை வரிசையாக அடுக்கினால், பூமியிலிருந்து நிலவுக்குச் சென்றுவிட்டு, பூமிக்குத் திரும்பும் தூரம் என்று கூறினார். இவ்வளவு தானியங்கள் கையிருப்பில் இருந்தும், இந்தியாவில் ஒரு லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டனர். (12.4.2009) என்று கூறினார். இந்தியாவில் நிருவாக இலட்சணத்துக்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும்.

மதச்சார்பின்மையோ அசல் கேலிக் கூத்தாக இருக்கிறது. 450 ஆண்டுகால வரலாறு படைத்த இசுலாமியர்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்து நொறுக்கினார்கள். 17 ஆண்டுகளுக்குப் பிறகும் தண்டிக்கப்படவில்லை. இப்படி ஒரு நீதி நிருவாகம்.

சமூகநீதி சாகடிக்கப்படுகிறது. நிருவாகத்தை நீதித்துறை கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது. பொது ஒழுக்கச் சிதைவோ கேட்கவேவேண்டாம். நுகர்வுக் கலாச்சாரப் போதை தலைக்கு ஏறிவிட்டது!

ஆம் இந்திய சுதந்திரத்தின் வயதோ 62_ ஆனாலும் சவலைப் பிள்ளையாக இருக்கிறது என்பது மட்டும் கசப்பான உண்மையாகும்.

---------------"விடுதலை"தலையங்கம் 15-8-2009

0 comments: