Search This Blog
10.8.09
மதங்களும் அரசியலும்
பூர்வகாலம் தொடங்கி, அந்தக் காலத்து அரசியல்கள் மதங்களை ஆதரித்து வந்திருக்கின்றன. மதங்கள் பரவியதற்கும் அரசியலே காரணம். அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிகள் என்ற முதுமொழி மதங்களுக்கும், அரசியலுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குகின்றது. இதனை ஆதி சாஸ்த்திர ஆராய்ச்சி மூலமாக நிரூபிப்போம். காட்டுமிராண்டி மந்திரக்காரன்தான் , தலைவனாக மதிக்கப் பட்டிருந்தான். மந்திர தந்திரத்தில் வல்லவனே, நாகரிகமில்லாத காலங்களில் அரசனாகவும், சேனைத் தலைவனாகவும், ஆதிக்கமுடையவனாகவும், அந்தந்த ஊர் அரசியல் நிர்வாகங்களை நடத்தி வந்தான். இந்தக் காட்டுமிராண்டிப் பழக்கம் இன்றைக்கும் நமது நாட்டை ஆளும் இங்கிலாந்து அரசர்கள் முடியில், அதாவது கடவுளும் என்னுடைய ஆட்சியும் என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.
பண்டைக்கால அரசுகள் யாவும், கடவுளருளால் அல்லது ஆக்கினையால் பெறப்பட்டதென்பதே, அரசியல் திட்டத்தில் முதன்மையான சித்தாந்தம். மத்திய காலத்தில் பல அரசர்கள் தங்களுடைய ஆட்சியைக் கடவுளுடைய ஆட்சி என்றே வாதித்து வந்தனர். பதினான்காம் லூயி பிரஞ்சு சேதத்தைக் கடவுள் உத்திரவு பெற்று அரசு புரிவதாகத் தன் பிரஜைகளுக்குத் தெரிவித்து வந்தான். ஜார் சக்கரவர்த்திகள், ரஷ்யாவில் தாம் சிறிய பிதாவென அழைக்கப்பட்டு வந்தனர். அதாவது, பரலோகத்தில் உள்ள கடவுள் பெரிய பிதாவென்றும், சிறிய பிதாவெனவும் வழங்கி வந்தனர். ஆங்கில தேசத்தை ஆண்டுவந்த பிரஞ்சு அரசர்கள் யாவரும் தாங்களும் கடவுளும் ஒன்றெனவே எண்ணும்படி அரசு புரிந்து வந்தனர்.
கிறிஸ்து மார்க்கம் ஏற்பட்டது முதல், ஸெயின்ட் பீட்டர் முதல் இவ்வுலகை அரசு புரிந்த போப்புகள் எல்லோரும், இவ்வுலகை ஆளும் கடவுளென்றே எண்ணி வந்திருக்கின்றனர். ஆட்சி ஹோலி ஸீ என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. பல நூற்றாண்டுகளாக, ரோமாபுரியில் போப் அவர்களே, பல சிற்றரசர்களை நியமிக்கவும், தள்ளவும் ஆதிக்கம் பெற்றிருந்தார். இன்றைக்கும், போப்புக்கும், முஸ்ஸோலினிக்கும் உண்டாயிருக்கும் வித்தியாசங்கள், இந்த ஆட்சி முறையைக் குறித்ததென அறிக.
கிறிஸ்துவ நாடுகளில், அரசர்களுக்கு முடி சூட்டுகின்றவர்கள், மதக் குருக்களே. சீமையில், (இங்கிலாந்தில்) மன்னர்களுக்கு முடி சூட்டுகின்றவர்கள் காண்டர்பரி ஆர்ச் பிஷப்புகளே. அய்ரோப்பா தேசங்களில் பல ஊர்களில் அரசு மத ஆட்சியிலிருந்து விலக்கப்பட்ட போதிலும் அந்தரங்கமாக, மதத்தின் ஆதிக்கத்தை ஆதரிக்கும் பல கோடி பிரஜைகள் இருந்து வருகின்றார்கள்.
நமது இந்திய நாட்டிலும், இந்து சுயேச்சை மன்னர்கள், பிராமண செல்வாக்கை ஆதரித்து வந்தமையால்தான், இன்றைக்கும் இந்து மதம், பிராமண ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கின்றது. பண்டைக் கால முதல், மதகுருக்களே, அரசாங்கங்களில் மந்திரிகளாக இருந்து வந்திருக்கின்றனர். பாரத, ராமாயண காலங்களில், பிராமணர்களாகிய மகரிஷிகள், அரசியலில் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தார்கள் என்பதை எளிதில் அளந்து பார்க்கலாம்.
அந்தக் காலத்து பிராமண ரிஷிகளின் செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டுமென்போர், அயோத்தி நகரத்தில், தசரத சக்கரவர்த்தியின் ராஜ சபையில் , ரிஷிகள் வகித்திருந்த ஆதிக்கத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். பிராமண ரிஷிகளுக்கு, நமது நாட்டு அரசர்கள் அடிமைகளாகவே இருந்து வந்தனர். இந்தக் காட்சியை இன்றைக்கும் திருவாங்கூரிலும், சையாமிலும் கண்காட்சியாகப் பார்க்கலாம். சரித்திர காலம் முதல் அரசன் எந்த மதத்தைத் தழுவி வந்தானோ, அந்த மதத்தையே அவன் குடிகளும் ஆதரித்து வந்திருக்கின்றனர்.
2000 வருஷங்களுக்கு முந்தி நமது இந்தியாவில் அசோகச் சக்கரவர்த்தி, புத்தமதத்தைத் தழுவிய பிறகே, புத்த மதம் நாடு முழுமையும் பரவ ஆரம்பித்தது. 1500 வருஷங்களுக்கு முந்தி, ரோமாபுரியில் அரசாண்ட கான்ஸ்டான்டைன் சக்கரவர்த்தி கிறிஸ்துவ மதத்தைக் கையாண்ட பிறகே, அம்மதம் அய்ரோப்பா தேசங்களில் பரவி ஆதிக்கம் பெற்றது. இந்தியாவில் மகமதிய மதமும், கிறிஸ்துவ மதமும் பரவியுள்ளதற்குக் காரணம் அந்தந்த மதத்தைத் தழுவிய அரசர்கள் தமது நாட்டை ஆண்டு வந்தமையால் என அறிக.
--------------------ம.சிங்காரவேலர் எழுதிய கட்டுரை "குடிஅரசு", 28.-02.-1932
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment