Search This Blog

10.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - டுவாலு - உகாண்டா


டுவாலு

எல்லிஸ் தீவுகள் என அழைக்கப்பட்ட டுவாலு 1892இல் பிரிட்டனின் பாதுகாப்பில் வந்தது. 1915இல் தனது குடியேற்ற நாடாக அதனை அறிவித்தது. கில்பர்ட் தீவுகளுடன் சேர்த்து ஆண்டு வந்தது. 1975இல் இரண்டும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, டுவாலு எனப் பெயர் வைக்கப்பட்டது. சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு 1978 இல் முழு விடுதலை அளிக்கப் பட்டது.
தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள இத்தீவு வெறும் 26 சதுர கி.மீ. மட்டுமே பரப்புள்ளது. மக்கள் தொகை 12 ஆயிரம். மக்கள் கிறித்துவர்கள் டுவாலுவ மொழி பேசுகின்றனர்.
குடிக்கோனாட்சி முறை. பிரிட்டிஷ் அரசிதான் அதிபர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் உண்டு. ஆஸ்திரேலிய டாலரும் டுவாலிய டாலரும் பணப் புழக்கத்தில் இருக்கின்றன. இருப்புப்பாதை இல்லை.



உகாண்டா

விக்டோரியா ஏரியைச் சுற்றியுள்ள பெரும் பகுதியை உகாண்டா அரசு தன் ஆதிக்கத்தில் 1800 களில் வைத்திருந்தது. 1840இல் அரேபிய வணிகர்கள் வந்தனர். தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் வந்தனர். 1894இல் பிரிட்டனின் ஆதிக்கத்தில் வந்தது.
1921இல் உகாண்டாவுக்கு சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்டது. 1958இல் உள்நாட்டு சுயாட்சி அளிக்கப்பட்டது. 1962இல் விடுதலை பெற்றது. 1963இல் குடியரசு நாடானது. உகாண்டாவின் மன்னர் சர் எட்வர்ட் முடேசா முதல் குடியரசுத் தலைவரானார்.

1971இல் ராணுவத் தளபதி இடிஅமீன் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தினார். ஆசியர்களைத் தம் நாட்டிலிருந்து வெளியேற்றினார். இசுரேல் நாட்டிடம் வைத்துக் கொண்டிருந்த உறவைத் துண்டித்து, லிபியா, பாலஸ்தீனத்துடன் உறவு வைத்துக் கொண்டார்.
இவரது ஆட்சிக் கொடுமைகளால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1978இல் தான்சானியா மீது படையெடுத்தார். காகரா பகுதியைத் தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உகாண்டா மீது தான்சானியா 1979இல் படையெடுத்தது. அச் சந்தர்ப்பத்தில் இடி அமீனுக்கு எதிர்ப்பானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாக்கினர். இடிஅமீன் நாட்டை விட்டு லிபியாவுக்கு ஓடினார். பின்னர் சவூதி அரேபியாவுக்குப் போய் அங்கேயே 2003 ஆகஸ்டில் இறந்தார்.

ஆப்ரிகாவின் கிழக்குப் பகுதியில் கென்யாவுக்கு மேற்கே உள்ள இந்நாட்டின் பரப்பளவு 2 லட்சத்து 36 ஆயிரத்து 40 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 கோடியே 82 லட்சம். கத்தோலிக்கர் 33 விழுக்காடு. புரொடஸ்டன்ட் 33 விழுக்காடு. முசுலிம் 16 விழுக்காடு. ஆப்ரிக்கப் பழங்குடி நம்பிக்கை கொண்டோர் 18 விழுக்காடு.

இங்கிலீஷ் ஆட்சி மொழி. ஆப்ரிக்க இனக்குடி மொழிகள் பேசப்படுகின்றன.70 விழுக்காடு மக்கள் படிப்பறிவு கொண்டவர்கள். 9.-10-.1962இல் விடுதலை நாள் கொண்டாடும் இந்த நாட்டில் குடியரசுத் தலைவரே ஆட்சியின் தலைவராகவும் உள்ளார்.
35 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

-------------------"விடுதலை" 8-8-2009

0 comments: