Search This Blog

10.8.09

ஏகலைவன் கதை உணர்த்தும் பாடம் என்ன?
இடஒதுக்கீட்டிற்கு அரசமைப்பு சட்டத்தில் எந்த உச்ச
வரம்பும் கிடையாது தமிழர் தலைவர் சட்டரீதியான விளக்கம்


இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சட்டத்தில் எந்த உச்சவரம்பும் கிடையாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க உரையாற்றினார்.

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 25.7.2009 அன்று நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நம்முடைய நாட்டிலே ஊடகங்கள் அப்பொழுது பிற்படுத்தப்பட்டவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் முட்டி மோதவிடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியது.

ஒருவருக்கு ஒருவர் எதிரிகளைப் போல

இரண்டு பேரும் இணைந்து பாடுபடுவதற்குப் பதிலாக மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளைப் போல உருவாக்க வேண்டுமென்று நினைத்து, இவர்களால்தான் எங்களுடைய வாய்ப்புகள் கெட்டுவிட்டது என்றெல்லாம் சொல்லி தவறான ஒரு பிரச்சாரத்தை அப்பொழுது செய்தார்கள்.

அப்பொழுதுதான் தெளிவாகச் சொன்னோம். மண்டல் அவர்கள் 27 சதவிகிதம் என்று எழுதியதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. இடஒதுக்கீடு அய்ம்பது விழுக்காட்டிற்கு மேலே போகக் கூடாது என்று ஒரு தீர்ப்பு கூறினார்கள்.

அந்த தீர்ப்பு கூட அப்பொழுது எழுதிய ஒரு குறிப்பிட்ட வழக்கிற்குரிய தீர்ப்பு. அது பொதுவான சட்டமல்ல. அரசமைப்புச் சட்ட விதிகளிலே எந்த உச்ச வரம்பும் கிடையாது. அரசமைப்புச் சட்டம் படித்தவர்களுக்குத் தெரியும்

அரசமைப்புச் சட்டம் படித்த அத்துணை பேருக்கும் தெளிவாகத் தெரியும். போதிய அளவிற்கு மற்றவர்களுக்கு வாய்ப்புக்கேற்ப வரவேண்டுமென்று தான் இருக்கிறதே தவிர, இந்த அளவு, இந்த எண்ணிக்கை என்று எண்ணிக்கையிலே உச்சவரம்பு கிடையாது.

ஆனாலும் வியாக்கியானம் செய்தவர்கள் யார்? மண்டல் அவர்கள் ரொம்ப அழகாக எழுதியிருக்கின்றார்கள்.

துரோணாச்சாரியாரின் கதையை எழுதியிருக்கின்றார்கள். ஏகலைவனின் கதையை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அந்தக் காலத்தில் கல்வி என்பது கற்றுக்கொள்வது என்பது வில்வித்தைதான். வில்வித்தையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வத்தோடு ஏகலைவன் துரோணாச்சாரியிடம் கேட்கின்றான். கதை நடந்ததா? இல்லையா?

கதை நடந்ததா? இல்லையா? என்பது முக்கியமல்ல. சமூக நீதி என்பது நீண்ட காலத்திற்கு முன்னாலேயே காலங்காலமாக மறுக்கப்பட்ட ஒன்று என்பதை மண்டலறிக்கையிலேயே விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இதோ என்னுடைய கையிலே இருக்கிறது மண்டலறிக்கை.

சோசியல் எஞ்சினியரிங் இதுவரை நீங்கள் தேர்வு கண்ணோட்டத்தோடு படித்திருப்பீர்கள். ஆனால் அருள்கூர்ந்து நீங்கள் மண்டல் அறிக்கையை ஒரு பாடபுத்தகத்தைப் படிப்பது போல, தேர்வுக்கு அப்பாற்பட்டு படியுங்கள். (கைதட்டல்).

சோசியல் எஞ்சினியரிங் என்று சொல்லக் கூடிய சமூக அமைப்பு இருக்கிறது. அதனுடைய விளக்கத்தை காலம் காலமாக நடந்த அநீதியை பிழிந்து தருவதைப் போல அவர் விளக்கமாகக் கொடுத்திருக்கின்றார் மண்டல் அவர்கள்.

ரொம்பத் தெளிவாக, ரொம்ப ஆழமாக எடுத்துச் சொன்னார். நீ என்ன குலம்? என்ன ஜாதி? என்று வில்வித்தை கற்க வந்த ஏகலைவனைப் பார்த்த துரோணாச்சாரி கேட்கின்றார்.நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அம்பு பாய்கிறது

நான் வேட்டுவர் குலம். நான் வேடன் என்று சொன்னவுடனே, அப்படியா? உனக்கு தனுஷ் வித்யா என்று சொல்லக்கூடிய இந்த வில்வித்தையை நான் கற்றுத்தரமாட்டேன் என்று சொல்லுகிறார்.

வர்ணாஸ்ரம தர்மப்படி கல்வி என்கின்ற அந்த வில்வத்தையை கற்றுக்கொள்ள உனக்கு அந்த உரிமை கிடையாது. எனவே நீ அதை நினைக்கக் கூடாது என்று சொல்லி, உன்னை நான் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று அனுப்பிவிடுகிறார்.

எப்பொழுதோ நடந்த சம்பவம் அதை இருவரும் மறந்துவிடுகின்றார்கள். பின்னால் அந்தக் கதைப்படி காட்டிலே துரோணாச்சாரி அவர்கள் சென்று கொண்டிருக்கின்ற நேரத்திலே திடீர் என்று அப்பொழுதுதான் நாய் குரைக்கிறது. குரைக்கின்ற நாயின் சத்தத்தைக் கேட்டே அம்பு விழுகிறது அந்த நாயின் வாய் இரண்டாகப் பிளந்து விடுகின்றது.

அந்த வில்வித்தை வீரன் யார்? ஒலியை வைத்து இவ்வளவு துல்லியமாக அடிக்கக் கூடிய ஆற்றல் படைத்த வில்வித்தை வீரன் யாராக இருக்க முடியும்? அர்ஜூனன் தானே வில்வித்தைக்கே புகழ் பெற்றவன் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி அம்பு எய்தியது யார்? என்று கேட்டு ஒரு சத்தம் கொடுக்கிறார் துரோணாச்சாரி.

உடனே ஒரு வேடன் வந்து அவர் காலிலே விழுந்து வணங்கி, குருதேவ நான் தான் அம்பை எய்து அந்த நாயைக்கொன்றவன். என்று சொல்லுகின்றார்.

இப்படிச் சொன்னவுடனே அப்படியா? நீ யார் சொல். இந்த வில்வித்தை அர்ஜூனனுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால், இங்கு நீ அதைவிட திறமையாகச் செய்திருக்கிறாயே, உனக்கு எப்படி இந்தத் திறமை வந்தது என்று துரோணாச்சாரி கேட்கிறார்.

யார் உனக்கு குரு?

யார் உனக்கு குரு? யார் உனக்கு சொல்லிக்கொடுத்தது? என்று கேட்கிறார் அப்பொழுது மிகுந்த அடக்கத்தோடு ஏகலைவன் சொல்லுகிறார்.

ஏனென்றால், நாமெல்லாம் இந்த ஏகலைவன் பட்டியலிலே இருக்கக்கூடியவர்கள். ஏகலைவன்கள் எவ்வளவு அடக்கமாக இருப்பார்கள் எவ்வளவு நன்றியோடு இருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மண்டல் இதை பயன்படுத்தியிருக்கின்றார். அவருடைய பரிந்துரையிலே. நீ எனக்கு மாணவன் என்று சொல்லுகின்றாய் உன்னை ஒரு நாளும் பார்த்ததில்லையே என்று கேட்கின்றார் துரோணாச்சாரி.

நடந்ததை ஏகலைவன் சொல்லுகின்றார், வில்வித்தை கற்க நான் வந்தபொழுது அதை ஏற்க மாட்டேன் என்று சொன்னீர்கள்.பிறகு உங்களைப் போலவே மண்ணாலே ஒரு உருவம் செய்து தினசரி நான் பயிற்சி செய்து அதிலேயே நான் இந்த வில்வித்தையைக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லுகின்றார்.

பாராட்டினாரா?

இதைக் கேள்விப்பட்டவுடன் அந்த குருநாதர் தன்னுடைய மாணவனை எவ்வளவு பாராட்ட வேண்டும்? அவன் உண்மையான நல்லாசிரியராக இருந்திருந்தால் தட்டிக் கொடுத்து நான் இல்லாமலேயே என்னைப் போல் இவ்வளவு அருமையாக செய்திருக்கிறாயே.

நீ அல்லவா என்னுடைய தலைசிறந்த மாணாக்கன் என்று சொல்லித் தட்டிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தட்டிக்கொடுப்பதற்கு துரோணாச்சாரிக்கு அந்த எண்ணம் வரவில்லை கதைப்படி நான் சொல்லுகிறேன்.

குருதட்சணை வேண்டும்


உடனே அவர் என்ன செய்கிறார்? சிரித்துக்கொண்டே ரொம்ப அமைதியாக அப்படியா? நீ குரு தட்சணை கொடுக்க வேண்டுமே என்று சொல்லுகின்றார்.

இவனோ, குருவே! நான் வித்தை கற்க வேண்டும் என்று உங்களிடம் வந்த பொழுது அதை ஏற்க மாட்டேன் என்று சொன்னீர்கள்.

பிறகு நான் உங்களைப் போலவே ஒரு உருவத்தை மண்ணால் செய்து உங்கள் முன்னால் நின்று நான் தினசரி வில்வித்தை பயிற்சி செய்தேன்.

நீ அல்லவா என் தலைசிறந்த மாணவன்....!

அதன் மூலம் நான் இந்த வில்வித்தையைக் கற்றுக்கொண்டேன் என்று சொன்னவுடனே அவர் உண்மையான நல்லாசிரியராக இருந்திருந்தால், தட்டிக் கொடுத்து நான் இல்லாமலேயே என்னைப் போல் இவ்வளவு அருமையாக செய்திருக்கிறாயே நீ அல்லவா என்னுடைய தலைசிறந்த மாணாக்கன் என்று சொல்லித்தட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால், கதைப்படி தட்டிக்கொடுக்க துரோணாச்சாரிக்கு மனம் வரவில்லை. (சிரிப்பு). உடனே அவர் என்ன கேட்கிறார். சிரித்துக் கொண்டே ரொம்ப அமைதியாகக் கேட்கிறார். அப்படியா நீ குருதட்சணை கொடுக்க வேண்டுமே என்று சொல்லுகின்றார். குரு தட்சணை கேட்டால் நான் மறுப்பேனா?

ஏகலைவன் இனமோ ஏமாந்தே பழக்கப்பட்ட இனம். நன்றியுணர்ச்சியினுடைய அடிப்படையிலே ஏகலைவன் சொல்லுகின்றார்.

குருதேவ! நீங்கள் எதைக் காணிக்கையாக கேட்டாலும் அதை நான் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்று அவன் சொல்லுகிறான். உடனே துரோணாச்சாரி எதைக் கேட்டாலும் கொடுப்பாயா? என்று கேட்கின்றார். நீங்கள் கேட்கும் பொழுது குரு தட்சணையை நான் மறுப்பேனா? என்று சொல்லுகின்றார்.

உன் கட்டைவிரலை வெட்டிக்கொடு!

அப்படியா? உன்னுடைய கட்டைவிரலை வெட்டிக்கொடு என்று துரோணாச்சாரி சொல்லுகின்றார். உங்களுக்குத் தெரியும். நாண் ஏற்றுவதற்கு மிக முக்கியமானது எது? வலதுகை கட்டைவிரல். ஏகலைவன் வேட்டுவ குலத்தைச் சார்ந்தவன். அப்படிப்பட்ட அவனிடத்திலே கேட்டவுடனே அதற்கென்ன உடனே கொடுக்கிறேன் என்று சொல்லி, கட்டை விரலை ஏகலைவன் வெட்டிக் கொடுத்தான். இந்த இனம் காலம் காலமாக ஏமாந்த இனம் என்பதற்கு அடையாளமே அது தான்.

ஏகலைவன் வில்லைத் தொடவில்லை

உடனடியாக அந்தக் கட்டை விரலை வெட்டிக்கொடுக்கின்றான் ஏகலைவன். துரோணாச்சாரியும் பெற்றுக்கொள்கின்றார். அதற்குப் பிறகு ஏகலைவன் சிறந்த வில்வித்தை வீரன் வில்லைத் தொடவில்லை.

இந்தக் கதையை சுட்டிக்காட்டியிருக்கின்றார் மண்டல் தனது அறிக்கையிலே. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் சூழ்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுக்கு வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையிலே வாய்ப்பு மறுக்கப்பட்டது.


சமூக அநீதி எங்கே இருக்கிறதோ

சமூக அநீதி என்பது எப்படி நிலை நாட்டப்பட்டது? சமூக நீதி என்ற குரலே கூட, சமூக அநீதி எங்கே இருக்கிறதோ அதிலிருந்து களைய வேண்டும் என்பதற்காக துவங்கிய குரல்தான் சமூக நீதி.

நீதி தேவை. நீதி தேவை என்று எப்பொழுது கேட்பார்கள். எங்கே அநீதி இருக்கிறதோ அங்கே தான் நீதி கேட்பார்கள். ஆகவே அந்த அநீதியைப் போக்க வேண்டும் என்பதற்காக சமூக நீதி பிறந்தது. துரோணாச்சாரி காலம் முடிந்து போய்விட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி அவர் கொஞ்சம் முற்போக்கு சிந்தனையுள்ளவர். இன்றி வசந்தகுமார் என்ற வழக்கிலே அருமையாக தீர்ப்பு எழுதுவதைப் போல எழுதினார்.

இந்தக் காலத்திலே துரோணாச்சாரியார்கள் இருக்க முடியாது. துரோணாச்சாரியார்களுடைய காலம் முடிந்தது என்று சொன்னார்கள். எனவே, சிறந்த வீரர்களாக 96பேர் இன்றைக்குப் படித்து அய்.ஏ.எஸ்,அய்.பி.எஸ் ஆகியிருக்கின்றார்கள்.

துரோணாச்சாரியார்கள் யாராவது கட்டை விரலை வெட்டிக்கொடு என்று கேட்டால் எந்த ஏகலைவனும் இந்தக் காலத்தில் வெட்டிக்கொடுக்கமாட்டார்கள். இனிமேல் வரக்கூடிய ஏகலைவன்கள் துரோணாச்சாரியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு துரோணாச்சாரியாரின் கட்டைவிரலை வேண்டுமானால் வாங்கக்கூடியவர்களாக வருவார்கள். (கைதட்டல்)

சமூக அநீதியைக் களைவதற்கு ஒரு நீண்ட நெடிய போராட்டம் உள்ளது. இராமாயண காலத்திலிருந்து, பாரத காலத்திலிருந்து தொடர்ந்த ஒரு நிலை. அதை மாற்றி நீங்கள் உழைத்து மேலே வந்திருக்கின்றீர்கள். உங்களுடைய உழைப்பு பாராட்ட வேண்டியது. உங்களுடைய பெற்-றோர்கள் முதலில் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட வேண்டியவர்கள்.

இங்கே யூனியன் வங்கி பொதுச்செயலாளர் கருணாநிதி அவர்கள் சொன்னது போல, நீங்கள் மிகுந்த நன்றியுணர்ச்சியோடு இருக்க வேண்டும்

---------------தொடரும்..."விடுதலை" 10-8-2009

0 comments: