Search This Blog

17.8.09

விநாயகன் குறித்து அறிஞர்கள் கருத்து -III


விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழகப் பக்தப் பிரமுகர்கள் ஆயத்த மாகிக் கொண்டு வருகிறார்கள். விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை. அவர்கள் அறிவு விளக்கமும், தெளிந்த சிந்தனையும் பெற வேண்டி அறிஞர்கள் பலர் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வுகளை ஈண்டுத் தொகுத்துத் தரு கிறோம். கருத்து வழங்குகின்ற இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுயமரியாதை இயக்கத்திற்குச் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் அய்யங்கார் என்பதும், மற்றவர்கள் பழுத்த சைவ சமய அடியார்த் தொண் டர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது

15.8.2009_இன் தொடர்ச்சி வருமாறு:_

இங்ஙனமாக இக்கதை பிரம்மவைவர்த்த புராணத்தின்கண் சொல்லப்பட்டது. இக்கதையின் கண் உள்ள மாறுபாடுகளையும், இழிவுகளையும் ஒரு சிறிது உற்று நோக்குமின்கள்! அன்பர்களே! எல்லாம் வல்ல சிவ பிரானுக்கும், அம்மைக்கும் ஒரு பிள்ளை பிறந்ததென்றால் அஃது எவ்வளவு தெய்வத் தன்மையும், எவ்வளவு பேராற்றலும் உள்ளதாக இருக்கவேண்டும்? அத்துணைச் சிறந்த தெய்வப் பிள்ளையைச் சனியன் என்னும் இழிந்த தேவன் நோக்கின உடனே அதன் தலை எரிந்து சாம்பலாய் போயிற்று என்றால், அப்-பிள்ளை தெய்வத்தன்மை உடையதாகுமா? கூர்ந்து பாருங்கள்! மேலும் அத்தெய்வப் பிள்ளையைவிடச் சனியன் அன்றோ வல்லமையிற் சிறந்த பெருந்தெய்வமாய் விடுகிறான். அதுவுமேயன்றி முழுமுதற் கடவுளான அம்மையப்பர் தம் பிள்ளையைப் பார்த்த சனியனின் பார்வைக் கொடுமையைத் தடை செய்யமாட்டாமற் போயினரென்றால் அச்சனியனன்றோ அவர்களிலும் மேலான தெய்வமாய் விடுகிறான்.

அல்லாமலும், சனியனின் பார்வையால் எரிந்து போன தம் பிள்ளையின் தலையை மீண்டும் உண்டாக்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மையப்பனுக்கு இல்லாமற் போயிற்றென்றோ சொல்லல் வேண்டும். அதுவல்லாமலும் அழகிற் சிறந்த தேவ வடிவங்களின் தலைகள் எல்லாம் இருக்க அவை தம்மையெல்லாம் விட்டுவிட்டு அழகற்ற ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்ந்து பொருத்தினாரென்பது கடவுளின் இறைத் தன்மைக்கு இழுக்கன்றோ? இத்துணை மாறுபாடுகளும், இழிவுகளும் பொல்லாங்குகளும் நிறைந்த இப்பொல்லாத கதையை நம்புவோனெவனும் உண்மைச் சைவன் ஆவானோ? சொல்லுமின்கள்!

ஆழ்ந்து பார்க்குங்கால் எல்லாத் தேவர்களினும் மேலாகச் சனியனைக் கொண்டாடி அவனை உயர்த்துவதற்கு விரும்பிய ஓர் ஆரியப் பார்ப்பனனே இக்கதையைக் கட்டிவிட்டு எல்லாம் வல்ல சிவபெருமானையும், உண்மையிற் சிறந்த சைவ சமயத்தையும் இழிவுபடுத்தி விட்டான் என்பது உங்கட்குப் புலப்படவில்லையா? இவ்வாறு சைவத்திற்கும், சிவபிரான் தன் முழு முதல் தன்மைக்கும் முழு மாறான பொல்லாக் கதைகளை நம்ப வேண்டாமென்றும் எமது அறிவுரையினைக் கண்டு குறை கூறும் குருட்டுச் சைவர்களே உண்மைச் சைவத்திற்குப் பெரும் பகைவர்கள் என்பதைத் தெரிந்து கொள்மின்கள்!

பிள்ளையார் பிறப்பு சிவமகா புராணத்தின்கண் வேறொரு வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனையும், மாறு கோளினையும் இங்கு ஒரு சிறிது எடுத்துக்காட்டுதும்.

ஒருகால் உமையம்மையார் குளிக்கப் போயினராம். போகுமுன் தமது உடம்பிலுள்ள அழுக்கை எல்லாம் திரட்டி எடுத்து அதனைத் தம் கையாற் பிடித்து தமது குளியலறையின் முன் வாயிலில் வைத்து, சிவபெருமான் வந்தனராயின் தடை செய்க என்று கட்டளையிட்டுத் தாம் உள்ளே குளிக்கச் சென்றனராம்.

அங்ஙனம் பிடித்துவைக்கப்பட்ட அவ்வழுக்குத் திரளை, உடனே உயிருள்ள பிள்ளையாராக்கி அக்குளியலறையின் வாயிற் காவலாய் இருந்ததாம். சிவபிரான் அம்மையைத் தேடிக் கொண்டு அங்கு வந்தாராம். அவரைக் கண்டதும் அவ்வழுக்குப் பிள்ளையார் அவரை உள்ளே போக வேண்டாமெனத் தடை செய்ய இருவருக்கும் போர் மூண்டதாம். நெடுநேரம் போராடி கடைசியாகச் சிவபிரான் அப்பிள்-ளையாரின் தலையை வெட்டினாராம்.

அப்போது உள்ளிருந்து வந்த உமையம்மையார் அய்யோ! என் பிள்ளையின் தலையை வெட்டி விட்டீரே என்று கரைந்து ஆற்றாமல் அழுதாராம். அது கண்ட சிவபிரான் நாமும் ஆற்றாதவராகி, ``நம் பிள்ளை என்று அறியாமல் இவனை வெட்டிவிட்டேன். ஆயினும் நீ வருந்தாதே! இப்போது இவனை உயிர்ப் பெற்றெழச் செய்வம் என ஆறுதல் மொழிந்து வடக்கு நோக்கிப் படுத்திருந்த யானையின் தலையை வெட்டிக் கொணர்ந்து, அதனை அப்பிள்ளையின் உடம்பிற் பொருத்தி உயிர் பெற்றெழச் செய்தாராம். அங்ஙனம் எழுந்த பிள்ளையாரே விநாயகக் கடவுளாம்.

அன்பர்களே! எவ்வளவு அருவருக்கத்தக்கதான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது. எல்லாம் வல்ல இறைவியான உமைப்பிராட்டியார் வினைவயத்தாற் பிறக்கும் நம்போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல்லொணா அருளொளி வீசித் துலங்குவது என்று தேனோபநிடதம் நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும், கடவுளிலக்கணத்திற்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி இருந்தது என்றும், அவ்வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளையார் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப் புராணம் சிவமகா புராணம் எனப் பெயர் பெறுவதற்குத் தகுதி உடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்.

ஊனுடம்பு படைத்த மக்களுள்ளும் அழகும், நாகரிகமும், தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினுமினு என்று மிளிர்ந்து நிற்க, தூய அருட்பேரொளி வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதாய் இருக்குமோ? சொன்மின்கள்! மேலும் நம் மனைவியாரைத் தேடிக் கொண்டு வந்த சிவபிரான், தமது பிள்ளை என்று அறியாமல் அதன் தலையை வெட்டிவிட்டார் என்பது கடவுள் இலக்கணத்திற்கு எவ்வளவு முரண்பட்டதாய் இருக்கின்றது? எல்லா உயிர்க்கும் உயிராய் எல்லா அறிவுக்கும் அறிவாய் _ எல்லாக் காலங்களிலும் எல்லா உலகங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை எல்லாம் ஒருங்கே உணரும் பெருமான், தம் பிள்ளையைத் தாமே அறியாமல் வெட்டினரென்றால், அஃது அறிவுடையோரால் ஒப்பத் தக்கதாமோ? இன்னும் பாருங்கள்! வெட்டுண்ட பிள்ளையைத் தலையும், உடலையும் பொருத்தி உயிரோடு எழுப்பி விடலாகாதா?

வெட்டுண்ட தலையை எடுத்து, வேறொரு யானைத் தலையை வருவித்துப் பொருத்தினரென்பது எவ்வளவு தகாத செயலாய் இருக்கின்றது. இத்துணைத் தகாததொன்றை இறைவன் செய்தனனென்பது கடவுள் இலக்கணத்திற்கு அடுக்குமா? உண்மையாய் நோகுங்கால் சிவபெருமானையும், அருள்வடிவான பிராட்டியையும் ஓங்கார ஒலி வடிவில் விளங்கும். இறைவனையும் இழித்துப் பேச விரும்பின எவனோ ஓர் ஆரியப் பார்ப்பான் இக்கதையைச் சிவமகா புராணம் என்னும் பெயரால் கட்டிவிட்டான் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கா நிற்கும். இப்பொல்லாத பார்ப்பன சூழ்ச்சியை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத குரட்டுச் சைவர்கள் இவ்வழுக்குப் புராணத்தை சிவமகா புராணமெனக் கொண்டாடிச் சைவ சமயத்துக்குக் கேடு சூழ்வது பெரிதும் வருந்தற்பாலதா-யிருக்கின்றது.

-----------நிறைவு

----------------சைவ சித்தாந்த தென்னிந்திய நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட மறைமலை அடிகளார் எழுதிய "கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா" என்னும் நூல்

4 comments:

Chittoor Murugesan said...

அம்மா தாங்கள் ஒரு தலைபட்சமாக இப்படி எழுதிக்கொண்டே போவதால் யாருக்கு என்ன லாபம் புரியவில்லை.

மூட நம்பிக்கையாளர்களையும் , ஆத்திகர்களையும், ஆன்மீக வாதிகளையும் பிரித்து மேய்ந்தால் அய்யா பெரியார் அவர்களின் லட்சியம் ஓரளவேணும் நிறைவேற வாய்ப்புள்ளது.

புராண கதைகள் எல்லாம் உருவக கதைகள் மட்டுமே. அக்கால‌த்து மனிதர்கள் இடது மூளையின் செல்லப் பிள்ளைகள். அவர்கள் குழந்தைகளாகவே வாழ்ந்தனர்.

நீங்கள் வலது மூளைக்கு வேலை கொடுத்து கேள்வி கேட்க ஆரம்பித்தால் தமிழ் அன்னை யார் ? அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று கூட கேட்கலாம்..

தமிழ் ஓவியா said...

//மூட நம்பிக்கையாளர்களையும் , ஆத்திகர்களையும், ஆன்மீக வாதிகளையும் பிரித்து மேய்ந்தால் அய்யா பெரியார் அவர்களின் லட்சியம் ஓரளவேணும் நிறைவேற வாய்ப்புள்ளது.//


மூட நம்பிக்கையாளர்களையும் , ஆத்திகர்களையும், ஆன்மீக வாதிகளையும் இந்த மூன்று பேரும் ஒருவர் தானே?


//பிரித்து மேய்ந்தால்//

எப்படி என்று விளக்கவும்

Unknown said...

இலாப நட்டத்திற்காக இதெல்லாம் எழுதப்படவில்லை. படிப்பவர் படிக்கட்டும், விடுபவர் விடட்டும் எனவும், கடவுள் என்ற பெயரால் நடாத்தபபடும் பித்தலாட்டத்தையும், பாமரமக்களின் மூளை ஒருசிலர் வாழ்வதற்காக எப்படி மழுங்கப்படிக்கப்படுகிறது என்பதையும் காட்டவும்தான் இப்படிப்பட்ட பதிவுகள் போடப்படுவதாக் நினைக்கிறேன்.

எங்கிருந்தோ ஒரு சாமியைத் தூக்கி வந்து – இருக்கிற சாமிகள் பத்தாது போல்! – இதைக் கும்பிடு என்று சொல்பவர்கள், அல்லாவை, இயேசுவை போலி, அன்னியசாமிகள் என்று அரசியல் நடாத்துகிறார்கள். போலி என்றால் எல்லாமே போலிதானே?

புராணக்கதைகள் எல்லாம் உவமைகள் – யாருக்கு சித்தூர் முருகேசனுக்கு! – மற்றவருக்கு, அவை கைகட்டி வாய்பொத்தி கேட்கவேண்டிய உண்மைகள் என்று முருகேசனுக்குத் தெரியாதா? அதைத்தானே எதிர்பார்க்கிறார்கள்? இப்படிப்பட்ட ‘உவமைகளை’ குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கும்போது அவை எப்படி வளரும் என முருகேசன் பரிட்சை பண்ணிப் பார்க்கலாம்.

பாமர மக்கள்தான் இங்கு பேசப்படவேண்டும். அவர்கள் பகுத்து அறியத்தெரியாதவர்கள். எனவே, அவர்களை ஏமாற்றி வாழும் கூட்டம் எங்கும் எக்காலத்தும் உண்டு. அக்கூட்டத்தை அடையாளம் காட்டி மக்களை உசார்படுத்துவது ஒரு பொதுநலச்சேவை.

இங்கு மறைமலை சொன்னதுதானே போடப்படுகிறது. அவரைவிட பெரியசைவர் யார்? அவரே, வினாயகர், ஒரு போலி கட்டுக்கதைமட்டுமல்ல, அசிங்கமானதும் கூட என்ற பிற வேறென்ன பேசக்கிடக்கிறது?

Chittoor Murugesan said...

தமிழ் ஓவியா அவர்களுக்கு,
என் மறுமொழிக்கு தாங்கள் பதில் அளித்திருப்பது இன்று தான் என் பார்வைக்கு வந்தது.

மூட நம்பிக்கையாளர்கள் வேறு - இறை நம்பிக்கையாளர்கள் வேறு

இறை நம்பிக்கையாளர்களிலும் விக்கிரகம், சடங்கு சம்பிரதாயம்லாம் சொம்மா கதை சொல்லி இலக்கை நோக்கி கூட்டிப்போற டெக்னிக்குனு தெரிஞ்சவுகளும் இருக்காய்ங்க.

இறை நம்பிக்கையாளர்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கோவில் அய்யருக்கு, கோவிலில் உபன்யாசம் செய்பவருக்கு, இவ்வளவு ஏன் கோவில் போகும் வழியில் தாயத்து கட்டுபவருக்கு கூட அடிமையாகிவிடக்கூடியவர்கள் உள்ளனர். இப்படியாக வகைபிரித்து வகையாக வாங்கு வாங்குன்னு வாங்கினிங்கன்னா

சுவாரஸ்யமா இருக்கும். நல்லா ரீச் ஆகும் .ஆதரவும் பெருகும்