Search This Blog

18.8.09

பி.ஜே.பி. வேறு- ஆர்.எஸ்.எஸ். வேறா?
அகில இந்திய ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் சென்னைக்கு வந்தார். பெரும்பணம் செலவு செய்து காவிக் கொடிகளைக் கட்டி, தமிழ்நாட்டில் ஏதோ அந்த அமைப்புக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதுபோல போலித்தனமான ஒரு தோற்றத்தை உருவாக்க முனைந்துள்ளனர். இது அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்ளும் போக்கேயாகும்.

அந்தக் கூட்டத்தில் எந்த எல்லைகளையும் மீறி பொய்ச் சொல்லத் தயங்காதவர்கள் என்பதற்கு அதன் தலைவரின் கருத்துகளும், தகவல்களும் போதுமானவை.

பி.ஜே.பி. வேறு; ஆர்.எஸ்.எஸ். வேறு என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் வைத்து மறைக்கப் பார்க்கிறார். இது உண்மையானதுதானா? அதே கூட்டத்திலேயே தமிழ் மாநில பி.ஜே.பி. தலைவர் இல. கணேசன் அரைக்கால் சட்டை போட்டு நிற்கிறாரே இதன் பொருள் என்ன?


பி.ஜே.பி.க்கும், ஆர்.எஸ்.எசுக்கும் எவ்வித் தொடர்பும் இல்லை என்பது உண்மையென்றால், பி.ஜே.பி. மாநிலத் தலைவர் ஆர்.எஸ்.எஸ். சீருடையில் இருப்பது ஏன்?

கால்சட்டை போட்டால் ஆர்.எஸ்.எஸ்.; வேட்டி கட்டினால் பி.ஜே.பி.யா?

ஆர்.எஸ்.எஸில் முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள்தான் பி.ஜே.பி.யின் பொதுச்செயலாளராக இருக்கவேண்டும் என்று கட்சி விதிகளிலேயே திருத்தியும், அதன் அடிப்படையில் நடைமுறையில் இருந்து வருவதும் உண்டா இல்லையா?


தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவர் இருக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதே இதன் பொருள் என்ன?

பி.ஜே.பி.யின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆன நிலையிலும்கூட அடல் பிகாரி வாஜ்பேயி ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்று சொன்னதன் அர்த்தம் என்ன?

மத்தியப் பிரதேச பா.ஜ.க.வைச் சேர்ந்த முதலமைச்சர் சவுகான் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் இருக்கலாம் என்று எந்த எண்ணத்தில் கூறினார்?

விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸின் தலைவரைச் (சர்சங்சலாக்) சந்தித்துக் காணிக்கை வழங்கப்படுகிறதே _ அதில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மாத்திரமல்லாமல், பிரதமராக இருக்கக் கூடிய பி.ஜே.பி.யைச் சார்ந்தவர் உள்பட வரிசையில் நின்று காணிக்கை செலுத்துவது எந்த உறவில்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அறிவு நாணயமான முறையில் பதில் சொல்ல ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் முன்வருவார்களா?


இன்னொரு இமாலயப் பொய்யையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அவிழ்த்துக் கொட்டியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். ஒரு சமூக சேவை இயக்கம் என்றும், இந்த வரிசையில் இந்தியாவிலேயே இது ஒன்றுதான் இருக்கிறது என்றும் கருத்துக் கூறியுள்ளாரே இதன் உள்ளுக்குள் இருப்பது என்ன?

சமூகசேவை என்ற பெயரில் சமூகத்தில் ஊடுருவி, இந்து மத வெறியை ஊட்டி, சகோதரத்துவ உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்து _ கிறித்துவர் முஸ்லிம்களுக்கிடையே பகைமையை ஊட்டுவதுதான் சுத்த சன்மார்க்க அக்மார்க் சமூக சேவையா?

குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அரசு அளித்த நிவாரணப் பொருள்களை வழங்கு-வதில்கூட தாழ்த்தப்பட்டோரும், சிறுபான்மையினரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனரே இதுதான் ஆர்.எஸ்.எஸ். சமூக சேவையின் காப்புரிமையா?

இந்திய மக்களின் ஒற்றுமைக்காக ஆர்.எஸ்.எஸ். பாடுபடுகிறதாம். அழுவதா _ சிரிப்பதா? இந்து மத அமைப்பின் அடிப்படை சாரமான ஜாதியை, வருணாசிரமத்தைக் கட்டிக்காப்பதே தமது அடிப்படைக் கொள்கையாக வைத்துள்ள ஒரு அமைப்பு நாட்டின் ஒற்றுமைக்காகப் பாடுபடுவதாகக் கூறுவதைவிட கேலிக்கூத்து வேறு ஒன்று இருக்க முடியுமா?

சுண்ணாம்பும், வெண்ணெய்யும் நிறத்தால் ஒன்றுதான் என்றாலும், குணாம்சங்கள் வேறு வேறு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மிக நன்றாகவே அறிவார்கள். இங்கு வேண்டாம் ஆர்.எஸ்.எஸின் சித்து விளையாட்டுகள்!

-------------------"விடுதலை"தலையங்கம் 18-8-2009

0 comments: