Search This Blog

29.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - ஸ்லோவேகியா-ஸ்லோவேனியா-சாலமோன் தீவுகள்


ஸ்லோவேகியா

ஆறாம் நூற்றாண்டுக் காலத்தில் ஸ்லேவிக் ஸ்லோவாக் இனத்தவர் இன்றைய ஸ்லோவேகியா பகுதியில் குடியேறி வாழ்ந்தனர். 9ஆம் நூற்றாண்டில் மொராவியன் அரச வமிசம் இவர்களை ஒன்று படுத்தியது. 907ஆம் ஆண்டில் மொராவியா நாடு மாக்யர்களின் கையில் வீழ்ந்ததால் ஸ்லோவேகியர்கள் ஹங்கேரி நாட்டின் ஆட்சியில் 1918 வரை இருந்தனர். அதன் பின்னர் பொஹமியாவுடன் இணைந்து பிறகு செக்கோஸ்லேவேகியா என்ற நாடாக உருப்பெற்றது.

1990இல் கம்யூனிஸ்ட் ஆட்சிகள் கலைந்து போன நிலையில் செக்கோஸ்லேவேகியாவின் குடியரசுத் தலைவராக வாக்லவ் ஹாவல் தேர்ந்து எடுக்கப்பட்டார். 1991இல் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவாக செக் நாடு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி ஸ்லோவேகியக் குடியரசாக 1.-1-.1993 முதல் விளங்கியது.

மத்திய அய்ரோப்பாவில் போலந்து நாட்டுக்குத் தெற்கே உள்ள இந்நாட்டின் பரப்பு 48 ஆயிரத்து 845 சதுர கி.மீ. மக்கள் தொகை 55 லட்சம். ரோமன் கத்தோலிகர் 69 விழுக்காடு புரொடஸ்டன்ட் 11 விழுக்காடும் உள்ளனர். மீதிப்பேர்களில் 13 விழுக்காடு மக்கள் மதம் இல்லை எனக் கூறுபவர்கள். ஸ்லோவேக் மொழி ஆட்சி மொழி. மக்கள் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்கள். நாட்டின் அதிபராகக் குடியரசுத் தலைவர் உள்ளார். ஆட்சித் தலைவராகப் பிரதமர். 11 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

ஸ்லோவேனியா

ஸ்லோவென் குழுவைச் சேர்ந்த ஸ்லேவிக் மக்கள் 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது சாமு அரசை நிறுவினார்கள். ஹங்கேரியில் ஆதிக்கம் செலுத்திய ஆவர் மக்களுடன் இணைந்து, 1867இல் ஆஸ்ட்ரோ ஹங்கேரியன் ராஜ்யத்தை உருவாக்கினர். முதல் உலகப் போரில் இந்நாடு தோற்கடிக்கப்பட்ட பின் ஸ்லோவேனியா தன் நாட்டு விடுதலையை 1918இல் அறிவித்தது. யூகோஸ்லேவியா என்ற பெயரில் செர்பியா, மான்டெனெக்ரா, குரோஷியா ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியது.

1991இல் ஸ்லோவேனிய நாடு விடுதலையை அறிவித்துக் கொண்டது மத்திய அய்ரோப்பிய நாடான இதன்பரப்பளவு 20 ஆயிரத்து 273 சதுர கி.மீ. மக்கள் தொகை 20 லட்சம். கிறித்துவ மதத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களில் சுமார் 33 விழுக்காடு மதம் இல்லை எனக் குறிப்பிடுபவர்கள்.

சுலோவேனிய மொழியை 92 விழுக்காட்டினர் பேசுகின்றனர். மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். 25-.6-.1991இல் யுகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்ததை விடுதலை நாளாகக் கொண்டாடு கிறார்கள். குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர். 10 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

சாலமோன் தீவுகள்

ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டமான சாலமோன் தீவுகள் 1893இல் பிரிட்டிஷ் பாதுகாப்பில் வந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு 1975இல் தீவுகளுக்கு சுயாட்சி வழங்கப்பட்டது. 1978இல் விடுதலை அளிக்கப்பட்டது. 28 ஆயிரத்து 450 சதுர கி.மீ. பரப்புள்ள இந் நாட்டில் மக்கள் தொகை 6 லட்சத்துக்கும் சற்றுக் குறைவு. மக்கள் அனைவரும் கிறித்துவ மதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இங்கிலீஷ் ஆட்சி மொழியாக இருந்தாலும் பேச்சுமொழி மெலெனேசியன் பிட்கின் மொழி. பூர்வ குடிகளின் குழு மொழிகளாக 120க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.

6-.7-.1978இல் விடுதலை நாள். பிரிட்டனின் ராணிதான் ஆட்சித் தலைவர். கவர்னர் ஜெனரலும் பிரதம மந்திரியும் நிருவாகம் செய்கின்றனர். இருப்புப் பாதையே இல்லாத நாடு.

------------------"விடுதலை" 29-7-2009

0 comments: