Search This Blog

22.7.09

சூரிய கிரகண மூட நம்பிக்கை முறியடிப்பு விருந்து





கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாதா?
ஆயிரக்கணக்கில் திராவிடர் கழகத் தோழர்களும், பெரியார் கல்வி நிறுவன மாணவர்களும், ஆசிரியர்களும் உண்ணும் விரதம் மேற்கொண்டு கிரகண மூட நம்பிக்கையை முறியடித்தனர்
தமிழர் தலைவர் பங்கேற்று கருத்து விளக்கம் அளித்தார்



சென்னை பெரியார் திடலில் 22.7.2009 அன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்ற சூரிய கிரகணம் தொடர்பான மூட நம்பிக்கை முறியடிப்பு விருந்தில் தமிழர் தலைவர் உண்ணும் காட்சி.




கிரகணத்தின்பொழுது சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை செயல்முறை விளக்கம் மூலம் உலகத்திற்கு இரண்டாவது முறையாக அறிவியல் மனப்பான்மையோடு விளக்கியிருக்கின்றோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

சூரிய கிரகணத்தின்பொழுது உணவு உண்டால் உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து என்று ஜோதிடர்கள், கடவுள் நம்பிக்கையாளர்கள் மக்களிடத்திலே மிகப்பெரிய அளவுக்கு மூட நம்பிக்கை கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.

அதை முறியடிக்க திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டு திராவிடர் கழகமும், பெரியார் கல்வி நிறுவனங்களும் அந்த மூட நம்பிக்கைகளை செயல்முறை விளக்கம் மூலம் முறியடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

பெரியார் திடலில் உண்ணும் விரதம்

சென்னை பெரியார் திடலில் இன்று (22.7.2009) காலை கிரகண மூட நம்பிக்கையைத் தோலுரித்துக் காட்டும் வகையில் கிரகண நேரத்தில் உண்ணும் விரதம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர்கள், பகுத்தறிவாளர்கள், பல்துறையைச் சார்ந்தவர்கள் சிறுவர்முதல் வயது முதிர்ந்தோர்வரைக் காலை 6 மணிக்கே குழுமியிருந்தனர்.

பெரியார் திடலில் அமைக்கப்பட்டிருந்த, மேடையின் பின்புறம் சூரிய கிரகண மூட நம்பிக்கை முறியடிப்பு விருந்து என்ற தலைப்பில் வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது.

உணவு உண்ண வேண்டுகோள்

சரியாக 6.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமைக் கழக முக்கியப் பொறுப்பாளர்களுடன் மேடைக்கு வந்து அமர்ந்தார்.

அடுத்து கழகத் தலைவரின் அன்புக் கட்டளைக்கிணங்க கிரகணம் ஆரம்பித்த வேளையில் நமது தோழர்கள் உண்ணும் விரதத்தை மேற்கொள்ளும்படி அனைவருக்கும் கூறினார்.

அனைவருக்கும் இட்லி, வடை, பொங்கல், பூரி, கேசரி, தேநீர் என வழங்கப்பட்டது.

தமிழர் தலைவர் மேடையில் சாப்பிட்டார்

கிரகண நேரத்தில் பெரியார் திடலுக்கு வந்திருந்த அனைவரும், தமிழர் தலைவர் உள்பட சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

ஊடகத் துறையினர் ஏராளமானோர் வீடியோ எடுத்தனர் ஒளிப்படம் எடுத்தனர்.

பின்னர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் கிரகணத்தைப்பற்றியும், திராவிடர் கழகம், பெரியார் கல்வி நிறுவனங்கள் நடத்தும் உண்ணும் விரதத்தைப்பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பதில் வருமாறு:

சந்திரன், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுவதுதான் சூரிய சந்திர கிரகணமாகும். இதுதான் அறிவியல்.

அதை விட்டுவிட்டு சூரியனை ராகு, கேது, பாம்புகள் விழுங்குவதால் உலகுக்குக் கேடு ஏற்படும், மனித உடலுக்குக் கேடு ஏற்படும், கருவுற்ற பெண்களுக்கு ஆபத்து ஏற்படும், எனவே, இந்த கிரகண நேரத்தில் காலையில் உணவு உண்ணக்கூடாது, அது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று மூட நம்பிக்கையாளர்கள் இப்படி மூட நம்பிக்கைக் கதைகளை நாடு முழுக்கப் பரப்பி வருகின்றனர்.

சூரிய கிரகணத்தின்பொழுது சாப்பிட்டால் மனித உடலுக்கு எந்த ஊறும் ஏற்படாது. எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை விளக்குவதற்காகவும், நாட்டிலே மூட நம்பிக்கையை முறியடித்து உலகத்திற்கு அறிவியல் மனப்பான்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து காட்டுவதற்காகத்தான் சென்னை பெரியார் திடல் மற்றும் தஞ்சாவூர் வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் பாலிடெக்னிக் மற்றும் திருச்சியில் உள்ள பெரியார் கல்வி நிறுவனங்கள், ஜெயங்கொண்டத்தில் உள்ள பெரியார் கல்வி நிறுவனம், வெட்டிக்காட்டில் உள்ள பெரியார் கல்வி நிறுவனம் என பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர்கள் இச்செயல்முறை நிகழ்ச்சியில் பங்கேற்று கிரகணத்தின்பொழுது சாப்பிட்டால் ஒன்றும் ஏற்படாது என்பதை வெளி உலகத்திற்குக் காட்டிட, உண்ணும் விரதத்தினை இதே நேரத்தில் செய்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

நான் ஏற்கெனவே திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் கிரகணத்தின்பொழுது சாப்பிட்டு ஒரு செயல்முறை விளக்கத்தைத் தந்திருக்கிறோம். இது இரண்டாவது செயல்முறை விளக்கமாகும்.

மக்கள் மூட நம்பிக்கையிலிருந்து, அறியாமையிலிருந்து விலகவேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

நாங்கள் பிரச்சாரம் செய்து வருகிறோம்

இந்த விளக்கத்தை நாங்கள் எங்களுடைய விடுதலை ஏட்டின் மூலமாகவும், அறிக்கைகள் மூலமாகவும் மக்களிடையே பரப்பியிருக்கின்றோம்.

இதுபோன்ற மூட நம்பிக்கைகளை தோலுரித்துக் காட்டி, தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து பேசியும், எழுதியும் வந்திருக்கிறார்கள்.

மக்களிடையே அச்சத்தின் காரணமாக, பயத்தின் காரணமாகத்தான் மூட நம்பிக்கைகள் பரவி வருகின்றன.

கிரகணம் பேரால் நடைபெறும் மூட நம்பிக்கைகளை முறியடிக்க ஊடகங்களும் எங்களுக்கு உதவ முன்வரவேண்டும். ஏனென்றால், இதுபோன்ற மூட நம்பிக்கைகளை அதிகம் மக்களிடையே பரப்புவது ஊடகங்கள்தான்.

எனவே, நீங்களும் மூட நம்பிக்கைகளை முறியடிக்க, அறிவியல் மனப்பான்மையைப் பரப்ப முன்வரவேண்டும் என்று உங்களையும் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கின்றோம்.

செய்தியாளர்கள் பயப்படவேண்டாம்

இங்கு வந்திருக்கின்ற தொலைக்காட்சியினர், செய்தியாளர்கள், ஒளிப்பட நிபுணர்கள்கூட யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை. பயப்படாமல் உண்ணலாம். ஒன்றும் ஆகாது. நாளைக்கு நாங்கள் நன்றாக இருக்கிறோமா என்பதையும் நீங்கள் வந்து காணலாம்.



இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி பேசினார்.

பெரியார் திடலுக்கு வந்திருந்த சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு காலை விருந்து மிகச் சிறப்பாக அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தமிழர் தலைவர் அவர்களுடன் கழகப் பொருளாளர், வழக்கறிஞர் கோ. சாமிதுரை, கழகப் பொதுச்செயலாளர்கள் சு. அறிவுக்கரசு, கலி. பூங்குன்றன் மாநில ப.க. பொதுச்செயலாளர் வீ. குமரேசன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.


நிறைவாக, கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் நன்றி கூறினார்.

வீ. அன்புராஜ், ப. சீதாராமன், க. சரவணன், த. வீரசேகரன், கல்வியாளர் கோ. அரங்கசாமி என பல முக்கிய பிரமுகர்களும், மருத்துவர்களும் பங்கேற்றனர்.

கடற்கரையில் பிரச்சாரம்


இன்று காலை 7.30 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை வரை சூரிய கிரகண மூட நம்பிக்கை மற்றும் அறிவியல் மனப்பான்மையைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய அறிக்கை சாலையில் செல்வோரிடத்திலும், நடைபயிற்சிக்கு வருவோரிடத்திலும், மெரீனா கடற்கரைக்கு வந்தோரிடத்திலும் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

-------------------------நன்றி:-"விடுதலை" 22-7-2009

3 comments:

மதி.இண்டியா said...

உங்க உண்ணும் விரதம் கண்டு சூரியனே ஒடிப்போச்சாமெ , நிசமா ?

மதி.இண்டியா said...

http://www.paristamil.com/tamilnews/?p=22819
தமிழக கடலோரப் பகுதியில் என்றும் காணப்படாத டால்பின்கள் இன்று காலை சூரிய கிரகணம் நடந்தபோது மெரீனா கடல் பகுதியில் தாவிக் குதித்துக் கொண்டிருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.//

அண்ணே , டால்பின்க உங்க விருந்துக்கு வந்ததை பதிவு செய்யாததை டால்பின்டர் கழகம் சார்பாக வண்மையாக கண்டிக்கிறேன்

tpathi108 said...

i just saw this blog from Tamilmanam.net. I am trying to install tamil fonts and write in tamil. but before that i just wanted to comment on this. I was respecting Mr. Veeramani as a great intellectual. but after reading this i really felt very very sorry for that. i ask only one question how do you believe science. what is the authority. Solar Eclipse happens only when Raghu comes in between Sun and the Earth and not moon as said by so called great scientists. It is prooved time and again. And arranging this great Unnum viratham my opinion is Mr. Veeramani has wasted not only his time but so many other people time also. they should try to understand the reality.